மோகமுள்!
Published August 21, 2008 • By
தாஜ்
தாஜ்

மோகமுள் பக்கங்களில்
லயித்திருந்தப் போது
வழி தவறி
என் அறைக்குள்ளே
அழையா விருந்தாளியாக
வந்திருந்து மின்னலாய்
ஆட்டம் போட்டதோர்
வண்ணத்துப் பூச்சி.
என் அறை
மரண ஸ்தலமாய் ஆகாதிருக்க
சுழலும் விசிறியை நிறுத்தி
சுடும் விளக்கையும்
அணைத்து அடக்கினேன்.
பொது சுதந்திரத்திற்கு
பங்கம் வராதிருக்க
வாயில்
ஜன்னல் கதவுகளை
திறந்து வைத்தேன்.
பட படவென
சிறகசைத்து
மோகமுள்ளில்
பட்டுப் படர்ந்து
கொடியென என்
புஜங்களில் தொற்றி
தலை உச்சத்தில்
வட்டமிட்டு
எழில் உணர்த்தி
பறந்துப் போனது.
அதன் வெற்றிடம்
தவிர்க்க முடியவில்லை
சலனத்தை வென்றும்
மீச்ச மீதியில்
நானிருந்தேன்!
கூடவே அன்று
என்னுடன்
அறை முழுக்க
தி.ஜா.வும் இருந்தார்!
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
மோகமுள்
சீனிவாசன் ராமச்சந்திரன்

தேன் வற்றிய தேன்கூடாய்
பிசுபிசுக்கிறது
உனக்கும் எனக்குமான
உறவு.
விரலுக்கேற்ற மோதிரங்கள்
தொலைந்து போய்
மோதிரத்திற்காய்
விரல் வீக்கங்கள் !
தொட்டால் பூ மலருமோ என்னவோ
தொடாமல்
மரமாய் வளர்ந்து நிற்கிறது
என் மோகம்.
புறங்கை எச்சிலாய் நேற்றைய மிச்சங்கள்.
பசிக்காய் கேட்கிறேன்
ருசிக்கான சிந்தனைகளை சற்று
ஒத்திவை.
—-
Srinivasan.Ramachandran@in.efunds.com