This entry is in the series 20030317_Issue

அனந்த்


1. அற்பனின் ஆட்சி

கற்றுத் தகுதியும் கொண்டவர் பற்பலர் காத்திருக்கச்
சற்றும் அறிவிலாத் தற்குறி யாளன் சலிகையினால்
வெற்றிபெற் றிங்கேயென் மேலதி காரியாய் வீற்றிருக்கப்
பெற்றது கண்டுளம் பொங்கினும் அஞ்சுவன் பேசுதற்கே!

2. படைப்புத் திருட்டு

பன்னாள் முனம்என்றன் ஆய்வினில் கண்டதைப் பற்றியொரு
முன்னாள் பணியக நண்ப னிடம்நான் மொழிந்ததுண்டு
இன்னாள் புரட்டிய மேல்நாட் டிதழொன்றில் என்படைப்பை
‘என்ஆள் ‘தன் பேரினில் இட்ட எரிச்சலை என்சொல்வனே!

3. வழுக்கை தரும் வருத்தம்

கட்டுக் கடங்காது காற்றினில் ஆடியென் கண்மறைத்து
முட்டி வளர்ந்த முடிமயிர் கண்டவர் மோகித்ததைச்
சுட்டிப் பலரிடம் சொல்லி மகிழும் சுகத்தினையென்
மொட்டைத் தலையின்று போக்கிய தெங்ஙன் மொழிந்திடுமே!

dbsvsa@nus.edu.sg

Series Navigation