பாவண்ணனின் ஏழு லட்சம் வரிகள்: காலத்தின் இருப்பும் இயக்கமும்

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

திருஞானசம்பந்தம்


நவீன மனிதனின் மனம் கோடிகணக்கான ஆண்டுகளின் உயிர்ப் பரிமாண வளர்ச்சியின் எண்ணற்ற அனுபவங்களின் படிமங்களை உள்ளடக்கியது. கோடிகணக்கான என்ற சொல்லை, காலத்தின் பிரம்மாண்ட எல்லைகளைப் புரிந்துகொள்ள எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தகைய கடின சூத்திரங்களாலும் கட்டுப்படுத்தமுடியாத, கணக்கிடமுடியாத அல்லது அதைப்பற்றிய சிந்தனையின் தொடக்கத்திலிருந்து கூட நகராத சிக்கல் நிறைந்த ஒன்றாகவே மனித மனம் இருக்கிறது. அதே நேரத்தில் எவ்வளவு பெரிய சிக்கலாக இருப்பினும், அதைச் சிறு சிறு துகள்களாக மாதிரிப்படுத்தலாம். ஒவ்வொரு துகள்களின் மீதும் மூலத்தின் குணத்தினை ஏற்றிவைத்துப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யலாம். இந்த ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் ஒன்றாக்கி முழுமையான விடையாக உருவகப்படுத்தலாம். ஆனால் இவற்றின் சிக்கல் மீண்டும் சிறு துகள்களை ஒன்றாக்குவதில் தான் இருக்கிறது. ஏனெனில் பிரித்துவைத்த துகள்களில் சில திசை மாறிப் போகின்றன. சில இடம் மாறிப் போகின்றன. பிரித்த அனைத்தையும் நம்மால் எப்போதும் ஒன்றாக்க முடிந்ததே இல்லை.இப்படிப்பட்ட நிலையில் மனத்தை புரிந்துகொள்வது எப்படி ?. அதுவும் அடுத்தவர் மனத்தை புரிந்துகொள்வது எப்படி ?. நான் முன்பு குறிப்பிட்டது, நிலையான ஒரு பொருளைப் பற்றியது. அதைப் புரிந்துகொள்வதிலேயே இவ்வளவு சிக்கல். மாறாக, எப்போதும் இயங்கி கொண்டிருக்கும் மனத்தை தெரிந்துகொள்ள விழைவது திசையற்றுத் தாவும் காட்டாற்றை புரிந்துகொள்ள முயற்சிப்பது போலவே இருக்கும்.

இப்படிப்பட்ட சிக்கல் நிறைந்த மனத்தின் வழியாக நம் மீது ஏற்றிவைக்கப்பட்ட வாழ்க்கையை புரிந்துகொள்ள காலத்தின் உச்சகட்ட விளைவான இலக்கியம்/படைப்பு முன் நிற்கிறது. படைப்பு என்பது ஏதோ ஒரு தருணத்தில் கிடைக்கும் வெளிச்சத்தினூடாக ஒரு படைப்பாளியால் தன் கண்டறிதலாக முன்வைக்கப்படுவது. காலத்திற்கும் படைப்பிற்கும் இடையேயான உறவைப் புரிந்துகொள்வது மனத்தை புரிந்துகொள்வதிற்கு ஒப்பானதாகும். காலத்தின் பயணம் திசைகளற்றது. அவற்றின் வேகம் கணக்கிடமுடியாதது. அவற்றினூடாக நம் பயணம் என்பது மனத்தின் பயணமே ஆகும். அத்தகைய காலத்தின் வழியாக அல்லது வரலாற்றின் முடிவற்ற பக்கங்களில் அலைந்துகொண்டிருக்கும் பாத்திரங்களைத்தான் பாவண்ணன் ‘ஏழு லட்சம் வரிகளாக ‘ நம்முன் படைத்துள்ளார்.

ஒவ்வொரு கதையும் அது சார்ந்த காலத்தின் பிரதிநிதியாக அண்டவெளியில் சுற்றும் கோள்களைப் போல சுற்றிக்கொண்டிருக்கிறது. இங்கு முன்வைக்கப்பட்டிருக்கிற இதே கதைகள் அல்லது பாத்திரங்கள் வேறொரு தருணத்தில் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை முன்வைத்து வெளிவரக்கூடும். படைப்பின் நோக்கம், எந்த முடிவுகளையும் தீர்க்கமாக முன்வைப்பது அல்ல. அப்படி இருக்கவும் கூடாது.ஆனால் வாழ்வையும்,மனத்தையும் இடையறாது மீட்டிக்கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு கணத்தில் சில கேள்விகளுக்கு விடை கிடைக்கக்கூடும். ஆனால் அந்த விடை முடிவானதல்ல. ஏனெனில் சமூகத்தின் முன் அல்லது காலத்தின் முன் மனம் வைக்கும் எந்தக் கேள்வியும் சார்பற்றதாக இருக்கமுடியாது என்பதால்தான். ஒவ்வொரு கணமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இயக்கத்தின் வேகம், திசை பொறுத்து பரிமாணங்கள் மாறிக்கொண்டேயிருக்கும். அத்தகு பரிமாணத்தின் இயக்கமும், காலத்தின் இடையறாப் பயணமும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் கிடைக்கும் தரிசனம், அக்கணந்தரும் கேள்விகளின் பதிலாக அமையக்கூடும். தான் கண்ட காலதரிசன வெளிச்சத்தின் ஏதேனுமொரு ஒளிக்கீற்றைத்தான் படைப்பாளி தன் படைப்பில் ஏற்றிவைக்கிறான்.

இக்கட்டுரையின் எல்லை இத்தொகுப்பில் உள்ள பதின்மூன்று கதைகள் மட்டுமே. இக்கதைகளுக்கு முன் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்களைத் தாண்டிய பயணம் ராஜபாட்டையின் வழியாக வந்ததல்ல. இன்றைய நிலைக்கான உழைப்பும் முயற்சியும் காலத்தின் மாற்றத்திற்கும் வேகத்திற்கும் இணையாக பயணித்ததின் விளைவு.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்துவமானது. அதனதன் அனுபவங்களையும் காரண காரிய தருக்கங்களையும் முன்வைப்பது. ஒவ்வொரு கதையும் அண்ட வெளியில் நிர்ணயிக்கப்பட்ட சீரானவேகத்தில் சுழலும் கோள்களைப் போன்றது. அவற்றின் தாக்கம் – ஒன்றையொன்று தன்பால் ஈர்த்துக்கொண்டிருக்கும் மைய விசைக்கு ஒப்பானது. வாழ்வின் ஆதார முடிச்சுகளான மென்ணுணர்வுகளை ஒன்றின் மீது மற்றொன்று ஏற்படுத்தும் தாக்கங்களை முன்வைத்து நகரும் காலத்தின் பயணமாகவும் இக்கதைகள் இருக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள கதைகளை புரிந்துகொள்ளும் வசதிக்காக ஐந்து பிரிவுகளாகப் பிரித்துப்பார்க்கலாம்.

திரை, ரணம் கதைகளின் புனைவுவெளிப் பின்னனி, மானுட தவறுகளின் விளைவாக எழும் நெருக்கடிகளும் அது சார்ந்து மனம் அடையும் முடிவுகள் பற்றியதுமாகும். தம் தவறுகளின் மூலமும், தம் மீது திணிக்கப்பட்ட தவறுகளின் மூலமும் எடுக்கப்பட்ட முடிவுகளின் எதிர்மறை விபரீதங்களை எதிர்கொள்ளும் வரலாற்றுப் பாத்திரங்களாகத் துரியோதனன் மற்றும் கர்ணனைச் சொல்லலாம். வாழ்வின் கடைசித் தருணம் வரை தான் எடுத்த ஒவ்வொரு முடிவும் சரியானதுதான் என்று முற்றிலும் நம்புகிறான் துரியோதனன். அறிவுரைகளும், அறவுரைகளும் சரியான வகையில் அவனை அடையவில்லை. வாழ்வின் கடைசித் தருணத்தில் மனம் தெளிவடைகிறது. அவனின் மனத்திரை விலகுகிறது. புதிய புதிய வாசல்கள் திறக்கின்றன. அவன் முன் எண்ணற்ற பாதைகள் பயணத்திற்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் அதற்காக அவன் கொடுத்த விலை மிகப்பெரிது. திரை விலகி அவன் காணும் காட்சி- அழிவு…..மரணம்….மயானம்…. அவன் பயணம் முடிகிறது. அவன் வாழ்க்கையும் முடிந்து போகிறது. அதே தருணத்தில் படைப்பு திரை விலக்கி ஆயிரமாயிரம் பாதைகளை நமக்கு காட்டுகிறது. நம் திரைகளை விலக்கத் தூண்டுகிறது. நமக்கு மிச்சமிருக்கும் வாழ்வின் பாதைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை நமக்கே உரியது.

தன் பிறப்பின் மூலமறியாத கர்ணன், அது அவனுக்கு அறிவிக்கப்படாத காரணத்தாலேயே சிறுமைபடுத்தப்பட்ட கணங்கள் அநேகம். அவன் வாழ்வின் ஒவ்வொரு செயலின் போதும் அந்த நிழல் அவனைத் தொடர்கிறது. கர்ணனின் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அந்த நிழல் குத்திக்கிளறி ரணமாக்கிக் கொண்டேயிருக்கிறது. காலத்தின் மூலத்தை அறிய வழியின்றி, காலத்தின் மாற்ற முடியாத முடிவுடன் தன் பயணத்தை இனைத்துக்கொள்கிறான். அவன் அப்படி உணர்ந்தபோது அவனுக்கான வாழ்க்கை மிச்சமிருந்தது. அவனின் அதற்கடுத்த நீண்ட வாழ்வின் பயணத்தை அந்த கணம்தான் தீர்மானித்தது.

இந்த இரண்டு கதைகளின் வழியாக, அவர்களின் தவறுகளால் நேர்ந்த அல்லது அவர்களின் மீது திணிக்கப்பட்ட தவறுகளின் முடிவில் கிடைக்கும் தரிசனம் நிதர்சனமானது. அந்தத் தருணத்தில், காலத்தின் நீண்ட விரல்களின் வழியே நமக்கான பாதையை, பாதையின் சாத்தியங்களை முன்வைத்து கதை மறைந்துபோகிறது.

நம்பிக்கை, ஏமாற்றம் இரண்டும் ஆதிகாலந்தொட்டே சமூகத்தின் ஆணிவேர்களை அசைத்துக்கொண்டே வரும் காரணிகள். நம்பிக்கையின் உச்சகட்டம் ஏமாற்றத்தில் முடிகிறது. ஏமாற்றத்தின் எச்சங்கள் மீண்டும் போராடத்துடிக்கும் நம்பிக்கைத் துளிர்களாகிறது. இந்தப் பின்னனியைக் கொண்ட கதைகள் போர்க்களம் மற்றும் அல்லி. கடற்கரையில் அமரர் பங்கிற்கு நிற்கும் ராகுவும், அரண்மனையில் ஆட்சிபுரியும் அல்லிராணியும் ஏமாற்றத்தின் விளிம்பில் நிற்கிறார்கள். அல்லியின் எச்சரிக்கையுணர்வினை, அரசபீடம் அவளுக்கு கற்றுத்தந்தது. எந்த புற்றிலிருந்து எந்தப் பாம்பு வருமோ என்ற மிதமிஞ்சிய எச்சரிக்கையுடன் இருந்தபோதும், பாம்பு வந்தபோது ஏமாந்துபோகிறாள் அல்லி. சாதரணப் பெண்ணின் கவலையற்ற சந்தோசத்தை எப்போதும் தன்னால் அடையமுடியாது என்று அவளுக்குத் தெரிகிறது. ஒட்டுமொத்த ஆண்களின்மேல் இருக்கும் கோபம், வளர்த்துவைத்த குரோதம், எல்லாமே எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது. தந்திரத்தால் தான் ஏமாற்றப்பட்டோம் என்று உணர்ந்த கணத்தில், அர்ஜுனனை அசிங்கத்தை தொட்ட அருவருப்புடன் உணர்கிறாள். ஏமாற்றத்தின் உச்சம் அவள் மனதை மீண்டும் திடமடையச் செய்கிறது.

ராகுவின் கனவில் தோன்றிய கோரமான காட்சிகள், சூரியன் மறைந்து கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் மீண்டும் தோன்றி மறையும் அலையென அவன் மனதை அலையவைக்கின்றன. ஆதிகாலந்தொட்டு இன்று வரையிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாகவும், எண்ணமாகவும் ராகுவின் தோற்றம் காட்சியளிக்கிறது. தன் சமூகம் வஞ்சகத்தால் சிதறுண்டு போகுமோ என்ற ராகுவின் சந்தேகம், அதை வெளிப்படுத்த முடியாது தவிக்கும் மனம், ஏமாற்றப்படுவோாக்கும் ஏமாற்றுவோர்க்கும் இடையான போராட்டம் வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் விரவிக்கிடக்கின்றன. ராகு எதிர்ப்பார்த்தது போலவே ஏமாற்றப்படுகிறார்கள். சந்தேகத்தின் மொத்த வலியையும் சுமந்து திரிந்த ராகு அமிழ்தம் உண்ட பிறகும் இரண்டாகச் சிதைக்கப்படுகிறான். அமரராகும் பேராவலில் காத்திருந்த கூட்டம் பாற்கடலின் விளிம்பில் ரத்தச் சிவப்பு படர அழிகிறது. கடற்கரை ரணகளமாகிறது. எத்தனைமுறை ஏமாற்றப்பட்டாலும் கற்றுக்கொள்ள சமூகத்திற்கு ஏதுமிருப்பதில்லை. அடுத்த ஏமாற்றத்திற்கு வெகுவிரைவில் தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறது.

அவமானத்தின் உச்சகட்டத்தை எதிர்கொள்ளும் மனித மனம், அத்தருணத்தில் எடுக்கும் எதிர்பாரா முடிவு, அம்முடிவின் தாக்கம் புலப்படுத்தும் உண்மைகள், இவற்றைத்தான் ‘ஏழுலட்சம் வரிகள் ‘ மற்றும் ‘அர்ஜூனன் தவம் ‘ என்ற இரண்டு கதைகளும் முன்வைக்கின்றன. மொழியைத் தாய்க்கு நிகராக வைத்து பார்ப்பது மரபாக காலம் தாண்டி வருவது, மொழியை சீண்டுவது என்பது மனிதனின் அடிப்படை உணர்வினை துாண்டுவதற்கு ஒப்பானது. மொழியை குறைத்து மதிப்பிட்டதில் சீண்டப்பட்ட குணாட்யர் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு மொழியையும் நாட்டையும் விட்டு காட்டிற்கு போகிறார்.

கானகவெளியில், மலைமக்களோடும். வனராசிகளோடும் இணைந்து பைசாச மொழியை கற்றுத்தேர்கிறார். ஆனால் எத்தகு சூழல் அவர் எழத நினைத்த காவியத்தை தன் இரத்தத்தாலேயே எழுத வேண்டும் என்று துாண்டியது ? தன் குருதியை சொரிந்து இயற்றிய காவியம் குணாட்யரின் உடலில் ஓர் அங்கமாகவே மாறிவிடுகிறது. தன் மொழியால் பட்ட அவமானத்தை, முற்றிலும் வேறான ஒரு மொழியை வைத்து, அதன் காவியத்தை அரங்கேற்றிடவேண்டும் என்று நினைக்கிறார். அதன்மூலம் தன் அவமானம் துடைக்கப்படவேண்டும் என்று நினைத்து அரசனை நாடுகிறார். ஆனால் அவருக்கு இரண்டாவது முறையாகவும் அவமானம் காத்திருக்கிறது. குன்றிப்போகிறது மனம். உடலும் கூட. உடலின் அங்கமான காவியத்தோடு தீட்டுப்பட்டம் பெற்று காடு நோக்கி மீண்டும் வருகிறார். கல்வி கற்றால் நாக்கு வெட்டப்படும் என்ற, காதால் கேட்டால் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட்ட/ஊற்றப்படும் என்ற வரலாறு நமக்கு புதிதல்ல. காலத்தின் சுழற்சி மீண்டும் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. காவியத்தை எப்படி புனிதமாக்குவது ? குணாட்யரின் முடிவு அவமானத்தின் உச்சக்கட்ட மனம் எடுத்த முடிவு. நெருப்பிலிடுவோம். இரத்தம் அவிசாகட்டும். காவியம் ஆவியாகி காற்றில் கரையட்டும். காட்டின் ஒவ்வொரு துளியும் சுவாசிக்கட்டும். மொழி காற்றின்வழியே காலங்கடந்து பரவட்டும் என்று ஆறு லட்சம் வரிகளை அக்னியில் வைத்து விடுகிறார். மீந்த ஒரு லட்சம் வரி பெருங்கதையாக கதைக்கப்படுகிறது. உச்சகட்டத்தில் மனம் எடுக்கும் முடிவு அபூர்வமானது. எவ்வளவு கொந்தளிப்பு இருப்பினும் அக்கணத்தில் மனம் அமைதியடைகிறது.

அர்ஜூனன் தவத்தில் வரும் ஆதரவற்ற கோபாலை மாடுமேய்க்கும் மண்ணாங்கட்டி எடுத்து வளர்க்கிறான். கன்றோடு தாமும் வளர்ந்து கோபால் மாடுகளை கண்காணிக்கும் காவலனாகிறான். அர்ஜூனனாக மாறி (கூத்தின் வழியாக) குழந்தை வரம் கொடுப்பதாக மக்கள் நம்புகிறார்கள். பொறாமையின் உச்சத்தில் அமிலமாகத் துப்புகிறான் தனலட்சுமியின் கணவன். எந்தக் கூத்தின் காரணமாக தான் அபவாதத்திற்கு உள்ளானானோ அதன்மூலமே தன் அவமானத்தைத் துடைக்க முடிவெடுக்கிறான். அவனின் முடிவு கணவின் மூலம் அவனுக்கே தெரியப்படுத்தப்படுகிறது. கடும் விரதம் என்ற சாக்கில் தன்னை தன் மரணத்திற்கு அருகில் எடுத்துச் செல்கிறான். அர்ஜூனனாக மாறி பிள்ளைக்கு ஏங்கியவர்களுக்கு பூவும் பழமும் கொடுத்து முடிவில் தவ நிலையிலேயே மறைந்து போகிறான். இங்கே மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம், பலகலைகளைக் கற்றுத் தெளிந்து மகா காவியங்களைப் படைத்த கல்விமான் முடிவெடுக்க கலங்குகிறார். அவர் எடுத்த முடிவு உடனடியாக செயல்படுத்தப்படுகிறது. ஆனால், மாடு மேய்க்கும் கோபால் தன் முடிவு என்ன என்பதை பல நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு அதன்படி நிறைவேற்றுகிறான். முடிவில் எதையும் மிச்சம் வைக்கவில்லை. மனத்தின் உச்சகட்ட முடிவுகளுக்கு எந்த தத்துவ தருக்கமும் உதவுவதில்லை. அதன் உச்ச விளைவு அதற்கேயான தனித்துவமானது என்பதுதான் மனத்தின் உச்சகட்ட செயல்பாட்டு நிலையாகும்.

அடுத்தபடியாக இத்தொகுப்பில் மிக முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது புதிர் மற்றும் பிரிவு கதைகளின் புனைவு வெளியாக இருக்கும் பாசம். தன் மகள் தன்னைவிட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயம் பெரியாழ்வாரை வாட்டுகிறது. தன் மகன் தன்னைவிட்டு கண்டிப்பாக பிரியப்போகிறான் என்று தெரிந்து துவண்டு போகிறார் வியாசர். முற்றும் உணர்ந்த வியாசருக்கு என்ன நடக்கும், என்ன நடக்கப்போகிறது என்பதெல்லாம் தெரிந்திருந்தும் மகனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவரின் ஒட்டுமொத்த ஞானமும் தெளிவும் அவரைத் தேற்ற முடியவில்லை. தான் தன் வாழ்வில் இழந்த அனைத்தையும் தன் மகன் மூலம் திரும்ப அடைந்துவிடவேண்டும் என்ற சாதாரண ஒரு தந்தையின் வேட்கைக்குச் சற்றும் குறையாதது ‘சுகரை ‘ப் பிரிய பயப்படும் வியாசரின் மனம். பாசத்தின் பரிதவிப்பு குழம்பிய இருண்ட வெளிக்கு இட்டுச் செல்கிறது. கடமையை நிறைவேற்றப் புறப்படும் மகனை அனுப்பிவைக்க மனம் மறுக்கிறது. தெளிவு மறைகிறது.

மற்றொரு கதையில் குழப்பத்தின் விரல் பிடித்துத் துடிக்கிறார் பெரியாழ்வார். உண்மையில் அரங்கனுக்குத் தான் சொந்தம் என்ற ஆண்டாளை ஆசிர்வதித்திருக்கவேண்டும் அவர். இறைவனுடன் இணைந்து தன் மகள் இறைவியாவதை தந்தையின் மனம் ஒப்ப மறுக்கிறது. தன்னை விட்டு தன் மகள் போய்விடுவாளோ என்ற பயம். பாசத்தின் உச்சம் ஆசையாக உருவெடுக்கிறது. முடியாதபோது தவிப்பாக மாறுகிறது. பிரிவின் தவிப்பை தாங்க முடியாத மனங்களாக, தம் சக்திக்கும் மிஞ்சிய செயல்களின் மீது எந்த கட்டுப்பாடும் செலுத்தமுடியாத வியாசரும் பெரியாழ்வாரும் அனாதைகளைப்போல தவிக்கிறார்கள். இந்த நிலை இன்றைய முதியோர் இல்லங்களின் வாயில்களில் தன் வாரிசுகளை எதிர்ப்பார்த்து கண்பூத்திருக்கும் பெற்றோர்களின் நிலைக்கு ஒப்பானதாகும்.

நண்பனைக் காப்பாற்ற யானையைத் தன் பக்கம் வலிந்து அழைத்துக்கொண்ட டேவிட்டும், சிவகாமியின் மீது தனக்கிருப்பது காதலா, அப்படியெனில் அது சரியா என்ற குழப்பத்தில் கடைசி வரை அவள் கணவனைக் காணத் தவிக்கும் தங்கசாமியும், பழிசொல்லின் கூர்பட்டு பரிதவிக்கும் கர்பிணி சீதையும், பழிவாங்க துடிக்கும் மனத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் இடையில் தவிக்கும் அங்காளம்மாளும் காலத்தின் எல்லைகளை மீறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே தம்மை நோக்கிவரும் கேள்விகளுக்கான பதில்களை ஏதோ ஓரு உணர்வு மோதல்களின் உச்சத்தில் தெரிந்து கொண்டுவிடுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் காலத்தின் நெருக்கடிகளில் தத்தளித்தவர்கள். அவர்களைத் தன் கதைகளில் பாதைபோட்டு பாவண்ணன் நடக்க விட்டிருக்கிறார். ஒரு பறவையைப்போல தனக்கான சிறகுகளையும், வானத்தின் எல்லைகளையும் வகுத்துக்கொண்டவர் பாவண்ணன். கட்டுரையின் தொடக்கத்தில் கூறியதைப்போல பிரித்துவைத்த அத்தனை காலத் துகள்களையும் தன் மானுட தரிசனத்தின் வழியாக மீண்டும் சரியாக ஒன்றினைப்பதின்மூலம் புதுப்புது தரிசனங்களை தந்துகொண்டேயிருக்கிறார். திசைகளற்ற வெளியில், பாவண்ணன் தன் எல்லைகளைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். தான் வகுத்த எல்லையை மீறி பயணிப்பது எந்தவொரு படைப்பாளிக்கும் உவப்பானதாகவே இருக்கும்.

***

Series Navigation

திருஞானசம்பந்தம்

திருஞானசம்பந்தம்