கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

சத்யானந்தன்


“ஒரு கல்லைக் கும்பிட்டால் ஹரி கிடைப்பார் என்றால் நான் ஒரு மலையையே பூஜிப்பேன். மாவரைக்கும் இந்தக் கல்லோ அதனிலும் நல்லது. மக்களின் உணவுக்காவது பயன்படும்.”

உருவ வழிபாட்டை மறுத்து எழுதப்பட்ட இந்தக் கவிதை பக்தி இலக்கியம் உச்சம் பெற்ற பதினைந்தாம் நூற்றாண்டில் மகான் கபீரால் எழுதப்பட்டது என்றால் நம்ப இயலுமா? வெற்றுச் சடங்குகளில் சம்பிரதாயங்களில் வழிபாட்டு முறைகளில் கடவுளைக் காண இயலாது என்னும் பின்வரும் கவிதை இன்றைய இந்தியாவுக்குப் படிப்பினையாகும்.

“என்னைத் தேடுகிறாயோ?
உனது அருகில் உள்ளேன் நான்
நான் தீர்த்தங்களிலோ விக்கிரகங்களிலோ இல்லை
தனிமை வாசத்திலோ கோயிலிலோ
மசூதியிலோ கயிலையிலோ
இல்லை உன்னருகிலுள்ளேன்
ஜபத்திலோ தவத்திலோ உபவாசத்திலோ
கிரியைகளிலோ கர்மங்களிலோ
சன்னியாசத்திலோ உயிரிலோ பிண்டத்திலோ
பிரம்மாண்ட ஆகாயத்திலோ இயற்கையிலோ
குகையிலோ மூச்சிலோ இல்லை
தேடினால் ஒரு நொடியில்
கிடைப்பேன் என்னைக் காண் நம்பிக்கையில் ”

எளியோரின் சாமானியர்களின் நம்பிக்கையில் இறைவன் தென்படுவான் என அவர் மிகவும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். பின்வரும் பாவில் அதைக் காணலாம்.

” புத்தகங்களைப் படித்துப் படித்து உயில் நீத்தார் பலர். ஞானம் எதுவும் சேரவில்லை. அன்பின் சொல்லை யார் படித்தாரோ அவருக்கே கிட்டும் ஞானம்.”

மத ஒற்றுமையை வலியுறுத்தி அன்றே அவர் கூறினார்:

“ஹிந்து ராமரை உயர்ந்தவரென்றும் முஸ்லிம் ரஹீமை உயர்ந்தவர் என்றும் கூறிச் சண்டையிட்டு மடிகின்றனர் உண்மையை உணராமலேயே”

“தெற்கில் ஹரியின் ஆலயம் உள்ளது. மேற்கே அல்லாவுக்கு; உனது இதயத்துள், இதயங்களின் இதயத்துள் தேடு. அங்கே இருக்கிறான் அவன்”

” அல்லா – ராம் நான் உன் பெயரைச் சொல்லி வாழ்கிறேன். என்னிடம் கருணை காட்டு”

” உனக்குள் உள்ள கடவுள் பூவுக்குள்ளே உள்ள வாசனை போல. வாசனையைத் தனக்குள் வைத்த கஸ்தூரி மான் அதைத் தேடி அலவது போலவே நீயும் அலைகிறாய்.”

கபீரின் காலத்தில் வைதீக வழிபாட்டு முறைகளுக்கு மட்டுமே அங்கீகாரம் இருந்தது. அன்றே தீர்க்க தரிசனத்துடன் பக்தி வழியில் அன்பு நெறியில் உள்ளே உறையும் இறைத்தன்மையை உணர வழி காட்டிய கபீர் மிகப்பெரிய புரட்சியாளர்.

ஆனால் கடந்த அறுநூறு ஆண்டுகள் நாம் கட்டமைத்த இந்தியா அவரது கனவுகளுக்கு நேரெதிரில் சென்றது.

உருவ வழிபாடு, மத நூல் காட்டிய வழிபாடு, சாதி முறை, தனி நபர் துதி, பீட அதிகார மைய்யங்களைக் கட்டமைப்பது என நாம் மிகவும் குறுகிய வழியில் நூறு கோடி மக்கள் எலிப் பொறிகளுள் அடைபடும் விளைவுகளைச் சாதித்திருக்கிறோம்.

சாதி மத அடிப்படையில் வினையும் எதிர்வினையுமாய் மக்களைப் பிரிக்கும் பணி செய்யாத அரசியல் அமைப்புகள் மிகக் குறைவு.

மஹான்கள் நாராயணகுரு, ராமகிரிஷ்ண பரமஹம்சர், தலைவர்கள் காந்தியடிகள், அரவிந்தர், அம்பேத்கர், வினோபாவே என வழி காட்டிகளுக்குப் பஞ்சமே இருக்கவில்லை. ஆனால் நாம் நமது வழிபாட்டுச் சின்னங்களையும், மத நூல்களையும், வழிபாட்டுத்தலங்களையும் அதிகார மைய்யங்களாக உருவாக்கி விட்டோம். ஞானத்தேடலும், மனித நேயமும், அன்பு வழியும் என்னும் இந்திய மண்ணின் மணம் கபீரின் கவிதைகளெங்கும் வியாபித்திருந்தது. ஆனால் நாம் அதிகாரம், பணம், பகட்டு, உயர்வு தாழ்வுப் பிரிவின் வெறி விளிம்புச் சுரண்டல்கள் இவற்றை நிறுவும் ஊழலில் ஊறி விட்டோம். வெளிச்சத்திற்கு வழி இல்லையென்றால் இருள் அடைந்து கிடப்பதில் வியப்பில்லை. எப்போது விடியும் என்னும் ஏக்கம் உள்ளோர் மௌனம் கலைக்க வேண்டும்.

Series Navigation

சத்யானந்தன்

சத்யானந்தன்