ஒரு கவிதையே கேள்வியாக..
Published February 19, 2004 • By
செங்காளி
செங்காளி

(சென்ற வாரம் வெளிவந்த பத்மா அரவிந்த் அவர்களின்
‘ஒருகவிதை ‘யில் சில வரிகளை மாற்றி, மேலும் கொஞ்சம்
சேர்த்ததின் விளைவு…)
என்னுள் இருப்பவனே எங்கும் நிறைந்தவனே
என்னுடைய கேள்விகளுக் கேற்றபதில் சொல்லிடுவாய்
அப்பழுக் கின்றியெமை அவதரிக்க வைத்துப்பின்
தப்புகள் மிகச்செய்யும் தன்மையராய் ஏன்வளர்த்தாய் ?
கடவுளே கேட்கின்றேன் கண்கெட்ட மானிடன்னான்
கடன்வாங்கிச் செலவழித்து கல்யாணம் நடத்திடவே
இடமில்லை என்றுசொல்லி மாடியிலே கூரைவேய்ந்து
சடங்குகளைத் தடையின்றிச் செய்யும்படி ஏன்செய்தாய் ?
சட்டங்கள் வரைமுறைகள் சகலவுமீ றியெங்கள்
இட்டம்போல் செலவுசெய்து இனிய விருந்துண்டு
பட்டபொறி கூரைதன்னில் பெருநெருப்பாய் மாறுமென்று
திட்டமிட மறக்கும்படி திருமாலே ஏன்செய்தாய் ?
இருமனமும் ஒன்றாகும் திருமணத்தை, செலவின்றி
விருந்துண்ணச் சேர்ந்து வீண்கதைகள் பலபேசிப்
பெருமளவில் கூட்டமிட்டுப் பொருள்விரயம் செய்யும்
வெறுமணமாய் மாறும்படி வெங்கடேசா ஏன்செய்தாய் ?
natesasabapathy@yahoo.com