குறும்பா 3
Published July 22, 2002 • By
அனந்த்
அனந்த்

நனவா கனவா ?
கணினியிலே காலமெல்லாம் போக்கிக்
களைப்பொழிக்கக் கவிதைகொஞ்சம் ஆக்கிப்
….. பணிமுடிந்து ஓய்வெடுக்கப்
….. பழையவீட்டுப் பாய்படுக்க
அணிவகுக்கும் எலிகள்என்னை நோக்கி!
****
முகராசி
வாசலிலே வந்தவனைப் பார்த்தேன்
வடிவழகன் பட்டியலில் சேர்த்தேன்
….. பாசிமணி விற்கஅன்று
….. பறந்தவனை நோக்கஇன்று
காசையந்தத் திரைப்படத்தில் வார்த்தேன்!
****
Limerick-ம் குறும்பாவும்
ஆங்கிலத்தில் ‘லிமெரிக் ‘கென்று செய்தான்
அழகுமுண்டு பொருளுமுண்டு மெய்தான்
….. ஆங்கிலாத மோனைநலம்
….. அமையுமெங்கள் மொழியின்பலம்
ஓங்குகுறும் பாவையிங்கு நெய்தான்!
****
ananth@mcmaster.ca