This entry is in the series 20110130_Issue

சபீர்



குளிர்காலப் பின்னிரவொன்றில்
ஊர் செல்ல நேர்ந்தபோது
வழிநெடுக
ஆங்காங்கே
அசைவம் உண்ணும்
தீ நாக்குகள்
ஊண் உருக்கி
உடல் கருக்கி
துர்நாற்றம்
ஊர்பரப்பிக் கொண்டிருந்தது

கேள்விக்குறிக்கு
பதிலளிக்கையில்
முன்னுச்சி வழுக்கையும்
காதோர நரையும்
பார்த்துக்கொண்டே
“பழமும் கிழமும்
முதிர்வதும் உதிர்வதும்
இயற்கைதானே”
என்றான் சாரதி!

அந்நேரம் விழித்த
பேத்தியொருத்தி
“தாத்தா தண்ணி”
என
கேட்ட போது
சட்டென
மீண்டும் ஒரு
பிணவாடை
நாசி தொட்டது
அருகில் எங்கும்
சுடுகாடே
இல்லையெனினும்…!

Series Navigation