Chennai – Revisited

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

அர்விந்த் அப்பாத்துரை


கதை சொல்லத் தெரியாது. சரித்திரம் எழுதவும் தெரியாது.
ஆகாயத்தையும் அதன் தேகத்தின் அமைதியில் தவழ்ந்திடும் நிலவையும் கூட பார்க்க தெரியாது.
ஆனால், திரும்பவும் பார்த்த லிஸ்பன் என்ற கவிதைக்கு பதில் பாட்டு பாடத் தெரியும்.
வெகு சாதாரனமாக, சலனம் ஏதுமின்றி, பிரதிஷ்டை ஏதுமின்றி, நுட்பமானத் தேடல் ஏதுமின்றி,
இயற்கையாக, செயலாக, சக்தியாக ஒரு பாடல் பாட முடியும்.
ஏதோ செய்யக் கூடாததை செய்து கொண்டிருக்கும் உணர்வு ஏற்படுகிறது.
இந்த பாடலை இயற்றுவது மீள முடியாத அபிலாஷையாகிவிட்டது.
இந்த பாடலின் இதயம் மூழ்கியிருப்பது மீள முடியாத சமுத்திரமாகி விட்டது.
திரும்பவும் பார்த்த லிஸ்பனின் நிழல்கள் என்னை பாட அழைக்கின்றன.
சுவைக்க சுவைக்க சுவை கூடிக் கொண்டே போகிறது அந்த நிலவை சுற்றி காணப்படும் நட்சத்திரங்களில்.
சூரியனை தவிற எல்லா சக்திகளும் தீர்ந்துவிட போகின்ற காலம்.
மீதமிருக்கும் சக்தியை சேமிப்பதா ?
புதிய சக்திகளை தேடுவதா ?
புதிய சக்திகள் கிடைத்தால் !
மனிதன் சிக்கனமாக வாழ பழகினால் !
சமகாலத்தில் வியப்படைய பல விஷயங்கள்.
இந்த நகரத்தில் வாழும் மக்களை அனுகி…
ஒரே உடலுக்கு இத்தனை ஆடைகளா ?…வியப்படையலாம்.
ஒரு ஜதை பாதங்களுக்கு இத்தனை அணிகளா ?
ஒரே குரலுக்கு இத்தனை ஸ்வரங்களா ?
ஒரே விரலுக்கு இத்தனை மோதிரங்களா ?
அந்த அபிலாஷைதான் ஊழி காற்று, ஊழி மலர்.
மரணம், ஆரம்பத்தின் முடிவு. இல்லை. முடிவின் ஆரம்பம்…
கடலோரத்தில் கருகிய சிறகுகளோடு மடிந்த பறவையை பாரத்தேன்.
காற்றே குழலாகி என் நினைவு பாலைவனத்தை தழுவுகிறது.
ஒவ்வொரு பாடல் எழுதுவதும் ஒரு மரணத்தைக் குறிக்கிறது.
எங்கள் உறவில் மறுபறவி உண்டு.
என்ன பிறவி உண்டு ?
இறு பிறவி உண்டு என்கிறது பாடல்.
இந்த பாடலை எழுதிவதற்கு முன்னரே இறந்துவட்டேனோ ?
….
….
….
வெண்ணெய் உருக்குபவன் ஒருவன் பார்தசாரதி கோவில் அருகில் இருந்தான்.
அங்கு வெண்ணெய் உருக்கும் தொழில் செய்து கொண்டு, அன்று போலவே இன்றும் இருக்கின்றான்.
அதே தெருவில் நிறப்பிரிகையின் அலுவலகம் இருப்பதாக ஒரு மனிதன் சொன்னான்.
அப்போதெல்லாம் சென்னை சுவாசிக்க கூடிய நகரமாய் இருந்தது.
இன்று சுவைக்க கூடிய நகரமாய் இருப்பினும் சுவாசிக்க முடிவதில்லை.
இப்போதெல்லாம் ஞாயிற்று கிழமைகளின் போக்குவரத்து நெருக்கடி அந்த காலத்து வாரத்து நாட்களைப் போல உள்ளது.
எட்டாத சொர்கத்தின் சொட்டாக மாலை பொழுது பிரார்தனை கிண்ணத்தில் விழுகிறது.
சடங்கின் சக்கரமாகி வேகமாகவா சுழல்கிறது வாழ்கை ?
சினிமா ! இங்கு எல்லாமே சினிமாவும், தொலை காட்சி தொடர்களும்தான்.
சாரமிழந்த உயிர்களின் நிழல்கள் கொட்டகையின் வாயிலில் காத்துக் கொண்டிருக்கின்றன.
நடை பிணங்களின் ஆரம்பச் சொற்கள், மன்மதத்துளிகளாக தாகத்தை தணிக்க முயல்கின்றன.
பீரங்கி தொழிற்சாலையும் சென்னைதான்.
ரயில் பெட்டியும் சென்னைதான்.
ராயல் என்பீல்ட் போட்டார் சைக்கிளும் சென்னைதான்.
மூடிய பின்னியும் சென்னைதான்.
ஆடு, மாடு, பன்னி, கோழி, காடை, கெளதாரி, ஆகியவை வெட்டி, துண்டங்களாக்கப்பட்டு,உப்பு தூள், மிளகாய் தூள், வெந்தயம் கலந்து உணவாக உட்கொள்வதும் சென்னைதான்.
ஒருவன் மீன் பிடிக்க போய் உயிரிழந்தான்.
டம்டனக்க, டம்டனக்கா என்று சாவு கூத்தாடினர்.
ஒருத்தி தீ குளித்து உயிரிழந்தாள், இந்த நிகழ்வு நடந்த பகல் சாட்சி கூற வரவில்லை.
ஒருத்தி மெழுகு வத்தியின் குரலானாள்.
அரசாங்கம் என்னென்னவோ செய்தது.
முதலில் நாங்கள் திராவிடர்கள் என்றது.
பிறகு நாங்கள் முன்னேறுவோம் என்றது.
பிறகு அனைத்து இந்திய திராவிடர்களும் முன்னேறுவோம் என்றது.
நான் ஆதியா, திரவிடனா, இல்லை, ஆதி திராவிடனா என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையும் இல்லை, கவணிப்பும் இல்லை.
இந்தியை எதிர்தது. தமிழை தாய் மொழியாக பிரகடனப்படுத்தியது.
ஆனால் தமிழ் பேசத் தெறியாதவர்கள் தொலை காட்சியிலும், வானொலியிலும் அறிவிப்பானர்களாக வருவதை ஒரு நாளும் தடை செய்யவில்லை.
மரீணா கடற்கறையில் துறைமுகத்துள் நுழைய கப்பல்கள் வரிசையாக காத்திருக்கின்றன.
கடலில் நிலவிய அமைதியும் குலைந்துவிட்டது ஜானகி. அங்கும் இரைச்சல், இங்கும் இரைச்சல், நிசப்தத்திலும் கூட இரைச்சல்.
விதியின் மீது போர் தொடுக்கும் வீரர்களாக மக்கள் திரள் காந்தி சிலையை கடந்து செல்கிறது.
கண்ணகியின் சிலை அகற்றப்படும் முன், விகாரங்களின் நியாயங்கள் ஆலோசனை அளித்தன.
விவேகானந்தர் இல்லம், அதனை அடுத்து ராணி மேரி கல்லூரி.
காண்படுவதெல்லாம் அழித்துவிடும்.
சபையர் அழிந்துவட்டது. ப்ளு டைமன்டும் அழிந்துவிட்டது, எமரால்ட் கூட அழிக்கப்பட்டது.
பழைய சென்னையின் சிறிய வீதிகளில் என் மெளனங்கள் இப்போது அலைகின்றன.
இங்கு இவ்வளவு பெறிய வீதிகளா !
இங்கு இத்தனை முன்னேற்றமா !
எங்கு பார்த்தாலும் செல் சம்பாஷனைகள்!
வாகனப் போக்குவரத்தாகி வீதியை கடப்பதற்குக் கூட இப்போது தயங்குகிறேன் !
மழைகாலத்திலும் ஆந்திராவிலிருந்து லாரி லாரியாக தண்ணீர் வந்து இறங்க வேண்டும்.
தண்ணீருக்கும், இந்த ஊருக்கும் அப்படி ஒரு விரோதம்.
பணம் இல்லாதவன் எங்கு போவான் தண்ணீருக்கு ?
ப10ங்காவனம் அமைப்போம், புல் தரை போடுவோம் என்று கங்கணம் கட்டிய மாநகராட்சியின் முதுகிலே ஒரு நதி.
காலம் கடந்த காலம் ஒன்றில், ஒரு நாள், இந்த நதியிலும் தூய்மையான நீர் ஓடியிருக்க கூடும்.
நதிகளின் மரணம் இப்படித்தான் இருக்கும். முதலில் சாக்கடையாக மாறிய நதி பாலைவனமாய் மறைந்துவிடும்.
அந்த நதி சேர்ந்த சமுத்திரத்திலிருந்து பிறக்கின்றது, ஓய்வின் ராஜ்யமாக இரவு.
இன்னும் எத்தனை நாட்கள் ?
காபரே நடனங்கள், இரவுகள்.
அங்கு பார்தாலோ குழந்தைகள் பெற்று கொண்டு ஜாலியாக வாழும் பெண்கள்.
நிர்வாணங்கள் குறைய நாகரிகத்தின் விழிகளில் முள் வேலி போடப்படுகின்றன.
இந்த ஊருக்குதான் கிரேக்க நாட்டு வணிகன் யாவனனாய் வந்தான்.
அவனுக்கு பின் சீன நாட்டு வழி போக்கன் வந்தான்.
அவனை தொடர்ந்து அரபு நாட்டு இளவரசன் வந்தான்.
ஆங்கிலேயன் வந்தான், பிரென்ச்சு காரன் வந்தான்.
ஆப்பிரிக்காவிலிருந்து மானவனும் இங்கு வந்தான்.
துறைமுகத்துக்கு அருகில் அர்மேனியன் ஒரு கோவில் கட்டினான்.
இங்கு ஆந்திராவையும் பார்கலாம்,
கர்நாடகத்தையும் பார்கலாம்,
பஞ்சாப் மாநிலத்தின் விளைச்சலையும் சுவைக்கலாம்,
ஆசாம் தேசத்து வீரர்கள் இராணுவ விடுதிகளில் தங்கியிருப்பதையும் காணலாம், நேபாலம் மற்றும் இலங்கையிலிருந்து வந்த மக்களும் இங்கு அமைதியாக வாழ்கை நடத்தி வருகின்றனர்.
இத்தாலி நாட்டிலிருந்து வந்தவரும் உண்டு.
ஐந்து நட்சத்திர விடுதிகள் பெருகிவரும் மா-மாநகரம், இது சென்னை.
திரும்பிப் பார்த்தவுடன், என் சிந்தையில் மறதியினுடைய நினைவுகள்.

***
tiasci@wanadoo.fr
*

Series Navigation

அர்விந்த் அப்பாத்துரை

அர்விந்த் அப்பாத்துரை