முன்னேற்பாடுகள்

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்வசந்தாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சர்க்கரை கொட்டியது , காபி சிந்தியது ஒன்றும் சரியாக இல்லை. விஷயம் வேறு ஒன்றுமில்லை அவளுடைய மாமனார் மாமியார் சுமார் ஒரு மாத காலம் இவர்கள் வீட்டில் தங்கியிருக்கலாம் என்று இன்னும் ஒரு வாரத்தில் புறப்பட்டு வருகிறார்கள். காலையில் தான் ஃபோன் வந்தது.அது தான் அவள் பதற்றத்திற்குக் காரணம். கல்யாணமாகி இந்த 20 வருடத்தில் இவ்வளவு நீண்ட நாட்கள் அவர்கள் தங்கியிருந்ததேயில்லை.

கல்யாணமானதும் புதுக்குடித்தனம் டெல்லியில் , பிறகு லக்னௌ , பின்னர் கொல்கத்தா என்று வசந்தாவும் அவள் கணவனும் இந்தியா முழுக்க சுற்றினார்கள். கடந்த இரு வருடங்களாகத்தான் சென்னை வாசம். இவர்கள் வடக்கே இருந்ததால் மாமியார் மாமனார் அதிகம் வரப்போக இருந்ததில்லை. ஒரே ஒரு முறை டெல்லிக்கும் , கொல்கத்தாவிற்கும் வந்திருக்கிறார்கள் அதுவும் தங்கியது 10 நாளானாலும் சுற்றிப் பார்த்தது தான் அதிகம். குழந்தைகளுக்குக் கோடை விடுமுறை விடும்போது ஒரு மாதம் வசந்தாவும் குழந்தைகளும் போவார்கள். வசந்தா வீட்டில் 15 நாள் , மாமியார் வீட்டில் 15 நாள். சரியாப் போச்சு. நாள் கிழமை என்றால் நினைத்த உடன் வர என்ன பக்கத்திலா இருக்கிறது அந்தக் கிராமம்?

வசந்தாவின் கணவன் நடராஜனின் சொந்த ஊர் திநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி. அவன் படித்தது வளர்ந்தது எல்லாம் அங்கேதான். அவன் தந்தை அங்கே உள்ள ஸ்டேட் பாங்கில் வேலை பார்த்து ரிடயர் ஆனவர். அவன் அம்மா , அப்பா இருவருக்குமே அந்த கிராமம் தான் உலகம். அங்கேயே இருந்து விட்டனர். எவ்வளவோ முறை இவர்கள் கூப்பிட்டும் வர மறுத்து விட்டார்கள். கொஞ்சம் நிலபுலங்கள் வேறு இருந்ததால் அதைச் சாக்காகச் சொல்லி மறுத்தனர். அவர்களால் அந்த கிராமத்தை விட்டு இருக்க முடியாது என்று உணர்ந்து கொண்டு விட்டு விட்டான் நடராஜன். வசந்தாவின் மாமனாருக்கு 75 வயது , மாமியாருக்கு 70. இந்த வயதிலும் தன் வேலைகளை தானே செய்து கொண்டு ஆரோக்கியமாக இருந்தனர்.சர்க்கரை , ரத்தக் கொதிப்பு , வாதம் போன்ற என்ற நோய்களும் இல்லாமல் திடமாக இருந்தனர்.

வீட்டைத் துப்புரவு செய்து பளபளக்கச் செய்தாள் வசந்தா. சோபா கவர் , திரைச்சீலைகள் எல்லாம் புதிது மாற்றினாள். வசந்தா செய்யும் ஆர்ப்பாட்டங்களைக் கண்டு குழந்தைகள் சிரித்தன. தருண் இஞ்சினியரிங் மூன்றாம் வருடம் , தாருணிகா முதல் வருடம். இரண்டும் படு மாடர்ன். அது வேறு அவளுக்கு வயிற்றைக் கலக்கியது. தாத்தாவும் பாட்டியும் கிராமத்திலேயே இருந்தவர்கள் என்பதால் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றி குழந்தைகளுக்கு வகுப்பெடுத்தாள். வந்த உடன் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும் அவர்கள் விபூதி பூசியவுடன் தான் நகர வேண்டும் , சாயங்காலம் திருவாசகம் படிக்க வேண்டும் என்று தொடங்கி நகத்தைக் கடிக்கக் கூடாது , ஜீன்ஸ், பெர்முடாஸ் போன்ற உடைகள் போடக் கூடாது, நின்று கொண்டே சாப்பிடக்கூடாது என்று ஒரு லிஸ்ட் போட்டாள்.

தருணும், தாருணிகாவும் வெகுண்டு எழுந்தனர். அவர்கள் அடிப்படை உரிமைகளில் கை வைப்பதாக குற்றம் சாட்டினர். பிறகு வசந்தா கெஞ்சி , கொஞ்சி ஒரு மாசம்தான் என்று உத்தரவாதம் கொடுத்த பின்னர் ஒத்துழைப்புக் கொடுப்பதாக வாக்களித்தனர். இருந்தாலும் வசந்தாவுக்குக் கவலை தான் கடைசி நிமிடத்தில் காலை வாரி விட்டால் என்ன செய்வது என்று பயந்தாள். அதனால் ஒரு தந்திரம் செய்தாள் . அவர்கள் நல்லபடியாக நடந்து கொண்டால் தருணுக்கும் தாருணிகாவுக்கும் அவர்கள் இஷ்டப்பட்டதை வாங்கிக் கொள்ள தலா 1000 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னாள். குடும்ப ராஜதந்திரம் வெற்றி பெற்றது. முழு மனதுடன் ஒத்துழைப்புக் கொடுப்பதாஅகக் கூறி விட்டனர்.

தாருணிகாவை தனியாக அழைத்து தாத்தா பாட்டி இருக்கும் அந்த ஒரு மாசமும் சுடிதார் , முடிந்தால் பாவாடை தாவணி போன்ற உடைகளையே அணியுமாறு வேண்டினாள். இந்த விஷயத்தில் மாத்திரம் ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தாள் தாருணிகா. அண்ணனும் வேட்டி அணிந்தால் , தானும் அம்மா சொன்ன உடைகளை அணிவதாக நிபந்தனை விதித்தாள். மூவரும் சேர்ந்த கலந்தாலோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது தருண் வீட்டில் வேட்டியே அணிவது , தாருணிகா வீட்டில் நைட்டி அணிவது மேலும் வெளியில் செல்லும் போது தருண் பேண்ட் சட்டையும் , தாருணிகா கோயிலென்றால் பாவடை தாவணியும் , பிற இடங்களென்றால் சுடிதாரும் அணிவது என்பதே அந்த முடிவு. இந்த முடிவை எடுக்க வசந்தாவின் கையிலிருந்து மேலும் ஒரு 500 ரூபாய் செலவானது. தருண் வேட்டியில் இருக்கும் போது ரகசியமாக மொபைலில் ஃபொட்டோ எடுத்து அதை அவன் கிளாஸ் முழுக்க பரப்ப வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் தாருணிகா.

விட்டமின் M கொடுத்த ஊக்கத்தில் குழந்தைகள் இருவரும் உற்சாகமாக வேலை செய்தனர். வீட்டை ஒட்டடை அடித்தனர் , ஃபேன்களில் இருந்த தூசியைத் துடைத்தானர். ஷோ கேஸ் பொம்மைகளை சுத்தப்படுத்தினர். முக்கியமாக அவர்களுடைய அறையை ஒதுங்க வைத்தனர். உள்ளே நுழையவே முடியாமலிருந்த அறைகள் இப்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரூமைப் போல பளபளத்தன. வசந்தாவின் கணவன் திகைத்துப் போனான். “எங்கப்பா அம்மா தானே வர்றாங்க , என்னவோ I.S.O ஆடிட்டுக்கு அதிகாரிங்க வரா மாதிரி ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் பண்றே? என்று கேட்டான். வசந்தா பதில் ஒன்றும் சொல்லவில்லை. “உங்களுக்கென்ன சொல்லிடுவீங்க உங்கம்மா வந்து என்னை இல்ல கிழிப்பாங்க” என்று நினைத்துக் கொண்டாள்.

பெரியவர்கள் வந்தே விட்டார்கள். வந்தவர்கள் பெட்டியைக் கீழே வைக்கக் கூட சமயம் தராமல் தருணும் , தாருணிகாவும் போட்டி போட்டுக் கொண்டு காலில் விழுந்தனர். அவர்கள் பெட்டியை வாங்கத்தான் குனிகிறார்கள் என்று நினைத்து பெட்டியை அவர்கள் விட்டு விட, அந்த கனமான பெட்டி தருணின் காலிலேயே விழுந்தது. “ஆ” வென்று அலறியவன் அம்மாவைப் பார்த்து முறைத்தான். கண்டு கொள்ளாதது போல மாமியாரையும் , மாமனாரையும் வரவேற்றாள் வசந்தா. காபி குடித்து வந்த களைப்புத் தீர இளைப்பாறினர். மாமியார் வீட்டை நோட்டமிடுவது கண்டு உள்ளூர தன்னை மெச்சிக் கொண்டாள் வசந்தா. “எந்தக் குறையும் சொல்ல முடியாதுல்ல” என்று நினைத்துக் கொண்டாள்.

தாத்தாவும் , பாட்டியும் இயல்பாக இருந்தனர். எல்லாரையும் நலம் விசாரித்தனர். பேரக் குழந்தைகளை எப்படிப் படிக்கிறார்கள் என்று விசாரித்தன்ர். அவர்களின் உடை பார்த்து “நீங்க இந்த மாதிரி டிரெஸ் போடறீங்களா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே?” என்று வியந்தனர். வசந்தா மீண்டும் தனக்கு ஒரு சபாஷ் பட்டுக் கொண்டாள். வசந்தாவின் டிரைனிங் நன்றாக வேலை செய்தது. குழந்தைகள் இருவரும் அவள் சொல்லித் தந்தபடியே நடந்தனர்.

ஆயிற்று தாத்தா , பாட்டி வந்து 15 நாட்கள் ஓடிப் போய் விட்டன. இந்த ஒரு வாரமும் பரீட்சை எழுதும் மனநிலையிலேயே இருந்தாள் வசந்தா. வீட்டுப் பொருட்கள் லேசாக இடம் மாறினால் கூட பார்த்துப் பார்த்து சரி செய்தாள். பாட்டி” ஏன் வசந்தா இப்படி எப்பவுமே டென்ஷனாயிருக்கே? ஜாலியா இரேன்” என்றாள். குழந்தகள் இருவரும் தாத்தா பாட்டியிடம் உண்மையான அன்போடு பழகினர். பழைய கிராமத்துக் கதைகளை அவர்கள் சொல்லக் கேட்டு ரசித்தனர். காலேஜ் ஜோக்குகளை அவர்களோடு பகிர்ந்து கொண்டனர். மால்களுக்கு அழைத்துச் சென்றனர். பீச்சில் காற்று வாங்கினர். கோயில்களையும் விடவில்லை. சேர்ந்து போவது இருவருக்குமே பிடித்திருந்தது. மொத்தத்தில் நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன.

தாத்தாவும் , பாட்டியும் கிளம்ப இன்னும் நாலு நாட்களே இருந்தன. அன்று ஞாயிற்றுக் கிழமை. நெல்லை ஸ்பெஷல் சொதி (தேங்காய்ப்பால் ஊற்றி செய்யப்படும் ஒரு வகைக் குழம்பு) செய்திருந்தாள் பாட்டி, அந்த ருசி பிடித்துப் போக நன்றாக சாப்பிட்டு விட்டு எல்லாரும் ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு எங்கெல்லாமோ சுற்றி விட்டு இளைய தலைமுறையினரிடம் வந்து நின்றது. தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தாத்தா ஆரம்பித்தார். ” நான் சொல்றேனேன்னு தப்பா நெனச்சுக்காதே வசந்தா நீ உன் பசங்களை ரொம்பக் கட்டுப்பெட்டியா வளக்கறே. இந்த வயசுல போட வேண்டிய டிரெஸ்ஸா இதெல்லாம்? வேட்டியும் , தாவணியும் சகிக்கல்லே. ஒவ்வொரு குழந்தைகள் ஜீன்ஸ் , டீ ஷர்ட்னு போடுதுங்க, பாவம் இவங்க மட்டும் இப்படி இருக்காங்களே?” தாத்தா முடிக்க பாட்டி தொடர்ந்தாள் . ” வீடு சுத்தமா இருக்கணும்தான் அதுக்குன்னு கொஞ்சம் கூட குப்பையே சேர விடாமே , ஒரு சாமானையும் அதன் எடத்துலர்ந்து நகர விடாமே இதெல்லாம் கொஞ்சம் அதிகம். பசங்களும் உனக்கு பயந்துக்கிட்டு எப்பப்பாத்தாலும் பெருக்கி பெருக்கி சுத்தமா வெக்கிதுங்க. அந்தந்த வயசில எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தாத்தான் அழகு. கொஞ்சம் கலஞ்சிருந்தாதான் வீடு. ஆனாலும் பாவம் நீ அவங்களை ரொம்பத்தான் பாடாப் படுத்தறே. ” என்று சொன்னாள்.

தருணும் தாருணிகாவும் ஏன் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் , வசந்தா ஏன் மயங்கி விழுந்தாள் என்று பாட்டிக்கும் தாத்தாவுக்கும் புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா?

Series Navigation

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ்