மஞ்சுளா நவநீதன்
மீண்டும் தஹல்கா
தஹல்கா பிரசினை தொடர்கதையாகிறது. காங்கிரஸ் செய்த சதி, ஐ எஸ் ஐ – சதி, வெளி நாட்டு சதி என்று புலம்பல்கள் ஆரம்பித்து விட்டன. ஐ எஸ் ஐ -சதிகள் செய்யாது என்பதல்ல. அந்தச் சதிகளை முறியடிக்க ஒரு திட்டமும் இல்லாமல் , கையாலாகாத அரசாக இந்த பா ஜ க அரசு இருந்து வருகிறது. இதற்கிடையில், தஹல்கா பற்றி இன்னொரு அவதூறு கிளப்பப் பட்டு விட்டது. அந்த தஹல்காவின் வலைத் தளத்தில் Erotica (இதற்கு தமிழ் மொழி பெயர்ப்பு என்னவென்று நண்பர்கள் சொல்லலாம் ) வெளியானது பற்றி செய்திகள் வெளியிட்டுள்ளன தினகரன், பயனீர் போன்ற ஏடுகள். இதனால் இந்த வலைத் தளம் ஏதோ அசிங்கமான செயலில் ஈடு பட்டு வந்ததாய் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி இது. இலக்கியத்தில் Erotica-விற்கு ஒரு நிச்சயமான இடம் உண்டு.
இந்த முயற்சி எனக்கு வேறொரு செய்தியை நினைவு படுத்தியது. ரால்ஃப் நாடார் அமெரிக்காவில் அசுரர்களாய் வளர்ந்து விட்ட கார்க் கம்பெனிகளை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய போது அவர் கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதை விட்டு விட்டு , அவர் எந்தப் பெண்ணுடன் சுற்றுகிறார் ஏதாவது அவருடைய வாழ்க்கையில் குளறுபடிகள் இருக்கிறதா என்று உளவு பார்க்கத் திட்டமிட்டன கார்க் கம்பெனிகள். அதில்லாமல் பெண்களை ஏவி அவரை வசப் படுத்தவும் முயற்சி நடந்தது. அவர் இதற்கெல்லாம் மசியாததால், இந்த விவரம் வெளியே தெரிய வந்து கார்க் கம்பெனிகள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டன.
தஹல்காவின் ஒளிப் பேழைகளில் உண்மை இருக்கிறதா என்று கண்டறிய முயற்சி செய்யாமல் அதனைப் பற்றிய அவதூறு பரப்புவது இது போன்ற ஒரு கேவலமான செயல்.
****
தஹல்காவின் பலி : ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ்
ஜெயா ஜேத்லியும், பங்காரு லட்சுமணும் பதவி இறக்கப் பட்டது எனக்கு வருத்தமளிக்க வில்லை. ஆனால் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் பதவி இறக்கம் வருத்தம் தரும் விஷயம், கிருஷ்ண மேனனுக்குப் பிறகு இது போல் குற்றச் சாட்டால் பதவி இறக்கப் பட்ட ராணுவ அமைச்சர் இவர். இவர் மீது நேரடி குற்றச் சாட்டு எதுவுமில்லை. மம்தா இவரைச் சகியாமல், பா ஜ க மீது அழுத்தம் தந்து பதவி இறக்கச் செய்திருக்கிறார். இது தான் உண்மையான இழப்பு. போஃபர்ஸ் நாயகர்கள் கூட யாரும் பதவி இறங்க வில்லை என்பது இந்த நேரம் அவதானிக்கத் தக்கது.
****
ஒரு தமிழ்ப் படம் : நிலாக் காலம்.
தமிழில் நல்ல படங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் நிலாக் காலமும் சேர்கிறது. இரண்டு சிறுவர்களுக்கும், ஒரு சிறுமிக்கும் ஏற்படும் நட்பும் அதைப் புரிந்து கொள்ளாமல் சந்தர்ப்பவசத்தால் சிறுவர்கள் குற்றம் சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப் படுவதும் மிகச் சிறந்த முறையில் படமாக்கப் பட்டுள்ளது. மூன்று பேருமே அருமையாய் நடித்திருக்கிறார்கள். ஹீரோவின் சகல கலா வல்லமையோ, மரத்தைச் சுற்றிப் பாடும் டூயட்டுமோ எதுவும் இல்லாமல் படத்தின் போக்கு மிகத் தெளிவாக உள்ளது. சுஜாதாவின் கதை வசனம் பொருத்தமானது. நடிப்பும் குழந்தைகள் குழந்தைகளாய் இருப்பதை வலியுறுத்துவதாய் உள்ளது. ஏழ்மையே ஒரு குற்றமாய் மாறிப் போகும் நம் சூழல் தெளிவாய்க் காட்டப் பட்டுள்ளது. சட்டத்தின் பிளவுகளுக்குள் உதிர்ந்து நசுங்கிப் போகும் இளம் உயிர்களுக்கு இந்த இரண்டு சிறுவர்களும் உதாரணமாகி விடுகின்றனர். வணிகப் பத்திரிகைகளில் தரமான எழுத்தைக் கொண்டு வந்ததில் சுஜாதாவிற்கு பெரும் பங்கு உண்டு. அதே போல் தரமான படத்தையும் தமிழ்த் திரை உலகத்திற்கு அவர் தொடர்ந்து கொண்டு வருவார் என்ற நம்பிக்கையை இந்தப் படம் அளிக்கிறது.
******
சிதம்பரத்தின் கட்சி
சிதம்பரத்தின் கட்சி தி மு க கூட்டணியில் இணைந்து விட்டது. தி மு க கூட்டணியில் கு ப கிருஷ்ணன், கண்ணப்பன் போன்றோரின் ஊழல்-சாதிக் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இரண்டு கூட்டணிகளுமே சாதிக் கட்சிகளைத் தவிர்க்க முடியவில்லை என்பது ஒரு வருத்தம் தரும் விஷயம்.. ஆனால் அதே சமயம், சாதிக் கட்சிகளும் கூடத் தனித்து இயங்க முடியாது என்பதை உணர்ந்துள்ளன. தேர்தல் முடிந்தபின்பு இந்தச் சம்ன்பாடுகள் எல்லாம் எப்படியெல்லாம் மாறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தஹல்கா -வின் பிரசினை நிச்சயம் தி மு க கூட்டணியைப் பாதிக்கும். சாதிக்கட்சிகளின் பின்னால் தான் மக்கள் போவார்கள் என்று தீர்மானமாய்ச் சொல்ல முடியாது. தேர்தல் கூத்து பல சுவாரஸ்யமான அதிர்ச்சிகளை அளிக்கும் என்று நினைக்கிறேன்.
****