அன்பு நெஞ்சே !

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

புகாரி


ஏறிடுங் கால்களைத் தடுக்கிவிட்டு
….ஏணியைப் பள்ளத்தில் இஇறக்கிவிட்டு
ஊறிடுஞ் சுனைகளை அடைத்துவிட்டு
….உள்ளமே இலாத கள்வர்களாய்

ஊரிலே பலபேர் நல்லவரே
….உன்தலை மீதேறி நடப்பவரே
யாரிவன் யாரவன் என்பதை நீ
….எண்ணி நடப்பாயென் அன்பு நெஞ்சே

தோளிலே கையிடும் நண்பனென்பான்
….துணைக்கு நீ அழைக்காமல் வந்து நிற்பான்
நாளிலே பலமுறை தேடிவந்து
….நன்றியே நானென்று கூறி நிற்பான்

ஏழை நீ துயர்பெற்ற நாட்களிலோ
….எங்கும் உன்கண்களில் படமாட்டான்
தேளிவன் கொடுக்கினை மறைத்துவிட்டான்
….தெரிந்து நீ நடப்பாயென் அன்பு நெஞ்சே

யாருமே போற்றிடும் ஏற்றதொழில்
….எவனையோ குறைகூறித் திரிவதென
ஊரிலே பலபேர் அப்படித்தான்
….உன்னையே குறைகூற வந்துநிற்பார்

யாரினைக் கண்டும் நடுங்காதே
….எவர்சொல் கேட்டும் நீ சிதையாதே
பேருக்கு அவர்முன் செவிமடுத்து
….பிறகதைத் தனிமையில் எடைபோடு

ஏனெனுங் கேள்வியைக் கேட்பதற்கு
….என்றும் எவருக்கும் அஞ்சாதே
ஆனது ஆகட்டும் என்பதுபோல்
….அசைய வெறுத்துமட்டும் விலகாதே

ஆனது உன்னால் எவையெவையோ
….அனைத்தையும் செய்து நீ முன்னேறு
ஊனமே எதுவென அறிவாயோ
….உடைந்து கைகட்டிக் கிடப்பதுதான்

தேனினைப் போலே இஇனியதெது
….தெளிந்த நல்லறிவுக்கு ஏற்றதெது
மானிட மொழிகளில் உயர்ந்ததெது
….மெளனமேயல்லாது வேறெதது

தூணிணைப் போலே அமைதியினைத்
….தூக்கி நிறுத்துவதப் பேரழகு
வேணும் போதே வாய்திறந்தால்
….வேதனை ஒண்டாது அன்பு நெஞ்சே

சாதிகள் சிறிதெனத் தள்ளிவிடு
….சமத்துவம் பெருஞ்சுகம் போற்றிவிடு
சேதிகள் கேட்டிட அனுதினமும்
….செவியினைப் பிறருக்காய் வளர்த்துவிடு

பாதியை மெழுகிப் பொய்யுரைக்கும்
….பகட்டினை மதியாதே என்றென்றுமே
தேதியொன்றானதும் நிலைமறந்து
….தேவையைப் பெருக்காதே அன்பு நெஞ்சே

ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
….ஆயிரம் படிகீழே தாழ்ந்திருப்பார்
ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
….ஆயிரம் படியேறி உயர்ந்திருப்பார்

ஆயினும் அவற்றையே பெரிதாக்கி
….ஆணவம் அவமானம் அத்துமீறும்
நோயினில் வீழ்ந்தே நோகாமல்
….நேர்வழி நடப்பாயென் அன்பு நெஞ்சே

சாதனை ஆயிரம் செய்துவிடு
….சாவினை அழிக்கப் பெயர் நாட்டு
வேதனை வேண்டாம் தோல்விகளில்
….வேண்டும் திடநெஞ்சம் எப்போதும்

சோதனை எத்தனை வந்தாலும்
….சோர்வது கூடவே கூடாது!
பாதம் பணிந்திட ஆசைகளைப்
….பழக்கப் படுத்திவை அன்பு நெஞ்சே !

புகாரி
buhari2000@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி