விடியல்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

கற்பகம்


—-
உன் கண்விழிக்குள்
நான் இமைதிறக்கும்
விடியல்கள் வரமாகும்…

உன் மார்புக்குள்
நான் புதைந்திருக்கும்
புலரெல்லாம் சுகமாகும்…

சவாலென்று ஏற்றாலும்
சருக்காது என் பொழுது
உன் காதலென்னும்
உறுதிமொழி உயிரிலிருக்கும்
காலம்வரை.

மெல்ல எழுந்து ஓசைப்படாமல்
வேலைக்குப் புறப்படும் நீ..
நின்று சில கனங்கள் –
என் உறக்கம் ரசித்திருப்பாய்…

நானோ துயின்று மயங்கிடுவேன்…

மேற்போர்வைகளை மெல்ல நகர்த்தி
நெற்றியில் பதியும் ஓர் ஈர முத்தம்
கூந்தல் கற்றைகளை ஒதுக்கியபடி
நேரமாகுதடா கண்மணி என்பாய்…

வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
இதுபோன்ற காலைகளே வேண்டுமடா…

உன் கண்விழிக்குள் நான் இமைதிறக்கும்
விடியல்களே வேண்டுமடா…


karpagam610@yahoo.com

Series Navigation

விடியல்

0 minutes, 19 seconds Read
This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

-ரமணா.


‘இந்தப் பொம்பளைங்களுக்கெல்லாம் கமல் மனசு புரியல; இஞ்சி இடுப்பழகா பாட்டுல ரேவதி கையக் கீழவிட்டுடாம, எப்படிப் பூ மாதிரித் தாங்கிப் பிடிப்பான்! சே, எனக்கு மட்டும் சான்ஸ் கிடைச்சிருந்தா, இப்படி ஒரு ஆளுக்கு, எப்படி அருமையான மனைவியா இருந்திருப்பேன்…… ‘ – தொடையில் சுள்ளென வலிச்சுக் கண் முழிச்சுப் பார்க்க, ‘ஏய் தனா எந்திரு புள்ளை, எந்திரு, எந்திரு… ‘ அம்மா பரபரப்பா இங்கும், அங்கும் ஓடிட்டு இருக்காங்களே, என்னாச்சு ? ஏன் இந்தப் பரபரப்பு ?

‘கோவிலுக்குப் போன உங்கண்ணனுக்கு ஆக்ஸிடெண்ட்டாயி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்களாம், பூபதி வந்திருக்காரு சொல்ல, நான் அவரோட ஆஸ்பத்திரி போறேன், நீ பல்லக், கில்லத் தேச்சுட்டு உங்கக்காவைக் கூட்டிட்டு வந்திரு… ‘, வேகமாக ஓடினவங்க ‘கே.ஜி.யாம் புள்ளை, 7-ஆம் நம்பருல வந்திருங்க… ‘ என்ற படி கண்ணை விட்டு மறைந்தார்கள்.

‘ஆ, ஆக்ஸிடெண்டா ‘-னு லேசா உடம்பு விறைக்க, கூடவே, ‘அய்யோ, இன்னிக்குப் பார்த்தா ? கடவுளே எத்தனை நாளா இதுக்காகக் காத்துட்டிருந்தேன், இதென்ன சோதனை ? இனி எப்படிக் கமலைப் பார்க்கறது, எங்க பார்க்கிறது… ‘ என்று நினைக்கும் போதே, அம்மா கடைசியாய்ச் சொன்னது எதிரொலிக்க, ‘அய், கே.ஜி ஹாஸ்பிடல்ன்னா அம்மா சொன்னாங்க, அது கே.ஜி தியேட்டரைத் தொட்ட மாதிரித் தானே இருக்கு, அங்க தான கமல் சாயந்திரம் திறப்பு விழாவுக்கு வர்றான், எப்படியும் பாத்துரலாம், கடவுளே அண்ணனுக்குப் பெரிசா ஒன்னும் இருக்கக் கூடாது… ‘ என நினைத்தவளாய்ப் பல் தேய்க்கச் சென்றாள்.

பல் தேய்க்கும் போது, ஏன் இப்படித் தனக்கு கமல் பைத்தியம் பிடிச்சிருக்குனு கேள்வி எழ, பிடிச்சிருக்கு, அதான் பிடிச்சிருக்கு, என்று கண்ணாடியைப் பார்த்துச் சிரித்தாள். ‘இந்த கண்ணாடியைப் பார்த்துச் சிரிக்கிற பைத்தியம் என்னிக்கு விடுதோ அன்னிக்குத்தான் விடியும் ‘ என்று அம்மா அடிக்கடி கத்துவது காதில் ஒலித்தது. கண்ணாடியைப் பார்த்துச் சிரிப்பதற்கும், விடிவதற்கும், என்ன சம்பந்தம் என்று அவளுக்கு என்றுமே புரிந்ததில்லை.

***********

ஆஸ்பத்திரியில் அம்மா கண்ணீர் ஆறாய்ப் பெருக, டாக்டர் காலில் விழுந்து கதறிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் தனாவுக்குப் பகீரென்றது. ‘கடவுளே, கமலைப் பார்க்க விடாம என் ஆசையில மண்ணைப் போட்டுறாத…. ‘ என நினைத்தவள், அடுத்த கணமே, ‘சே, அண்ணனுக்கு என்னன்னு கவலைப்படாம, கமலைப் பார்க்க முடியலயேனு நினைக்கறேனே, இது தப்பு…. ‘ என்று கமலைத் தள்ளி வைத்து விட்டுப் பக்கத்தில் நின்ற நர்ஸிடம், ‘என்னங்க ஆச்சு எங்கண்ணனுக்கு ? ‘ என்றாள். அண்ணனுக்கு லிவர் பீஸ், பீஸாக் கிழிஞ்சு போச்சாம், அமிதாப் பச்சனுக்கு எப்பவோ ரொம்ப சீரியஸா இருந்துச்சே, அப்ப இதே தான் ஆச்சாம், ஆபரேஷன் பண்ணப் போறாங்களாம், ரொம்ப மேஜர் ஆபரேஷனாம், ‘எதுக்கும் தயாரா இருங்க ‘-னுட்டு ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிட்டுப் போனாராம் டாக்டர். அம்மா விம்மி, விம்மி அழுகறதைப் பார்த்ததும், தனாவுக்கும் அழுகையா வந்துச்சு – அண்ணனை நினைச்சா, கமலை நினைச்சானு சரியாத் தெரியலை.

மணி நான்கு இருக்கும், ஆபரேஷன் முடிஞ்சு, இரண்டாவது மாடியிலுள்ள ஐசியு வார்ட்க்கு வெளிய, அம்மா, அக்கா, அண்ணனோட பிரெண்ட்ஸ் நாலஞ்சு பேரு எல்லாரும் இறுக்கமான முகத்தோட உக்காந்திட்டிருந்தாங்க; டாக்டர் 48 மணி நேரம் கழிச்சுத் தான் எதுவும் சொல்ல முடியும்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு. பக்கத்துல ஒரு சேட்டுக் குடும்பம், கண்ணையும், மூக்கையும் துடைச்சுகிட்டே, ஆளுயர டிபன் கேரியர்லேர்ந்து எதையோ எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒரு நாயர் அவர்களுக்கு டா கொண்டு வந்து குடுத்து விட்டு, அங்கிருந்தவங்களையெல்லாம் ஒரு நோட்டம் விட்டு விட்டுப் போனான்.

தனாவுக்கு தன்னுடைய கனவு பலிப்பதற்கான எந்த சாத்தியக்கூறும் இருப்பதாய்த் தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. ஏன் மற்றவர்களுக்கெல்லாம் மட்டும் பசிக்கவில்லை, அவர்களின் பசியை பாசம் தின்று விட்டதோ, தனக்கு மட்டும் பாசம் என்பதே இல்லியோ என்று நினைத்தாள். ‘சே, சே, அப்படி எல்லாம் கிடையாது, இந்த அண்ணன் மஞ்சக்காமாலைல படுத்தப்ப எத்தனை நாளு, அவனுக்கு பக்கத்துலயே இருந்து பார்த்தேன், எனக்கும் பாசம் எல்லாம் இருக்கு ‘, என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டாலும், பாசத்தை விட பைத்தியம் ஜாஸ்தி ஆயிருச்சுனு மனசு ஒரு மூலைல கேள்வி கேட்பது போலிருந்துச்சு. அதிலிருந்து தப்பிக்க அங்கிருந்து எழுந்து மெதுவாக நடந்து வராண்டாவில் போய் நின்றாள்.

மறுபடியும் டா கிளாஸ் எடுக்க வந்த நாயர், ‘எந்தா குட்டி! உள்ள யாரு ? ‘, என்றான். ‘அண்ணன் – லிவர் ஆப்ரேஷன் ‘ என்றாள் தனா. ‘ஓ, அந்த அமிதாப் பச்சன் கேசா, நர்ஸ்ங்க கதைச்சிட்டிருந்தாங்க, குட்டி படிக்குதா ? ‘ என்றான். ‘ஆமாம், பத்தாவது ‘ என்றாள். அப்போது அங்கு வந்த யாரோ ஒரு பொம்பளை அவனிடம், ‘என்ன பாலு, பக்கத்து தியேட்டர்ல சினிமா நடிகர், நடிகையெல்லாம் வர்றாங்க போலருக்கு ‘, என்றார். ‘கமல் வந்தாச்சா ? ‘, என்று கண்கள் விரியக் கேட்டாள் தனா. ‘எனக்குத் தெரியாதும்மா, பாலுவுக்குத் தான் அதெல்லாம் தெரியும் ‘, என்று தாண்டிப் போனாள் அந்தப் பெண்மணி.

நடந்து கொண்டிருந்த நாயர் திடாரென்று நின்று, இவளைத் திரும்பிப் பார்த்து, ‘கமல் பார்க்கனுமா குட்டிக்கு ? ‘ என்று கேட்க, தனா அம்மா இருக்கும் திசையை எட்டிப் பார்த்தாள், அவர்கள் எல்லாம் சற்று முன் பார்த்த அதே நிலையிலேயே அமர்ந்திருந்தார்கள். ‘இவட நின்னே பார்க்கலாம், மாடில ஒரு ஜன்னல்ல இருந்து பார்த்தா, தியேட்டர் நல்லாயிட்டுத் தெரியுமாக்கும் ‘ என்றான். அந்த நிமிடம் அவளுக்கு நாயர் கடவுள் போலக் காட்சி தந்தான், ‘அதி தீவிரமாக ஆசைப்படுங்கள், ஆண்டவர் நடத்திக் கொடுப்பார் ‘-னு மெரினா பீச்ல ஒரு முறை யாரோ பேசியது காபகம் வந்தது தனாவிற்கு. ‘கடவுள் கிட்ட நான் வேண்டினது வீண் போகலை, என் ஆசையை நிறைவேற்ற, தன் சார்பா, இந்த நாயரை அனுப்பி வச்சிருக்காருன்னு நினைச்சவ, அண்ணனுக்கு ஒன்னும் ஆயிடக்கூடாதுன்னு நான் இதே மாதிரி இவ்வளவு தீவிரமா வேண்டினா கடவுள் நடத்தி வைப்பாரு, கமலைப் பார்த்துட்டு வந்து வேண்டிக்கலாம், அதுக்குக் கடவுள் நாயரை அனுப்ப முடியாது, டாக்டரை இல்ல அனுப்பனும், கொஞ்ச அவகாசம் வேணுமில்ல அவருக்கு ‘, என்று தனது ஹாஸ்யத்திற்குத் தானே உள்ளூரச் சிரித்தவளாக, படிக்கட்டு போல் இல்லாமல், வளைந்து, வளைந்து ஏற்றமாகச் செல்லும் அந்த மாடியில், நாயருக்கு இணையாக வேகமாக ஏறினாள்.

கடைசி மாடி வந்து தான் நாயர் நின்றான். அங்கே, ஏகப்பட்ட தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் இறைந்து கிடந்தன; உயரத்தில் தியேட்டர் இருந்த திசையை நோக்கி ஒரு ஜன்னல் இருந்தது, பக்கத்தில் ஆளுயரத்துக்கு ஒரு நாற்காலி இருந்தது. நாலைந்து பேர் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். தனா வேகமாய் ஓடி, அந்த நாற்காலியில் ஏற முயன்றாள். நாற்காலி ஆட, நாயர் பிடித்துக் கொண்டான். அவன் தலை அவள் இடுப்பளவு உயரத்தில் இருந்தது. ஜன்னலை எட்டிப் பிடித்து, தலையை வெளியே விட்டாள், தியேட்டரில் திரளாக மக்கள் கூட்டம் தெரிந்தது.

நடுவில் ஒரு காரிலிருந்து யாரோ இறங்க முயன்று கொண்டிருந்தார்கள், மக்கள் கூட்டம் அலை மோதியது. அது தான் கமலோ ? இன்னும் நன்றாக எம்பிப் பார்த்தாள். காலில் எதோ பூச்சி ஊறுது போல என்று அவள் பார்ப்பதற்குள், ஆ, ஆமாம், கமலே தான், கண்ணாடி போட்டுக் கொண்டு, ராஜா, ராஜாதி ராஜனிந்த ராஜா பாட்டில் வருவது போல் காரிலிருந்து இறங்க, தனாவிற்கு, பாராசூட்டில் பறப்பது போலிருந்தது. ‘நானும் கமலுடன் காரிலிருந்து இறங்கி வந்தால் எப்படி இருக்கும், என்ன வயசு வித்தியாசம் தான் கொஞ்சம் ஜாஸ்தி, அதற்கென்ன, காதலுக்கு வயசெல்லாம் கிடையாது, பானு சொன்னாள், அவள் அவ அக்கா வீட்டுக்காரரோட அண்ணன் ஒருவர் 40 வயசுல கல்யாணம் ஆகாம இருக்காராம், அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறாளாம்…. ‘ தொடர்ந்து சென்ற எண்ண ஓட்டத்தைக் காலுக்கிடையில் ஏதோ ஒரு அவஸ்தை வலுக்கட்டாயமாய்ப் பிடித்திழுக்க, குனிந்து பார்த்தாள்.

நாயர் மிக யதார்த்தமாக, அவளை விழாமல் பிடித்துக் கொள்பவன் போல், அவள் மேல் சுதந்திரமாகக் கைகளைப் படர விட்டுக் கொண்டிருந்தான்; சற்று முன் கடவுள் போல் தெரிந்தவன், இப்போது கறை படிந்த பல் தெரிய ‘எந்தா, கமலைக் கண்டதும் ஜிவ்வுன்னுட்டுண்டோ, எனக்கும் அப்படியாக்கும் இருந்துச்சு ‘, என்று அவளைப் பார்த்து மிக அசிங்கமாகச் சிரித்தான். இவ்வளவு கேவலமாக இவன் விரித்த வலையில் விழுந்து விட்டோமே என்று தனாவை அவமானம் பிடுங்கித் தின்றது. அழுகையும், ஆத்திரமும் பொங்கி எழ ஒரே நிமிடத்தில் அந்த நாற்காலியிலிருந்து குதித்து, மூச்சிரைக்க வளைவில் ஓடினாள்.

இரண்டாவது மாடி வந்தவுடன் கீழே உட்கார்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். ‘அவன் சொன்னது போல், ஜிவ்வென்று இருந்ததால் தான், என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் மதியிழந்து நின்று கொண்டிருந்தேனோ ? எனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் ? ‘ காலில் ஏதோ அசிங்கம் பட்டது போல் வேகவேகமாகத் துடைத்துக் கொண்டு, எழ எத்தனிக்கும் போது, அவன் அவளைத் தாண்டிச் சென்றான், ரகசியமாகக் கண்ணடித்து விட்டுச் சென்றான். ஐசியு அருகில் சென்றதும் அம்மா, ‘எங்க புள்ள போன, ஆளக் காணோம் ‘-னு கேட்க, ‘பைத்தியங்களுக்கு சிகிச்சை அளிக்கிற ரூம் கடைசி மாடில இருந்துச்சு, பார்க்கப் போனேன்…. ஒரு பைத்தியத்தைத் தெளிய வச்சுட்டாங்கம்மா ‘, என்றாள். அம்மா கேள்வி தான் கேட்டார்களே ஒழிய, பதிலைக் கேட்கும் மன நிலையிலில்லை.

தனாவின் அண்ணன் உயிர் பிழைத்து வீட்டுக்கு வந்து பல மாதங்கள் ஆகின்றன; இப்பொழுதெல்லாம் தனா பல் தேய்க்கும் போது கண்ணாடியைப் பார்ப்பதேயில்லை.

***

ரமணா.

செப்டம்பர் 19, 2002.

ramanaramanathan@yahoo.com

Series Navigation

விடியல்

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

பவளமணி பிரகாசம்


அந்தோ!அழிந்தன காடுகள்! இயற்கை சமநிலை மாறியதே!
குறையுதே ஓஸோன், புற ஊதாக்கதிரும் ஊடுருவிடுதே!
தீருதே எரி பொருள், பெருகுதே மக்கட்தொகையுமே!
போதையிலே இளைஞர் உலகம் சிக்கித் தடுமாறுதே!
தீயாய் எயிட்ஸும் பரவிடுதே, அதற்கோர் மருந்துமில்லையே!
இப்பவோ எப்பவோ வெருட்டுதே அணு ஆயுதப் போருமே!
மதவெறி ஆட்டம் போடுதே, சாதி சண்டை வளருதே!
கள்ளக்கடத்தல், கருப்புச் சந்தை,
எங்கும் ஊழல், எதற்கும் லஞ்சம்,
கொலை, கொள்ளை, விபத்து-
இவற்றிற்கில்லை பஞ்சம்!
இத்தனை இருளிலே இரவாகவே இருந்திடுமோ
புது நூற்றாண்டும் என்றெண்ணி வருந்திடவோ!
இங்கோர் விடிவெள்ளி காண்-
இளைய தலைமுறையிலே!

Series Navigation

விடியல்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

ராஜன்


இந்த விடியலிலாவது வேலை கிடைக்காதா ?

-வேலை இல்லா பட்டதாரி.

இந்த விடியலிலாவது திருமணம் நிச்சயிக்காதா ?

-முதிர் கண்ணி.

இந்த விடியலிலாவது பள்ளிக்கு செல்வோமா ?

-இளம் தொழிலாளி.

இந்த விடியலிலாவது மகப்பேறு கிட்டுமா ?

-பிள்ளையில்லா தம்பதிகள்.

இந்த விடியலிலாவது வாழ்க்கை மாறுமா ?

-விதவை.

இந்த விடியலிலாவது மழை வராதா ?

-உழவன்.

விடியலே ?

எல்லோர் வாழ்க்கையிலும் விடிந்துவிடேன்!

ஒரே விடியலில்,

எல்லோர் இன்னலையும் மறைத்துவிடேன்!

அஸ்தமித்தபின் விடியல் என்பது இயற்கை,

விடியும் முன்னே அஸ்தமிக்கிறது பலர் வாழ்க்கை ?

விடியலே, விடிந்துவிடு!

ஒரு நாளேனும் முழுமையாக விடிந்துவிடு.

விடியலே பார்க்காத, பலர் வாழ்க்கை விடியட்டும்,

பிறக்காமலே இறக்கின்ற, பல சிசுக்கள் பிறக்கட்டும்,

மலராமலே வாடுகின்ற, பல மொட்டுக்கள் மலரட்டும்,

விடிந்துவிடு,

ஒரு நாளேனும் முழுமையாக விடிந்துவிடு,

அதுவே கடைசி விடியலாயினும்…….. விடிந்துவிடு.

Series Navigation

author

ராஜன்

ராஜன்

Similar Posts