கவிதை உருவான கதை -1

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

எஸ். பாபு


கவிதை உருவாவது கணங்களில் நிகழ்வது. அதன் பிறகு கவிதை செப்பனிடப்படலாம். எனினும் உருவாவது கணங்களில்தான் என்று தோன்றுகிறது. ஒரு வருடம் முழுவதும் ஒரு கவிதை கூட எழுத முடியாமல் போகலாம். ஒரே நாளில் எண்ணற்ற கவிதைகள் எழுதிக்குவிக்கலாம். எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது மட்டுமல்ல புற உலகின் நெருக்கடிகளும் சார்ந்தது. எனது கவிதைகளையும் அவை உருவான பின்புலத்ைதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஆதரவைப் பொறுத்து தொடர்ந்து எழுத விருப்பம்.

சில ண்டுகளுக்கு முன்பு கோவையில், கோவை ஞானி தலைமையில் ஒரு வீட்டின் மொட்டைமாடியில் வாராவாரம் இலக்கிய கூட்டங்கள் நடத்தி வந்தோம். பல்வேறு துறைகளச் சார்ந்தவர்கள், படைப்பாளிகள், ஓவியர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொள்வர். ஒரு நாள் நண்பர்களின் ஓவியங்களை பொதுப் பார்வைக்கு வைக்கலாம் என்று முடிவு செய்து ஒரு ஓவியக்கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்தோம். கண்காட்சிக்கு சில தினங்கள் முன்பு ஓவியத்தோடு கவிதையும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று யாரோ யோசனை சொல்ல, எல்லா ஓவியங்களுக்கும் கவிதை எழுதும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.

ஓவியங்களுக்கு நான் எழுதிய கவிதைகள் கண்காட்சியில் ஒவ்வொரு ஓவியத்தின் அருகிலும் இடப்பட்டது.

ஒரு ஓவியம் – கிரையான் ஓவியமாக ஒரு பெண்ணின் முகம், கருப்பு வெள்ளையில் வரையப்பட்ட அந்த ஓவியத்தில், பெண்ணின் முகத்திலிருந்து வழியும் கண்ணீர்த் துளிகள் மட்டும் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டிருந்தது.

இந்த ஓவியத்திலிருந்து நான் புரிந்து கொண்டதை கீழ்காணும் கவிதையாக்கினேன்.

நிறமாற்றம்

—-

வண்ணங்களின் சுதந்திரத்தை

எனக்களித்து

சட்டத்துக்குள் விரிந்திருகிறது

சதுர உலகம்

சூரியனுக்கு ஊதா நிறந்தீட்டி

வானத்து நீலத்தை

வயல்களில் அடைத்தேன்

மலரிதழ்களில் இறக்கி வைத்தேன்

மேகத்தின் கருமை

கடலின் கருநீலத்தை

காட்டுக்கு எடுத்துச் சென்று

அலைகளில் கரைத்துவிட்டேன்

மரங்களின் பசுமையை

வண்ணத்துப் பூச்சிகளை

வெளிறவிட்டு அவற்றின்

வண்ணங்கள் படிந்த மலைகளில்

வழிந்தோடவிட்டேன்

ஒரு மஞ்சளருவி

எல்லா வண்ணங்களையும் குழைத்து

கடைசியில் வரைந்தேன்

ணும் பெண்ணும்

உதறிய தூரிகையிலிருந்து

ஒரு துளி விழுந்து

சிவப்பாய் வழிந்தது

பெண்ணின் கண்ணீர்.

(தமிழினி வெளீடான காளான் பூக்கும் காலம் தொகுப்பிலிருந்து)

அன்புடன்

எஸ். பாபு

agribabu@rediffmail.com

Series Navigation