ஆனந்தக் கூண்டு

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

ஸ்ரீஜா வெங்கடேஷ்



பரபரவெனக் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள் மீனா. நின்று நிதானமாக பேரம் பேசி பொறுக்கி வாங்க அவளுக்கு நேரம் இருந்ததில்லை. வீட்டில் வேலைகள் தலைக்கு மேல் குவிந்து கிடக்கிறது. புவனாவுக்குக் கொடுக்கக்கூடிய காய்களாகப் பார்த்துப் பார்த்து வாங்கினாள். பிள்ளை பெற்றவர்களுக்கு என்று ஒரு சில காய்கள் இருக்கின்றன. அவற்றைக் கொடுத்தால் நல்லது என்று அம்மா சொல்லியிருந்தாள். புடலங்காய் , சுரைக்காய் , பீர்க்கங்காய் என வாங்கி பையை நிரப்பிக் கொண்டிருந்தாள். அடேயப்பா! காய் ஒவ்வொன்றும் என்ன விலை விற்கிறது? கால் கிலோ பத்து ரூபாய்க்குக் குறைந்து எந்தக் காயும் வாங்க முடியாது.அம்மா , அப்பா , இவள் , அண்ணன் பாபு , அக்கா புவனா என ஐந்து பேர் சாப்பிடும் குடும்பத்திற்கு வெறும் கால் கிலோ எப்படிப் போதும்? இதில் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டு ஆயிரம் முறை கணக்குக் கேட்பார் அப்பா. அவரும் தான் என்ன செய்வார் பாவம்? அவரது பென்ஷனிலும் அண்ணனின் சொற்ப சம்பளத்திலும் குடும்பம் ஓட வேண்டும். அம்மாவின் மருந்துச் செலவு வேறு! இப்படியெல்லாம் அவள் யோசிப்பதையும் , அவளது பொறுப்புக்களையும் வைத்து அவளுக்கு எப்படியும் நாற்பது வயதாகி இருக்கும் என்ற தவறான முடிவுக்கு யாரும் வர வேண்டாம். அவள் இருபத்தி நான்கே வயதான பருவ மங்கை.இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்று மேற்கொண்டு முது கலை படிக்கும் ஆசையோடிருந்தவளின் கனவுகள் கலைந்தன. காரணம் அம்மாவின் உடல் நிலை.இன்ன கோளாறு என்று கண்டு பிடிப்பதற்கே ஆறு மாதமாகியது. கடைசியில் இருதயத்தில் சிறு துளை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த மருத்துவச் செலவினால் அப்பாவின் சேமிப்பு முழுவதும் கரைந்தது. மீனா மேற்கொண்டு படிக்க முடியாமல் போனதற்குக் காரணம் பொருளாதாரம் மட்டுமல்ல . வீட்டுப் பொறுப்பை இவள் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் சேர்ந்து கொண்டது. அம்மா என்னதான் உடல்நிலை தேறி வந்தாலும் கடினமான் வீட்டு வேலை எதுவும் குறைந்தது ஆறு மாததிற்குச் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். அக்கா புவனா கல்யாணமாகி புகுந்த வீட்டிலிருந்தாள்.அண்ணன் அப்போதுதான் அம்பத்தூரில் வேலைக்குக்ச் சேர்ந்திருந்தான்.அப்பாவோ மேல் வருமானத்திற்காக ஒரு கடையில் கணக்கு எழுதப் போய்க்கொண்டிருந்தார்.அதனால் பொறுப்பு முழுவதும் குருவி தலையில் பனங்காயாக மீனாவின் தலையில் விழுந்தது. அதையெல்லாம் கூட சமாளித்து விட்டாள் மீனா .ஆனால் அக்கா புவனா பிரசவத்துக்கு வந்தபோது தான் பாவம் திணறி விட்டாள்.

புவனாவுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுத்தார்கள் . தையல் போட்டிருக்கிறது என்று அவள் எழுந்து நடக்கவே மறுத்து விட்டாள். பால் கொடுக்கக் கூட குழந்தையை மீனாதான் தூக்கிக் கொடுக்க வேண்டும். அது மட்டுமா? வயிற்றில் தையல் போட்ட இடத்தில் தண்ணீர் படாமல் பாலிதீனைச் சுற்றி அவளைக் குளிக்க வைக்க வேண்டும் , தலைக்கு சாம்பிராணி போட்டு உலர வைக்க வேண்டும் , பத்தியமாக சமைத்துப் போட வேண்டும் இப்படிப் பல வேலைகள். மதியம் புவனா தூங்க வேண்டும் அப்போது தான் உடம்பு தேறும் என்று அம்மா கண்டித்துச் சொல்லி விட்டாள். அதன் படி அவள் தூங்கும் போது குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் கூடுதல் பொறுப்பும் சேர்ந்து கொண்டது மீனாவுக்கு. எப்போதும் வேலை. சமையல் , துணி துவைத்தல் , வீடு பெருக்குதல் , பாத்திரம் தேய்த்தல் சாமான் வாங்கி வருதல் என ஓடிக் கொண்டேயிருந்ததால் தன்னைப் பற்றிச் சிந்திக்கவே மறந்து போனாள் மீனா. கலகலப்பான சுபாவம் மாறி எந்நேரமும் கடுகடுவென்றிருந்தாள். அம்மா அவளோடு பேசுவதையே குறைத்துக் கொண்டாள்.அவளைப் பார்க்க அவள் கல்லூரித் தோழி சுமதி எப்போதாவது வருவாள். அப்போது பழைய நாட்களைப் பற்றிப் பேசுவது ஒன்றுதான் மீனாவுக்கு சந்தோஷத்தைத் தரக்கூடிய விஷயம்.

அன்று கையில் கொஞ்சம் காசு இருந்தது. “உன் செலவுக்கு வெச்சுக்கோ” என்று அண்ணன் தந்த நூறு ரூபாய். மீனாவுக்கு ஆவின் ஃப்ளேவர்ட் மில்க் மிகவும் பிடிக்கும். அதைக் குடிக்கலாம் , இதமாக இருக்கும் என்றெண்ணி ஒரு ஆவின் பார்லரில் ஒதுங்கினாள். பக்கத்தில் ஒரு குளிர்பானக் கடை. அங்கே ஒரு கோக்கை ஸ்டைலாக உறிஞ்சிக் கொண்டிருந்தவனை அடையாளம் தெரிந்தது மீனாவுக்கு. அவன் தினகர். கல்லூரியில் இவள் மனதை பொங்கியெழச் செய்தவன். இப்போதும் அவனைப் பார்த்தவுடன் நெஞ்சு விம்மியது. தொண்டை அடைத்து பானத்தைக் குடிக்கவே முடியவில்லை. ஆனால் அவன் இவள் இருந்த பக்கமே திரும்பாமல் அருகில் இருந்தவனுடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தான். அருகிலிருந்தவன் தான் மீனா தினகரையே பார்ப்பதை கவனித்து விட்டு அவனிடம் சொன்னான். முதலில் அவனுக்கு மீனாவை அடையாளம் தெரியவில்லை. “நீ .. நீங்க மீனா தானே?” என்றான் சந்தேகத்தோடு. இவள் வார்த்தை ஒன்றும் வராமல் வெறுமே தலையாட்டினாள். “என்ன மீனா இது இப்படி மாறிப் போயிட்டே? காலேஜ் படிக்கும் போது உன்னை பியூட்டி குயின்னுதான் நாங்க கூப்பிடுவோம். இப்போ இப்படி ஒட்டி உலர்ந்து , கண்ணுக்குக் கீழ கறுப்பு விழுந்து…” . கேட்கக் கேட்க தன்னிரக்கத்தால் அழுகையே வந்து விடும் போலாகி விட்டது மீனாவுக்கு. சமாளித்துக் கொண்டு அவனைப் பற்றி விசாரித்தாள். அவன் வேலைக்குப் போகாமல் ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறானாம்.முதல் போட்ட ஒரே வருடத்தில் அதிக உழைப்பும் தேவையில்லாத மூன்று மடங்கு லாபம் வருகிற மாதிரி ஒரு தொழிலைத் தேடிக் கொண்டிருக்கிறானாம். அது கிடைத்த உடன் பெரிய தொழிலதிபராகி அம்பானியை மிஞ்சி விடுவானாம். அவனுக்கென்ன? அவனுடைய அப்பா பெரிய அரசு அதிகாரி. கேட்ட போது பணம் கிடைக்கும். தினகர் இவளைப் பற்றிக் கேட்டான். முடிந்தவரை சுருக்கமாகச் சொன்னாள். இவளுக்காகப் பரிதாபப் பட்டான். அவள் விரும்பினால் தினமும் அவளை அந்த இடத்தில் சந்திப்பதாகக் கூறினான். மீனாவுக்கு உள்ளம் துள்ளியது. தினமும் அவனோடு பேசினால் என்ன? தனக்கும் ஒரு மாற்றமாக இருக்கும். அப்படியே ஏதாவது வேலை கிடைத்தால் கூட நல்லது தான். பலவாறு சிந்திதபடி வீடு வந்தாள்.

முன்பெல்லாம் பெரும் சுமையாகத் தோன்றிய வீட்டு வேலைகள் இப்போது இனித்தன. எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தானே என்று மனம் சமாதானம் சொல்லியது.”கொஞ்ச நாளைக்கா? அப்புறம் என்ன ஆகும்?” என்ற மூளையின் கேள்விக்கு நெஞ்சு வெட்கத்தில் சிரித்தது. “இதெல்லாம் எங்க போய் முடியுமோ?” என்ற மூளையின் எச்சரிக்கைக்கு “எல்லாம் நல்லாதான் முடியும் , எப்பப்பாரு சந்தேகப் படுறதே ஒன் வேலை “என்று நெஞ்சு பதிலளித்தது. மீனாவின் மகிழ்ச்சி இப்போது குடும்பத்தினரையும் தொற்றிக் கொண்டது.சதா கடுகடுவென்றிருந்தவள் மாறி அம்மாவோடும் , அக்காவோடும் சந்தோஷமாகப் பேசினாள். அவர்களுக்கும் மீனாவின் இந்த மாற்றம் ஆச்சரியம் தான். ஆபரேஷனாகி ஆறு மாதம் முடிந்து போனதால் மெள்ள மெள்ள அம்மா கூட மாட ஒத்தாசை செய்ய ஆரம்பித்தாள்.அக்காவும் நன்கு தேறி தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளத் துவங்கினாள். நாட்கள் பறந்தோடின. தினமும் மீனாவும் , தினகரும் சந்திதுப் பேசுவது தவறவேயில்லை. பின்னே அது தானே அவளுக்கு டானிக். அவர்கள் பழக்கம் காதலாக மாறி ஒருவர் இன்றி ஒருவர் இல்லையென்ற நிலையை அடைந்தது. மீனாவைப் பொறுத்த வரை தினகர் ஒரு தேவ தூதன். மீனாவை அவள் வீடு என்ற நரகத்திலிருந்து காப்பாற்ற வந்த தேவன்.அவள் அப்படித்தான் நினைத்திருந்தாள்.தினகரைப் பொறுத்தவரை மீனா ஒரு அழகு தேவதை. ஒரு வேலையும் செய்ய விடாமல் அவளை வெறுமே பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் வேறு ஒன்றும் வேண்டாம் என்று சொல்லுவான். அந்த வார்த்தைகள் மீனாவுக்குக் கரும்பாக இனிக்கும்.

மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு சுமதி மீனாவைப் பார்க்க வந்தாள். ” என்ன மீனா? முகமே தெளிச்சலாயிருக்கு? ஒரே சந்தோஷம் போல” என்று கேட்டாள். அதெல்லாம் ஒன்றுமில்லையென மறுத்து விட்டாள் இவள். பேசிக் கொண்டிருக்கையில் சுமதி ” ஏன் மீனா ஒனக்கு நம்ம அலட்டல் தினகர ஞாபகம் இருக்கா?” என்றாள். மீனாவுக்கு சுருக்கென்றது. காரணம் இரண்டு. ஒன்று தினகரை பற்றிய பேச்சு வந்தது. மற்றொன்று கல்லூரி நாட்களில் தினகரை அலட்டல் என அனைவரும் அழைத்தது. “அதை இப்படி நாம் மறந்தோம்?” என்று மீனா ஆச்சரியப் பட்டாள். இவளின் மௌனத்தைக் கண்டு சுமதியே தொடர்ந்தாள். “ஒனக்குத்தான் தெரியுமே என் அண்ணனும் , அவனும் ஃப்ரெண்ஸுன்னு, எங்க அண்ணன் கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ , அவன் ஒரு ஹோட்டல் தொடங்கப் போறதா சொல்லியிருக்கான்”. மீனாவுக்கு திடுக்கென்றது. இது பற்றி அவன் அவளிடம் எதுவுமே சொல்லவில்லை. கல்யாணத்திற்குப் பிறகு எப்படி அவளை வேலையே செய்ய விடாமல் ராணி மாதிரி வைத்துக் கொள்வான் என்பதைப் பற்றியே அவர்கள் பேச்சு இருந்ததால் இதைப் பற்றிப் பேசவேயில்லை. மீனாவுக்கு வெட்கமாக இருந்தது. இதை பற்றியெல்லாம் கேட்காமல் அவன் பேச்சு தந்த இனிய மயக்கத்தில் இருந்து விட்டோமே என வெட்கினாள். சுமதி பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே போனாள் ” விஷயத்தக் கேளு , அவன் ஒரு கடஞ்செடுத்த சோம்பேறின்னு எல்லாருக்கும் தெரியும் இவன் எப்படி ஹோட்டல் நடத்தப் போறான்னு எங்க அண்ணன் கேட்டதுக்கு , அவனுக்கு சம்பளமே இல்லாம வேலை செய்ய ஒரு ஆள் கெடச்கிருக்காம். வேறே ஒண்ணும் செய்ய வேண்டாம் கழுத்துல ஒரு மஞ்சக் கயத்தக் கட்டுனாப் போதும் , எல்லா வேலையும் அது பாத்துக்கும் , ஏற்கனவே மாடு மாதிரிதான் அது வேலை செய்யுது. புருஷனுக்குச் செஞ்சா என்ன கொறஞ்சா போயிடும்? அப்படிங்கறான் மேலும் பணம் குடுக்க எங்க அப்பா இருக்காரு அப்படீன்னு சொல்றான். எந்தப் பொண்ணு மாட்டியிருக்கோ தெரியல பாவம்!” என்று முகம் தெரியாத அந்தப் பெண்ணுக்காக பரிதாபப் பட்டாள் சுமதி. மீனாவுக்கு ரத்தத்தில் சூடு ஏறியது. நெஞ்சு நிமிடத்திற்கு முன்னூறு முறை அடித்தது. கண்ணீரும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. அங்கேயே உட்கார்திருந்தால் கதறி அழுது விடுவோம் என்று எண்ணி பாத்ரூமுக்குப்போய் கதவைச் சாத்திக் கொண்டு வாய் விட்டு அழுதாள். அவளுக்குக் தான் மீண்டும் உழைக்க வேண்டி வருமே என்பதில் வருத்தமேயில்லை. அவன் தன்னை வேலையே செய்ய விடாமல் கவனித்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி ஏமாற்றியது தான் மனதை ரணமாகக் கீறியது.எத்தனை பொய்கள்?. ஏன் உண்மையைச் சொல்லியிருந்தால் அவளே சந்தோஷமாகச் சம்மதித்திருப்பாளே? நம் வீட்டுக்காக உழைப்பதில் என்ன கேவலம்? அதை விட்டு விட்டு இப்படி பொய் சொல்லி விட்டானே என்று உள்ளம் குமுறியது.

“நம் வீட்டு வேலை செய்வதில் என்ன கேவலம்? என்றாயே? அப்படியானால் இது உன் வீடு இல்லையா? எவனோ ஒருவனுக்காக உழைக்கத் தயாராயிருக்கும் நீ, ஏன் உன் வீட்டாருக்கு உழைப்பதை சுமையாக நினைத்தாய்? உடம்பு சரியில்லாத அம்மாவை ஏன் உன் எதிரியைப் போல் பாவித்தாய்?” மூளை தன் கேள்விகளால் சம்மட்டி அடி அடித்தது. அந்த அடியில் நெஞ்சில் குடும்பத்தினர் மீது இருந்த வெறுப்புக் கோட்டையும் தினகர் மீதிருந்த காதல் கோட்டையும் செங்கல் செங்கல்லாக உதிர்ந்தன. தினகரின் வெளிப்பூச்சில்லாத நிஜ முகம் அவளுக்குத் தெரிந்தது. பகட்டான பேச்சிற்கும் , படாடோபமான அலங்காரத்திற்கும் மயங்கிய தன்னை நினைத்து கேவலமாக இருந்தது. யோசிக்க யோசிக்க கொதிப்படைத்திருந்த நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்தது. தன்னை ஏமாற்ற நினைத்த அவன் இருக்கும் திசையே இனி எட்டிப் பார்ப்பதில்லை என்ன ஆனாலும் சரி “என்ற முடிவுடன் வெளியில் வந்தாள் மீனா.

“என்ன மீனா இவ்ளோ நேரம்? ஒடம்பு சரியில்லையா கண்ணு?” என்ற அம்மாவை பாசத்தோடு பார்த்து “அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா” என்றாள். சுமதி மீண்டும் தினகரை பற்றிய பேச்சைத் தொடராமல் இருக்க வேண்டுமே என்று இருந்தது. சுமதி அதைப் பற்றித் தொடரவில்லை. பதிலாக “ஏண்டி மீனா இவ்ளோ நேரம் உங்கம்மாவும் உங்கக்காவும் ஒன்னப் பத்தி தான் புகழ்ந்து சொல்லிட்டிருந்தாங்க. நீ பாத்துப் பாத்து அவங்களுக்கு வேண்டியதச் செஞ்சியாமே? சிக்கனமா குடும்பத்த நடத்தினியாமே? இதையெல்லாம் எப்ப கத்துக்கிட்டே?” என்றாள். இது வரை அவள் பார்க்காத கோணம் ஒன்று மீனாவுக்கு முதல் முதலாகப் பிடிபட்டது.” கடனுக்குச் செஞ்சதுக்கே இவ்ளோ பாராட்டுறாங்கன்னா மனசார செஞ்சா என்னத் தலையில தூக்கி வெச்சு ஆடுவாங்க இல்லே? அக்காவுக்கும் , அம்மாவுக்கும் செய்ய என்னை விட்டா யாரிருக்கா?” அவளின் சிந்தனை ஓட்டத்தக் கலைத்து சுமதியின் குரல். ” அது மட்டுமா? ஒன்னப் பாத்துட்டு ரொம்பப் பொறுப்பான பொண்ணுன்னு ஒங்க ஒண்ணு விட்ட அத்தை , பேங்குல வேலை பாக்குற அவங்க மகனுக்கு ஒன்னை பொண்ணு கேட்டிருக்காங்களாமே?” என்று அடுக்கிக் கொண்டே போனாள்.கொஞ்ச நாள் முன்புவரை தீயைப் போல தகித்த அந்தச் செய்தி , இப்போது முழு நிலவைப் போலக் குளிர்ந்து மீனாவின் முகத்தில் வெட்கத்தைப் பூசியது.

Series Navigation

ஸ்ரீஜா வெங்கடேஷ்

ஸ்ரீஜா வெங்கடேஷ்