கடிதங்கள் ஏப்ரல் 8, 2004

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

பித்தன், ஹக், தமிழ்மணவாளன், அரவிந்தன் நீலகண்டன்



நண்பர் சோதிப்பிரகாசத்திற்கு

வணக்கம்.

‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ படித்தவர்களுக்கு என் கடிதம் சிரிப்பை உண்டாக்குவதாக இருக்கிறது என்று அறிந்து

மகிழ்ச்சியடைகிறேன். நம் கடிதத்தினால் சிலரை சிரிக்க வைக்க முடிந்தால் மகிழ்ச்சிதானே. ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ படிக்காதவர்களுக்கு தங்கள் ‘திறனாய்வுக் கூட்டம் ‘ எப்படி இருந்திருக்கும் என்றும் எண்ணத் தழைப்படுவீர்கள் என்று நம்புகிறேன். ‘எழுதுவதற்கும் நேரமில்லாமல், படிப்பதற்கும் நேரமில்லாமல் ‘ நான் தவிப்பதை எப்படி இவ்வளவு சரியாக புரிந்து கொண்டார்கள் என்று இப்போது நான் மிரளுகிறேன். (என்னை விட பெரிய மந்திரவாதியாக இருப்பீர்கள் போலிருக்கிறதே!) உண்மைதான். நான் இன்னும் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ படிக்கவில்லை. நான் இருக்கும் இடத்தில் இது போன்ற புத்தகங்கள் கிடைப்பதில்லை. மேலும் எனக்கு நேரமும் இருப்பதில்லை. (போன வாரம் திண்ணைக் கடிதம் அனுப்பும்போதே புதன் இரவு 3 மணி.) இப்படி கடிமையான நேரமின்மையிலும்தான் எதோ எனக்குத் தெரிந்ததை எழுதிக் கொண்டிருக்கிறேன். யாராவது அதையெல்லாம் படிக்கிறார்களா என்ற சந்தேகமும் அடிக்கடி தோன்றினாலும். அவ்வப்போது வரும் எதிவினைகளே சிலர் படிக்கிறார்கள் என்று பறைசாற்றும்!

புத்தகங்கள் படிக்காதது என் தவறுதான். (அதற்கான நியாயமான காரணங்கள் இருந்தாலும்). புத்தகங்கள் படிக்காததினால், அவற்றையொட்டி எழுதப்படும் ஆக்கங்களை ஒரு சாதாரண வாசகக் கண்ணோட்டத்தில் கண்டு, பொருள் கொண்டு, அதேக் கண்ணோட்டத்தில் நான் கடிதம் எழுதியிருந்தால் அது என் அறியாமையினாலேயே

நிகழ்ந்திருக்கிறது. எனின் அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனாலும் நீங்கள் வாசகர்களை இப்படி மோசம் செய்யக்கூடாது. ‘திறனாய்வுக் கூட்டத்தில் ‘ இது ‘பின் தொடரும் நிழலின் குரலை ‘ தழுவி எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் ஒரு குறிப்பு கொடுத்திருக்கக் கூடாதோ ? (பொதுவில் இடும்போது அனைவரும் அந்த புத்தகத்தைப் படித்திருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை!)

சரி, நண்பரின் நண்பரை எழுதுவதற்கு தைரியப்படுத்துவதாக சொல்லி அழைக்கிறீர்கள். அதையாவது ஒரு தனி மடலில் அவருக்குத் தெரியப்படுத்தவோ, அல்லது நேரிலோ சொல்லியிருக்ககூடாதோ ? சாதாரண வாசகர்களை இப்படிக் குழப்ப வேண்டுமா ? நீங்கள் எழுத்தாளார் இல்லையென்று சொல்லிக்கொள்வதை நம்ப சிரமமாக இருக்கிறது.

இப்போதெல்லாம் யாருக்கும் புரிபடாமல் எழுதுவதுதான் சிறந்ததாகக் (இலக்கியமாக! ?) கருதப்படுகிறது. உங்கள் கடிதங்களைப் பார்க்கும்போது நீங்கள் இலக்கிய எழுத்தாளார்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவரில்லை என்பது புலப்படுகிறது! (எழுத்தாளர் என்று தைரியமாக சொல்லிக்கொள்ளலாம்!!).

ஒரு சாதாரண வாசகனின் நிலையிலிருந்து பாருங்கள். ‘திறனாய்வுக் கூட்டம் ‘ படித்தாலே அது பலரையும் கேலி செய்ய

எழுதப்பட்டுள்ளது என்று தெரிகிறது. என்றாலும் அதில் ஒருவர் மட்டும் ‘ஞானப் பிழம்பாக ‘ உருவகம் கொள்ளப்படுகிறார். (வாசகனோ அந்த ‘குரல் ‘ புத்தகத்தைப் படித்ததில்லை.) அதே வாரம் மற்றொருக் கடிதத்தில் ஜெயமோகனை எதிர்க்க முகம் தெரியாத ஒருவரை நக்கலாக அழைக்கிறீர்கள். (தைரியப் படுத்த அழைப்பதாக நீங்கள் கூறுவது அந்த அழைப்பில் தெரியவில்லை). இலக்கிய/எழுத்துலகிலோ குழுக்களுக்கும், போட்டி பொறாமைகளுக்கும்

பஞ்சமில்லை. இதையெல்லாம் கூட்டிப் பார்த்தால், எழுத்தாளர்களின் கோஷ்டிப் பூசல்களினால் அரண்டு போயிருக்கும் ஒரு சாதாரண வாசகனுக்கு என்ன தோன்றுமோ அதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். (என்று இன்னமும் நம்புகிறேன்).

குறிப்பிட்ட உங்கள் கடிதத்திற்கு சரியாக பொருந்தாவிட்டாலும்கூட, இலக்கிய உலகின் பெரும்பான்மையான

‘அழைப்புக் ‘ (சண்டைக்) காட்சிகளை படம் பிடித்துக் காட்டுவதாகவே என் கடிதம் இருக்கிறது என்பது கண்கூடு.

யார் இலக்கியவாதி என்பது போன்ற வாதங்கள், தங்களுடைய கர்வத்தை முன்னிறுத்தவே எழுத்தாளார்களால் கையாளப்படுகிறது என்று நான் முன்பு குறிப்பிட்டிருந்ததையே, ‘யார் பெரியவன் என்று சண்டையிட்டுக்கொள்வதாக ‘ உங்கள் கடிதத்தில் காண்கிறேன். யார் பெரியவராக இருந்தாலும் ஒன்றுக்கும் உதவாது என்பதை எழுத்தாளர்கள் அறியட்டும்.

சமுதாய சிந்தனைகளை மறந்துவிட்டு, கீழ்த்தரமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்ற என் கருத்தையும் உங்கள் கடிதம் பிரதிபலிக்கிறது.

நல் எண்ணங்களுக்காகத் தான் உங்கள் கடிதங்கள் எனில் மகிழ்ச்சியே.

என் அறியாமையை சுட்டிக்காட்டிய உங்களுக்கும், நண்பர் சூரியாவுக்கும் நன்றி.

– பித்தன்.

****

நா.இரா.குழலினியின் ‘நவீன பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசர் இந்துத்துவமும் ‘ கட்டுரை அருமை.

குறிப்பாக அதில் பெரியாரின் கருத்துக்களை அவர் கூறியபடியே மேற்கோள் காட்டியிருப்பது. பெரியாரின் தீண்டாமைக் கருத்துக்களை இனவாதப் பிரசாரம் என்றும், இந்துமதத்தை எதிர்ப்பதை ஏதோ தேவையில்லாமல் பெரியார் செய்துவிட்டது போலவும் புலம்பும் மூடமதியாளர்களுக்கு அந்த மேற்கோள்களில் நல்ல விளக்கம் இருக்கிறது. பெரியாரின்

கடவுள் எதிர்ப்பு என்பது, மத மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும், முக்கியமாக அதிலிருந்து வரும் சாதிவெறிக் கருத்துக்களை எதிர்க்கவும் கொண்ட எதிர்ப்பே என்று பலமுறை நான் சொல்லிவந்திருக்கிறேன். அது புரியாமல் புலம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு விளக்கம் பெரியாரின் வார்த்தைகளிலேயே இருக்கிறது. அதாவது, ‘சாதிகளை அழிப்பதுதான் முக்கியம். (சதிக்காரர்களை அல்ல. இந்த வித்தியாசம் புரியாமல், அவர் ஒரு இனத்தை அழிக்க நினைத்தார் என்று புலம்புபவர்களை என்ன சொல்ல ?!) சாதியோடு மதம் பிணைந்திருந்தால், சாதியை அழிப்பதற்காக அந்த மதத்தையும் அழிக்கத் தயங்கக் கூடாது. மதத்துக்கு ஊக்கமளிக்கும் வேதங்களை அவற்றிலிருந்து பிரிக்கமுடியாவிட்டால், வேதங்களையும் அழிக்கத் தயங்கக் கூடாது. வேதங்களிலிருந்து கடவுளைப் பிரிக்க முடியாவிட்டால், கடவுளையும் எதிர்க்கத் தயங்கக் கூடாது. ‘ என்பதே பெரியாரின் கருத்து. எனவே தீண்டாமையையே முக்கிய எதிர்ப்பாக பெரியார் கொண்டிருந்தார் என்பதும், அதற்காகவே கடவுள் இல்லை என்று சொல்லவும் தயங்காமல் இருந்தார் என்பதும்

அவர் வாய்மொழிக் கருத்துக்களாலேயே விளங்கும். சாதிகளை அழிக்க மதம் தடையாக இருந்தால் அப்படிப் பட்ட மதம் நமக்குத் தேவையில்லை என்பது தான் அவர் வாதம்.

எனவே, ‘கடவுள் இல்லை ‘ என்று பெரியார் சொன்னது ஏதோ இந்து மதத்தை தாழ்த்துவதற்கு என்றும், பெரியார் இந்துக்களின் எதிரி என்றும், எதோ பொழுது போகாமல் பெரியார் இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார் என்றும் திரித்துக் கூறிவரும் அரைகுறைகள் பெரியாரைப் புரிந்துகொள்ளவில்லை என்பதும் (அல்லது நன்றாகப் புரிந்து கொண்டே பெரியாரைத் தாழ்த்த விழைகிறார்கள் என்பதும்), பெரியார் தாழ்த்தப் பட்டவர்களுக்காக

என்ன குரல் கொடுத்துவிட்டார் என்று கேட்பவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள் என்பதும் திண்ணம்.

****

இந்த வாரம் கவிதைகள் பல அருமையாக இருக்கின்றன. குறிப்பாக, நெப்போலியனின் ‘வருகல் ஆறு ‘, ரூமியின் ‘சொல்லால் செத்தப் புறாக்கள் ‘ மற்றும் சேவியரின் ‘விலக்கப்பட்ட கனி ‘.

– பித்தன்.


Dear Editor,

My name is Haqs living aborad recently came across your thinnai.com webpage found it quite intersting having the real essence of our Tamil culture and the natural blend of different people as it is. Especially ‘Nouttra Aasiriyar ‘ by Mr.Nagore Rumi is the most appericiated. Convey my appericaition to Mr.Nagore Rumi.

Keep informing me if u introduce some intersting stuffs.

Best regards,

Haqs


சீராளன் கவிதைகளை திண்ணையில் படித்தேன்.

விஞ்ஞான முன்னேற்றம் இயல்பு வாழ்வின் உன்னதமான

பகுதிகளை எவ்விதம் செல்லரிக்க வைத்துவிட்டது என்பதை ‘மின்புறா ‘ கவிதை மிக

அழகாய் பேசுகிறது. விலை அதிகமாயினும் விஞ்ஞானவளர்ச்சியும்,அதனூடாக உருவாகும் பரபரப்பும்

தவிர்க்கவியலாதது தான். ஆயினும் இழப்பைப் பற்றி நினைப்பதும் பேசுவதும் தானே

படைப்பு உள்ளம். அது என்ன ‘மின்புறா ‘ .அதுவே அழகிய கவிதை.

optimist கவிதை நல்ல அங்கதம். மெல்லிய நகையுணர்வை வாசிப்பில் உருவாக்குகிறது.

அன்புடன்

தமிழ்மணவாளன்


திரு.பித்தனின் எதிர்வினை குறித்து இரு விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளன. ஒன்று, மாற்றுமத காழ்ப்புணர்ச்சி. பொதுவாகவே எனது கட்டுரைகளில் மாற்றுமத காழ்ப்புணர்வு இருப்பதாக ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. உண்மை என்னவென்றால், நான் செய்திருப்பதெல்லாம், ஹிந்து தர்மத்திற்கு எதிரான வெறுப்புணர்வு கிறிஸ்தவ பிரச்சாரங்களில் இன்னமும் மையவோட்டமாக இருப்பதைக் காட்டியுள்ளேன். அதே நேரத்தில் கிறிஸ்தவமும் சரி, இஸ்லாமும் சரி அடிப்படைவாதிகள் காட்டுவது போல ஒற்றைப்பரிமாணம் கொண்டவையில்லை என்பதுடன் அவற்றின் இறையியல்கள் தம்மில் உள்ள பன்மைத்தன்மையையும், பாரதிய ஞானமரபுகளுடன் அவை ஆரோக்கியமான உரையாடல்கள் நடத்தவும், பாலங்கள் ஏற்படுத்தவும் தம்மளவில் இஸ்லாமும், கிறிஸ்தவமும் வலிமையுடையவை என்பதையும் எனது கட்டுரைகள் பலவற்றில் சுட்டிக்காட்டியுள்ளேன். உதாரணமாக, ‘முஸ்லீம் என்றாலே அவர்கள் எல்லாம் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக, வகுப்புவாத இடஒதுக்கீடு கேட்பவர்களாக, ஒசாமா பின்லாடன் ஆதரவாளர்களாக, இராமனை யாரவது மறை கழண்ட பேர்வழி திட்டினால் ‘சபாஷ் ‘ போடுபவர்களாக, வந்தேமாதரத்துக்கு எதிராக பத்வா போடும் வெறியர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த முஸ்லீம்களை எல்லாம் ‘இராம பக்தர்கள் ‘, ‘முக்கால் பிராமணன் ‘ அல்லது ‘கால் முஸ்லீம் ‘ என்றெல்லாம் திட்டுவேன் ‘ என்பது போன்ற ‘ஞாந ‘ப்பழத்தனத்தையெல்லாம் என் கட்டுரைகளில் காண முடியாது. பாரதத்தில் கிறிஸ்தவ இறையியலின் வரலாற்றை வாசிப்பு செய்பவர்கள் ஒருமுனையில் நான் குறிப்பிட்ட வசைபாடகர்களையும் மறுமுனையில் டிமெல்லா போன்ற இணைப்புருவாக்கும் இறையியலாளர்களையும் காண்பர். ஈவெராவின் மனமண்டலம் இந்த முந்தையவர்களின் குறுகிய அறிதலுக்கு அப்பால் எழுந்ததுமல்ல; எழும் திறன் கொண்டதுமல்ல. இனவெறி, வக்கிர வசைபாடல், தமிழ் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் காழ்ப்புணர்வு இவற்றைப் பரப்ப நம் சமுதாய அவலங்களை முதலீடாக்கிப் பிழைப்பு நடத்தியவர் ஈவெரா. இந்நிலையில் இந்த மனமண்டலம் சார்ந்தே சமஸ்கிருத வெறுப்புணர்ச்சியை கொட்டுபவர் ‘மூன்றாந்தர தெருமுனை கிறிஸ்தவ பிரச்சாரகனின் வசை ‘ என்பதற்கு ‘கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் அனைவருமே தெருமுனை மூன்றாந்தர பிரச்சாரகர்கள் ‘ என பொருள் கொள்வது விஷமத்தனமானது என்றாலும் அவரிடம் இதற்கு மேலான ஒரு வாசிப்பை எதிர்பார்ப்பது பகுத்தறிவற்ற வீண் ஆசைதான். அடுத்ததாக திரு.பித்தன் கூறியுள்ள ‘ அந்தணர் வேள்வி ‘ என திருமுருகாற்றுப்படை கூறுவதால் அது தமிழர் வேள்வி அல்ல என்பது. திரு.பித்தனிடம் விஷத்தையும் விஷமத்தனத்தையும் எதிர்பார்த்தேன் ஆனால் இந்த அளவுக்கான அபத்த விகடத்தை எதிர்பார்க்கவில்லை. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வேள்வி குறித்து விளக்கமான விவரணங்கள் வருகின்றன. பல இடங்களில் அந்தணர் குறித்தும் விவரணங்கள் வருகின்றன. அவை எதுவுமே அவர்கள் வெளியிடங்களில் இருந்து புலம் பெயர்ந்தோர் எனக் கூறவில்லை. இத்தனைக்கும் புலம்பெயர்ந்த சமுதாயங்கள் சிலவற்றைக் குறித்த குறிப்புகள் சங்க இலக்கியத்தில் வருகின்றன. ஆனால் அந்த சமுதாயங்களில் அந்தணர் இல்லை. அந்தணர்கள் சங்க இலக்கியங்களின் தமிழ் சமுதாய சித்திரத்தில் மற்றெந்த தமிழ் சமுதாயத்தினரையும் போலவே ஒரு அங்கத்தினர். அவ்வாறே பல சமுதாயப் பிரிவினர் குறித்த விவரணங்கள் வருகின்றன. ‘வேலன் வெறியாட்டம் ‘ என்பதால் வெறியாட்டம் தமிழருக்கு அன்று, ‘வணிகர் வீதி ‘ என்பதால் அது தமிழர் வீதியன்று என்பவை போன்ற மடத்தனங்கள் ஈவெரா கும்பல்களால் மட்டுமே கற்பனை செய்ய முடிந்தவை. நான் ஒன்றும் சங்க இலக்கியத்தைக் கரைத்துக் குடித்துவிடவில்லை ஆனால் என் சிற்றறிவில் எட்டிய வரை திரு.நாக.இளங்கோவன், திரு.பித்தன் ஆகியோர் நீட்டி முழங்கும் ‘ஆரிய-திராவிட ‘ இனவேற்றுமையை காட்டும் வரிகள் சங்க இலக்கியத்தில் இல்லை. ‘ஆரியர் ‘ என தம்மை அழைக்கும் அரச குலத்தை குறித்து வரும் வரிகளை ஒரு இனத்தை குறிப்பதாகக் கொள்ள எந்த முகாந்திரமும் கிஞ்சித்தும் இல்லை. பெளத்த சமயத்தைச் சார்ந்த வடநாட்டு அரசர்கள் தங்களை ‘ஆரிய சமயத்தவர் ‘ என்றே அழைத்தனர். அதற்கு முன்னதாக அப்பதம் ‘வீட்டுத் தலைவன் ‘, ‘மதிப்பிற்குரியவர் ‘ என்கிற பொருள்படவே பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களிலும் ‘ஆரிய ‘ எனும் பதம் இறைவனை குறிக்கப் பயன்பட்டது. கால்டுவெல் பாதிரியும், மாக்ஸ்முல்லரும் பரப்பிய இனவாத நோய்தான் ‘ஆரிய ‘ எனும் பதத்தை இனத்தன்மை கொண்டதாக பயன்படுத்தும் ஜூர வேக உளறலை பரவலாக்கியது. பின்னர் ஈவெரா ராஜாஜியை தடியால் அடித்தாரா என்கிற அபத்தக் கேள்வி. ஏன் பால்தாக்கரே கூடத்தான் ‘ஓவியர் ‘ ஹுசைனை மேடையில் பார்த்து கை குலுக்குகிறார்.

இறுதியாக, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் ஷாகா மைதானங்களில் பாடப்படும் பாடல் ஒன்றின் வரிகளுடன் முடிக்கிறேன்,

‘செங்குட்டுவ சேரனுக்கு இமய மலை கல்லு தெய்வம்

கங்கைகரை ராமனுக்கோ ராமேஸ்வர மண்ணு தெய்வம்

இமயமலை கல்லு தெய்வம் ராமேஸ்வர மண்ணு தெய்வம்

ஒண்ணுதானே நம்ம நாடு ‘

ஒண்ணுதான் என்றென்றைக்கும், ஒண்ணுதான் எவ்விதத்திலும்.

-அரவிந்தன் நீலகண்டன்


Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்