வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

மத்தளராயன்


சின்னு ஒரு சாதுப் பிராணி. பெங்களூரில் பழைய கார்களை வாங்கி விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறவர். அவருடைய இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் பழைய கார் என்ன, புத்தம்புது ஏர் பஸ் விமானத்தையே வாங்கி விற்றுக் காசு பண்ணிக் கொண்டிருப்பார்கள். சும்மாவா, குடியரசுத் துணைத் தலைவராக இருந்த காலம் சென்ற பி.டி.ஜாட்டியின் மருமகனாக்கும் சின்னு. ஆனாலும் தான் என்ன. பாசப்பா தானப்பா ஜாட்டியின் மருமகன் என்றாலும், பல வருடமாகப் பெங்களூரிலே குப்பை கொட்டினாலும் மனுஷருக்குப் பிழைக்கத் தெரியாது. போதாக் குறைக்குக் கன்னடமும் பேச வராது.

எங்கேடா பழைய வண்டி கிடைக்கும் என்று பேரீச்சம்பழக் கூடையில்லாமல் வீட்டிலிருந்து கிளம்பி நடந்த சின்னு ஒரு பழைய கட்டிடத்தில் நாலைந்து பழைய கார் நிற்பதைப் பார்த்து சந்தோஷமாகி உள்ளே நுழைந்து கார்களைத் தொழில் கண்ணோட்டத்தோடு பார்வையிட்டுக் கொண்டிருக்க, கட்டடத்துக்குள்ளே ஏகப் பரபரப்பாகக் கதர்ச் சட்டைக்காரர்களும், பத்திரிகை நிருபர்களும் குவிந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு கதர்ச் சட்டைக்காரர் இன்னொருத்தரிடம் சின்னுவைக் காட்டி ஏதோ சொல்ல, கேட்டவர் முகம் மத்திய அரசு விளம்பரத்தில் இந்தியா போல் ஒளி வீசியது.

அவர் சின்னுவை வலுக்கட்டாயமாகக் கட்டடத்துக்குள் அழைத்துப் போக, மாலை, மைக், கோலி சோடா, கைதட்டு, மேடை, நாற்காலி என்று ஒரு கூட்டம். நாலு பழைய காரை வாங்க வந்ததுக்கு இப்படி ஒரு பாராட்டா என்று சின்னு அதிசயப்பட்டு நிற்க அவரைத் தரதரவென்று கையைப் பிடித்துக் கொண்டு மேடைக்கு வந்து மைக்கில் ஒருத்தர் அவர் யாரென்று சொல்லிச் சத்தமாக அறிவித்தார் – ‘சேர்ப்படே ஆகித்தரே ‘.

மேடையிலிருந்தவர்கள் கேட்டுக்கொண்டபடி சின்னு எல்லோருக்கும் படுகுஷியாக வணக்கம் சொல்ல, நாலைந்து பிளாஷ் பல்புகள் மின்னி மறைந்தன.

அடுத்த நாள் விடிகாலையில் சின்னு வீட்டில் ஏகக் களேபரம். பேப்பர்க்காரன் வீசியெறிந்து விட்டுப்போன பத்திரிகையைப் பார்த்துவிட்டு அவரை நல்ல தூக்கத்திலிருந்து எழுப்பிப் பிடிபிடி என்று பிடித்துக் கொண்டிருந்தார்கள் வீட்டுக்கார அம்மாவும் மற்றவர்களும்.

ஏதோ தொழிலைப் பார்த்தோமோ நாலு காசு பண்ணினோமோன்னு இல்லாம உங்களுக்கு எதுக்கு அரசியலும் மண்ணாங்கட்டியும் ? ஜாட்டி மருமகனுக்கு வேட்டியாவது மிஞ்ச வேணாமா ?

சின்னு பரிதாபமாக விழிக்க, பத்திரிகையில் நாலாம் ஐந்தாம் பக்கத்தில் ஓரமாகச் சேவித்தபடிக்கு அவர் புகைப்படம். உபரியாக, சின்னு தேவே கெளடாவின் ஜனதா தள் (எஸ்) கட்சியில் சேர்ந்து விட்டதாகத் தகவல்.

அவசரத்துக்குத் துண்டு கிடைக்காமல் அந்தப் பத்திரிகையையே போட்டுத் தாண்டி விட்டுச் சின்னு அறிவித்தது, தான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை என்று. தேவே கெளடாவும் பெருந்தன்மையோடு சின்னு வராவிட்டால் பரவாயில்லை மற்றப் பெரிசுகள் எல்லாம் வந்ததே போதும் என்று விட்டுவிட்டார்.

சின்னு இப்போதெல்லாம் கார் வியாபாரத்துக்காக ஏதாவது கட்டிடத்துக்குள் நுழைவதற்கு முன் ஒரு தடவைக்குப் பத்துத் தடவையாக விசாரித்து நிச்சயப்படுத்திக் கொள்கிறாராம் – இது அரசியல் கட்சி ஆப்பீஸ் இல்லீங்களே ?


*

கர்நாடக முதலமைச்சர் கிருஷ்ணா எதிர்க் கட்சி வேட்பாளர்களை விட எவ்வளவோ முன்னால் நிற்கிறார். அவர் காட்டிய சொத்துக் கணக்கு மூணரைக் கோடி ரூபாய். இதில் முக்கால் பாகம் பெங்களூர் ஆர்.எம்.வி. எக்ஸ்டென்ஷனில் அவருக்கு உரிமையான பங்களாவின் சொத்து மதிப்பு. அப்புறம் சொந்த ஊரான மத்தூரில் நெல்வயல்கள், தோட்டம் துரவு இத்தியாதி. கிருஷ்ணாவின் மனைவி பிரேமாவுக்கு வெறும் முப்பத்து மூணு லட்சம் தான் சொத்து. அதுவும் வங்கியில் சேமிப்புக் கணக்கில் இருக்கப்பட்டது தான்.

மத்தூரில் விவசாய நிலம் இருந்தாலும், மண்ணின் மகனாக இருந்தாலும், கிருஷ்ணா இந்தத் தடவை பாதுகாப்பான தொகுதியாக பெங்களூர் சாமராஜ்பேட்டையில் தான் போட்டியிடுகிறார். அங்கே ஜனதா தள்(எஸ்) வேட்பாளராக நடிகர் அனந்த் நாக். இன்னொரு நடிகர், ‘முக்ய மந்திரி ‘ என்ற ஒரே ஒரு படத்தில் முதலமைச்சராக நடித்துப் பெயர் வாங்கிய ‘முக்ய மந்திரி சந்துரு ‘ பா.ஜ.கா வேட்பாளர். சந்துரு சொத்து விஷயத்தில் கிருஷ்ணாவின் சுண்டு விரல் அளவு கூட வரமாட்டார். சினிமா நடிப்பு, தயாரிப்பு, சின்னத் திரையில் ஆர்.கே.நாராயணனின் ‘மால்குடி தினங்கள் ‘ போன்ற மெகா சீரியல்கள் மூலம் வருமானம் என்று தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் அனந்த் நாக் சொத்து விவரம் வெளியே வரும்போது அவர் முந்தியா கிருஷ்ணாவா என்று தெரியும்.

சாமராஜ்பேட்டைக்காரர்கள் விஷயம் இப்படி இருக்க, ஜனதாதள் (எஸ்) தலைவரும் முன்னாள் பிரதம மந்திரியுமான தேவே கெளடாவுக்கு இருக்கப்பட்ட சொத்து மதிப்பு, வங்கியில் வாலண்டரி ரிடையர்மெண்ட் எடுத்த அதிகாரி சம்பாதித்தது போன்ற சிறிசுமில்லாத பெரிசுமில்லாத தொகை – பதினேழு லட்சம் ரூபாய்.

தேவே கெளடா சொத்தைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல், திரும்பப் பாராளுமன்றப் படியேற ஊக்கத்தோடு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். முக்கியமாக தேர்தல் பிரச்சாரத்துக்கும், சாப்பிடுவதற்கும் தவிர வாயைத் திறக்காமலிருப்பதில் முக்கியக் கவனமெடுக்கிறாராம். சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாக கெளடர் ‘சின்ன வயசுப் பொண்ணுகளோடு எல்லாம் தேர்தல்லே போட்டி போட எனக்கு விருப்பமில்லை ‘ என்று என்னத்திற்கோ அறிவிக்க, அவர் போட்டியிடும் கனகபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சட்டென்று ஒரு யுவதியை வேட்பாளராகக் களத்தில் இறக்கிவிட்டார்கள். சன் டிவி நிறுவனத்தின் கன்னட சானலான உதயா டிவியில் அரசியல்வாதிகளைப் பரபரப்பாகப் பேட்டி கண்டு கர்னாடகத்தில் பட்டி தொட்டி நாடு நகர் முழுக்கப் பிரசித்தமான சின்னத்திரை நட்சத்திரம் தேஜஸ்வினி தான் அவர்.

கெளடா கட்சியில் இருக்கும் மாஜி கதாநாயகி நடிகை ஜெயந்தியோ அவருக்கு உதவிக்கரம் நீட்ட முடியாமல் தெற்கு பெங்களூர் ஜனதாதள் வேட்பாளராக வார்ட் வார்டாகப் போய் மும்முரமாக முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வாக்காளர்களின் குழந்தைகளுக்கு.

தேவே கெளடா பிரதமராக இருந்தபோது, லோக்சபையில் அனல் பறக்கிற விவாதங்கள் நடக்கும் பிற்பகல் நேரங்களில் பலதடவை கண்மூடி நிஷ்டையில் இருந்தது வழக்கம். அதை எதிர்க் கட்சிகளும் (சில சமயம் சொந்தக் கட்சிக்காரர்களும்) தூக்கம் என்று சொல்லி நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க, பத்திரிகைகள் பற்ற வைத்தன.

இந்தத் தடவை அதனால்தானோ என்னமோ லோக்சபாவுக்கு அவர் தனியாகப் போகாமல் தன் இரண்டு மகன்களோடு நுழையத் தீர்மானித்திருக்கிறார். மூன்று பேரும் அவரவர் தொகுதிகளில் வெற்றி பெற்றால், லோக்சபையில் பரபரப்பான நேரங்களில் பிளாஸ்கிலிருந்து ஹார்லிக்ஸை சூடு பரக்க டம்ளரில் பரத்தி, ‘அப்பா, குடிச்சுட்டுத் தெம்பாத் தூங்குங்க ‘ என்று சொல்லப் பக்கத்திலேயே ஜூனியர் கெளடர்கள் ரெடியாகக் காத்திருக்க வாய்ப்பு உண்டு.



**

கர்நாடக முதலமைச்சர் கிருஷ்ணாவையும், குணசித்திர நடிகர் அம்பரீஷையும், சூப்பர் ஸ்டண்டாக பதினைந்து நாளில் இரண்டு முறை கட்சி தாவிய அமைச்சர் நடிகர் குமார் பங்காரப்பாவையும் மற்றத் தலைவர்களையும் தில்லி நாடாளுமன்றத்தில் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு கன்னடப் பிரதேசக் காங்கிரஸ் கட்சிக் காரர்களுக்கு. அவர்கள் கூடுதல் உற்சாகத்தோடு கொடி பிடித்து ஓடியாடிப் பணியாற்ற உதவியாக பெங்களூர் காங்கிரஸ் கட்சி ஆப்பீசுக்குப் பக்கத்து ஓட்டல்காரர்கள் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார்கள்.

ஆரஞ்சு பச்சை வெள்ளையில் இட்லி, தோசை. தொட்டுக்கொள்ள காங்கிரஸ் மூவர்ணத்தில் சட்னி என்று விற்கிற இந்தக் கடைகளில் நின்று இட்லி தின்னும் காங்கிரஸ்காரர்கள் மற்றும் எதிர்க் கட்சி அனுதாபிகள் – அவர்களுக்குக் காங்கிரஸை இட்லி தோசையாக்கி சட்னி சாம்பாரில் குழைத்து ஒரு துளி மிச்சமில்லாமல் விழுங்கி ஏப்பம் விட்ட திருப்தி – என்று நிரம்பி வழிந்து கல்லாவில் காசை எண்ணி மாளவில்லை. பா.ஜ.க கட்சி அலுவலகம் முன்னாலும் காவி வண்ணத்தில் இட்லி தோசை விற்க சாந்தி சாகர், தர்சனி ஓட்டல்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

கேரளத்தில் திருவனந்தபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகம் பக்கம் இப்படி ஒரு சாப்பாட்டுக் கடை போடலாமே என்று கர்நாடாகா வாழ் மலையாளி ஓட்டல்கார நண்பரைக் கேட்டேன்.

‘தனியா எதுக்கு ஓட்டல் ? கேரளத்திலே ஏது ஓட்டலில் கேரியாலும் நல்ல சிவப்பு நிறத்திலே அல்லே சோறு விளம்பறது ‘ என்றார் அவர்.

‘அப்ப காங்கிரஸ் கட்சி அலுவலகம் பக்கம் ? ‘

‘அங்கே இருக்கப்பட்ட குரூப்புகளின் எண்ணிக்கைக்கு கொத்து புரட்டா ஸ்டால் தான் சரிப்படும் ‘ .



கேரளத்தில் காங்கிரஸ் கோஷ்டிச் சண்டை தற்காலத்துக்கு ஓய்ந்த நிலையில் லீடர் கருணாகரன் மாவேலிக்கரையில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார். ‘கருணாகரனுக்கு ஜே ‘ என்று விளித்த ஆதரவாளர்களைப் பார்த்துத் தன் டிரேட் மார்க் சிரிப்பைச் சிந்தி, ‘ஏ.கே.ஆன்றணிக்கும் ஜே சொல்லுங்க ‘ என்று அவர் அன்போடு சொல்ல, இது நிஜமா இல்லை ஆலப்புழை குடிவெள்ளம் உண்டாக்கிய கனவா என்று திகைத்த கட்சிக்காரர்கள் மூவண்ணக் கொடியைத் தோளில் சாத்தி, கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டு ஆன்றணியை வாழ்த்தியபடி நடந்திருக்கிறார்கள்.

ஷோரனூர் பக்கம் குளப்புள்ளியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மாநாட்டில், எது மேடை, எது அரங்கம் என்று குழப்பம் வரும்படி, மேடையில் நூற்றைம்பது நாற்காலி. எல்லாக் கோஷ்டிகளையும், நட்புக் கட்சிகளையும் சேர்ந்த பேச்சாளர்களை மேடையில் உட்கார வைக்க இத்தனை நாற்காலி போட்டும் இடம் பிடிக்கப் பிரச்சனை. மந்திரி சங்கரநாராயணன் பேசிக் கொண்டிருந்தபோது புது மந்திரியும் கருணாகரனின் மகனுமான முரளீதரன் வந்துசேர, நாற்காலி கிடைக்காமல் அவர் சங்கரநாராயணனின் நாற்காலியைப் பிடித்துக் கொண்டார். பேசி முடித்து வந்த சங்கரநாராயணன், அடுத்துப் பேச எழுந்து மைக்கை நோக்கிப் போன இன்னொரு அமைச்சரின் நாற்காலியில் தாமதமில்லாமல் உட்கார்ந்தார். நல்ல வேளை, உட்கார இடம் கிடைக்காத புகாரோடு யாரும் தில்லிக்கு விமானம் ஏறவில்லை.

நிகழ்ச்சி முடியும் வரை தொடர்ந்த இந்த ‘நாற்காலிக் களி ‘யும் கண்டு மகிழ்ந்து அரங்கில் இருந்தவர்களின் எண்ணிக்கை நூற்றைம்பதுக்கும் குறைவாகவே இருந்திருக்கலாம்.


*

ஈழத்து ஆராய்ச்சியாளர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை எழுதிய ‘வட இலங்கை நாட்டார் அரங்கு ‘ புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது வட இலங்கையில் தலைமுறை தலைமுறையாக ஆடப்பட்டு வந்த ‘மகிடிக் கூத்துக்கள் ‘ பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்துக்களும் இஸ்லாமியரும் கதாபாத்திரங்களானவை இக்கூத்துக்கள். இவற்றை இந்துக்கள் நடத்தும்போது, கோயில் திருவிழாவில் பண்டம் பலதும் விற்க வந்த இஸ்லாமிய வர்த்தகர்களை தேவதை உபாசனை, மந்திர உச்சாடனம் மூலம் இந்துக் குருக்கள் வெற்றி கொண்டு ஊரை விட்டு வெளியே அனுப்பியதாகக் கதை போகும். இதே கூத்தை முகமதிய சமூகத்தினர் நடத்தும்போது, பில்லி சூனியம் வைத்த இந்துக் குருக்களை இஸ்லாம் மார்க்க விதிமுறைகளை அனுசரித்து வணிகர்கள் வெற்றி கொண்டதாகக் கதை நடக்கும்.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன என்றால், இந்துக்கள் இந்தக் கூத்தை நடத்தும்போது இஸ்லாமியரும், இஸ்லாமியர் நடத்தும்போது இந்துக்களும் பெருங்கூட்டமாக வந்திருந்து ரசித்துப் பார்த்ததுதான். ஒரு ஐம்பது வருடம் முன்னால் வரை கூட இதுவே நடப்பாக இருந்திருக்கிறது. நம் முந்திய தலைமுறை மதத்தையும், கலை வெளிப்பாடுகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை என்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் பெரும்பான்மையும் நகர் சார்ந்த ‘நாகரீகம் ‘ கைவரப் பெற்றவர்களாக இல்லாதிருந்ததும், உழைப்பாளிகளான அவர்களுடைய கலை வெளிப்பாடு, மண்ணின் மணம் கமழும் நாட்டார் கலை வடிவங்கள் மூலம் என்பதுமே.

கேரளத்திலும் இந்து – கிறிஸ்துவ மத ஆசாரங்களை இணைத்து நாடன்கதகள் (கிராமப் புறத்துக் கதைகள்) உண்டு. ‘கடமற்றத்துக் கத்தனார் ‘ இதில் ஒன்று. கிறிஸ்துவ மதபோதகனான கத்தனார் இந்துமதக் கதைகளில் வரும் காவிலே யட்சியை அடக்கியது, நண்பரான நம்பூதிரிக்கு இளநீர் தேவைப்படும்போதெல்லாம் ‘கடமற்றம், கரிக்க தரூ ‘ என்று தென்னைமரத்தைப் பார்த்துச் சொன்னால் தேங்காய் விழவைப்பது என்று பெரிய, சிறிய சித்துவேலைகள் செய்ததாக நாடோடிக் கதைகள் உண்டு. ஏஷியாநெட் மூலம் அவை இப்போது ராத்திரி ஒன்பதரை சீரியலாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

கிராஃபிக்ஸ் துணையோடு வாயைத் திறந்து வெளவாலும், தீயும், தேளும், பாம்பும் கக்கி கத்தனாரை வீழ்த்தப் பார்க்கும் நீலி என்ற யட்சி – சில்லறை சினிமாப் பத்திரிகைகள் வாயில் கிசுகிசுவாக அடிபட்ட பழைய சினிமா நடிகை சுகன்யா தான் நீலியாக இப்படி வாயைத் திறந்து நெருப்பைக் கக்கிப் பழிதீர்த்துக் கொள்கிறார். கத்தனார் நீலியின் பிளாஷ்பாக் கேட்டு பரிதாபப்பட்டு, அவளைக் கடைத்தேற்றி சாதுவாகக் கூடவே நடக்க வைத்துக் கூட்டிப் போவதை உலக மலையாளிகள் போனவாரம் கண்டு களித்தார்கள்.

கத்தனார் ஹிட்டானதற்குச் சான்று இரண்டு நாள் முன் மாத்ருபூமியில் முதல் பக்கக் கார்ட்டூன். மாந்திரீகன் கத்தனாராகக் கையில் தொப்பியோடு ஏ.கே.ஆன்றணி நடந்துபோக, பின்னால் அடக்கப்பட்ட யட்சியாக முண்டும் பிளவுசும் உடுத்தி கருணாகரன் – ‘ஆன்றணிக்கும் ஜே போடுங்க ‘ என்று சொல்லியபடிக்கு. பின்னணியில் டைட்டில் பாட்டுச் சத்தமாக ‘மாந்திரிகன் மகா மாந்திரிகன் கடமற்றத்துக் கத்தனார் கத்தனார் ‘.



பிறந்தால் மலையாள எழுத்தாளராகப் பிறக்க வேண்டும். வருடம் பூராவும் எங்கேயாவது இலக்கிய விழா. வாராவாரம் ஏதாவது இலக்கியப் பரிசு அறிவிப்பு. மூத்த கவிஞரோ, எழுத்தாளரோ, நாடக ஆசிரியரோ இறந்துபோனால் உடனே டிரஸ்ட் தொடங்கி, வருடா வருடம் அன்னார் நினைவாக சாஹித்ய புரஸ்காரம் (இலக்கியப் பரிசு) கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் ஏதாவது பரிசு எப்போதும் வாங்கிக் கொண்டிருப்பதால், சாகித்ய அகாதமி பரிசு போன்ற விஷயங்களில் தமிழ்நாடு போல் சர்ச்சைகள் ஏற்படுவதில்லை.

மையழிப்புழ எழுத்தாளர் முகுந்தன் பெறுவது வேறு மாதிரி சன்மானம். போன மாதம் தான் இவருடைய நாவலான ‘தெய்வத்திண்டெ விக்ருதிகள் ‘ ஓவியமாகிறது என்று குறிப்பிட்டிருந்தேன். முகுந்தனுக்கும், தெய்வத்திண்டெ விக்ருதிகளுக்கும் இன்னொரு விருது இப்போது.

கேரள மேஜிக் அகாதமி அடுத்த வாரம் நடத்தப் போகும் மாஜிக் ஷோ ‘காலத்திண்டெ விஸ்மயங்ஙள் ‘ முகுந்தனின் நாவலின் அடிப்படையானது. முக்கியப் பாத்திரமான அல்போன்ஸ் (அல்போன்ஸ் அச்சன்) மாஜிக்காரராக நாவலில் வருவதைச் சிறப்பித்தே கேரள மந்திரவாதிகளின் இலக்கிய ஈடுபாடு. நாவலின் மற்ற பாத்திரங்களும் பங்கு பெறும் இந்த மாந்திரீக யதார்த்த நிகழ்ச்சியை அடுத்த வாரம் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைப்பவர் ‘தெய்வத்திண்டெ விக்ருதிகள் ‘ நாவலைத் திரைப்படமாக்கிய லெனின் ராஜேந்திரன்.

ராஜேந்திரன் எதற்கும் நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கட்டும். இல்லாவிட்டால் லெவிடேட் ஆகிப் பறந்து விடப் போகிறார்.

**

மத்தளராயன்

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்