கூடா நட்பினால் விளைவது கேடே

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

மலர்மன்னன்


பாவம், மன் மோஹன் சிங்கைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. மக்களைவையில் எழுந்து நின்று தணிந்த குரலில் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத பள்ளி மாணவன்போல் அவர் மென்று விழுங்கிக் கொண்டு தயக்கத்துடன் பேசுகையில் அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்ட சோனியா காந்தி போன்ற வர்கள் தத்தம் இருக்கைகளில் செளகரியமாகச் சாய்ந்துகொண்டு கண்களாலேயே அவரைக் கண்காணிக்கிற காட்சியைப் பார்க்கையில் வேதனையாகத்தான் இருக்கிறது!

மன்மோஹன் சிங் நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்று, அப்பழுக்கற்ற சேவையில் அனுபவம் வாய்ந்தவர்தான். தாம் கற்ற பொருளாதாரத்தின் பிரகாரம் நடைமுறையில் உள்ள பொருளாதார நிலவரத்தைப் பின்பற்றிச் செல்லத் தெரிந்தவரே யன்றி, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லவரல்ல; எனினும் நல்லவரே.

பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை நமது நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்பத் தீர்க்கும் ஆற்றலோ மதி நுட்பமோ அவருக்கு இல்லாததால்தான் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் நிதி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கையில் அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாகத் தாராளமயக் கொள்கையை அறிமுகம் செய்த போதிலும் அதனால் விளையக் கூடிய பாதகங்களுக்குச் சரியான பரிகார நடவடிக்கைகளை அவரால் வகுக்க இயலவில்லை. நமது நலனுக்குத் தீங்கு நேராத வகையில் சில தற்காப்பு நடவடிக்கைகளையும் நிபந்தனைகளையும் அவர் விதிக்கத் தவறியதால் தாராளமயக் கொள்கை உரிய பலனைத் தரத் தவறியது. நன்மையைக் காட்டிலும் சங்கடங்களையே தாரளமயக் கொள்கை விளைவித்தது. பின்னர் வந்த குஜ்ரால், தேவே கொளடா போன்றவர்களின் தாற்காலிக முறைகேடான ஆட்சியில் மேலும் பல குளறுபடிகள் நேர்ந்து, அடுத்து வந்த வாஜ்பாய் ஆட்சியின்போது பகீரதப் பிரயத்தனப்பட்டு பொருளாதார நிலவரத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முடிந்தது. உலகமே வியக்கும் அளவுக்கு அந்நியச் செலாவணி இருப்பைப் பல்லாயிரம் கோடி சேமித்து வைக்கிற அருஞ் சாதனையை பாரதிய ஜனதா தலைமையில் வாஜ்பாயைப் பிரதமராகக்கொண்டு அமைந்த தேசிய ஜனநாகக் கூட்டணி செய்து காட்டியது. நாட்டு மக்களின் போதாத காலம், அடுத்து வந்த சோனியா காங்கிரஸ் தலைமையில் முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்த போது நிதி அமைச்சராகப் பதவியேற்ற ப.சிதம்பரம் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் திருப்தி தரும் வகையில் இருப்பதாக வாக்குமூலம் அளிக்க வேண்டியதாயிற்று. இவ்வளவும் நினைவூட்டக் காரணம், மன்மோஹன் சிங் என்பவர் வகுக்கப்பட்ட பொருளாதாரக் கொளகையை சரிவர நிர்வகிக்கக் கூடிய அதிகாரியே தவிர பொருளாதாரக் கொள்கையை வகுக்கத் தெரிந்த அரசியல் நிபுணர் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.

மன்மோஹன் சிங் அரசியல் நிபுணர் அல்ல என்பது மட்டுமல்ல, அவர் அரசியல்வாதியே அல்ல என்பதுதான் உண்மை. ஏதோ சபலத்தில் சோனியாவின் பினாமியகப் பிரதமர் நாற்காலியில் அமரப் போக, மற்றவர்கள் கூசாது செய்து வரும் ஊழல களுக்கெல்லாம் சமாதானம் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார், மன்மோஹன் சிங். தவறுகளை மெளனமாக அனுமதித்துக்கொண்டிருப்பவரும் தவறு செய்பவரே என்கிற உண்மைக்கும் உதாரண புருஷராக நாட்டு மக்கள் முன் நிற்கிறார்!

2ஜி விவகாரத்தில்தான் கூட்டணி தர்மத்தைக் காப்பதற்காக ஊழலைத் தட்டிக் கேட்க முடியவில்லை என்று சொன்னவர், இப்போது ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள தாமசை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது எதனால் என்று மக்களைவியில் பா.ஜ.க.வும் பிற கட்சிகளும் ஆணித் தரமாகக் கேட்கிற கேள்விக்குத் தெளிவாக விடை கூற மாட்டாமல் மழுப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்!
கூட்டணியில் உள்ள கட்சி தன் சார்பில் ஒருவர் பெயரைக் குறிப்பிடுகையில் அதை ஏற்பதும், அந்தக் கட்சி கேட்கும் துறையையே அவரிடம் ஒப்படைப்பதும் வேண்டுமானால் கூட்டணி தர்மமாக இருக்கலாம். ஆனால் அமைச்சரவையில் அவ்வாறு இடம் பெற்ற ஒருவர் தன்னிச்சையாகச் செயல்பட்டு பிரதமரின் அறிவுறுத்தலையும், நிதி, சட்ட அமைசகங்களின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் விருப்பம்போல் ஊழல் செய்வதைப் பார்த்துக்கொண்டு வாய் மூடி நிற்பது கூட்டணி தர்மம் ஆகாது! அதையும் கூட்டணி தர்மம் என்பது வெறும் நொண்டிச் சாக்கு!

ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமன விஷயத்தில் மன் மோஹன் சிங் சொல்லும் சமாதானமும் வெறும் நொண்டிச் சாக்காகத்தான் இருக்கிறது.

ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்குப் பொருத்தமான நபரைத் தேர்வு செய்யும் மூவர் குழுவில் பிரதமர் மன்மோஹன் சிங்கும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் பிரதான எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் சுஷ்மா ஸ்வராஜும் பங்கேற்று முடிவெடுக்க முனைந்த பொழுதே தாமஸ் அப்பதவிக்குத் தகுதியானவர் அல்ல என்று தமது எதிர்ப்பை சுஷ்மா ஸ்வராஜ் பதிவு செய்துவிட்டார். அதையும் மீறி தாமஸ் நியமனம் செய்யப்பட்டு, விவகாரம் உச்ச நீதி மன்றத்திற்குச் சென்று, அங்கு தாமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு இருக்கையில் அவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்தது தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது! இதைவிட ஒரு அரசுக்கு என்ன கேவலம் இருக்க முடியும்?

மக்களைவையில் இந்த முறைகேட்டிற்குச் சரியான விளக்கம்
அளிக்க மாட்டாமல் தாமே ஒரு குற்றவாளியாக நிற்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிட்டார், மன்மோஹன் சிங்.

’நடந்து விட்ட முறைகேட்டிற்கு முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன். தாமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு இருப்பது என் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட கோப்பில் தெரிவிக்கப்பட வில்லை. அதனால் அவரது நியமனம் நிகழ்ந்துவிட்டது. இது தவறுதான். அவருக்குப் பதிலாக வேறு தகுதியானவர் நியமிக்கப்படுவார். தவறுக்கு நானே பொறுப்பு’ என்று மக்களைவையில் மன்றாடுகிறார், பிரதமர் மன்மோஹன் சிங். அமைச்சரவை சகாக்கள், சக கட்சியினர், கூட்டாளி கட்சியினர், அனைவரும் கைவிட்ட நிலையில் சபை நடுவே நிராதரவாக அவர் நிற்பதைக் காண்கையில் பரிதாபமாக இருக்கிறது.

’தாமஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர் என்பது உங்களுக்கு முன்னதாகவே தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அப்படியிருந்தும் அவரை நீங்கள் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக உங்களைவிடச் சக்தி வாய்ந்த ஒருவரின் நிர்பந்தம் காரணமாகவே நீங்கள் இந்த முறைகேட்டிற்கு அடிபணிந்திருக்க வேண்டும். பிரதமரான உங்களையே ஒருவர் நிர்பந்தம் செய்து தனது விருப்பப்படி உங்களை ஆட்டிப் படைக்கிறார் என்றால் யார் அந்த சர்வ வல்லமையுள்ள நபர் என்பதை நாட்டிற்கு அடையாளம் காட்டுங்கள். இது உங்களுக்கு இருக்கிற தவிர்க்கக் கூடாத கடமை’ என்று வலியுறுத்துகிறது, பா.ஜ.க.

சோனியா காங்கிரசோ, மன்மோஹன் சிங்தான் தவறுக்குப் பொறுப்பு ஏற்றுகொண்டு விட்டாரே, இனியும் என்ன, இத்துடன் பிரச்சினையை விட்டுவிடுங்கள் என்று அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் விதண்டா வாதம் செய்கிறது!

கூடா நட்பு கூடவே கூடாது. இதனை மீறினால் கேடே விளையும் என்பதை இப்போது மன் மோஹன் சிங் நன்கு புரிந்துகொண்டு விட்டிருப்பார். எனினும் என்ன செய்ய? காலம் கடந்தபின் ஞானம் வந்து பயன் என்ன? விழுங்கக் கூடாததை வாயிலிட்டுக் கொண்டுவிட்டபிறகு, விழுங்கவும் முடியாமல் துப்பவும் மாட்டாமல் அவர் தொடர்ந்து திண்டாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

++++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்