வாழ்க்கையும் கனவுகளும்
Published August 2, 2003 • By
புகாரி
புகாரி, கனடா

என்றுமே இணையாமல்
இணையப் போகிறோம் என்று
வேகமாய் ஓடிக் கொண்டிருக்கும்
தண்டவாளங்களாகத்தான்
இந்த
வாழ்க்கையும் கனவுகளும்
எப்போதும்
முகம் காட்டுகின்றன !
O
மனிதனின்
மகா சக்தியின் முன்
இது எப்படி
உண்மையாக முடியும் ?
மனக் கனவுகள்
மெய்ப்பட்ட போதெல்லாம்…
புதிய கனவுகள்
பொன் மின்னலாய்ப் புறப்பட்டு…
வென்ற கனவுகளை
வர்ணங்களில்லா
வெற்று வாழ்க்கையாக்கி…
மீண்டும் மீண்டும்
அந்த
இணையாத் தண்டவாளங்களாய்
வாழ்க்கையோடு
வம்பிழுத்துக்கொண்டு
ஓட… ஓட….
அடடா…
அந்தத் தத்துவம்
எனக்குப் புரிந்துவிட்டது
நிறைவேறியது என்று
இந்த
நெஞ்சு அமைதி கொண்டால்…
புதிய கனவுகளும் இல்லை
எனக்கு
வாழ்க்கையும் இல்லை !
*
புகாரி, கனடா
buhari@rogers.com