இடை- வெளி

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

கோகுல கண்ணன்.


அவளுக்காகக் காத்திருந்தான்.

இருளின் விரல்கள் மாலையின் தேய்ந்த வெளிச்சத்தில் நிழல்களை பதித்துக் கொண்டிருந்தன. ஜன்னல் வழியாக உள்வந்த காற்று கனமான வஸ்துவைப் போல அவன் மேல் விழுந்துகொண்டிருந்தது. மேற்பாதி மட்டுமே திறந்திருந்த ஜன்னலின் அடியில் தேங்கியிருந்த இருள், அவன் கால்களைச் சுற்றி புகை போல மேலெழும்புகிறது. அதில் புதைந்துபோன பாதங்களை காணாது ஒரு கணம் திகைத்தான். இருளின் உள்ளடுக்கு ரகசியங்களில் உடலின் நங்கூரத்தை இறக்கி விட்டது போலவும் அங்கிருந்து அசைய முடியாமல் சிறைபட்டது போலவும் உணர்ந்தான்.

வெளியிலிருந்து மங்கலான வெளிச்ச கீற்றுகள் அவன் முகத்தில் எண்ணை போல குறைந்த பளபளப்புடன் வழிந்தன. ஜன்னல் கம்பிகளை தொடர்ந்து பற்றியிருக்கும் விரல்களுக்கும் கம்பிகளுக்கும் இடையில் துருப் பொடிகளும், உரிந்த பெயிண்ட் தோலியும் நிரடின. வீட்டுக்குள்ளிருந்து டா.வியின் சப்தம் ஒரு பக்கமாய் காதில் தீராத முணுமுணுப்பாய் விழுந்தபடி இருந்தது.

எதிர்வீட்டில் காம்பவுண்டு சுவர் மத்தியிலுள்ள கேட்டின் பக்கத்து தூணில் முழங்கைக்கு சாய்வு கொடுத்தபடி நின்றிருந்தாள் அந்த பெண். விரிந்து திறந்த கிடந்த கதவும் அதன்பக்கத்தில் அவள் நின்றிருப்பதும் ஒன்றுக்கொன்று இசைவானதாய் காட்சியளிக்கிறது என நினைத்து கொண்டான். அவளுடைய கூந்தல், முகத்தின் இரண்டு பக்கமும் ஒதுக்கப்பட்டு நேர்த்தியாக வாரப்பட்டு இருந்தது. காற்றில் லேசாக கலைந்து முகத்தில் விழும் கற்றை முடியை முன் தீர்மானிக்கப்பட்ட கால இடைவெளியில் அவள் மற்றொரு கையால் ஒதுக்கி கொண்டபடி இருந்தாள்.

அவள் முழங்கை மடிப்பில் புடைத்திருந்த சதையின் வழுவழுப்பை தன் பார்வை மீண்டும் மீண்டும் மேய்வதை சிறிது நேரம் கழித்தே உணர்ந்தான். அந்தச் சதையின் விம்மலும், இறுகிய மிதர்ப்பும் அவனைக் கவர்ந்தன. அவை உள்ளுக்குள் கிளப்பும் பிம்பங்களின் கிளர்ச்சியில் ஈர்ப்பாய் உணர்ந்தான். அவை மற்ற இடங்களிலிருந்து முற்றிலுமாக துண்டித்து அசுரகதியில் கவனத்தை வேவ்வேறு இழுத்து சென்றது.

அவள் நின்றிருந்த விதமும், முகம் கொண்ட பாவனையும் சற்றே இளகியதாய் அலைந்த உடையும் அவன் பார்வையில் அசாதாராண விகிதாசாரங்களுடன் வளர்ந்தன. அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் இடையில் இருந்த தெருவும், அதன் சலசலப்புகளும் தொலைந்து போயிற்று. அவன் பார்வை, எண்ணற்றப் பற்கள் கொண்டு, அவளுடைய தோற்றத்தின் ஒயிலையும், அதில் தெறிக்கும் இளமையின் துடிப்பையும், மிதர்ப்பான சதைத் திரட்சிகளையும் அதில் கவிந்திருக்கும் ரகசியங்களையும் இடையற்று உறிஞ்சுவதாய் இருந்தது. அவள் முன் தட்டையான ஒரு பொருளாய், ஒரு திரைச்சீலை போன்று, சூழலின் நிறைந்த தடுப்புகளைத் தாண்டி படபடத்து கொண்டிருந்தான். துல்லியமான நடுக்கங்களுடன் அவள் உடல் முழுவதிலும் படர்ந்து கொண்டிருக்கிறான். காற்று மரத்தை இடைவெளியற இறுக சூழ்வதை போல அவ்வுடலை சூழ்கிறான். கொஞ்சம் கொஞ்சமாய் அவள் சருமத்தின் மேல்பரப்பில் திண்ணமாய் அழுந்தும் போது பிடிமானம் அற்று அவள் உடல் அடியில் அமுங்குகிறது.

கான்க்ரீட் பாளங்கள் நீரின் மீதான பாசிப்படர் போல மெல்ல அகன்று நகர்கின்றன.குபீரென வெடிக்கும் செம்மண்ணின் குளிர்ச்சியும் கான்க்ரீட் சருமத்திற்க்கடியில் சிறைப்பட்டு கிடந்ததான மக்கிய வாசனையும் உடல்களை தாக்குகிறது.அவளில் நுழைந்து அழுந்தியபடி வெகுவேகத்துடன் மண்ணில் இறங்குகையில் மண் விரிந்து வழிகிறது இருபுறமும். எரிந்து கசிந்த மெழுகினால் ஒட்டப்பட்டது போல அவள் உடல் அவனுடன் சேர்ந்திருக்கிறது. மண்ணைப் பிளந்தபடி அடர்ந்த இருளின் ஆழங்களின் அடுக்குகளை கடந்து போகின்றன உடல்கள். விரைந்து வழிவிடும் பூமியின் துவாரத்தில் காற்றின் பாய்ச்சலுடன் போட்டியிட்டு போகும் உடல்கள். விழுதலின் வேகம் எதன் மீதோ முட்டிக் கொண்ட அதிர்ச்சியுடன் நின்றது.அவளைப் பிளந்து பூமியின் உள் மத்தியக் கூறில் அம்பு போல பாய்ந்து நின்றது அவன் குறி. தன் விரைப்பினால் ஒரு கணத்தில் பூமிப்பந்தை மேல் நகர்த்தி அசைக்க முடிந்தது அவனால்.

சுவற்றோடு முட்டிக் கொண்டு நின்றது அடிவயிற்றில் வலியை ஏற்படுத்திற்று. கம்பிகளை அழுந்தப் பிடித்திருந்த விரல்கள் எரிந்தன. குலுங்கலான அதிர்வுகளுடன் சூழல் அவன் முன் எழும்பி அசைந்தது. விரிந்த கண்களை உள்ளங்கையின் அடியால் தேய்த்துக் கொண்டான். கறுப்புப் பொட்டுகளாய் ஏதோ ஒன்று அவன் இரப்பைகளின் அசைவுகளுடன் கண்முன் பறந்தன. சுண்டிவிடப்பட்ட தந்தியைப் போல் உடம்பு இருந்தது.

எதிரே நின்றிருந்த பெண்ணைக் காணோம். ஒருவிதத்தில் அவள் அங்கிருந்து போனது

நல்லது.தன் பார்வைப் புணர்ச்சியின் நாயகியாக இருந்ததை அவள் உணர்ந்திருக்க

முடியாது. இருந்தாலும் உண்மையில் அந்தப் பெண் வெறும் ஒரு அடையாளக்குறி

என்பதையும், அவளின் உண்மையானப் பங்கு அவனுக்குள் எரிந்தபடி கிடக்கும் நெருப்பை

மூட்டியவளை நினைவு படுத்தி அவளிடம் இழுத்துசென்றதோடு சரி என்றும் சமாதானப் படுத்திக் கொண்டான். எப்போது அந்தப் பெண்ணில் சாயல்கள் நழுவின, எப்போது அவளின் சாயல்கள் அந்தப் பெண்ணின் மேல் சரிந்தன என்றும் கேட்டுக் கொண்டான்.அந்தப் பெண் எத்தனையோ முறை அவன் பார்வையில் பட்டிருக்கிறாள். எப்பொழுதும் அவள் அவனுடையக் கிளர்ச்சிப் பொறிகளை தட்டியெழுப்பியதில்லை.

இன்றையக் காத்திருப்பின் உக்கிரத்தில் அவன் சேரவேண்டியதின் அடையாளச் சின்னமாக அவள் நின்றிருந்தது தான். அவளல்ல அவனுடைய குறிக்கோள் என்று சமனப்பட்டுக்கொண்டான். உள்ளுக்குள் சுமந்துவரும் பிம்பத்தை இவள் மேல் சரியவிட்டு மனதின் உருவற்றக் குறியால் புணர்ந்திருக்கிறேன்.

சிறுநீர் கழிக்கவேண்டும் போலிருந்தது. உள்ளுணர்வு மொத்தமும் அந்த அழுத்தத்தின் விளிம்பில் நின்றது. நடையை கடந்து பாத்ரூமிற்கு போய்விட்டு வந்தான்.

ஹாலில் டா.வீயின் முன்னால் சரிந்தான். வெளிச்ச ரிப்பன்கள் மாறி மாறி பின்னிப் பிணைந்து கவிந்திருந்த இருளைத் துழாவிக் கொண்டிருந்தன.

கட்டற்றுப் பறக்கும் கூந்தலுடன் ஒருத்தி திமிறித் துள்ளியோடும் குதிரையின் மேலமர்ந்து விரைந்து சென்று கொண்டிருக்கும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. வேகமான தாளத்துடன் கூடிய இசை அந்தக் குதிரையையும் அவளின் அதிர்வுகளையும் இழுத்து சென்றபடி இருந்தது.

லேசாக தளர்ந்திருந்த நரம்புகள் அந்தக் காட்சியை பார்த்ததும் மீண்டும் அதிர்ந்து விரைப்படைவதை உணர்ந்தான். துள்ளிக் குதிக்கும் அவளின் உற்சாக அங்கங்களில் கண்கள் உராய்வதை அவனால் தடுக்க முடியவில்லை. குதிரையின் கருஞ்சிவப்பு தோலும் உள்ளிருக்கும் எலும்பின் அடையாளத்தை வெளிப்படுத்தும் கெட்டித்த முதுகும் அதற்கு முரணாக உரசிப்போகும் அவளின் மென்மையான தொடைகளும் அதில் நிகழும் அதிர்வுகளும் மனதின் சில வாசல்களை திறந்து போட்டன. அந்தக் குதிரையின் வால் விசிறல், அவளுடைய ஏறியிரங்கும் பிருஷ்டங்கள் அவனுக்குள் வேகம் மிகுந்த எண்ணங்களைத் தோற்றுவித்தது. சற்றே மேல் நோக்கிய பார்வையுடன் அவள் இவனைப் புறக்கணிப்பது போல பாடல் முடிவில் காட்டுக்குள் புகுந்து மறைந்தாள்.

மனமும் உடலும் முறுக்கேறிய தாம்புக்கயிற்றின் பிரிகளென இறுக்கத்துடன் இருந்தன.

ஏகப்பட்டதான பிம்பங்களின் சலனங்கள், அறிந்த முகங்கள், அறியா முகங்கள் எல்லாம் கலவையாய் தொடர்ந்து பின்னிப் பிணைந்தபடி இருந்தன.

அவள் ஏன் இன்னும் வரவில்லை என எரிச்சலுற்றான்.

அவளுக்காக அவன் காத்திருப்பதும் அதில் விளையும் அலைக்கழிப்புகளையும் அவளால் புரிந்து கொள்ள முடியுமா என்று சந்தேகமுற்றான். தன்னால் இந்தக் காத்திருப்பில் கலைந்து உருவாகி கலையும் பிம்பங்களின் தாக்கத்தை அத்தனை சுலபமாக சொல்லிவிட முடியாது என்று பட்டது. பல்வேறு திசைகளில் ஒரே சமயத்தில் சீறிப்பாயும் காற்றைப் போல மனமும் உடலும் கொந்தளித்து சீறுவதை எப்படி விவரிக்கமுடியும். யாருக்கும்தான் புரியுமா ? இறுக்கமான அதிர்வுகளாய் உடல்முழுவதும் விரைக்கும் நாளங்களின் கொதிப்பை எப்படி விளக்க முடியும் ?

தொடைகளின் இறுக்கத்தில் நரம்புகள் பிதுங்கி தெறிக்கிறது. தலைக்குள் சிக்கலான

பிம்பங்கள் ஒன்றை விட்டு ஒன்றை சொல்ல முடியாத பிணைவுகளுடன். விரல் நுனியிலிருந்து விழிகள் வரை துடிக்கும் உணர்வின் வேகத்தில், கற்பனையின் முழு பலப் பிரோயகத்தால் மனதின் இருண்ட, சிலந்தி மண்டிய மூலைகள் வெளிச்சம் பெறுகின்றன. அங்கு உருவாகும் சதைக்கோளங்களை உறிந்து நக்குவதில் போதையுற்று திளைக்கிறது மனம். எத்தனையோ வாசல்கள் திறந்து கொள்கின்றன. உள்ளிருந்து எட்டிப்பார்க்கும் முகங்களும் உடல்களும் தீராதக் கிளர்ச்சியைத் தூண்டி விடுகின்றன.

லேசான மஞ்சள் வெளிச்சம் போதை போல எங்கும் தேங்கி நிற்கும் காட்சி மனக்கண்ணில் ஓடுகிறது. ஷைலுவின் கரங்கள் அவன் சுற்றி வளைத்திருக்கின்றன. புரியாது விழிக்கிறான் அவன். அவனுடைய உடல் விடலைச் சிறுவனுடையாத காட்சியளிக்கிறது. ஷைலுவின் பெருமூச்சு அவன் உடல் முழுதும் பாம்பு போல பின்னி படர்கிறது. மாலை வரை அவளுடன் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான். தன்னைப் போலவே மண்ணில் குதித்துக் கொண்டிருந்தவளுக்கும் இப்போது வளைத்துக் கொண்டிருப்பவளுக்கும் இடையில் நிகழ்ந்த மாறுதலை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அக்காவின் ஸ்தானத்தில் ஊரிலிருந்து வந்திருப்பவள். அவனை விட மூன்று நான்கு வயது அதிகம். விளையாட்டிலோ பழக்கத்திலோ அந்த வித்தியாசம் எப்போதும் தலை தூக்கியதில்லை.

அந்த இரவில் தெரிந்தது.

ஷைலுவின் உடலின் அண்மை, மென்மையான ஸ்பரிசங்கள் அவனுக்கு புரியாத இன்பத்தை அளித்தது. பயமும் கூடியிருந்தது. அவள் மெல்ல அவனை ரகசியமான சில இடங்களுக்கு கைபிடித்து அழைத்து சென்றாள். புதிய வாசனைகளும் உணர்வுகளும் கலந்த இரவின் சூழலில் செல்லும் திசையறியாது மிதந்தபடி இருந்தான். அந்த இரவின் கால அளவு அவனுக்கு சரியாக ஞாபகத்தில் இல்லை.

அதுபோல பின்னர் எப்போதும் ஏற்பட்டதும் இல்லை. ஊருக்குப் போன ஷைலுவை, நான்கைந்து வருடங்கள் கழித்து சந்தித்தப் போது எதிர்ப்பார்ப்பின் விளிம்பில் துடித்து கொண்டிருந்தான்.

ஷைலு ஏதும் நிகழாததைப் போல இருந்தாள். வேறு மாதிரியான சில மாறுதல்களும் , கண்ணுக்குத்தெரியாத திரைகளும் நடுவில் தென்பட்டு, அவனுடைய எதிர்ப்பார்ப்புகளை

சிதற அடித்தன.

எத்தனையோ இரவுகள் தொடர்ந்து ஷைலுவின் முதல் ஸ்பரிசம் கிறக்கமான நினைவாய் அவனை கிளர்த்தியிருக்கிறது. களங்கங்களின் சாயல்கள் விழாத எதிர்ப்பார்ப்புகளின் சுமைகள் இல்லாத பரிசுத்தமான அனுபவம் என்று பின்னால் தோன்றியிருக்கிறது. ஒரு விளையாட்டுப் போல நிகழ்ந்தது எந்த விதமான கசப்பையும் , குற்ற உணர்ச்சியையும் தோற்றுவிக்கவில்லை. ஆனால் இந்தக் கணத்தில் மனதில் தோன்றிய சித்திரம், ஷைலுவின் தெளிவற்ற முகம் – – – – –

உடல் ஓளிவிகிதாசாரங்கள் சரிவர கூடாத நிழற்படமாய் வெவ்வேறு நிலைகளில் அவனுடன் கூடியபடி ஞாபகத்தின் அடியிலிருந்து மேலெழும்பினாள். தன்னிச்சையாய் உள்ளே தோன்றிய வெறியின் தீவிரம் சில கணங்களில் ஆழ்ந்த சுயவெறுப்பை ஏற்படுத்தியது.

அவள் வரும் நேரமாகிவிட்டதா எனப் பார்த்துக் கொண்டான்.அவள் வருவதற்குள்

வெளியில் போய் சிகரெட் பிடித்து விட்டு வந்தால் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். அவள் முன்னால் இந்தக் கொந்தளிப்பின் தடயங்களை கடைவிரித்துக் காண்பிக்க வேண்டாம்.உடல் சார்ந்த வேட்கை குறித்து அவன் எப்போதும் அணியும் அசிரத்தையான பாவனையை அது குலைத்து விடலாம். இருளின் அடர்ந்த காட்டுக்குள் கூட அவன் முகத்தில் கொதித்தாடும் உணர்வுகளை அவள் எப்படியாவது அடையாளங் கண்டுகொள்ளலாம் என அஞ்சினான்.

உடனே எதற்காக இந்த பயமும் தயக்கமும் என்ற கேள்வியும் அவனுள் எழும்பியது. அவனது வேட்கையும் துடித்தெழும் உணர்வுகளும் அவளால் உருவானவை எனில் அவளிடம் அதை அடையாளப்படுத்துவதில் தயக்கம் எதற்கு.

வெளியே இரவின் திண்ணமான சருமத்தில் உடல் மறைந்த வெளிச்ச பாம்புகள் தலைகளை மட்டும் காண்பித்தபடி ததும்பிகொண்டிருந்தன. தெற்கத்திய மலைத்தொடரின் இணக்கம் இழந்த, கருப்படித்து இறுக்கம் கொண்டிருந்த முகவாயில் உறைந்த ரத்தம் போல காட்சியளித்தது கருஞ்சாம்பல் மேகத் துணுக்கொன்று.

வீதியில் ஜனம் சரசரவென்று பாம்பு போல நகர்ந்தபடி இருந்தனர். இரண்டு பக்கங்களிலுள்ள கடைகளில் கொத்து கொத்தாக கும்பல் தேங்கியபடியும் இருந்தது. வாகனங்களின் இரைச்சலும் பேச்சுச் சப்தமும் ஒன்றாக கலந்த ரீங்காரமாய் காதில் விழுந்தது. பாதையோரத்தில் துணிச்சுருள் போல் ஒருத்தி சுருண்டிருந்தாள். சுற்றியிருக்கும் சூழலுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்து

விலகி கிடந்தாள். அவன் கண்கள் தன்னிச்சையாய் அவள் ஆடை நெகிழ்விற்கு தாவியது.

சூம்பியதாய் தட்டையாய் கிடந்த முலைகளையும், ஒடுங்கிப் போயிருந்த இடுப்பையும்

சற்று நேரம் வெறித்தான். மனம் உடனே குமுறி பொசுங்கியது. பார்வையை பிடுங்கி கொண்டான். அவலமான பிணத்தை புணரும் தோற்றம் அவனுக்கு ஒரு கணம் மின்னலாய் தோன்றி மறைந்தது. அது ஏற்படுத்திய நடுக்கம் உடலெங்கும் விரைவாக விரிவதை உணர்ந்தான்.

ஒரு கணம் மறுபடியும் அவள் பக்கம் நகர்ந்து பார்த்தபோது அவளின் பின்பக்கத்தில் கிடந்த அழுக்குத்துணிச்சுருள் கண்ணில் பட்டது. பதட்டத்துடன் உற்றுப்பார்க்கயில் அது வெறும் துணிக்குவியல் மட்டுமே குழந்தை அல்ல என்பது புலப்பட்டது. தன் சந்தேகம் பொய்த்துப் போனது அவனுக்கு சற்று ஆசுவாசத்தை அளித்தது.

மேலே மின்கம்பி மீது வரிசையாய் பறவைகள் அமர்ந்திருந்தன. நூலில் இடைவெளியற்றுக் கோர்த்த மணிகளைப் போல அவை காட்சியளித்தன. காற்றில் லேசாக மின்கம்பி அசைய, பறவைகள் ஒரு அலையாக மேலெழும்பி பறந்தன. மின்கம்பி அருகில் அவை நளினமான நடனம் போல் பறந்தன மேலும் கீழும். கண்ணுக்குப்புலப்படாத நூல்கள் கொண்டு பொம்மலாட்டக்காரனொருவன் திறமையான விரல்களால் அவற்றைக் காற்றில் ஆட்டுவிப்பது

போலிருந்தது. சில கணங்களில் படபடவென்ற சிறகடிப்புடன் மீண்டும் அவை வரிசையாக கம்பி மீதே அமர்ந்தன. ஒவ்வொரு பறவையின் இடவரிசை கூட மாறியிருக்காது என்று நினைத்தான்.

டாக்கடைப் பக்கம் நகரும் பெண்களின் முன்பக்கங்களை அருகில் பார்க்கும் தைரியமற்று அவர்களின் பின்புறத் துள்ளல்களை பார்த்தபடி இருந்தான். சிகரெட்டைப் பற்றவைத்துகொண்டு, தோற்றங்களின் அசைவுகளையும் அதனுள் ரகசியங்களையும் மனம் பின் தொடர்கையில் அவனுக்கு ஒரு கணம் பயமேற்பட்டது. பலவீனனாய் உணர்ந்தான். எப்போதோ ஒரு முறை அவன் கனவில் வந்த படிமம் மீண்டும் நினைவுக்கு வந்தது. அதில் அவனுடைய கல்லறைக்கு அவனே போக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அவனுடைய கல்லறையின் உருவம் ஆண்குறியின் வடிவத்தில் இருக்கிறது. அதைத் திறந்துப் பார்க்க திராணியற்று திரும்புகிறான்.

ஒரு முறை வந்தக் கனவு தான். ஆனால் அவ்வப்போது அதன் நினைவு அவனை வியர்க்கவைக்கிறது.

அவன் உண்மையில் விழைவது யாரை ? தூண்டப்படுவது யாரால் என்ற கேள்வி பூதாகரமாய் எழுந்தது. விடை தெரியாத அவஸ்த்தையை அவளின் பிம்பத்தை முன்னிறுத்தி அகற்றி விட எண்ணி, அவளின் மிகக்கவர்ச்சியானத் தோற்றத்தை உருவாக்கி கொள்ள பிரயத்தனப்பட்டான்.

எனக்கான எல்லாம் உன்னிடத்தில் இருக்கிறது. அதை அடையும் வழிகளையும்

நீ உன்னுள் பொதித்து வைத்திருக்கிறாய். கவர்ச்சியும், காதலும், காமத்தின் பெருந்திளைப்பும் உன்னால் எனக்கு சாத்தியமாகிறது. நீ இல்லாது போகும் வெற்றிடத்தை இவர்களைக் கொண்டு என்னால் நிரப்ப முடியுமா ?

இந்த உடல்கள் கொண்டு உன்னை நான் மீட்டுக் கொள்கிறேனா ? உன்னையா அல்லது உன்னைப் பற்றிய என் பிம்பங்களையா ? உன் மீது இந்த உடல்களை சரித்து விடுகிறேனோ ? இந்த உடல்கள் கொண்டு உருவாக்கும் கிளர்ச்சி படிமங்களின் எச்சிலை நக்கி கொண்டு உன்னைப் புணர்கிறேனா ?

சிகரெட் சுரீரென உதட்டை சுட்டது. திடுக்கிட்டு எறிந்தான். மூர்க்கத்துடன் பில்டர் துண்டை குதிகாலால் சிதைத்தான். பரபரவென்றிருக்கும் மனதுடன் வீடு சேர்ந்தான். அவள் இன்னும் வந்திருக்கவில்லை. மெளனமாக எதிர்கொண்ட வீட்டை வெறுப்புடன் பார்த்தான். சோர்வுடன் படுக்கையில் சாய்ந்தான் விளக்குகளை தணித்துவிட்டு.

அசைவின் தாக்கத்தில் திடுக்கிட்டு விழித்தான்.எத்தனை நேரம் தூங்கியது என்று

புரியவில்லை. நீண்ட நிழல்களை வாரி இறைக்கும் தணித்த ஒளியின் மத்தியில் அவள்

நின்றிருந்தாள். எப்போ எப்போ என்ற இவன் குழறலுக்கு பதில் பேசாது, கடைவாய்

புன்னகையுடன் அருகில் வந்தாள்.அவள் உடம்பின் அறிமுகமான வாசனை அந்த அறையில்

புகை போல அலைந்து கொண்டிருந்தது. மென்மையான முத்தங்களை இட்டாள்.

கைகளில் . புறங்கழுத்தில். மார்பில். வயிற்றில். சற்றேனும் எதிர்பாராத வேகத்துடன்

நிமிர்த்தி அவன் உதடுகளை கவ்விக் கொண்டாள். அந்த நீண்ட முத்தத்தின் அழுத்தம்

அவனை தீவிரமான விழிப்பிற்கு ஆட்படுத்தியது. நரம்புகள் முனகலுடன் விழிப்புற்றன.

உன்மத்தமும் வேகமும் கூடிய அசைவுகள் அவனை வந்து சேர்ந்தன. அவள் உடல்

நசுங்கி அவன் கரங்களில் பிதுங்கியது. ஆடைகள் கிழிக்கப்படுபவைப் போல

களையப்பட்டன.

இன்பத்தின் வலியில் தளர்ந்த முலைகளை முத்தமிட்டபடி, அவளைப் பிளந்துவிடுவது

போல் மேலே இயங்கினான் .தலைக்கேறும் போதை அசாத்தியாமானதொரு

வேகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது.அவளின் கரங்களை பற்றிய அவன்

கைகளின் இறுக்கம் தாளாது அவள் முனகினாள். கிறக்கத்துடன் அவள் கண்கள்

மூடி மூடி திறப்பதும், உதடுகளின் லேசான பிளவில் வெளிவரும் மிருக முனகல்களும்

– அவனுக்குள் மூர்க்கமான உற்சாகம் தொற்றிக் கொண்டது.

அலையின் மேலேறி வானத்தின் விளிம்பை தொடும் சமயத்தில் அவன் அங்கிருந்து

துண்டிக்கப்படுவதை உணர்ந்தான். உச்சத்தின் மத்தியில் விளிம்புகளேதுமற்ற

பெருவெளியின் பரப்பை உணர்ந்தான். சூனியத்தின் மகத்துவமாய் உருப்பெற்ற

பெருவெளியில், உச்சத்தின் உன்மத்தத்தை உணர்கையில், பிளவுற்றிருந்த

அவன் உடலை அள்ளி ஆரத் தழுவிக்கொண்டன கரங்கள். ஒரு ஆக்டோபஸ் போன்று

உடல் முழுக்க கரங்கள் அவனைப் பின்னி இறுக்கிக் கொண்டிருந்தன.

அந்தக் கரங்களெல்லாம் தன்னுடையது மட்டுமே என்பதை திடுக்கிடலுடன் அவன் அறிந்த போது, அவளுடைய உடல் வெகு தூரத்தில் தனித்து கிடந்ததை முதல் முறையாக பார்த்தான்.

அந்த இடைவெளியை கடக்கும் பிரயத்தனங்கள் சாத்தியமற்றவை என்பதை

உணர்ந்தபோது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

முகங்களை விற்றவன் தொகுப்பிலிருந்து

த்வனி வெளியீடு

Series Navigation

கோகுல கண்ணன்.

கோகுல கண்ணன்.