அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

கவியோகி வேதம்


காந்திஜி!! சத்தியத்தின் கனலுருவாய்ப் பூமியிலே

சாந்தமுடன் இறங்கிவந்த சன்மார்க்க தூதுவர்!

..

போர்பந்தர் தந்தஅமுதம்!புண்ணியத்தின் மறுஉருவம்!

கார்முகிலாய் ‘அகிம்சையினை ‘த் திரளச் செய்தே,

..

பாரத நாட்டின் பலகோடி மக்களையும்

சாரதிபோல் இணைத்தே தேரோட்டிய புதுக்கண்ணன்!

..

ஆசைகள்,வீண்பயங்கள்,ஆங்கிிலேய அக்கிரமங்கள்,

பாசியைப்போல் மக்களையே பாழாக்கிப் போர்த்துகையில்,

..

பாசங்கள் அனைத்தையுமே பாலகராய் மாற்றிவிட்டுக்

கூசும்விரத ஒளியாலே கூத்தாட வைத்தசித்தன்!

..

குஜராத்தின் குற்றாலம்! குனியாத தேவகுரு!

நிஜ-அக்னி! அருட்சாரல்! நிர்மலன்!வைராக்யன்!

..

அந்தநாள் வந்திடாதோ ?காந்திஜி சலவைசெய்த

அந்த ‘நாளே ‘ வந்திடாதோ ? அகிம்சையிலே அரசியலைக்

..

கலந்துநின்று,சத்தியத்தைக் கண்போலப் பாதுகாத்து,

வலம்வந்த வன்முறையை அன்பாலே வளைத்துவிட்ட,

..

அந்தநாளும் வந்திடாதோ ? அடிமனதில் இந்துமுஸ்லிம்,

வந்தஒரு பூந்தியைப்போல் வேற்றுமையை உண்ணுகையில்,

..

இனிப்பில்லை இதுநோய்!எனஅறிக்கை விட்டுநின்று,

தனியாளாய் ‘உண்ணாநோன் பென்னும் ‘மருந்து ‘(உ)ட்கொண்டு,

..

கலவரத்தை முறியடித்த,ஒற்றுமையாம் கனிகொய்த

நலம்விளைத்த காந்திஜியின் நன்னாளும் வந்திடாதோ ?

..

இன்று,

நெல்லையிலே கலகம்வந்தால் தில்லியிலும் பலசண்டை!

எல்லையிலே சூடுவந்தால் யார்யாரோ ஆதரிப்பு!

..

கல்லூரி முடித்தவனே காசுக்காய் ஏங்குகையில்,

எல்லாப் பாடத்திலும் பள்ளியிலே தோற்றவன்(இன்று)

..

அரசியல்வாதி யானாலோ ஐந்துயில்லம் கட்டுகிறான்!

தருமத்தைக் கூறுகட்டித் தலைமுடிச்சில் வைக்கின்றான்!

..

காகத்தின் கூட்டினிலே முட்டைவைக்கும் குயில்போலே

வேகமாய் ஓட்டுயிட்டோர் வீடு,பொருளில் கைவைத்தே,

..

காந்தியென்றால் எதிரிபோலக் கண்விழித்து மிரட்டுகின்றான்!

வாந்திவரும் என்கின்றான் ‘வளர்!தருமம் ‘ என்றுசொன்னால்:

..

கிரீடம்ஒன்று யிருப்பதனால் கத்தரிக்காய் இராசாவா ?

தரிக்கின்ற துண்(டு)அதனால் தறுதலையும் படுத்துவதா ?

..

செயிலிருப்போர் அனைவரையும் விடுதலை செய்தால்தான்

செயிலிருந்து யான்போவேன் என்றுசொன்ன காந்திஎங்கே ?

..

ஊழல்பல செய்துவிட்டு கைதுசெய்தால் ஒருசிரிப்பைத்

தாழம்பூ போலுதிர்க்கும் இன்றைத் தடியரெங்கே ?

..

லார்ட்யிர்வின் நின்றிருக்க காந்திஜி உட்கார்ந்து

வார்த்தை உதிர்த்துநின்ற வக்கணை இன்றிங்கே ?

..

எட்டுமுழ வேட்டிக்கிணை எவ்வுலகம் கண்டது ?

அட்டியின்றித் திறந்தமார்பு அவனியெல்லாம் ஆண்டதுவே ?

..

காந்திசொன்னார் என்பதற்காய் கள்கடைகள் மூடியதே!

சாந்திவர வேண்டும் என்பதற்காய் விரதம்கண்ட

..

மகானின் ஆயுதமின்று கேலியாய் மாறிற்றே!

தகாத செயலுக்கும் கடைவிரித்தார்(உண்ணா) விரதமென்று!

..

ஆடுகள் நனையுதென்று நரி-வெளியில் அழுகிறது!

மாடு-அவர்தம் வீட்டுக்குள் விருந்(து)என மாள்கிறது!

..

மக்களின் தவறுக்காய் மகான்தண் டனையேற்றார்;

மகன்கொலை செய்தாலும் மறுக்கும் இன்றைப் பிரபலங்கள்!!

..

காந்திசொன்னார் என்றுநகை கழற்றிநன் கொடைதந்தார்;(அன்று)

ஏந்துகிறார் !மிரட்டுகிறார்! இன்றுஎதற்கோ வசூல் ‘என்று!

..

காந்தி ‘படம் போட்டாலே பழங்-கடைக்கு வரும்நூல்கள்;

சீந்துபவர் யாரென்று வணிகர்சொலும் இன்னாளில்,

..

காந்தியின்நாள் வரும்என்றே கனவுதான் காண்கிறேன்யான்!

பூந்திக்கொட்டை மரத்தில் பொன்விளைச்சல் நடந்திடுமோ ?

..

நோயினால் தலைமொட்டை ஆனபின்பு தைலம்விற்கும்

வாயைநம்பி காசுதந்தே வாங்க,என்ன முட்டாளாநான் ?

..

செகப்புரட்டல் காலமிது; என்றிப்போ தெளிந்ததனால்

வகைவகையாய் சொல்லடுக்கி மகானிருந்த நாளுமிப்போ

..

வந்திடாதோ எனும்கவியை வாபஸ் வாங்குகின்றேன்!

சந்தனத்தில் வீடுகட்டும் சாகசம்யான் செய்யமாட்டேன்!(ஆனால்)

..

காந்திவந்த திசைநோக்கிக் கைகூப்பித் தொழுதிடுவேன்!

காந்திபாத மண்ணைவைத்துக் கடும்பூசை செய்திடுவேன்!

(கவியோகி வேதம்)
sakthஇa@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்