கேட்டுக்கிட்டே இருங்க!

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

பா.ராகவன்


தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிகளின் மேல் – குறிப்பாக, அந்த அழுவாச்சித் தொடர்களின் மேல் மக்களுக்கிருந்த மாளாக்காதல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியிருப்பது போல் தெரிகிறது. ஓரிரு தொடர்களைத் தவிர மற்ற பல நூற்றுக்கணக்கான உம்மணாமூஞ்சித் தொடர்கள் காண்போரில்லாமல் விண்ணில் வீணாவதாக உள்ளூர் டி.ஆர்.பி. அறிக்கைகள் சொல்கின்றன. கூடிய சீக்கிரம் மக்கள் முற்றிலும் இந்தப் பிசாசின் பிடியிலிருந்து விடுபட்டு, பழையபடி புஸ்தகம் படிக்க வந்துவிடுவார்கள் என்று (என்னைச் சேர்த்து) பலபேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள், இங்கே.

வேள்வி பலனளிக்கிற நேரத்தில் அசுரர் வந்து அசிங்கம் பண்ணுவார்களாமே அந்தக்காலத்தில், அந்தமாதிரி இன்னொரு புதிய பூதம் புறப்பட்டுப் புளியைக் கரைக்கிறது.

எஃப். எம். ரேடியோக்கள்.

மிகக் குறுகிய காலத்தில் இந்தத் தனியார் ரேடியோக்கள் தமிழகத்தில் பெற்றிருக்கும் பாப்புலாரிடியும் செல்வாக்கும் வியப்பூட்டுகின்றன. இன்று ஒரு தகவலும் உழவர்களூக்கு ஒரு வார்த்தையும் அரங்கிசையும் கேட்கிற நூற்றாண்டுகண்ட புண்யாத்மாக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான புதிய ரேடியோ நேயர்கள் – குறிப்பாக இளைய தலைமுறையினர் முளைத்து, ஒரு நாளைக்கு 25 மணிநேரம் எஃப். எம். கேட்பதை ஓர் அப்யாசம் மாதிரி மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் செத்தாலும் ஆல் இந்தியா ரேடியோவின் அரசாங்க ஒலிபரப்பைக் கேட்பதில்லை. பரிசுத்தமான பண்பலை நேயர்கள்.

அப்படி என்ன தான் இருக்கிறது இதில் என்று ஒரு முழு நாள் அலறவிட்டுக் கேட்டுப்பார்த்தேன். வெறும் சினிமாப்பாட்டு.

அரைமணிக்கொரு அறிவிப்பாளர் மாறுகிறார். ஆனால் ஒழுகும் அன்பில் குறைச்சலில்லை. நேயர், விருப்பம்பொங்கத் தான் விரும்பிய பாடலை மட்டுமல்லாமல் தன் நண்பர்கள், பெற்றோர், பங்காளிகள், பகையாளிகள் பெயர்களையும் பட்டியலிட இவர்கள் அனுமதிக்கிறார்கள்.

‘உங்களோட பேசறதுல ரொம்ப சந்தோசமா இருக்குது சார். என்னால நம்பவே முடியல சார். ரெண்டுநாளா லைன் கடெய்க்கலெ சார். உங்க வாய்ஸ் சூப்பர் மேடம். நான் கொருக்குப் பேட்டைலேருந்து குப்புசாமி பேசறேங்க. ஆல்தோட்ட பூபதி பாட்ட கண்டிப்பா போடுங்க மேடம். அந்தப் பாட்டை அயனாவரத்துல இருக்கற என் அத்தைப் பொண்ணு தனலச்சுமிக்கு டெடிகேட் பண்றேங்க… ‘

நல்ல கதை இல்லை ? யாரோ எழுதிய பாடல். யாரோ இசையமைத்து, யாரோ பாடி, யாரோ நடித்து, யாரோ விற்று சம்பாதித்துக்கொண்டிருக்கிற சரக்கைத் தூக்கி அயனாவரம் தனலட்சுமிக்கு சமர்ப்பணம் செய்யும் பரம பக்தர்கள் நிறைந்த புண்ணிய பூமியை நினைத்தாலே புல்லரிக்கிறது.

இதைக்கூட சகித்துக்கொள்ளமுடிகிறது. இந்தப் பண்பலைக் குட்டிச்சாத்தான்களில் புதிய ஏற்பாடு ஒன்று பண்ணியிருக்கிறார்கள். முற்றிலும் காதலர்களுக்கான நேரமாம்.

அதிலும் பாட்டுதான் என்றாலும் பங்குபெறும் நேயர் கண்டிப்பாக ஒரு காதலராகவோ அல்லது காதலியாகவோ இருந்தாகவேண்டும். இல்லாவிட்டால் யாராவது அவரது நண்பரேனும் காதலித்துத் தொலைத்திருக்கவேண்டும்.

‘வணக்கங்க. உங்க பேரு என்ன ? ‘

தொலைபேசும் நேயர் தன் பெயரைச் சொன்னதும், ‘சொல்லுங்க, நீங்க யாரையாவது காதலிக்கிறீங்களா ? ‘

‘ஆமாங்க. என் காதலர் பிரகாஷ். அவர் புரசைவாக்கத்துல இருக்கார். ‘

‘ஆஹாங் ?! அப்றம் என்ன பண்னிட்டிருக்கீங்க மேடம் ? உங்க காதலர் உங்ககிட்ட அன்பா நடந்துப்பாரா ? ‘

‘ரெண்டுபேரும் பேசிக்கறதில்லைங்க. ‘

‘ஐயோ, என்னாச்சு ? ‘

‘அவருக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நான் செஞ்சிட்டேன். அதுலேருந்து பேசறதில்லை அவர். ‘

‘அடடா… ரொம்ப வருத்தப்படறீங்களா ? ‘

‘ஆமா சார். ரொம்ப மனசு வலிக்குது. தெரியாம செஞ்சிட்டேன். இந்த ப்ரோக்ராம் மூலமா அவர்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். பிரகாஷ், இனிமே உங்களுக்குப் பிடிக்காத எதையும் செய்யமாட்டேன். ரொம்ப தேங்ஸ் சார். காதல் சடுகுடுலேருந்து ஒரு பாட்டுப் போடுங்க… ‘

மேற்சொன்ன சம்பாஷணைக்குப் பின் ஒரு பாடல் ஒலிக்கிறது.

இந்த அபத்தத்தைக் கேட்டு ரசிக்கும் நேயர் சிகாமணிகள் புல்லரித்துப் போய் விரல் தேயத் தாமும் தொலைபேசியில் முயற்சி செய்யத் தொடங்குகிறார்கள்.

‘கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க ‘ என்று ராகம்பாடி நாளெல்லாம் டப்பாங்குத்துப் பாடல்களால் காற்றை மாசுபடுத்தத் தொடங்கியிருக்கும் இந்தப் பண்பலைப் பரமாத்மாக்கள், ஒரு வகையில் தொலைக்காட்சித் தொடர்தயாரிப்பாளர்களைக் காட்டிலும் கலாசாரத் தீவிரவாதிகளாயிருக்கிறார்கள்.

ஏனெனில் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி நுழையாத பகுதிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பொருளாதார ரீதியில் வளர்ச்சியே காணாத நூற்றுக்கணக்கான கிராமங்களை ஒரு பத்திரிகையாளனாக நேரில் பார்த்திருக்கிறேன்.

கோயமுத்தூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலைகிராமத்துக்கு ஒரு முறை போயிருந்தேன். வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத சுமார் 500 பேரை உள்ளடக்கிய சிறு பிராந்தியம் அது. பள்ளிக்கூட வாசனை அறியாத ஐம்பது குழந்தைகளும் எழுதப்படிக்கத்தெரியாத ஏனைய பெரியவர்களும் நிறைந்த கிராமம்.

அந்த ஆதிவாசி கிராமத்தினரின் ஒரே பொழுதுபோக்கு, டிரான்ஸிஸ்டர்.

ரேடியோவில் என்னென்ன கேட்பீர்கள் என்று கேட்டேன். செய்திகள், விவசாய நிகழ்ச்சிகள் தொடங்கி, திரைப்படப் பாடல்கள்வரை எல்லாவற்றையுமே கேட்கிறவர்களாகவே அவர்கள் இருந்தார்கள். ஓரிருவர் சிரமப்பட்டு சென்னை வானொலியைத் தேடிப்பிடித்து, தென்கச்சி சுவாமிநாதனின் (இன்று ஒரு தகவல்) நிகழ்ச்சியைக் கேட்கிறவர்களாக இருந்தார்கள். கேரள ஒலிபரப்பின் அடிப்படைக் கல்வி நிகழ்ச்சி மூலம் மலையாளம் ஒழுங்காகப் பேசக்கற்றுக்கொண்டோம் என்று பலபேர் சொன்னார்கள்.

இந்த ஆர்வத்தை ஒழுங்குபடுத்தலாமே என்று யோசித்தபடி சென்னை வந்தேன். மறுமுறை அங்கே போகநேர்ந்தபோது நான் நினைத்தை ஒரு ஆதிவாசி இளைஞரே செயல்படுத்தத் தொடங்கியிருந்தார். வயதுவந்தோர் கல்வித் துறை ஏதோ உதவியிருக்கிறது. அவர்களுக்குப் பெரிய எழுத்துப் பாடப்புத்தகங்களும் ஒரு கரும்பலகையும் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியரும் கிடைத்திருந்தார். அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ரேடியோ க்ளப் மாதிரி ஒரு அமைப்பை உண்டாக்கி, ஸ்பீக்கரில் வானொலி நிகழ்ச்சிகளையும் சைட் டிஷ்ஷாகக் கொஞ்சம் கல்வியும் சேர்த்துப் புகட்டத் தொடங்கியிருந்தார்கள்; பார்ப்பதற்கே சந்தோஷமாக இருந்தது.

இப்போது அந்த கிராமம் நினைவுக்கு வருகிறது. அவர்கள் நிச்சயம் சென்னை வானொலி அல்லது கோவை வானொலியின் உருப்படியான நிகழ்ச்சிகளை இன்னும் கேட்டுக்கொண்டிருப்பார்களா தெரியவில்லை.

கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க என்று நாள் முழுக்க அலறும் நாலாந்தரத் தமிழ் சினிமாப் பாடல்களில் ஐக்கியமாகியிருக்கக்கூடும். தனியார் ரேடியோக்கள் என்பதால் வெறும் சினிமாப் பாடல்களைக்கூட கொஞ்சம் ஜிகினா சேர்த்து ரசிக்கும்விதமான பேக்கேஜில் ஒலிபரப்புகிறார்கள். நேயர்களுடன் நேரடியாகப் பேசுவதில் பல நுணுக்கங்கள் கடைபிடிக்கிறார்கள்.

ஏழெட்டுப் பிறவிகளில் தொடர்ந்து நண்பர்களாக இருந்தவர்கள் மாதிரி அப்படியொரு அன்னியோன்னியத்தை, பேசும் முதல் சொல்லிலேயே காண்பித்துவிடுகிறார்கள். மேலும் விருப்பமான பாடல்கள். திரைக்கு வந்திருக்கும் பாடல்கள். வரப்போகிற பாடல்கள். காதல் பாடல்கள். க்ளாசிக் பாடல்கள். சோகப் பாடல்கள். பழைய பாடல்கள். புதிய பாடல்கள். நடுவாந்தரப் பாடல்கள். இளைய ராஜா ஹிட்ஸ். ரகுமான் ஹிட்ஸ். தேவா ஹிட்ஸ். கே.பி. சுந்தராம்பாள் ஹிட்ஸ்.

இதுவும் திகட்டிப் போகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வேறு ஒரு சாத்தான் வந்து தொலைக்குமே ?

பாடல்களைத்தவிர ரேடியோவில் ஒலிபரப்ப வேறு எதற்கும் தகுதி கிடையாது என்று இவர்கள் எதனைக்கொண்டு முடிவுக்கு வந்தார்கள் என்று கண்டுபிடிக்கவேண்டும். அல்லது பாடல்கள் தவிர வேறு எதையும் யாரும் கேட்பதில்லை என்று இவர்களுக்கு யார் சொன்னது என்றாவது தெரியவேண்டும்.

தமிழர்களைப் பொறுத்த அளவில், டெக்னாலஜியை நாரடிப்பதில் டிவிக்கு நிகரில்லை என்று இனிமேல் சொல்லமுடியாது. ரேடியோ எஃப்.எம். முன்னாடி வந்துவிட்டது!

(வெளிவரவிருக்கும் ‘154 கிலோபைட் ‘ கட்டுரைத் தொகுதியிலிருந்து.)

writerpara@yahoo.com

Series Navigation

பா. ராகவன்

பா. ராகவன்