தண்ணீர்க் காட்டில் ‍- 1

This entry is part of 48 in the series 20110313_Issue

ராம்ப்ரசாத்


கடல்.
இது நிலத்தின் பாகுபாடா?
அல்லது குறியீடா?

ஆவணப்படுத்திடாத வரலாறுகளின்மேல்
மிதக்கிறது கடல்…

நனைந்ததும் காய்ந்துவிடுகிறது கரை…
காய்ந்ததும் நனைத்துவிடுகிறது கடல்…

தலையால் என் பாதம் தொட்டு
வாலால் அத்துவானத்தை இடிக்கிறது
திமிர் கொண்ட கடல்…

காத‌லில்,
ஊடல்களை விழுங்குவது கரை,
காதல்களை விழுங்குவது கடல்.

நான் கடல் காதலன்.
இதைப் எழுதுகையில்
கடல் பைத்தியம்.

காலம் கடலை உறுதி செய்கிறது…
கடல் பூமியை உறுதி செய்கிறது…

நீரில் எட்டிப்பார் நீ தெரிவாய்…
கடலில் எட்டிப்பார் கடல்தான் தெரியும்…

கடல் ஒரு விந்தை…
விந்தை கடலில் சந்தை…

கடல் உலகின் நவீனம்…
உலகம் கடலின் நவீனம்…

கட‌ல் ஒரு கோண‌த்தில் இறை…
உன்னிலும் உண்டு…
என்னிலும் உண்டு…
நீரின்றி தோல் இல்லை…
தோல் இன்றி வில‌ங்கு இல்லை…

சிந்தை தூண்டும்
விந்தை உல‌க‌ம்,
கட‌ல்…

நுரையை உறிஞ்சிக்
குடிக்கிற‌து க‌ரை…
க‌ரையை உறிஞ்சி
நுரைக்கிற‌து க‌ட‌ல்…

வேடிக்கை…

க‌ரையை ந‌னைத்ததை
அடிக்க‌டி ம‌ற‌க்கிற‌து…
ம‌ற‌ந்த‌தை நினைவூட்டி
மீண்டும் ந‌னைக்கிற‌து…

விளையாட்டு…

விந்தைத்தாய் கடல்…
எதனோடு மையல் கொண்டு
சூறாவளியை பெற்றுப்போடுகிறாளோ…
அதனோடே காதல் கொண்டு
கண்ணீர் மழையாகிறாள்…

நுரைத்து நரைத்து கிழமாகிறதோ…
நரைத்து நுரைத்து கிழவேடந்தரிக்கிறதோ…

தூரிகை பிடிக்கும்
வ‌ண்ண‌ ஓவிய‌ள்
க‌ட‌ல்…

ம‌ல்லாந்து ப‌டுத்து
ப‌க‌ல் முழுதும் தீட்டுகிறாள்
க‌ருநீல‌ வான‌த்தை
வ‌ண்ணவண்ண‌ ஓவிய‌மாய்…

வ‌டநாட்டுப்பெண்ணோ அவ‌ள்
தீட்டும் ஓவிய‌த்திலும்
ச‌ம்கி ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள்…

ஆங்கொரு மின்மினி
உடைந்து விழும்…
அதை அவள் கண்மணி
அடைந்து கொள்ளும்…

செந்நிற‌ அத்துவான‌
ச‌ரிகையில் எப்போதும்
ப‌ன்னிற‌ ம‌ண‌ப்பெண்ண‌வ‌ள்…

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation