This entry is in the series 20050311_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


கவிதைப் பம்பரம்

—-
பீத்தல் குடையும்
பிய்ந்த செருப்புமாய்க்
கிளம்பி விட்டார்
கணக்கு வாத்தியார்
டியூஷன் எடுக்க

எந்தக் கணக்குக்கும்
கட்டுப்படாமல்
பெருமழையாய்ப்
பெருகுகிறது
வாழ்க்கை

—
ரயில்பாதை
அகல ரயில்பாதை

தொலைபேசி
செல்

பக்கத்து வீட்டுக்காரனோடு
பேச்சுவார்த்தை இல்லை

—
துாரத்துப் பள்ளி
செருப்புகள் இல்லை
புழுதியிறைக்கும் வெளியூர் பஸ்
டாட்டா காட்டிச்
சிரிக்கும் சிறுமி

—
அரசமரம்
பிரம்மச்சாரிக்கு தவவலிமையாம்
ஸ்திரீகளுக்குப் பிரசவ வலி

—
துாக்கிச் செல்ல நால்வர்
பிறக்க இருவர்
வாழ
ஒருவனே

—
பூக்கள் பெருமூச்சு விட்டன
ஆகா என்றான் பறிக்கிறவன்

—
விழித்துக் கொண்டிருப்பதாய்க்
கனவு கண்டேன்
விழித்துப் பார்த்தபோது
உறங்கிக் கொண்டிருந்தேன்

—
இலை என்றால் தடவிச் செல்கிறாய்
சருகென்றால் துாக்கிக் கொள்கிறாய்

—
பெருமாள் பக்தன்
நெற்றியைக் காட்ட
மல்லாக்கப் படுத்தது
கோவில் யானை

—
மன்னனின் ஆட்சி
மகோன்னத ஆட்சி
குடிகளுக்கெல்லாம்
குறையே இல்லை

பாரென் கவிதை
பரிசுகள் தருவாய்
பட்டினி நான்
பத்து நாளாய்

—
சேதுவை மேடுறுத்தி
வீதி சமைக்கிறவர்கள்
வீதியிலேயே சமைக்கிறார்கள்

—
அமாவாசை நிலவைக் காணோம்
டார்ச் அடித்துத் தேடும் தம்பி

வானத்து நிலவை
பூமியில் பாரு
சந்தேகம் இருந்தால்
தேடிப் பாரு

—
மேலும் சில சின்னப் பொறிகள் அடுத்த இதழில்
storysankar@rediffmail.com
கூறாதது கூறல் – கவிதைப் பம்பரம்
வெளியீடு – இருவாட்சி சென்னை 600 011

Series Navigation