திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

காதலன்

This entry is in the series 20040902_Issue

பவளமணி பிரகாசம்


அழைக்கின்றான் என்னை
உருவத்தைக் காட்டாமல்
குரல் மட்டும் கேட்கிறது
நினைவு தெரிந்த நாள் முதல்
நிழல் போல் தொடர்வது
நிச்சயமாய் தெரிகிறது
நேருக்கு நேர் முகம் காண
நெருங்கிய பல நொடிகள்
சந்திக்க நேராமலே
சங்கமம் நிகழாமலே
நழுவி விட்டன எப்படியோ
கண்ணாமூச்சி காட்டுகிறான்
கைப்பிடிப்பான் நிச்சயமாய்
என்னை ஒட்டி வரும் அவன்
என் ஒரே மெய்க்காவலன்
மெய்யான ஓர் காதலன்
என் உயிரை கேட்கிறான்
அடையாமல் விடமாட்டான்
கூடிட நானும் நாணி
ஓடி ஒளிவதை ரசித்தே
துரத்தும் ஆளவந்தான்
அவன் கையணைப்பில்
அமைதி காண வருவேன்
என்றறிந்து காத்திருக்கும்
ஏமாறாத எமகாதகனை
நீங்கா நினைவாய் ஆனவனை
நிதமும் எண்ணி நகைக்கிறேன்
நிறைந்த மனதுடன் நிற்கிறேன்
மங்கல நாளிலே கைத்தலம்
பற்றிடுவான் என் கொற்றவன்

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

About பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

View all 124 articles →

காதலன்

This entry is in the series 20040122_Issue

பசுபதி


வாலையின் கண்ணிமை மென்மையைப் போல,
. மங்கையின் முத்துப்பல் வெண்மையைப் போலக்
காலை உதித்திடக் கட்டளை இட்டவன்
. கட்டாயம் அவனொரு காதலன் தானய்யா! (1)

குறைகளும் குற்றமும் கொண்டவோர் அன்பன்மேல்
. கோபமுறு காதலி கொட்டிடும் கண்ணீர்போல்,
திரைகடல் நீரில் கரிக்கும் வெறுப்பைச்
. சேர்த்தவன் உறுதியாய்க் காதலன் தானய்யா! (2)

பொங்கிடும் காதலின் பித்துடன் தன்னுயிர்ப்
. பூவை இசைக்கையில் புவனம் படைத்தவன்,
மங்கையின் ஆத்மாவை வசந்தச் சிரிப்பினில்
. வைத்தவன் நிச்சயமோர் காதலன் தானய்யா! (3)

மடந்தை ஒருத்தியின் மந்திரக் கட்டினில்
. மயங்கியே போனவன்; மங்காத் துயரமும்,
அடங்காத தாகமுள்ள அணங்காய்க் கோடையை
. ஆக்கியவன் ஐயமின்றிக் காதலன் தானய்யா! (4)

சோலையில் சுனைகளைச் சூழ்ந்திடும் மரங்களைச்
. சுந்தர மங்கையர் உருவினில் ஆக்கியே
கோல இலைகளில் கூந்தலின் காந்தியைக்
. கொணர்ந்தவன் உண்மையில் காதலன் தானய்யா! (5)

வனப்புடை மலர்களின் வளர்ச்சியில் அறியலாம்;
. வாலையின் கண்களை வனசத்தில் பார்க்கலாம்
இனிப்பிதழ் செம்மையை ரோஜாவில் சுட்டலாம்;
. இவற்றைப் படைத்தவனோர் காதலன் தானய்யா! (6)

[ஷா நீல்ஸனின் ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்]

~*~o0O0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

About பசுபதி

பசுபதி

View all 76 articles →