நாதப்பிரம்மம்

This entry is part of 45 in the series 20110130_Issue

ராஜா


தனிமையின் சன்னல்பரப்புகளில்
சுருக்கிட்டுத் தொங்கும் திரைச்சீலையின் கால்களை
ஆட்டிப் பார்க்கிறது காற்று
வெறுமை இறுகி
சுற்றிலும் சுவர்களாய்ச் சமைந்திருக்கும் இந்த அறைக்குள்
கூடிவிடுகிறது இருத்தலின் கனம்
தூங்கி விடு தூக்கம் விடுதலை
சாலையில் வண்டிச் சத்தங்கள்
செவிக்குள் புகுந்து மூளையைச் சிதறடிக்கும் இடி
ஜன்னலை இழுத்து மூடு கதவைச் சாத்து
சுவரில் உச்சுக் கொட்டுகிறது கடிகாரம்
நொடியின் மரணத்தில் ஜனிக்கும் ஓசை
காலத்தின் கடிகார இயக்கம்
எப்போது துவங்கியிருக்கும் எப்பொழுதில் நிற்கும்
நிறுத்துவது நீயாக இருக்கட்டும்
பேட்டரியை கழட்டி வை… ம்…
கதவடைத்தும் வாகன இரைச்சல் நின்றபாடில்லை காதடை
நாதம் நாதம் சர்வம் நாதம்
ஒலி புகா ஒரே இடம் அம்மா
நெஞ்சுக்கூடு தடதடக்கிறது
எப்போது கடக்கும் இந்த ரயில்
அம்மாவ பார்க்கணும்
மாரோடு சேர்த்து தலையணை அழுத்து
பஞ்சடைத்த வஸ்து வெடியடக்குமா
எதுக்கும் அம்மாட்ட ஒருதடவை பேசிடலாமா
வழியிருக்கிறது
ஒரத் தையல் பிரித்து துருத்திய பஞ்சுருட்டி
நாசித் துவாரங்களை அடைத்தான்
நுழை பிளந்தது நுரையீரல் ஆணைக்கு
உமிழ்ந்த உஷ்ணத்தில் சர்ப்பத்தின் அரவம் கேட்டான்
அரவத்தில் அமிழ மகுடிக்கு இசைந்தது பாம்பு
விழித்துக் கொண்டவன் ஒருபோதும் உறங்கவில்லை மீண்டும்.
________

Series Navigation