தேனம்மைலெக்ஷ்மணன் கவிதைகள்..

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

தேனம்மைலெக்ஷ்மணன்


1. பொம்மைக்காரிகள்..:-
*******************************

கரடி பொம்மையின்
கைபிடித்து தரதரவென
இழுத்து வந்தது குழந்தை..

தரையில் கிடந்த
இன்னொன்றைப் பார்த்து
அதைக் கீழேயே விட்டு
இதைக் தூக்கியது..

கொஞ்சிச் சலித்தபின்
டீப்பாயில் இருந்த
மற்றொன்றை எடுத்தது..

அதற்கு சோறூட்டி
தூங்கப் பண்ணிய வேளையில்
அதிரடி சத்தத்தோடு வந்தார்கள்..
அதன் பொம்மைக்காரிகள்..

தூங்கிய பொம்மைகள்
விழித்துத் துள்ளின
எவ்விடம் இருப்பதென..

வலதும் இடதும் பற்றி
பொம்மைகளை
பொம்மைக்காரிகளிடம்
கொடுத்தபின்

தனது மட்டுமேயான
கரடி பொம்மையை
எடுத்து மார்போடு
அணைத்துக்கொண்டது குழந்தை..

— கவிதை.. தேனம்மைலெக்ஷ்மணன்

===========================================

2. நிஜம்..
*************

பதின்மத்திலேயே
நின்றுவிட்டது என் வயது
அதன் பிறகு
நான் வளரவேயில்லை
வளர விரும்பவும் இல்லை

வளரும் போதெல்லாம்
வலிக்கிறது
வளர்சி்தை மாற்றத்தால்..

சிதைக்காமலே
சிதைகிறது
சின்னக் குழந்தைத்தனம்..

கள்ளத்தனம்
எட்டிப் பார்க்கும் கண்கள் …
மெல்ல எழும்பிய தனங்களோடு..

சுமக்க ஆரம்பித்தபின்
சுமையாய் கிடக்கிறது
பெண்ணாய் நீண்ட நிஜம்..

======================================

3.வேலிக் கொடிகள்
************************

வளர்ந்து முதிர்ந்தாலும்
பனியின் இழைகளாய்
வெறுமை எதையும்
பிரதிபலிப்பதில்லை..
பிரதிநிதித்துவமாயும்..

கூடாரத்துணியுள்
பிடித்து வீச முடியாத
வர வெய்யிலாய்..
கடத்தி வெளியேற்ற
முடியாத வாடைக்காற்றாய்..

குட்டைக்குள்
ஆமையாயோ
மழை நேர
மரக்கதவிடுக்கில்
நத்தைப் பூச்சியாயோ

பாசம்பிடித்து
ஊறிக்கிடக்கும்
கிணற்றடிக் கல்லின்
வெறுப்பு மண்டிய
அழுக்குகளாய்..

நினைவின் நுனிகளில்
எப்போது வேர் பிடித்தது
என்பது தெரியாததாய்
எப்போது கசந்தது
வேலியோரப் பாகலாய்

துளைகள் கூடவிடாது
கிளையேறும் வரை
காலம் கடந்ததால்
கழட்டி வீச முடியாது
சுற்றிய கொடியாய்.

============================

4. ஆத்திகம்.. ? நாத்திகம்..?
***********************************

கோபுரங்களைப் பார்த்தால் மட்டும்
கன்னத்தில் போட்டுக் கொள்வது.

மார்கழி செங்காவி., சாணி., பூசணிப்பூவுக்கு
மாற்றாய் டைல்ஸில் ஸ்டிக்கர் கோலம்

பவர் கட்டாகி ., இன்வர்டரும் ., ஜெனரேட்டரும்
தீர்ந்தபோது சாமிவிளக்கோ., மெழுகுவர்த்தியோ..

டீப்பாய் நைவேத்தியத்தை நகராமல் உண்டு
கணனிக்குள் நானே எலியில் சுற்றும் பிள்ளையாராய்..

=================================================

5. மாயை.
**************

எப்போதிலிருந்து என
தெரியவில்லை..
கற்பெனப்படுவது
பெண் உடல் மட்டும்
சம்பந்தப்பட்டதாக
நிறுவப்பட்டது என்பது

பெண் என்பது
அந்தரங்கம் மறைக்கும்
உள்ளாடையாகவும்

ஆண் என்பது
கௌரவத்துக்குரிய
பொன்னாடையாகவும்..

கால்மிதியாகவும்
கொடிக் கம்பமாகவும்
கற்பிதப் பெருமையாய்..

— கவிதை தேனம்மைலெக்ஷ்மணன்

============================================

6. சாயம்..
***************

கட்சியின் பெயராலோ
சாதி., இனம்., மொழி
மதத்தின் பெயராலோ

கறுப்போ., சிவப்போ.,
காவியோ., பச்சையோ
பூசப்படும் உங்கள் மீது..

குன்றிப்போய் விடாமல்
ஹோலியாய்க் கொண்டாடுங்கள்..
வர்ணங்கள் நிறைந்தது வாழ்வு..

பிறப்பு., வளர்ப்பு., வாழ்வு., வளர்ச்சி.,
விருப்பு சார்ந்துதான்
சாயங்கள் நம்மேல்
சவாரி செய்ய அனுமதிக்கிறோம்..

நம் சொந்த நிறமென்னும்
இயற்கைச் சாயம் தவிர
அனைத்தும் அழிந்துவிடும்..

சந்தர்ப்பங்கள் பொறுத்தோ.,
தேய்மானம் பொறுத்தோ.,
யாருக்கும் தெளிவு படுத்தும்
அவசியம் இல்லாமல்..

=====================================

7… சத்தம்..:-
*********************

ஒரு பழைய மிதிவண்டி
அல்லது ஒரு தையல் எந்திரம்
உண்டுபண்ணும் சத்தம்..

ஞாபகப் படுத்துகிறது
பால்யத்தில் பள்ளியில்
கொண்டு விட்ட அப்பாவையும்

கைகளால் சுற்றி
தலையணைக்கு உறை
தைக்கும் அம்மாவையும்..

=============================

8… மக்கள்..
***************

எத்தனை முறை ஏமாந்தாலும்
விலகி விடப் போவதில்லை
மத குருமார்களிடமிருந்தும்
நிதிச் சீட்டுக்களிலிருந்தும்..

===================================

9.. வோட்டுப்போடும் வேள்வி:-
***************************************

போட்ட ஓட்டுக்கு
அவிர்ப்பாகம் வாங்கிய
கட்சிதேவதைகள்
அட்வான்ஸ்டு வரமாய்..
பிரியாணிப் பொட்டலங்களும்
பணமும் குடமும் ஈந்து.

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்