யாரடியோ ?
Published January 22, 2004 • By
அனந்த்
அனந்த்

யாரும் எண்ணிப் பார்க்காத
அழகைக் கூட்டி அந்தியினை
அழித்த ழித்தே எழுதுகிற
அந்தக் கலைஞன் யாரடியோ ?
சேரும் முகிலாம் மங்கையவள்
செறிவில் மகிழ்ந்து அவளருகே
சென்று மறைந்த நிலவினைப்பின்
திரும்பத் தருவோன் யாரடியோ ?
ஊரும் உலகும் உவகையிலே
ஊறித் திளைக்க வீழ்ந்தமழை
உடன்நின் றதன்பின் தொடுவானில்
ஒளிவில் வரைவோன் யாரடியோ ?
பாரும் அண்டம் பலப்பலவும்
படைத்துக் காத்துப் பின்னழித்துப்
பார்த்துப் பார்த்து விளையாடும்
பரமன் அவனே அவனேதான்!
————————————————————————————————————————-
ananth@mcmaster.ca