புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1)தமிழ்முஸ்லிம்களின் இன்றைய சூழலில் முஸ்லிம் நீட்சே என்று ஒருவரைச் சுட்டிக் காட்டவேண்டுமென்றால் அவர் நிச்சயமாக ஹெச்.ஜி.ரசூல்தான் எனத்துவங்கி மைலாஞ்சி கவிதைகளை முஸ்லிம் சமூகம் மாறுபட்ட எதிர்க் கோணங்களில் புரிந்து கொண்ட விமர்சனக் குறிப்போடு மகாகவி இக்பால் நீட்சேவின் தத்துவப்போக்கு தவறு என்று தள்ளி ரூமியின் சூபித்துவத்திற்கு வந்தடைந்தார். ஆனால்
ஹெச்.ஜி.ரசூல்தான் இன்னமும் பகுத்தறிவுஎன்னும் குண்டுச் சட்டிக்குள்தான் குதிரை ஓட்டிக் கொண்டுள்ளார் என ரமீஸ் பிலாலி தனது பிரபஞ்சக் குடில் வ்லைப்பக்கத்தின் பகுத்தறிவின் விளிம்பில் பதிவில் (அக்டோபர் 18, 2010) குறிப்பிடுகிறார்.

நீட்சேயின் மிகவும் பிரபலமான கருத்தாக்கம் கிறிஸ்தவப் பின்புலம்சார்ந்து கடவுளின் மரணம் பற்றி அறிவித்தது. ஆனால் முஸ்லிம் சிந்தனையாளர்கள் யாரேனும் அல்லாவின் மரணம் பற்றி அறிவித்தார்களா என பிலாலிதான் விளக்கவேண்டும். மற்றபடி பிறப்பு என்ற ஒன்றின் முடிவாகத்தானே இறப்பு முன்வைக்கப்படுகிறது. முஸ்லிம் நம்பிக்கைப்படி அல்லாவிற்குத்தான் பிறப்பு என்ற ஒன்று
இல்லையே..

2)தண்ணன்மூசாவின் கவிதைகளையே தாண்டிவராத ஒரு சமூகத்தில் ஹெச்.ஜி.ரசூலின் நவீன கவிதைகள் எதிர்ப்பை சம்பாதித்ததில் வியப்பில்லை.ஆச்சரியம் என்னவென்றால் ஹெச்.ஜி.ரசூலின் கவிதைகளில் முழுக்க முழுக்க செயல்படுவது பகுத்தறிவுதான். ஆனால் அது திராவிடப்பாணி பகுத்தறிவல்ல. அப்படி இருந்தால் நான் அவரை முஸ்லிம் பெரியார் என்று கூறியிருப்பேன். அவரும் இந்நேரம்
பி.ஜெயினுலாப்தீன், அல்லது ஜவாகிருல்லாஹ் அணியில் இருந்திருப்பார்.ஹெச்.ஜி.ரசூலின் பகுத்தறிவு மேற்கத்திய பாணியிலானதுதான். என பிலாலி விளக்குகிறார்.

நண்பர் பிலாலி பெரியாரிய பகுத்தறிவை பிஜேயின் அடிப்படைவாத அணுகுமுறையோடு மறைமுகமாக ஒப்பிட்டிருப்பது வேடிக்கை.பெரியார் இந்துசமய பெருமரபுகடவுளர்களையும் சிறுதெய்வ கடவுளர்களையும் சேர்த்தே கட்டுடைப்பு செய்தார். இஸ்லாமிய நிறுவனச் சமய மரபுகளான ஹஜ்ஜின்போதான தொங்கோட்டத்தையோ ,சைத்தானை கல்லெறிதலையோ ஆடு ஒட்டகம் பலியிடுதலையோ,தலைமுடி களைதலையோ,வஹி என்னும்
அறிவித்தலையோ, ஜிப்ரீலையோ,சொர்க்கம் நரகத்தையோ இன்னும் எண்ணற்ற குரானிய க்ண்ணோட்டங்களையோ பெரியாரிய அறிவு சார்ந்த மரபில் விவாதிக்காத சூழலில் பிஜேயை அவ்வாறுஒப்பிடுவது தவறானது. வேண்டுமெனில் பிஜேயின் அணுகுமுறையைபோலி பகுத்தறிவுவாதமாகக்கூடச் சொல்லலாம்.ஏனெனில் அவ்விவாதங்கள் தர்காமரபுசார்ந்த கதையாடல்களின் மீதுதான விமர்சனங்களை முன்வைக்கின்றன். அவற்றின்
மானுடவியல் இனவரைவியல், பண்பாட்டு உளவியல் சார்ந்த அம்சங்கள் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல்.

3)எனது மைலாஞ்சி கவிதைகளைப் பொறுத்தமட்டில் அவை படைப்பிலக்கியமாக இருப்பதால் அதில் நேரடி பகுத்தறிவுக்கான இடம் இல்லாமல் போனதை கண்டுணர்வதில் ரமீஸ்பிலாலி நிரம்பவும் தடுமாறிப் போயுள்ளார்.

யதார்த்தமும் புனைவும் கலந்த தொன்மக் கவிதையின் பிரதிகளாகவும் மைலாஞ்சியை வாசிக்கமுடியும்.

1)தொட்டிலில் தூங்கிய குழந்தை
தானாக சிரித்து தானாக அழத்துவங்கும்
கிச்சுகிச்சுமூட்டி பூக்கலை மலர்த்தி
விளையாட்டுக் காட்டிய ஹுருலீன்கள்
பறந்து போயினர்
இறக்கையை விரித்து.

2) எறும்பாக மாறாமல் எறும்புடன் பேசிய
சுலைமான்நபி போலல்ல
வார்த்தைகளோடோ
வார்த்தைகளற்றோ
எறும்புடன் பேசக் கற்றுக் கொள்கிறேன்
எறும்பாக மாறி

3) வாழவிருப்பமில்லை
தேடுகிறேன்
யூனூஸ் நபிவாழ்ந்த
மீனின்வயிர்றை

4)எதிர்ப்பட்டது கடல்
தாண்டிச் செல்ல நினைத்த சூபி
கால்வைத்தபோது
நீர்விலகி வழிவிட்டது.
கேட்க கேட்க கடலில் நடப்பது
சாதரணமாகிப் போனது.

5)முன்கர்நகீர்களை ஏமாற்றி
கபறுகுழியைவிட்டு
வெளியே குதித்துச் சாடி
புக உடல்தேடி
அலைந்து கொண்டிருந்த
ஜின்னைப் பிடித்து
என் நெஞ்சுக்குழியில்
உட்காரவைத்தேன்
ஒரு நடுநிசியில்

ஆதிமனம் குறித்த புதிர்மைகளாகவும்.குரானிய தொன்ம மறு உருவாக்க பிரதிகளாகவும்,பகுத்தறிவைத் தாண்டியதொரு புனைவின் பயணமாகவும் மைலாஞ்சி கவிதைகள் இயங்குவதை கவனத்தில் கொள்ளாமல் அதிரடி முடிவுக்கு ரமீஸ்பிலாலி வதடைந்திருப்பதில் ஒவ்வாமையே மிஞ்சுகிறது.இக்கவிதைகளின் புனைவுப் பயணத்தை அறிவுரீதியாக புரிந்து கொள்ள முடியுமா..

4)ஒரு நரிக்குறவன் அவனுடைய மொழியில் இறைவனுடன் உரையாடலாம். ஆனால் ஒரு வேதத்தை அதன் மூல மொழியில்தான் பேணவேண்டும் என்று பிலாலி சப்பைக்கட்டு கட்டுவது மொழி தொடர்புகருவி என்ற எல்லையைத் தாண்டி பண்பாட்டு இனங்களின் அடையாளமாக இருப்பதை கவனிக்க தவறிவிடுகிறது.தமிழ்தொழுகை கருத்தாக்கம் குறித்த எனது உரையாடலை அபத்தம் என அறிவிக்கிறார்.அபத்தங்களும் வாழ்வின் ஒரு
பகுதிதானே.

5)தமிழ்தொழுகை இதனை பகுத்தறிவு சார்ந்த விவாதம் என்பதைத்தாண்டி வழிபாட்டில் அரபு மேலாண்மைக்கு மாற்றாக தமிழ் என்பதான அணுகுமுறையாக ஏன் அர்த்தப்படுத்தக் கூடாது.நிறுவப்பட்ட ஒற்றைப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மாற்றுக் குரலாகக் கூட இதனை புரிந்து கொள்ளலாம்தானே…மையத்திற்கு மாற்றாக விளிம்புநிலை என்பதுதான் பின்நவீன சிந்தனை. ரமீஸ்பிலாலி தனது பழைய
துருவேறியிருக்கும் நவீனத்துவக் கோட்பாட்டிலிருந்து இன்னும் மேலெழும்பி வரவில்லை

6)குரானை அரபுமொழியில் ஓதும் போது இசைமை இருக்கிறது.தமிழ்தொழுகையில் அதை வசனமாக மட்டுமே உரையாடும் போது இசைமை இல்லாமல் போகுமே என மிகவும் பலவீனமான ஒரு வாதத்தை ரமீஸ்பிலாலி தொடுக்கிறார்.

திருச்சியைச் சார்ந்த மவ்லவி இப்ராகீம்ரப்பானியின் பயான் உரையை எங்கள் ஊர் பீரப்பா விழாவில் கேட்டிருக்கிறேன்.அவரின் முதல் பத்துநிமிட கிராஅத் ஆலாபனை மிகவும் பிரம்மாண்டமானதாகும். குரான் ஆயத்துக்களை உள்ளொடுங்கிய குரலில் உச்சரிக்கத் தொடங்கி உச்சக் கட்டத்தை எட்டும் போது அக்குரலின் ஆலாபனை மெதுவாக குணங்குடி மஸ்தான் சாகிபுவின் தமிழ்பாடலில் கரைந்து
உருகிவழிவதை உணர்ந்திருக்கிறேன்.அரபா தமிழா என் பிரித்தறிய முடியாத அனுபவமது.தமிழ்ப்படுத்தப்பட்ட குரானை இசைமையோடு ஓதுவது என்பதில் சிக்கல் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.ஏனெனில் இசைமைக்கு சொற்களின் ஓசைநயம் என்பதைத்தாண்டி ஒலிநயம் போதுமானதுதான்.

7)பிலாலி குரானை திரும்பவும் ஒற்றைப்படுத்தப்பட்ட பண்பாட்டு அரசியலின் மொழியாடலுக்குள் குறுக்கிவிட நினைக்கிறார்.பிரார்த்தனையாகவும்,வழிபாட்டு கடமைகளாகவும்,அறிவுரைகளாகவும்,தண்டனைக ளா கவும்,விவாகரத்துகளாகவும்,சொத்துப்பிரிவினைகளாகவும்,
எச்சரிக்கைகளாகவும்,ஏசல்களாகவும்,இயற்கையின் ஆராதனைகளாகவும்,தொன்மங்களின் சித்திரங்களாகவும்,அதிசயங்களின் படிமங்களாகவும் கதையாடல் விவரணைகளாகவும்குரானியவசனங்கள் பன்முகத்தனமை கொண்டிருக்கின்றன. இந்த வசனங்களுக்கான எழுவகை ஓதல்முறை எனும் இசை வடிவங்கள் புராதன அரபு சமூகத்தில் இருந்தன.ஆனால் இந்த ஓதல் முறைகள் குரானிய வசனங்களின் உள்ளடக்கத்தை
வெளிப்படுத்தும் உணர்ச்சிநிலைகள் சார்ந்து இயங்குகிறதா என்பதை அரபு புலமை அதிகம் பெற்றுள்ள ரமீஸ்பிலாலி போன்றோர்கள்தான் இன்னமும் நுட்பமாக விளக்க முன்வரவேண்டும்
இல்லையெனில் இசைசார்ந்து எழுப்பப்படும் புனிதங்களின் கற்பிதங்களுக்குள் விளிம்போர உண்மைகள் மூழ்கடிக்கப்படும் அபாயம் நேர்ந்துவிடும்.இன்று உலக அளவில் பிரபலமடைந்த ஏறத்தாழ 271 குரான் ஓதல்முறைக் குரல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன என்பது வேறுவிசயம்.

8)வகாபிய அடிப்படைவாதத்திற்கு மாற்றுக் குரலாக சூபிய இஸ்லாமிய சிந்தனை மரபை முன்வைக்கும் தருணத்தில் இந்து வைதீக சைவ சாதிப் பிடிமானச் சிமிழுக்குள் சூபிகளை அடைத்துவிடும் பேரபாயமும் நிகழ்கிறது. அடித்தள மக்கள் சார்ந்து கலகக்காரர்களாகவும் சமூக வெளியில் தென்படும் சூபி ஆளுமைகளை இந்த வகைப்பட்ட இஸ்லாமிய சநாதனிகளிடமிருந்தும் விடுவிக்க வேண்டியுள்ளது.நவீனகால
சூபிசம் அரபு,பாரசீக ஆபிரிக்க மரபுகளின் பன்மை அடையாளங்களாகவெளிப்பட்டுள்ளன.விஞ்ஞானம்,தத்துவம்,இசைசார்ந்த எல்லைகளிலும் உரையாடல் நிகழ்கிறது.ஹஸ்ரத் இனயத்கான்,இத்ரீஷா ஹிஸாம் ஹப்பானி என சூபி அறிஞர்களின் பங்களிப்பும், முக்கியமானவை. எகிப்தின் நகர்புற சூபிமரபு,சூபி சகோதரத்துவ இயக்கம்,செனகலின் மெளரிடிசம்,மொரோக்கோ,அல்ஜீரியாவின் திட்ஜானி,பிரெஞ்சு காலனிய
எதிப்பு இயக்க பசிபிசம் என சூபிய இயக்கங்களின் நீட்சி பயணப்படுகிறது.அகத்தேடலில் நிகழும் பனா இறையிடத்தில் தன்னை யழித்தல் சமூக அளவில் தற்கொலைப்படையாகி தன்னையழிக்கும் சூபிஜிகாத் ஆகவும் உருவாகி உள்ளது.

9)இச்சூழலில் அரபு பூர்வீக ஷேக்குகளாக தங்களைப் பாவித்து சாதீயக் கருத்தியலுக்கு வக்காலத்து வாங்கும் சில சூபிகளின் சிந்தனை குறித்தும் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டியுள்ளது.

மது அருந்துபவர், கந்துவட்டிக்காரர்,மட்டுமின்றி நாவிதர்,பிணம்கழுவுபவர்,சாயத்தொழிலில் ஈடுபடுபவர், தோல் பதனிடுபவர்,செருப்புத் தைப்பவர் ,வில்செய்பவர்,சலவைத்தொழிலாளர்களுடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள்(அஷ்ரபுகள்)உணவருந்தக் கூடாது என்ற கூற்றினை சூபி அறிஞர் சையத் ஜலாலுதீன் புகாரி கூறியுள்ளதான விவாதம் இதில் முக்கியமானது.

அஜ்லபு முஸ்லிம்களுக்கு கல்வி வழங்குவது விலை உயர்ந்த ரத்தினக் கற்களை நாய்களின் முன்னே பரப்பி வைப்பது போலவும், தங்க ஆபரணங்களை பன்றிகள் கழுத்தில் அணிவிப்பது போலவும்தான் என 14ம் நூற்றாண்டு துருக்கி அறிஞர் ஜியாவுதீன் பரணி எழுத்திலும் தொனித்திருக்கும் கூற்றுகளும் நம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

இப் பின்னணியில் சூபியத்தின் படித்தரங்கள் சாதீயத்தின் படித்தரங்களாக குரு – சீடன் மரபில் வெளிப்பட்டுள்ளதா என்பதை சகோதரர் ரமீஸ்பிலாலிதான் இனி விளக்கித் தரவேண்டும்..

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்