அவன்

This entry is part of 37 in the series 20090625_Issue

நடராஜா முரளிதரன் (கனடா)


நான் வேலைக்குச் சென்ற போது அங்கே அவன் நின்றிருந்தான். தலைமயிர் ஒட்டவெட்டப்பட்டுச் சொக்கைகள் அல்லது கன்னங்கள் பருத்து அழுக்கான உடைகளோடு அலங்கோலமான “பூட்ஸ்களையும்” அணிந்திருந்தான் அவன். எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு “குத்துக்கல்லாக” ஆடாமல் அசையாமல் சிறிது நகர்ச்சிக்கும் தன்னை ஆட்படுத்திவிடாதவாறு அவன் அமர்ந்திருந்ததாகவே எனக்குப்பட்டது.

எப்போதும் உரிய நேரத்தில் வேலைக்குப் போய்ப் பழகியிராத நான் அன்றும் பிந்தியே வேலைக்கு வந்திருந்தேன். வந்தவுடன் அவன் குறித்து பெரிதும் அக்கறைப்பட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஏதாவது “டிலிவறி” இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கையுறைகளை மாட்டிக்கொண்டு இருபது கிலோ கொண்ட ஒரு பெட்டி “சிக்கின்விங்ஸை” “மரனைட் சோஸில்” கலந்து குழைத்து நீண்டு, அகன்ற பெரிய அலுமீனியத்தட்டுக்களிலே வரிசையாக நிரைப்படுத்த ஆரம்பித்த போது ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் “24 மணி” நேர தமிழ் வானொலிப்பெட்டியையும் முறுக்கி விட்டேன். வழமையாக இவ்வாறுதான் எனது நாளாந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துக் கொள்வேன். நான் பணிபுரியும் இடம் “பீஸா” மற்றும் “சிக்கின்”(கோழி) போன்ற வகையறா உணவுகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்யும். அத்துடன் நேரில் வருபவர்களுக்கும் தயார் நிலையிலுள்ள உணவுப் பட்டியலுக்கிணங்க அவர்களுடைய தேர்வுப்படி உணவுகளைத் தயாரித்து வழங்கும்.

முதலாளியும் தன்பாட்டுக்கு ஒவ்வொரு நாளும் பாடும் பல்லவியை அன்று மீண்டும் பாட ஆரம்பித்தான். “அண்ணை எக்கச்சக்கமான வேலைகள் கிடக்குது. கெதியாய் முடியுங்கோ. முடிச்சுப்போட்டு ஒருபெட்டி ‘பிறைசும்’(உருளைக்கிழங்கு நீள்நறுக்குகள்), ‘ஒனியன்றிங்சும்’ (வெண்காய வளையங்கள்) வேண்டி வரவேணும். அதோட ‘பாங்கில’ காசும் ‘டிப்போசிற்’ பண்ண வேணும். இல்லாட்டில் ‘செக்’ துள்ள வேண்டியதுதான். காசையும் முதல் போட்டதுமல்லாமல் எவ்வளவு முறி முறிஞ்சும் ஒரு பிரயோசனமும் இல்லாமல் இருக்கு. வியாபாரத்தை வித்துப்போட்டு எங்கையாவது போய் வேலை செய்தால் சம்பளமாவது மிஞ்சும்”; என்ற வகையில் விரிந்து செல்லும் நீண்ட பல்லவி அது. “முதலாளிமார் எண்டால் இப்பிடித்தான் அழுவினம். உதுகளையெல்லாம் நம்பக்கூடாது. கள்ளப் பயலுகள்” எண்டு எனது உள்மனம் சொல்லிக் கொண்டாலும் வளர்ச்சியடைஞ்ச கனடா மாதிரியான நாடுகளிலை சிறுவியாபாரம் செய்வதென்பது கஸ்ரமான விசயமாயும் தோன்றியது. ஆனாலும் முதலாளியட்டை இருக்கிற வைப்புச்சொப்பு கனக்க எண்டில்லை. இருக்கிறது சும்மா மூண்டு வீடும், மூண்டு வாகனமும் மட்டுந்தான். அதிலையொண்டு புத்தப்புது “பென்ஸ்”, மற்றதொண்டு “லீசிலை” எடுத்த “ரொயொட்டா” ராவ் மொடல் ஜீப். கடைசியாய் வேண்டின வீடு சுமார் 4000 சதுர அடிக்கு மேலை.

அதற்கிடையில் புதிதாய் வந்து “குத்துக்கல்லாய்” குந்தியிருப்பவனின்; ஞாபகம் வரவே “உதார் புது ஆளாய் கிடக்குது” எண்டு முதலாளியை நோக்கி ஒரு கேள்விக்கணையை வீசினேன். அந்தக் கேள்வியின்ரை வீச்சிலை “என்ர வேலையைப் புடுங்கிக் கொண்டு போக அவன் வந்திருப்பானோ எண்ட ஐமிச்சமும்” உள்ளடங்கியிருந்தது. முதலாளி ஒரு காலை இழுத்தவாறே நடப்பான். அவ்வாறு நடந்துகொண்டே “உந்தாள் எங்கடை தமிழ் பெடியன்தான், பக்கத்திலை இருக்கிற “ஷெல்ரரிலை” இருக்கிறார். சாப்பாடு, படுக்கையெல்லாம் குடுக்கினம். கிழமையிலை ஒருக்கா 25 டொலரும் கிடைக்கும.; குடுத்து வைச்ச ஆள். நாங்களெண்டால் எவ்வளவு “பில்லுகளைக்” கட்டவேணும். இந்த நாட்டு அரசாங்கம் இப்பிடியான ஆக்களுக்கு எவ்வளவு உதவிகளைச் செய்யுது. அவருக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. கவலை இல்லாத மனிசன்” என்ற அறிமுக விளக்கத்தை எனக்குத் தந்தான் .
அப்போது மீண்டுமொரு தடவை அவனைப் பார்ப்பதற்காக அவனை நோக்கி எனது பார்வை நீண்ட போது அவனது கண்கள் என்னை நோக்கியே நிலை கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. நான் அதை அவதானித்த அக்கணத்தில் உண்மையில் தடுமாறிப் போய்விட்டேன். ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் ஒருவாறு சமாளிப்பில் ஈடுபட்டவாறே அவனை நோக்கிச் சிரிப்பொன்றை உதிர்த்தேன். அவனும் மெலிதாகத் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டான்.
நான் மூன்று வேலைகளை ஒரு கணத்தில் நிகழ்த்தும் வித்தைக்காரனாகக் கைகள் “சிக்கின்விங்சுடனும்”;, ஓர் காது “24 மணி நேர வானொலிப்பெட்டியின் காற்றலைகளிலும்” மறு காது முதலாளியின் “கதைகளை” உள்வாங்கியும், இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக மூளை தன் ஆளுமையின் மேலாண்மையினை நிலைநாட்டும் பொருட்டு இவ்வாறான வினைத்திறன்களுக்கு ஏற்றபடியான கருத்தாடல்களுக்குத் தன்னைத் தயார் நிலைப்படுத்தியும் அதிஉச்ச வேலைகளைச் செய்து கொண்டிருந்தன.
இடையே தொலைநகலியில் “டிலிவறி ஓடர்” வருவதற்கான சப்தம் எழஆரம்பித்து அதற்கான “கட்டளை” அச்சாகும் ஒலி தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. எனது பிரதான பணி “டிலிவறி ஓடர்களை” காரில் எடுத்துச் சென்று விநியோகிப்பதே. அதை விடுத்து மற்றவைகள் எல்லாம் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிகமாக இடப்பட்ட பக்கப் பணிகளாகும்.

முதலாளிதான் பிரதான சமையற்காரன். அவன் தொலைநகலியில் வந்த “ஓடரைக்” கிழித்தெடுத்துப் பின் அடிமட்டத்தை வைத்து அரைவாசியாகக் குறுக்கறுத்து ஒருபாதியைத் தனக்கும் மறுபாதியை எனக்கும் தந்துகொண்டான். இரு பாதிகளும் ஒரே தகவல்களையே கொண்டிருக்கும். உணவு விநியோகம் செய்யவேண்டியவரின் பெயர், முகவரி, தொலைபேசிஇலக்கம், வழங்கப்பட வேண்டிய உணவுவகைகள் என அந்த வரிசை அமைந்திருக்கும்.

முதலாளி தான் எடுத்துக் கொண்ட பாதித்துண்டில் குறிப்பிட்டிருந்த உணவுகளைத் தயாரிக்க ஆரம்பித்திருந்தான். நான் எனக்கான பாதியில் குளிர்பானங்கள், “சோஸ்” போன்ற சில்லறைச்சாமான்கள் கேட்கப்பட்டுள்ளனவா என்பதைப் தேடிப்பார்த்துத் பிடித்து “பொலித்தீன்” பையொன்றுள் அவற்றைப் பத்திரப்படுத்திக் கொண்டேன். முதலாளி “பீஸா” ஒன்றையும், இரண்டு ‘பவுண்ட்ஸ்’ “சிக்கின் விங்ஸையும்” சமைத்து முடித்து அதற்கான பெட்டிகளுக்குள் அவற்றை நுழைத்தான். நான் சகல உணவுப்பொருட்களையும் சூடாக வைத்திருப்பதற்காகவெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சிகப்புநிற நீள் சதுரப்பையினில் பத்திரப்படுத்திக்கொண்டு புறப்படத் தயாரானேன். எனது “கொண்டா” நீலநிறக் கார் கடையின் பின்புறம் அமைந்துள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்தச் சமயம் பார்த்துக் “குத்துக்கல்லாய்” குந்தியிருந்தவன் இருக்கையில் இருந்து எழும்பியவாறே “அண்ணை நானும் உங்களோடை வரட்டே” என்று கேட்டான். “அதுக்கென்ன பிரச்சினையில்லை. வாங்கோ கதைச்சுக்கொண்டே போய்க் குடுத்திட்டு வருவம்” என்று பதில் கூறினேன். அவனும் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக்கொண்டு காரின் கதவினைத் திறந்து முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான். நான் காரினை இயக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் விநியோகப்படுத்த வேண்டிய உணவுகள் உள்ளடங்கியிருந்த சிகப்புநிற நீள்சதுரப்பையினை அவனிடம் நீட்ட அவன் அதனை வாங்கித் தனது மடியினில் வைத்துக்கொண்டு “சீட்பெல்ற்றினால்” தன்னை இறுக்கிக் கொண்டான்.

நான் காரை ஆறுதலாகப் பின்வழமாகச் செலுத்திப் பக்கவாட்டுச் சாலை வழியாகப் பிரதான வீதியான “புளொருக்குள்” நுழைத்து வலப்பக்கமாக வெட்டித் திருப்பினேன். பொங்கிப் பிரவாகித்திருந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் கார்கண்ணாடியூடே பாய்ந்து வந்து என் கண்களைக் குத்திக் கூசச்செய்தன. நான் மடிந்து கிடந்த சூரிய ஒளித்தடுப்பினை விரித்து விட்டவாறு வளைந்து, நெளிந்து கிடந்த சாலையில் தொடர்ந்து காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். அடர்ந்து செறிந்த சூரியஒளிப்பாய்ச்சல் சாலையின் இருபுறத்தையும் மஞ்சள் மயப்படுத்தின. அந்த வெய்யில் குளியல் ஏற்படுத்திய வெக்கையின் மணம் என் நாசித்துவாரங்கள் வாயிலாக நுரையீரலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாலையோரங்களிலே ஆங்காங்கே தென்பட்ட நிழல்பரப்ப முடியாத இலைகளை இழந்த மரங்கள். வானமும், பூமியும் ஓடிச்செல்லும் வாகன இரைச்சல்களாலும், வெளித்தள்ளப்படும் புகைகளாலும் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் கனடாவில் குடியேறிய போர்த்துக்கீசக்குடியேறிகளும், அவர்களின் சந்ததியினரும் பெருமளவில் அந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். பழைய “பிரிட்டிஷ்” கட்டடக்கலை சார்ந்து செங்கற்களைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட குடியிருப்புக்களே பெரும்பாலும் வீதியின் இரு புறங்களிலும் அமைந்திருந்தன. பல்லாண்டு காலப்பழமை வாய்ந்த அந்தச் செங்கற்கள் மீது ஐதான கருமை நிறம் படர்ந்திருந்தது. வெடித்தும், பிளந்தும் காணப்பட்ட சில சுவர்கள் சீமெந்து பூசப்பட்டுச் சரிசெய்யப்பட்டிருந்தன. அவ்வாறான பழம்பெருமை வாய்த்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கட்டடங்களின் வெளிப்புறம் திருத்தவேலைகளுக்கு உட்படுத்தப்படும்போது அவற்றின் வடிவம் மாற்றியமைக்கப்படக் கூடாது என்ற “ரொறொன்ரோ மாநகரசபையின்” கடும் நிபந்தனையும் வழமையான முதலாம் உலக நாடுகளின் நகரங்களுக்கே உரித்தானமுறையில் இங்கும் கடைப்பிடிக்கப்பட்டது..
ஒரு வருடத்துக்கு மேலாக இந்தக் கடையின் உணவு விநியோக கார்ச்சாரதி வேலையில் இருப்பதனால் அந்தப் பிரதேசத்துக்குள்ளே அமைந்துள்ள ஒவ்வொரு சந்துபொந்;துகளும் எனக்குத் தண்ணிபட்டபாடுதான். ஆனால் கனவுகளிலே திளைத்துக்கொண்டும், சஞ்சரித்துக்கொண்டும், நண்பர்பளோடு கைத்தொலைபேசியில் அரசியல், கலை, இலக்கியம் போன்ற வாதப்பிரதிவாதங்களை நிகழ்த்திக் கொண்டும் இவ்வாறான கடமையைப் புரியும் எனக்கு உணவு விநியோகம் செய்யவேண்டிய சரியான முகவரியைத் தவறவிட்டு மூன்று, நான்கு முறையென்று ஒரேயிடத்தையே சுழன்றுசுழன்று வட்டமடிக்கும் சூழ்நிலையும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.

அப்போது “புளோர்” வீதியில் வாகனங்கள் நிறைய ஓடிக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் வாகனத்தை என்னால் வேகமாகச் செலுத்த முடியாது, ஏனெனில் பாதசாரிகள் வீதியைக் குறுக்கறுக்கும் விசேடவழிகளும், “சிக்னல்” ஒளிவிளக்குகளுமாகவே அவ்வீதி அமையும். எனவே ஆறுதலாகக் “காரினை” செலுத்திக் கொண்டிருந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த “குத்துக்கல்லு” இளைஞன் எந்த வார்த்தையும் பேசாமல் முகத்தில் எத்தகைய பிரதிபலிப்புக்களையும் வெளிப்படுத்தாது உறைந்தநிலையில் காட்சி புரிவதாகவே எனக்குத் தோன்றியது. எவ்வாறு உரையாடலை இன்னொருவரிடம் ஆரம்பிப்பது என்பதில் எப்போதும் எனக்குச் சங்கடம் நேர்ந்துவிடுவதில்லை. எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் இல்லாமல் முன் தயாரிப்பு ஏற்பாடுகள் இல்லாமல் என்னால் எந்த அந்நியரோடும் சம்பாசித்துவிட முடியும்.

எனவே எந்தப் பீடிகையுமில்லாமல் “எப்பிடித்தம்பி இருக்கிறியள்” என்று உரையாடலைத் தொடங்கினேன். அவன் அதற்கு வாயைத்திறந்து பதிலளிக்காமல் முகத்தைச் சிறிதாக அசைவுக்குட்படுத்தி, கண்களைச் சிறிது விரித்து, உதடுகளைச் சுருக்கி எதையும் பேசாமல் மௌனத்தில் ஆழ்ந்தான். ஆனாலும் நான் விடுவதாயில்லை, “தம்பி யாழ்ப்பாணத்திலை எந்த ஊர்” என்று தொடர்ந்தேன். அப்படி ஊரைப்பற்றி நான் விளிக்கையில் “உப்பிடியெல்லாம் கேள்வி கேக்கிறது படுபிற்போக்குத்தனமானது, “யாழ்ப்பாண மையவாதம்” தனது மேட்டுக்குடி மேலாதிக்கத்தைத் தொடர்ந்தும் புலம்பெயர் வெளிகளிலே தக்கவைப்பதற்கான அணுகுமுறைகளில் ஒன்றாகவே இவ்வகையான உரையாடல்களைப் பகுப்பாய்வு செய்து கட்டுடைத்தல் வேண்டுமென்று” அண்மையில் நான் சென்றிருந்த ஏதோ ஓர் தமிழ் கலை இலக்கிய ஒன்றுகூடலிலே யாரோ ஒருவர் அறைந்து கூறியது என் ஞாபகப்பரப்பில் விரிந்தது. மேலும் அந்தப் பேச்சாளரின் சொல்லாடல்களில் கூறுவதாயின் என்னுடைய “பரவணிப்” பழக்கம் அந்தக் கோட்பாட்டுக்கு இசைய மறுத்தது. மேலும் மனம்தளராது என்னால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த முயற்சிகளால் அவன் தொடர்பான சிறிதளவான தகவல்களையே அவனிடமிருந்து திரட்டிக்கொள்ள முடிந்தது உணவு விநியோகத்தைச் செய்துமுடித்துத் திரும்புவதற்குள்.

பருத்தித்துறையைச் சேர்ந்த அவனது தாயும், தந்தையும் இலங்கை அரசாங்கத் திணைக்களமொன்றில் எழுதுவினைஞர்களாகப் பணியாற்றியவர்கள். தற்போது இருவரும் உயிருடன் இல்லை. ஏறத்தாள இருபது வருடங்களுக்கு முன்னமே தான் கனடா வந்து விட்டதாகவும் அதற்கு முன்னரான இறுதிக்காலங்களில் தான் யாழ்பாண நகரத்திற்கு அண்மையில் உள்ள திருநெல்வேலிப்பகுதியில் வசித்து வந்ததாகவும் மிகவும் சுருக்கமாகவே தான் தொடர்பான விபரங்களை எனக்கு ஒப்புவித்தான். இந்த ஒப்புவிப்புக்கு இடையிடையே வாழ்க்கை குறித்த தனது சலிப்பையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை உத்தியோகபூர்வமாக அத்தாட்சிப்படுத்தக்கூடிய அடையாள அட்டை உட்பட வங்கிக்கணக்கு இலக்கம், தொலைபேசி இலக்கம் என எதனையும் அவன் கொண்டிருக்கவில்லை. அதெல்லாம் இருப்பதும், இல்லாமல் விடுதலும் அவனைப் பொறுத்த வரையில் ஒன்றுதான் போலும். அன்று எங்கள் கடைக்கு வரஆரம்பித்தவன் ஒவ்வொரு நாள் காலையிலும் நான் வேலைக்கு வரமுன்பே அங்கு எழுந்தருளியிருந்தான்.

இடைக்கிடை இவ்வாறு என்னோடு உரையாடிக் கொண்டான். “ஏன் நீங்கள் இந்த வேலை பாக்கிறியள், வேறை ஏதாவது நல்ல வேலை எடுக்கலாந்தானே?” “சும்மா தேவையில்லாமல் இதுக்குள்ளை நிண்டு கொண்டு வாழ்க்கையை அநியாயமாக்கிறியள்.” இதை விட்டுவிட்டு வேறை நல்ல வேலை எடுக்கலாமோ, எடுக்கேலாதோ என்பது குறித்த சரியான விடை எனக்குத் தெளிவில்லாததாக இருந்தபோதிலும் எனதுநிலை குறித்துச் சற்று அவனுக்கு விளக்குவது எனது கடனாயிற்று.

“தம்பி பத்து வருசத்துக்கு மேலை இந்த நாட்டிலை வாழுறன். இன்னும் நான் அகதியாய் இந்த நாட்டிலை ஏற்றுக்கொள்ளப்படாததாலை வதிவிட அனுமதியோ, எதுவுமோ கிடைக்கேல்லை. அதைவிட “இமிக்கிறேசன்” சம்மந்தப்பட்ட வழக்குகள், அதுக்கும் மேலாலை இந்த நாட்டு அரசாங்கம் என்னைப் பிடிச்சு வைச்சுக் கொண்டு அனுப்ப வெளிக்கிட்ட வேளையிலை எல்லாம் அதனைத் தடுத்து நிறுத்திறதுக்காய் நீதிமன்றத்தின் தடைஉத்தரவைப் பெற என்ரைமனிசி பின்ளையளையும் இழுத்துக் கொண்டு உந்த உலகமெல்லாம் ஓடித்திரிஞ்சது. ‘இமிக்கிறேசன் பேப்பர்’ இல்லாத மகளை யூனிவர்சிற்றியிலை படிப்பிக்கப் பட்டபாடு ………. இப்படியான கனவிசயங்கள் காரணமாய் நானும் என்ரைகுடும்பமும் என்ன பாடுபட்டிருப்பம் எண்டு நினைக்கிறியள். நல்லாய் படிச்சுப்போட்டு வதிவிட அனுமதியோடை வந்த சனங்களே இங்கை தங்கடை தொழில்சார் பயிற்சிக்கேற்ற வேலையெடுக்N;கலாமல் ‘கோப்பை’ கழுவிக்கொண்டும், ‘ராக்சி’ ஓடிக்கொண்டும், ‘பேப்பர்’ போட்டுக்கொண்டும் திரியிறது உங்களுக்குத் தெரியுந்தானே. அதுக்காண்டி உந்தவேலையளைச் செய்யிறதை தரக்குறைவாய் பாக்கிற ஆளும் நானில்லை” என்று என்ரை முழு விசயங்களையும் அவனுக்கு அக்குவேறை, ஆணிவேறையாய் ஒரேயடியாய் சொல்லமுடியாட்டிலும் கொஞ்சமாய் சொன்னன். இன்னும் கொஞ்சம்கூடச் சொல்லியிருக்கலாம்தான்,

ஆனால் அவனுடைய பாவனைகள் எண்டு சொல்லும்போது உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அவனது உடல்மொழியைக் கண்டுகொள்வதிலை அல்லாவிடில் அதனைப் பின்தொடர்ந்து கலைச்சுக் கொண்டு போறதென்பதிலை என்னைப் பொறுத்த வரையிலை அது எனக்குச் சாத்தியாமாய் இருக்கேல்லை எண்டு சொல்லிறது இன்னும் கூடப் பொருத்தமானது. அத்தோடு அவனது சிலநடவடிக்கைகள் எனக்கு விசித்திரமாகவும் பட்டது. அவன் தான்அணிந்திருந்த அழுக்கான உடைகளை மாற்றுவது குறித்தோ அல்லது குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதென்பதிலோ அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆனால் நேரத்துக்குநேரம் நன்றாய்ச் சாப்பிடவேண்டும். அவனுக்குச் “ஷெல்ரரிலையும்” சாப்பாடு கிடைத்தது. அந்தச் “ஷெல்ரரும்” கூட எங்கடை கடைக்குப் பக்கத்திலைதான் இருந்தது. அதைவிடவும் அந்தப் பகுதியிலை இருந்த சில தேவாலயங்களிலை இலவசஉணவு வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததனால் சில சமயங்களிலை அதையும் அவன் பயன்படுத்திக் கொண்டான். ஆனாலும் எங்கடை கடையிலை சமைக்கப்படும் “சிக்கின் விங்ஸ்” அவனுக்கு ருசியாய் இருந்திருக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நாளும் அதைச் சாப்பிடுவதிலை அவன் குறியாய் இருந்தான். அவன் கடையிலை ஒருவரோடையும் பேசாமல் தனியே அமர்ந்திருந்த வேளையிலெல்லாம் அவனுடைய கண்கள் “சிக்கின் விங்ஸையே” குறி வைத்தபடி இருந்தன.

கிழமை நாட்களில் நானும் முதலாளியும் பகலிலை வேலை செய்தாலும் மாலை நேரங்களிலை இன்னொரு “வேலையாள்” எங்களோடு இணைந்து கொள்வார். முதலாளி நிலைமையைப் பார்த்து ஏழு அல்லது எட்டு மணிக்கு கிளம்பி விடுவான் வீட்டுக்கு. அந்த வேலையாள் சகலகலா வல்லவர். இருபது வருடமாக இந்தத் தொழிலிலை இருப்பதாலை அவரால் சமைக்கவும் முடியும். மேலதிகமாகத் தேவைப்படும் போதெல்லாம் சமைத்துக் கொண்டே “டிலிவரிச்” சாரதியாகவும் பணி புரிவார். அவர் முதலாளி இல்லாத வேளைகளில் அவனுக்கு மிகவும் பிரியமான “சிக்கின் விங்ஸை” நன்றாகச் சுடவைத்து ஒரு துண்டு பீஸாவுக்கு மேலே ஏற்கனவே சிறுதுண்டுகளாக வெட்டப்பட்ட வெண்காயத்தையும், மிளகாயையும் தூவி ஒரு காகிதத்தட்டிலே வைத்துக் கொடுப்பார்.

எனவே ஒவ்வொரு நாளும் இறுதிவரை அந்தச் சாப்பாட்டை அவன் எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பதாகவே எனக்குத் தோன்றும். அதை நினைத்துப் பார்க்கும் போது பகிடியாகவும் இருக்கும் சில வேளைகளில். ஆனால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஒரே உடுப்பையே தோய்க்காமல் அவன் உடுத்திக்கொண்டு திரிவது எனக்குச் சிலவேளைகளில் எரிச்சலை ஏற்படுத்தியது. ஏனெனில் கடை திறந்து மூடும் வரை பெரும்பாலான நேரம் எங்களோடுதான் அவன் தனது பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

உடுப்பு என்பது வெளிவேசம் தான். பல வேளைகளில் இந்த வேசத்தையே சமூகம் முன்னுரிமை கொடுத்து எடைபோட முயலுகிறது. அப்படி வெளிவேசம் என்றால் ஒவ்வொருவரினதும் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடுகள் ஏற்படுத்தும் உந்துதலினால்தானே இந்த வேசம் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுவதாகக் கொள்ளலாமா? பற்றுக்கள் குறைந்த ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு உடை குறித்த நாட்டம் ஒப்பீட்டுஅளவில் மற்றையோரைக்காட்டிலும் தாழ்ந்ததாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற வகையில் எழுந்துநின்ற கூற்றுக்கள் என் மூளைநரம்புகளை ஊடறுத்தபடி இருந்தன.

எப்படியாயினும் அணிந்திருக்கும் உடைகளைத் தோய்த்து, உலர்த்தி போட்டுக் கொள்ளலாம்தானே, அதிலென்ன பிரச்சினையிருக்கிறது, உடல்நலத்திற்கும் அதனால் நன்மை பயக்கும், மற்றவர்களுக்கும் அது அசௌகரியத்தைத் தராது என்றே நான் கருதினேன். அதை அவ்வப்போது நினைக்கும் போதெல்லாம் அதை அவனிடம் நேரில் போட்டு உடைத்துவிட வேண்டுமென்ற உத்வேகம் கிளர்ந்தும், அடங்கியும் என்னுள் உழன்றபடி அலைந்து திரிந்தது. அன்று அதற்கான வாய்ப்புக் கிடைத்தது போலும். நான் உணவுப் பொதிகளைத் தயார்படுத்திக் கொண்டு “டிலிவறி” செய்வதற்காக எனது காரை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தவேளை பார்த்து அவன் நானும் வரட்டுமா? என்று என்னைக் கேட்டான். ஏதோ தெரியவில்லை நானும் திடீர் ஆவேசப்பட்டவனாக “நான் இனிமேல் உம்மைக் காரில் ஏத்திறதாய் இருந்தால் நீர் குளிச்சு, தோய்ச்ச உடுப்புகளை மாத்திக்கொண்டு வரவேணும், அதுவரைக்கும் என்ர ‘காரிலை’ உம்மை ஏத்தப்போறதில்லை” என்று உரத்த குரலில் கூறிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் விசுக்கென்று கிளம்பிவிட்டேன்.

நான் காரை எடுத்துக்கொண்டு உணவுவிநியோகத்தை முடித்து மீண்டும் கடைக்குத் திரும்பும் வரைக்கும் எனது மனதுக்குள் நான் நடத்தி முடித்திருந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது என்னை நோக்கி. எனது அகத்தனிமையில் “நான் அப்படி அவனை நோக்கிக் கூறியது சரியா? பிழையா?” என்பது குறித்து எழுந்த விவாதமே அது. அது குறித்த முடிவான தீர்மானத்திற்கு என்னால் இலகுவில் வந்துவிட முடியவில்லை. ஆயினும் அந்த நிகழ்வு தந்த பாதிப்பிலிருந்து என்னால் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இந்தக் கனடா நாட்டுக்குக்குள் நான் புகுந்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் எனது அகதிக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்;லை. மேலும் கூறுவதாயிருந்தால் எனது அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக நான் தலைமறைவாகிப் போய்விடலாம் என்ற காரணத்தை முன்வைத்து கனடியஅரசால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்காகச் சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். பின் அந்த நாடுகடத்தல் உத்தரவுக்கெதிராக என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சமஷ்டிநீதிமன்ற நீதிபதியின் உத்தரவினால் தற்காலிகமாக அந்த வெளியேற்றத்திலிருந்து தப்பிப்பிழைத்து எனது குடும்பத்தோடு இணைந்து வாழ்கின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் மீண்டுமொருமுறை நான் கைது செய்யப்படலாம் கனடாவை விட்டுத்துரத்துவதற்காக. அதற்கு இந்த நாட்டுச்சட்டத்திலே இன்னும் இடமிருக்கிறது. எனக்கு இந்த நாட்டிலே வேலை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இங்கு வாழும் சகலருக்கும் உரித்தான இலவச மருத்துவச்சிகிச்சை பெறுவற்கான சான்றிதழ் பத்திரம் கூட என்னிடம் இல்லை. இவை குறித்த நான் தொடர்பான சில தகவல்களையாவது அவன் அறிந்து வைத்திருக்க வேண்டுமென்றே நான் எண்ணியிருந்தேன்.

நான் “டிலிவறியை” முடித்துக்கொண்டு வந்து கடையின் பின்புறம் அமைந்திருந்த கார்த்தரிப்பிடத்தில் எனது “காரை” நிறுத்திவிட்டு சிறிது நேரம் “காரை” விட்டு வெளியே இறங்காமல் உள்ளே அமர்ந்து கொண்டிருந்தேன். மீண்டும், மீண்டும் எனது நினைவுப்பொறிகளுக்குள் சுழன்று கொண்டிருந்தது அவன் குறித்த சிந்தனைகளே. வெண்பஞ்சு மேகங்கள் வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அதற்குக் கம்பளம் விரித்தாற்போன்று பின்னணியில் இளநீலம் பரந்த வான்பரப்பில் அப்பிக்கிடந்தது. அதற்கும் கீழே நெரிசல்களாய் காணப்பட்ட வீடுகளின் கூம்பு வடிவில் அமைந்த கூரைகள் முளைத்திருந்தன. எனது பார்வையைத் தரையை நோக்கித் தாழ்த்தினேன். அவன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவ்வாறே எனக்குப்பட்டது. நான் எனது பக்க கார்க்கண்ணாடியைத் பதித்துக்கொண்டேன். என்னிடம் வந்த அவன் மிக நிதானமாக என்னை நோக்கிக் கூறிய வார்த்தைகள் “உங்களுக்கு எப்ப ‘வேர்க் பெர்மிட்’ (வேலை அனுமதிப்பத்திரம்) கிடைக்குதெண்டு சொல்லுங்கோ, அண்டைக்கு நான் குளிச்சுப்போட்டு என்ரை உடுப்புக்களைத் தோய்ச்சுப் போட்டுக்கோண்டு வாறன்”.


nmuralitharan@hotmail.com

Series Navigation