ஆட்டுக் குட்டி முட்டை இட்டு..!

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

இரவி ஸ்ரீகுமார்.


பிரேயர் மணி அடித்து விட்டது.

ராம்ஜிக்கு இருப்புக்கொள்ளவில்லை.

இன்னும் சந்தியா வரவில்லை.

சந்தியா அவனுடைய வகுப்பு மாணவி.

அவனுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்.

ராம்ஜி-

நல்ல உயரம்.சிவந்த நிறம்.

அந்த மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.

வகுப்பில் மாணவத் தலைவன்-மானிட்டர்.

படிப்பில் முதல் ரேங்க். இலக்கியப் போட்டிகளில் முதல்.

ஆனால் நோஞ்ஜான் உடம்பு; விளையாட்டுகளில் பூஜ்யம்.

‘ஷார்ட் சைட் ‘-அந்த வயதிலேயே கண்ணாடிப் போட்டு

அந்தக் கிராமத்துப் பள்ளியின் ‘பாக்கியராஜ் ‘- ஆனான்.

சந்தியா-

நடுதர உயரம்.கறுப்பு அழகி.

வகுப்பில் அவனுக்கு எல்லாவற்றிலும் போட்டி.

விளையாட்டுப் போட்டிகளிலும் வெளுத்து வாங்குவாள்.

அதனாலேயே, அவனுக்கு அவளை, ரொம்பப் பிடிக்கும்.

அதோ ஆராவமுதன் சார் வந்துவிட்டார்.

சந்தியாவின் தந்தை.

அவர்களின் வகுப்பிற்கு கணக்கு வாத்தியார்.

ஆனால் சந்தியா இன்னும் வரவில்லை.

அவளுடைய தங்கை, எட்டாம் வகுப்பு-சாந்தியும், வந்துவிட்டாள்.

அப்படியென்றால், சந்தியாவிற்கு ஏதோ பிராப்ளம்-

உடம்பு சரியில்லையா ?

ராம்ஜி கவலைப்பட்டான்.

ஆராவமுதன் சாருக்கு, ஓரளவுக்கு துப்பறியும் சாம்பு போல

உருவ அமைப்பு. உருவ அமைப்பில் மட்டும் தான்.

மற்றப்படி ஆள் கெட்டிக்காரர்.வகுப்பெடுப்பதில் மன்னன்.

‘நானெல்லாம் அந்தக் காலத்து பி.எஸ்ஸி டா’-

பெருமையாகச் சொல்வார்.

பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸிக் கெல்லாம் அவனுக்கு வித்தியாசம்

தெரியாது.

அவனைப் பொறுத்த வரை,

ஆராவமுதன் சார் காலேஜ்ல பெரியப் படிப்பு படிச்சிருக்கார்.

அவ்வளவு தான்.

ராம்ஜி, கொஞ்சம் போலத் திக்கிப் பேசுவான்.

பசங்கள்- ‘ர..ர..ர..ராம்ஜி ‘ எனக்கூப்பிட்டு கேலி

செய்தால் அசாத்தியக் கோபம் வரும்.

கல்லை எடுத்து அடிப்பான்.காறித் துப்புவான்.

அப்போதெல்லாம், சந்தியா தான்

அவனை சாந்தப் படுத்துவாள்.

கூடப் படிப்பவர்களுக்கு, அவர்களுக்கு

மேத்ஸ் கிளாஸ் எடுக்கும், விஜயலஷ்மி டாச்சர் போல

அட்வைஸ் செய்வாள்-

‘சே பாவம். அப்படியெல்லாம் கேலி செய்யாதீங்கடா.

அவனை ஆண்டவன் அப்படி படைச்சுட்டுத்தா எங்க

அம்மா சொல்வாங்க.. ‘- லேசாக, கம்மியக் குரலில் சொல்வாள்.

கண்களில் லேசாகக் கண்ணீர் எட்டிப்பார்க்கும்.

அவளுடைய அம்மா -கமலா டாச்சர்-பக்கத்து கிராமத்து

பள்ளியில் தமிழ் ஆசிரியை.

அன்று தான் அவனுக்கு, சந்தியாவின் மேல் காதல் வந்தது.

அவளுக்கும் அவன் மேல் கண்டிப்பாக காதல் இருக்க வேண்டும்.

இல்லையென்றால் அவனுக்காக அனுதாபப்பட்டு ஏன்

அழவேண்டும் ?

ராம்ஜி நிச்சயப்படுத்திக் கொண்டான்.

நெருங்கிய நண்பன், சேகரிடம் தன் காதலையும் அதனுடைய ஆழத்தையும், தெய்வீகத்தையும் சொல்லி, உதவச் சொன்னான்.

‘நிச்சயமாடா ஜி. உனக்கு இல்லாம யாருக்கு செய்யப்போறேன் ? ‘

சேகர், உறுதிமிக்கக் குரலில் சொன்னான்.

அவனும் நல்ல உயரம்.

ஆனால் ஆள் நல்ல கிராமத்து கட்டை.இல்லை -காளை.

உருண்டுத் திரண்ட புஜங்களும், கருகருத்த மீசையும்,

நிச்சயம் கல்லூரியைக் கடந்திருக்க வேண்டியவன்.

‘ஆனால்..அவகிட்டே என்னத்தை பார்த்துடா மயங்கினே ? ‘-

தன்னுடைய வயதிற்கு ஏற்ற கேள்வியைக் கேட்டான்.

ராம்ஜி புரியாமல்,

‘ஏண்டா ? அவ நல்லப் பொண்ணுடா..யாராவது கஷ்டப்பட்டா அழுதுடுவாடா.. ‘-

என்று தயங்கித் தயங்கிப் தன்னுடைய வயதிற்கேற்றப்

பதிலைச் சொன்னான்.

தன்னுடைய பதிலால் நண்பனின் மனம் புண்பட்டு,

எங்கேனும் தன்னுடையக் காதலுக்கு உதவாமல் போய்விட்டால் ?

சேகர் சுதாரித்துக் கொண்டான்.

அவனுக்கும் சந்தியாவின் மேல் ஒரு காதல் உண்டு.

அவள் அவனுக்கு ஒருவிதத்தில் முறைப் பெண்.

கமலா டாச்சர் அவனுக்கு அத்தை முறை.

இது எதுவும் தெரியாமல், ராம்ஜி அவனிடமே வந்து

தன் காதலை சொன்னது- சேகருக்கு, சிரிப்பு வந்தது.

‘எது வரைக்கும் போரான்னு பார்த்துறலாம் ‘-

சேகரின் உதட்டில் நக்கல்.

‘சரி ஜீ..சந்தியா உன்னை விரும்புதா ? ‘-

சந்தியாவை அஃஹரிணை ஆக்கினான்.

‘நிச்சயம் சேகர் ‘ என அவள் தன்னைப் பற்றி

பேசும் போது கண்ணீர் விட்டதை ராம்ஜி சொன்னான்.

‘அப்படியா ‘-என கேட்டுக்கொண்ட சேகர்,

ஏதோ ஒன்றை தீர்மனித்தான்.

‘சரி ஜீ.கண்டிப்பா உன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண

நான் ஆச்சு ‘-என விடைப் பெற்றான்.

இதோ இன்றோடு ஒரு மாதம் ஆகி விட்டது அவன்

சந்தியாவைக் காதலிக்க ஆரம்பித்து.

இந்த ஒரு மாதத்தில், இன்று தான்,

அவள் வரவில்லை.லீவ்.

இன்று அவளை அழைத்துக் கொண்டு

சினிமாவிற்குப் போக வேண்டும் என்று,

ராம்ஜி நினைத்திருந்தான்.

‘போச்.எல்லாம் போச். ‘-மனதில் புலம்பினான்.

திடாரென்று கவலை வந்தது.

‘சந்தியாவிற்கு எதாவது உடம்பு சரியில்லையோ ?

சேகரிடம் கேட்கலாம்.அவனுக்குத் தெரிந்திருக்கலாம்.

சந்தியாவின் வீட்டுப் பல விஷயங்கள் அவனுக்கு

எப்படியோ தெரிந்து இருக்கு.

ஆனால் இன்னும் அந்த சேகர் பயலும் வரவில்லை, ‘-

ராம்ஜிக்கு சேகரின் மேலே கோபமாக வந்தது.

பிரேயர் ஆரம்பித்துவிட்டது.

இறை வணக்கம் முடிந்து, ஹெட்மாஸ்டர் பேசினார்-

‘மஹாத்மா காந்தியைப் போல தலைவர்கள் இப்போது இல்லை.. ‘

அவனுக்கு அதில் எல்லாம் அவ்வளவு இண்டிரஸ்ட் இல்லை.

மனசு முழுக்க சந்தியா.

அவள் மேல் அவனுக்கு இருக்கும் தெய்வீகக் காதல்.

அவ்வளவு தான்.

பிரேயர் முடிந்து வகுப்புகள் ஆரம்பிக்க,

ஒரு மணி நேரம் ஆனது.

இப்படிதான் இந்த ஹெட்மாஸ்டர்.

பேச ஆரம்பித்து விட்டாரென்றால்,பேசிக் கொண்டே இருப்பார்.

இரண்டு மணி நேரம் கூட ஆகிவிடும்.

அன்று முழுவதும் ராம்ஜிக்கு வகுப்புகளில் மனம் செல்லவில்லை.

இதில், ஆண்டு முடியும் காலத்தில் அவன் வகுப்பில்

ஒரு சேர்க்கை.

கணக்கு டாச்சர் விஜயலஷ்மி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்

போது அந்த மாணவி வந்தாள்.

நல்ல அழகு.நல்ல சிகப்பு.

புது அட்மிஷன் என்றதும்,

விஜயலஷ்மி டாச்சருக்கு எரிச்சல்.

குரலில் காண்பித்தார்.

‘டிசம்பர் ஆயிடுச்சு.போர்ஷனெல்லாம் முடிஞ்சு,

இப்போ ரிவிஷன் செய்துக்கிட்டு இருக்கோம்.

இப்போ போய் அட்மிஷன்,அதுவும் டெண்த்ல,

பப்ளிக் எக்ஸாம் வேற. ஏய், உன் பேரு என்னா ? ‘-

மிரட்டினார்.

‘காயத்ரி ‘

‘நல்ல சிவப்பு கலரா இருக்கே..என்ன ஐயரா ‘ ?

ஆமாம் என்பதுப் போல் அவள் தலை ஆட்டினாள்.

‘என்ன திடாருன்னு அட்மிட் ஆயிருக்கே. ‘

‘அப்பா செத்துப் போய்ட்டார்.

மாமவத்துக்கு வந்திருக்கோம்.

என் மாமா தான் இந்த ஸ்கூல்ல சேர்த்துவிட்டார்.

எனக்குப் பழைய ஸ்கூல்ல, போர்ஷனை முடிச்சுட்டாங்க மிஸ் ‘

அந்தப் பெண் கிராம மணம் மாறாதுப் பேசினாள்.

‘த்ச் ‘-விஜயலஷ்மி டாச்சர் பரிதாபப்பட்டாள்,

‘சரி உட்கார் ‘

பாடத்தைத் தொடர்ந்தாள்.

ஆனால் அதன் பிறகு வகுப்பே காயத்ரிக்கு பரிதாபப்பட்டது.

அதே சமயத்தில் அவளுடைய ‘ஆத்து ‘ பேச்சுக்கு கேலிசெய்தது. ராம்ஜிக்கு அவளிடம் பரிதாபம் மட்டும் ஏற்பட்டது.

‘பாவம் அவள். ‘ அவ்வளவு தான்.

அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

ராம்ஜியைப் பொறுத்தவரை சந்தியாவிற்குப் போட்டியாக யாரும் இந்த உலகத்தில் இல்லை.

*******************

சாயந்திரம். சந்தியாவின் வீட்டிற்கு ராம்ஜி போனான்.

‘ஆராவமுதன் சார்கிட்டே,கணக்குல ஒரு சந்தேகம் கிளியர் பண்ணிண்டு வறேன் ‘

என்று அக்காவிடம் சொல்லி விட்டுக் கிளம்பினான்.

முருகன் தியேட்டரில்,

‘முருகா நீ வரவேண்டும் ‘- என டி.எம்.செளந்திரராஜன் பாட்டு

போட்டு விட்டார்கள்.

ஒவ்வொரு நாள் மாலைக் காட்சி ஆரம்பத்தல் போடப்படும் முதல் பாட்டு.

முருகன் தியேட்டர், அந்த சுற்றுப்புறத்தில் உள்ள ஏழு எட்டு கிராமத்திற்கும் இருக்கும் ஒரே டூரிங் தியேட்டர்.

‘வாடா.. ‘-ஆராவமுதன் சார் கட்டை குரலில் வரவேற்புக் கொடுத்தார்.

‘என்ன ? ‘ ஒற்றை வார்த்தையில் கேட்டார்.

ராம்ஜி தடுமாறினான்.என்ன சொல்ல ?

‘சந்தியாவுக்கு என்ன சார் ஆச்சு ?இன்னிக்கு ஸ்கூலுக்கு வரலே ? ‘

‘பளார் ‘-ஓங்கி ஒரு அறை. ‘என்ன கேட்டா ? ‘-ஒரு உறுமல்.

‘டேய்..என்ன முழிக்கிறா.. ? என்ன வேணும் ? ‘

ஆராவமுதன் ராம்ஜியை மீண்டும் கேட்டார்.

‘ஒண்ணுமில்லே சார்.இன்னிக்கு நீங்க சொல்லி கொடுத்த கணக்குல ஒரு சந்தேகம்.. ‘

‘எதுல ? ‘

‘குணகங்கள்ல.. ‘-ராம்ஜி.

‘சரி வா.சொல்லித் தரேன் ‘-ஆராவமுதன்.

இப்படி சொல்லிக் கொடுப்பதற்கு எல்லாம் காசு வாங்க மாட்டார்-

‘இதுல்லாம் அறிவு தானம்.ஏதோ என்னால முடிஞ்சது, அவ்வளவு தான் ‘.

ராம்ஜி, அவர் குணகங்களைச் சொல்லிக் கொடுக்க, வீட்டை நோட்டம் விட்டான்.இல்லை.சந்தியாவைக் காணவில்லை.

‘என்னடா புரிஞ்சுதா ? ‘-ஆராவமுதன் கேட்டார்.

‘ம்..புரிஞ்சது சார் ‘

‘சரி..அப்ப கிளம்பு.. ‘

‘தேங்க்ஸ் சார் ‘

‘குட்..இப்படிதான் நன்றி சொல்லக் கத்துக்கணும்..குட் வெரி குட் ‘

ஆராவமுதன் ராம்ஜியைப் பாராட்டினார்.

‘ஆங்..மறந்துட்டேன்..இன்னிக்கு அறிவியல்ல என்ன என்னப் பாடம் எடுத்தாங்க..நோட்ஸ் என்ன கொடுத்தாங்கன்னு..கொஞ்சம், சந்தியாவுக்கு ஹெல்ப் பண்ணு..அவ அம்மாக்கூட ஊருக்கு போயிருக்கா. நாளைக்கு ஸ்கூலுக்கு வந்துடுவா…சரியா ? ‘

ராம்ஜிக்கு, சந்தோஷம் ஆகிவிட்டது.

‘எந்த ஊருக்கு சார் ? ‘

கேட்டுவிட்டான்.அடி விழப்போகிறது.

அவன் எதிர்பார்த்ததிற்கு மாறாக,

‘என்னது ?என்ன கேட்டா.. ? ‘-குரலை உயர்த்திக் கேட்டார்.

அதன் பிறகு மெல்ல சிரித்தப்படி,

‘இங்கே தான்..பண்ருட்டி போயிருக்கா ‘

ராம்ஜிக்கு சிரிப்பு வந்தது-

ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பண்ருட்டி, ஊராம்.

‘சரி சார். நான் போய்ட்டு வரேன் ‘

ராம்ஜி, சந்தியாவின் வீட்டிலிருந்து திரும்பும் போது, சந்தோஷமாக இருந்தான்-

‘சந்தியாவிற்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை. ‘

முருகா தியேட்டரில், காட்சி ஆரம்பிப்பதற்கு முன், அந்தந்தக் காலகட்டங்களில் ரொம்பவும் பாப்புலரான சினிமாப் பாடலை போடுவார்கள்.

இப்போதும் போட்டார்கள்-

‘ஆட்டுக்குட்டி முட்டை இட்டு.. ‘

ராம்ஜியும் பாடிக்கொண்டே சைக்கிளை மிதித்தான்.

********************************

ராம்ஜிக்கு,அடுத்த ஒருவாரமும் ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

சந்தியா, அவன் ஆராவமுதன் சாரிடம் குணகங்களைப் பற்றி சந்தேகம் தெளிந்த அடுத்த சில நாட்களும் வரவில்லை. அதன் பிறகு, வாரக் கடைசி-சனி,ஞாயிறு.

பள்ளி விடுமுறை.

அவனுக்கு முதலில் இருந்த கவலை இப்போது இல்லை.

‘அவள் பண்ருட்டிக்கு போயிருக்கிறாள். போன இடத்தில் கொஞ்சம் அதிக நாட்கள் தங்க வேண்டி இருக்கும்.அவ்வளவு தான் ‘ தன்னை சமாதானப் படுத்திக்கொண்டான்.

‘ராம்ஜி ‘- காயத்ரி அவனை தேடி அந்த வாரத்தில் ஒருநாள் வந்தாள்.

‘என்னா ? ‘-கொஞ்சம் வித்தியாசமாகத் தான் கேட்டான்.

குரலில் அந்நியம்.

‘ஒண்ணுமில்லே..,இந்த கிளாஸ்லேயே உனக்குதான் கணக்கு நல்லா வருமாம்.எனக்கு கணக்கு கொஞ்சம் வீக்.

எனக்கு கணக்கு சொல்லித்தரையா ? ‘

ஒரு நிமிடம் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால்- ‘சரி ‘ என்றான்.

*******************

‘டேய்..ஜீ, வரையா..சினிமா போகலாம் ?எல்லா ஃபிரெண்ட்ஸும் வரானுங்கா.. ‘-சேகர் கேட்டான்

‘என்ன சினிமாடா ? ‘

‘அலைகள் ஓய்வதில்லை.. ‘

‘அது ஏ படம் இல்லே.. ‘

‘ஆமாம்..லவ் பண்றே..ஆனால் ஏ படம் பார்க்கமாட்டே.. ‘

சேகர் கேலி செய்தான்.

மெதுவாக ராம்ஜியைப் பேசியே மசியவைத்தான்.

அவனும்,சேகரும் தான் சினிமாவிற்கு வந்திருந்தார்கள்.

‘ஏண்டா, வேற யாரும் வரலையா ‘

‘இல்லே ஜீ..நீ, மத்தவங்க வராங்கன்னு சொன்னாதான் வருவே. அதான் சும்மா சொன்னேன். ‘

ராம்ஜிக்கு அவனுடைய செயலின் அர்த்தம் புரியவில்லை.

‘என்ன சேகர் இப்படி என்னை ஏமாத்திட்டா ? ‘

‘ஜீ.. கோவிச்சுக்காதேடா..உன்கிட்டே ஒரு முக்கியாமான விஷயம் பேசணும் அதான் இப்படி பண்ணேன் ‘.

ராம்ஜிக்கு சற்று பயமாக இருந்தது.

அவனுடையக் காதலைப் பற்றியது என உள் மனசு சொன்னது.

‘என்ன விஷயம் சேகர் ? ‘

‘ம்..சொல்றேன் கொஞ்சம் பொறுத்துக்கோ,படம் ஆரம்பிக்கட்டும்.. ‘

சேகர் அவனை டாஸ் செய்தான்.

இடைவேளைக்கு சற்று முன்பாக,

‘ஜீ..வரையா.போய் கூல் டிரிங்க்ஸ் குடிச்சுட்டு வரலாம் ? ‘ என்றான் சேகர்.

வெளியில் வந்தார்கள்.

ராம்ஜிக்கு புரிந்தது.

‘சேகர் தன்னிடம் விஷயத்தை சொல்லத் தான் வெளியில் அழைத்து வந்திருக்கிறான் ‘

சேகர் இரண்டு குளிர்பானங்களுக்கு சொன்னான்.

‘ஜீ..எதுக்கும் நீ பணம் கொடுக்காதே. ‘

சினிமாவிற்கு வரும் போதே சேகர் சொல்லி விட்டான். அவன் கொடுக்கச் சொன்னாலும்,ராம்ஜியிடம் அவ்வளவு பணம் கிடையாது. அவன் வீட்டில் கொடுக்க மாட்டார்கள்.

‘ஜீ..ஒரு முக்கியமான விஷயம் உன் கிட்டே சொல்லனும்.. ‘

சற்று இடைவெளி விட்டான்.

ராம்ஜியின் இதயம் பந்தயக் குதிரையைப் போல.

‘சந்தியா ஏன் ஸ்கூலுக்கு வரதில்லைத் தெரியுமா ? ‘

ராம்ஜி அவனே பதில் சொல்வான் என்ற எதிப்பார்ப்புடன் அவனுடைய முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘அவளுக்கு என்னுடைய மாமா, வரன் பாக்குறாரு. ‘ ராம்ஜிக்கு ஒன்றும் புரியவில்லை.

உலகமே சுற்றுவதுப் போல இருந்தது.

‘சேகர் நீ என்ன சொல்லறே ? ‘-பலகீனமான குரலில் கேட்டான்.

இன்று இரவு கடைசி அக்காவிடம், தன்னுடையக் காதலை சொல்ல உத்தேசித்திருந்தான்.

அதற்குள்,அவனுடைய தெய்வீகமான காதல் இப்படி ஆகிவிட்டது. ராம்ஜிக்கு மனம் மிக வேதனைப்பட்டது.

‘ஆமாண்டா..அவளுக்கும் அவளுடைய முறை மாப்பிள்ளைக்கும் வர ஞாயித்திக் கிழமை நிச்சயதார்த்தம். ‘ சேகர் அமைதியானக் குரலில் சொன்னான்-

‘அவகிட்டே கேட்டேன்..உன் மேல அவளுக்கு லவ்வெல்லாம் இல்லையாம்.. ‘

ராம்ஜிக்கு உடனே தற்கொலைப் பண்ணிக்கொள்ளவேண்டும் போல இருந்தது.

‘அப்படியா சேகர்… ? ‘-மெளனமாக இருந்தார்கள்.

படத்தில் இடைவேளை விட்டிருக்க வேண்டும்.

ஞாயிற்றுக் கிழமை கூட்டம் அதிகமாகத் தெரிந்தது- கேண்டினில்.

சேகர், ஒரு சிகரெட் வாங்கிக் கொண்டான்.

‘நீ சிகரெட் கூட பிடிப்பியா சேகர் ‘

பதில் சொல்லாமல் சிரித்தான்.

‘நீ இன்னும் சந்தியாவை கட்டிக்கப் போற மாப்பிள்ளை யாருனு கேக்கலையே ‘

‘நான் இல்லைனு ஆயிட்ட பிறகு, எதுக்கு சேகர். ‘

ஒரு நிமிடம் அவனை பார்த்தான், சேகர்.

‘அது சரி. நீ எல்லாம் டானெஜர்..இன்னிக்கு ஒரு காதல் நாளைக்கு ஒரு காதல் இல்லையா.. ? ‘

‘என்ன சேகர் அப்படி சொல்லிட்டே..என்னுடையது தெய்வீகமானது. ‘ சினிமா காதலனைப் போல சொன்னான், ராம்ஜி.

‘பொடலங்கா…போடா.. ‘-சேகர்,நாக்கை மடித்துப் பழிப்புக் காண்பித்தான்.

‘ஹை..ராம்ஜி ‘-புது குரல் இருவரையும் அந்த திசையை நோக்கி

திரும்ப வைத்தது.

காயத்ரியும்அவளுடைய தாய மற்றும் இன்னுமொரு நடுத்தர வயது ஆண்மகனும்.

‘அவளுடைய மாமாவாக இருக்கும் ‘-ராம்ஜி நினைத்துக் கொண்டான்.

‘அம்மா இவன் தான் ராம்ஜி..என் கிளாஸ்லேயே எல்லா சப்ஜெக்டிலேயும் முதல் ரேங்க்..,இவர் பேரு.. ‘-காயத்ரி இழுத்தாள்.

‘சேகர் ‘- தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

‘ராம்ஜியைத் தெரிந்த அளவுக்கு காயத்ரிக்கு என்னை தெரியாது..ஏன்னா..நான் கிளாஸ்ஸுக்கு என்னிக்காவது ஒரு நாள் தான் போவேன்.. ‘-பெரிய மனித தோரணையில் சேகர் சொன்னதை காயத்ரியின் அம்மா ரசிக்கவில்லை.முகம் காட்டியது.

‘சரி ராம்ஜி, சேகர் படம் ஆரம்பிச்சுடும்… அப்புறம் பார்க்கலாம்.. ‘

காயத்ரி உள்ளே போனாள்.

‘ஜீ, காய்த்ரி உனக்கு நல்ல ஜோடிடா ‘-சேகர் சொன்னான்.

அதைப் பற்றிதான் ராம்ஜியும் நினைத்துக் கொண்டிருந்தான்.

ராம்ஜியின் இந்தக் காதலும் தெய்வீகமானது தான்.

***

ravi_srikumar@hotmail.com

Series Navigation

இரவி ஸ்ரீகுமார்

இரவி ஸ்ரீகுமார்