பதிலைத்தேடும் கேள்விகள்..

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

அமைதிச்சாரல்


உன்னிடமிருந்து
கற்றதும் பெற்றதும் ஏராளமாயிருப்பினும்,
இழந்துமிருக்கிறோம்..
விலைமதிப்பற்ற பொழுதுகளை;

நீ, … வேலை நிறுத்தம் செய்தால்தான்
சிலவீடுகளில்
அடுப்பே எரிகிறதென்றபோதிலும்;
என்னருமை தோழமையே!!
பல வயிறுகளுக்கு,
நீயே அட்சயபாத்திரமாவும் விளங்குகின்றாய்..

நட்பாய் நுழைந்து..
உறவாய் மாறி..
இன்று,
உரிமையாளனாய் உருவெடுத்தபோதிலும்;
கோலுக்கு வசப்பட்ட குரங்காய்
சபித்தும், சகித்தும்
வாழப்பழகினோமேயன்றி…
ஒற்றைச்சுட்டுவிரல்
நீட்டியதில்லை.. உனை நோக்கி!!

அறிவுரைகள் பல பகன்றாலும்
அபத்தங்களையும் சேர்த்தே..
நீ,.. சந்தைப்படுத்தும்போது..
ஆற்றாமைதாளாமல்,…
என்னருமை தொலைக்காட்சியே!!
உனை நோக்கி
விரல் நீட்டுகிறேன்;
ரிமோட் சகிதம்…
உனை ஆற்றுப்படுத்த!!..

செங்கோலை
எங்களிடம் பறிகொடுத்தபின்னும்..,
எப்பொழுதிலும்
கவிழ நேரும் கூட்டணியாட்சியாய்..
பரிபாலனம் செய்யும் இம்சையரசரே….
நீவிர்,
நல்லவரா!!!… கெட்டவரா!!!..

Series Navigation

அமைதிச்சாரல்

அமைதிச்சாரல்