யாதெனின்…யாதெனின்

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

T V ராதாகிருஷ்ணன்


என் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக்
கொண்டிருந்த போது..இன்டெர்காம் ஒலித்தது.

‘கொஞ்சம் உள்ளே வா..’ என்றார் ஆசிரியர்.

நான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு..

நான்..கிருஷ்ணன்..ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்த போதே ..அந்த
வாரப்பத்திரிகையின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.பின்
படிப்பை முடித்ததும்..உதவி ஆசிரியர் வேலையும்..அங்கேயே கிடைத்தது..

ஆசிரியர் அறையை அடைந்ததும்..கதவை லேசாக தட்டினேன்..

‘வா..கிருஷ்ணா..’ என்றார் ஆசிரியர். சென்றேன்..

‘உட்கார்..’என்றவர் .அன்றைய தினசரி ஒன்றை எடுத்துப் போட்டு..அவர்
கோடிட்டு இருந்த செய்தியைச் சுட்டிக்காட்டி ..’படித்தாயா?’ என்றார்.

ஏற்கனவே படித்த செய்தி..இருந்தாலும்..அவர் சொன்னார் என்பதற்காக மீண்டும்
படித்தேன்..

தமிழக வீரர் மரணம்

என்ற கொட்டை எழுத்துக்களில் போட்டு..பின்..

தனசேகர் என்னும் ராணுவ வீரர் ஒருவர்..பாகிஸ்தானுடன்..திடீரென எல்லையில்
ஏற்பட்ட போரில்..தன் தீரத்தைக் காட்டி..அவர்களை புறமுதுகிட்டு ஓட
வைத்ததாகவும்..அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ..சிலரை சுட்டு
வீழ்த்தியதாகவும்..பின் பாகிஸ்தானின் எதிர் குண்டு வீச்சில்
இறந்ததாகவும்…குறிப்பிட்டிருந்தது.

மேலும்..அவ்வீரன்..தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூங்குளம் கிராமத்தைச்
சேர்ந்தவன் என்றும்..அங்கு அவரது தந்தை இருப்பதாகவும்
குறிப்பிட்டிருந்தது.

‘கிருஷ்ணா..உடனே..புறப்படு..அவர் உடல் அடக்கத்தில்
கலந்துக்கொள்..முடிந்தால்..அவர் தந்தையிடம் ஒரு பேட்டி எடு’ என்றார்
ஆசிரியர்.

என் சக ஃபோட்டோகிராபர் மணியனுடன் இரவே கிளம்பினேன்.
*** *** *** ****

பூங்குளம்..

பிரதான சாலையில்..பஸ்ஸிலிருந்து இறங்கினோம்.உள்ளே ஒரு கிலோமீட்டர்
நடக்க வேண்டும் என்றார்கள்.பாதையின் இரு பக்கங்களிலும் வாழைத்
தோப்பு.கிழக்கே பார்த்த சிவன் கோவில் ஒன்று.சற்று
வடக்குப் புறம் திரும்பியது சந்து..மொத்தம் ஊரே 100 வீடுகள் தான்
இருக்கும்.அதற்கு அப்பால்..வயல்வெளிகள்…பச்சை ஆடை அணிந்த பருவம் வந்த
கன்னிப் பெண்கள் கூட்டம் போல் ..அவர்கள் கலகல சிரிப்புப் போல காற்றில்
சலசல என சப்தத்துடன் ஆடி மகிழ்ந்தன..அறுவடைக்குத் தயாராய் இருந்த
நெல்மணிகள்.எவ்வளவு பேரின் பசியைத் தீர்க்கும் பாக்கியம் பெற்றவை அவை?

கிராமத்தின் அழகில் மனம் பறிகொடுத்தபடியே..அங்கு கில்லி விளையாடும்
சிறுவர்களை பார்த்தோம்.தமிழக
ஆட்டங்களான..பம்பரம்,கோலி,கிளித்தட்டு,கில்லி..ஆகியவை இறந்துவிட்ட
பெருநகரங்களையும் மனம் ஒரு நிமிடம் நினைத்தது. …

ஒரு சிறுவனைக் கூப்பிட்டு..’தம்பி..பட்டாளத்துக்கு
போனாரே..தனசேகர்..அவர் வீடு எது?’ என்றேன்.

பையன்…ஊர் எல்லையில் இருந்த ஒரு பனை ஓலை வேய்ந்த குடிசையை…கை காட்டினான்.

அங்கு சென்றவன்..’ஐயா..ஐயா..’ எனக் குரல் கொடுக்க…

வயதான ஒருவர்..நரைத்த தாடி,மீசையுடன்..வெளியே வந்து..தன் இரு
கைகளையும்..கண்களுக்கு மேல்..மறைத்து..’யாரு’ என்றார்.

‘ஐயா..நாங்க..மதராஸ்ல இருந்து வரோம்..உங்க பையன்..நாட்டுக்கு,குறிப்பா
தமிழ்நாட்டுக்கு..அதுவும்..இந்த கிராமத்திற்கு பெருமையைச்
சேர்த்துட்டார்.அவரது சேவையை நாங்க பாராட்டுறோம்..அவரோட உடல் நாளைக்கு
வரப்போறதா..கேள்விப்பட்டோம்..அதுக்கு மரியாதை செலுத்த
வந்திருக்கோம்.உங்க மகன் பற்றி..நீங்க எதாவது சொல்ல விரும்பினா
சொல்லுங்க..எங்க பத்திரிகைல அதைச் போடறோம்’ என்றேன்.

‘என்னத்த சொல்றது..தம்பி..’ என்றபடியே ஆரம்பித்தார் அவர்.

‘நாங்க தலித்துங்க..தம்பி..தீண்டத்தகாதவங்க..இந்த பையன் தனசேகரை பெத்துப்
போட்டுட்டு..என் சம்சாரம் போய் சேர்ந்துட்டா..அப்பறம்..வேற கல்யாணம்
கட்டிக்காம..என் பையனை நானே வளத்தேன்.நாம தான் படிக்கலை..நம்ம பையனாவது
படிக்கட்டும்னு..நாயா உழைச்சேன்.தம்பி..அவன் படிக்கறப்ப..வாத்தி..இந்த
கிளாஸ்ல தாழ்ந்த சாதி யார்னு கேப்பாராம்.கூனிக் குறுகி இவன் எழுந்து
நிப்பானாம்.இவன் சாதி என்னென்னு தெரிஞ்சதும்..இவன் ஃபிரண்ட்ஸ்கூட இவன்
கூட பேசறதில்லையாம்.

ஒரு நா..இவன் எம்.சி.ஆரோட..ஒரு தாய் மக்கள் நாமென்போம் ங்கற பாட்டை
பாடிட்டு வரப்பு மேல வந்தான்.அப்ப..எதுர வந்த பஞ்சாயத்து தலைவர்..உசந்த
சாதி..ஆளு..அவருக்கு வழிவிட வரப்புல ஓரமா ஒதுங்கினான் இவன்.உடனே அவர்
இவன் கன்னத்தில பளார் ன்னு அறைவிட்டு..ஏண்டா..கீழ் சாதி நாயே..நான்
வர்றேன் இல்ல..நீ வயல்ல இறங்கி வழி விடறதை விட்டுட்டு..வரப்புலேயே
ஒதுங்கி நிக்கறாயா..நான் உன்னை இடிச்சுக்கிட்டுப் போகணுமா?ன்னாராம்.
ஏன்..தம்பி..இவரு பளார்னு அறைஞ்சாரே..அப்பமட்டும் அவர் கை எங்க மேல
படலியா?

அவன் அப்படியே..பல அவமானத்தை தாங்கிகிட்டு வளந்தான்.எங்க ஊரு
டீக்கடையிலே..இன்னி வரை இரட்டை டம்ளர் தான்.அப்போ..தலைவரை சேர்ந்தவங்க
எல்லாம்..அதை எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தாங்க.

அவங்களுக்கு..பந்தல் போட்டு கொடுத்துட்டு..என்னோட மவனும்..அவங்களோட
ஓரமா..உட்காந்து..உண்ணாவிரதம் இருந்தான்.

சாயரட்சை..உண்ணாவிரதம் முடிஞ்சதும்..அந்த கட்சித் தலைவரு வந்து பழ சூசு
குடுத்து..விரதத்தை முடிச்சுவைச்சார்.கடைசியா மிச்சமிருந்த சூசை இவன்
சாப்பிட்டிருக்கான்.அப்போ முதுகுல பலமா ஒரு உத விழுந்ததாம்.’ ஏண்டா
……பயலே..உனக்கும் சூசு கேக்குதான்னு தலைவர் உதச்சாரு.

அன்னி ராப்பூரா இவன் தூங்கல..அழுதுகிட்டே இருந்தான்.காலைல
ஆளைக்காணும்.எங்கெங்கோ தேடினேன். ஊர் எல்லைல இருக்கற குளத்துல போய்
பார்த்தேன்…முதக்கறானான்னு..ம்…காணும்..எங்க போனான்னு
தெரியல..தவிச்சுப்போயிட்டேன் தம்பி.

கொஞ்ச நா கழிஞ்சு..ஒரு கடுதாசு வந்தது..அதுல..தான் பட்டாளத்துல
சேர்ந்துட்டதாயும்..கவலைப்படாதேன்னும் எழுதியிருந்தான்.

அவன் சாகல..எங்கனாச்சும் நல்லா இருந்தா சரின்னு வுட்டுட்டேன்.மனசை
தேத்திக்கிட்டேன்.’

இந்த இடத்தில்..அடக்க முடியாது அழ ஆரம்பித்தார் பெரியவர்..அவரை தேற்ற எண்ணி…

‘என்ன ஜனங்க இவங்க..நாயைக்கூட தொட்டு..கொஞ்சி விளையாடறவங்க..மனுஷனைத்
தொடக்கூடாதாம்’ என்றேன்..

அதற்கு..அவர்..’அந்த நாயைக்கூட நல்ல உயர்ந்தசாதி நாயா பார்த்துத்தானே
தம்பி வாங்கறாங்க’ என்றார்.

அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க..என்றார் உடன் இருந்த புகைப்படக்காரர்.

‘அப்பறம் என்ன தம்பி..ராணுவ ஆபீசில இருந்து..நேத்து ஒரு தந்தி
வந்துது..அதுல..நம்ம நாட்டு எல்லைல..பாகிஸ்தானோடு நடந்த போர்ல..இவன்
அவக சில பேரை கொன்னானாம்.இவனையும் கொன்னுட்டாங்களாம்.அப்படின்னு சேதி
இருந்தது.

தம்பி மனசுல..துக்கம் தாங்கல..ஆனாலும்..என் பையன் நாட்டுக்காக
செத்திருக்கான்னு ஒரு சந்தோசம்..

சேதி கேட்டு..எந்த தலைவர்..சூசு சாப்புடும்போது உதச்சாரோ..அவரே..காலைல
வந்து..அந்த மாவீரனை புள்ளையா பெத்தயேன்னு பாராட்டி..சால்வை
போத்தினார்.ஃபோட்டோ கூட என்னோட எடுத்துக்கிட்டார்.எம் பையன்
செத்து..அவனுக்கும்…எனக்கும்..என் சாதி மக்களுக்கும் பெருமை வாங்கி
தந்துட்டான்.எனக்கு அது போதும் தம்பி’

அதற்குள்..வெளியே..கூச்சல் கேட்க..மூவரும் வெளியே வந்தோம்..

ஒரு ஆம்புலன்ஸ்..ராணுவ ஜீப் பின் தொடர வந்தது..தவிர..உடன் கட்சித்
தலைவர் காரும்..வேறு சில கார்களும் வந்தன.

குடிசைமுன் நின்ற ஆம்புலன்ஸிலிருந்து..தனசேகர் உடலை ராணுவ வீரர்கள்
இறக்கினர்..அவனது உடைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டன.

பின் ஒவ்வொரு..தலைவராக வந்து மாலை.மலர் வளையம் என மரியாதை செலுத்தினர்.

அன்றிரவு முழுதும் ஊரே உறங்கவில்லை.

அடுத்த நாள் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.தலைவர் உட்பட
அனைத்து தர மக்களும்..தனசேகரின் கால்களைத் தொட்டு வணங்கினர்.

குண்டுகள் வெடித்து..மரியாதை செய்யப்பட..உடல் தகனம்
செய்யப்பட்டது..தலைவர்..சந்தனக்கட்டைகளை எடுத்து..சிதையில் இட்டார்.

அந்த நேரம் வரை அழாத பெரியவர்..திடீரென..குலுங்க..குலுங்க..’டேய்..நீ
சாதிச்சுட்டேடா..சாதிச்சுட்டே..’ என அழ ஆரம்பித்தார்.

இப்போது எனக்கு ஒன்று புரியவில்லை…

உடலில் உயிர் இருக்கும் போது மதிக்காதவர்கள்..உயிர் பிரிந்ததும்…….ஏன்?

ஆமாம்..இவர்கள் உயர்ந்த ஜாதி,கீழ் ஜாதின்னு எதை வைச்சு சொல்றாங்க…

உயிரைவைத்தா..உடலை வைத்தா..புகழை வைத்தா..பணத்தை வைத்தா?

நாங்கள் கிளம்பினோம்..அதற்கு முன்..ஃபோடோகிராபரிடம்..’மணி..அந்தப்
பெரியவர் அழும் போது தலைவர் கட்டிக்கொண்டு ஃபோடோ எடுக்கச்
சோன்னாரே..அதை சரியா எடுத்தியா…அடுத்த வாரம் நம்ம ஆசிரியர் அதைத்தான்
அட்டைப்படமா போடுவார்’ என்றேன்..மன இறுக்கத்துடன்.

Series Navigation