ஒரு மடி தேடும் மனசு..
Published March 17, 2003 • By
மனோ
மனோ

என்னைக்
கட்டியணைக்க கை வேண்டாம்
உச்சி நுகரும் முத்தம் வேண்டாம்
என்னை
மலர வைக்கும் புன்னகை வேண்டாம்
மயங்க வைக்கும் கவிதைகள் வேண்டாம்
என்
விழி உணரும் புன்சிரிப்பு வேண்டாம்
வழி தொடரும் நிழல் வேண்டாம்
என்
தலைகோதும் விரல் வேண்டாம்
மனம் தேடும் மணம் வேண்டாம்
என்
கோபம் போக்கும்ி பார்வை வேண்டாம்
தாபம் தீர்க்கும் ஸ்பரிசம் வேண்டாம்
என்
தனிமை பசிக்கும் இரவுச்சிறையில்,
உயிரைத் தொட்டுத் தாலாட்ட
உணர்வை எழுப்பி ஸ்ருதி மீட்ட,
அழுத மனசுக்கு ஆறுதலாய்
பழுது செய்ய பவுர்ணமியாய்
படர்ந்து கரைத்து புதைத்துவிட,
குமுறித் தீர்க்க மடி போதும்,
குறைவின்றித் தருவாயா ?
tamilmano@rediffmail.com