அம்பானியின் கண்கள்

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

ஓம்கார் கோஸ்வாமி


1984 -இல், இந்தியாவின் துணி தொழிற்சாலைகள் பற்றி ஆராய்ந்து சொல்ல அப்போதைய திட்டக்கமிஷனில் இருந்த நிதின் தேசாய் என்னைப் பணித்தார். இந்தியாவில் இருந்த சுமார் 50 மில்களுக்கு – அகமதாபாத், நரோடாவில் இருந்த ரிலயன்ஸ் தொழிற்சாலை உட்பட – சென்று பல நூறு நிபுணர்களைச் சந்தித்தப்பின்னர், துணி கமிஷனர் அலுவலகத்தில் இருந்த ஒரு ஆபீஸர் என்னை, இந்த துணி தொழிற்சாலைகளைப் பற்றி உண்மையிலேயே அறிந்து கொள்ள வேண்டுமா என்று கேட்டார். நான் ஒப்புக்கொண்டேன். ராசிக்பாய் மெஸ்வானி என்ற திருபாய் அம்பானியின் மச்சினரோடு எனக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்தான் ரிலயன்ஸில் நம்பர் 2 ஆள்.

குட்டையாக, தொந்தியுடன், கத்திபோல கூர்மையான அறிவுடனும், தொற்றிக்கொள்ளும் குறுநகையுடனும், ஏராளமான புள்ளிவிவரங்களுடனும், வெள்ளை சபாரி சூட்டுகளின் மீது ஆசையுடனும் இருந்த ராசிக்பாய் என்னுடைய டெக்ஸ்டைல் குருவாக ஆகிவிட்டார். நூல் விற்பனைகள், பவர் லூம், இன்னும் இந்தத் தொழிலில் இருக்கும் ஏராளமான அரசியல்கள் எல்லாவற்றையும் எனக்குக் கற்றுத்தந்தவர் அவர்தான். ஒரு குளிர்காலத்து காலையில் 1984இல் என்னை தன்னுடைய மச்சினரை சந்திக்க அழைத்துச் சென்றார்.

அது ஒரு பெரிய ஆபீஸ் ரூம். திருபாய் அம்பானி நடந்து வந்து கை குலுக்கினார். நானும் அவரும் நேர் எதிரே உட்கார்ந்தோம் சோபாவில். முதல் 20 நிமிடங்களுக்கு, எனக்கு துணி வியாபாரம் பற்றி என்ன தெரியும் என்பதை அறிந்து கொள்வதற்கும், சில பிரச்னைகளில் என் நிலைபாடு என்ன என்பதை அறிந்து கொள்வதற்கும் எண்ணற்ற கேள்விகள் கேட்டார். ஒரு திருப்தியுடன், பிறகு என்னிடம் அவரது திட்டமான பின்னோக்கிய ஒருங்கிணைப்பு (backward integration) விளக்கினார். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் 1984இல் இது பற்றி பேசுகிறோம். ரிலயன்ஸ் என்பது வெறும் விமல் என்ற பிராண்ட் பெயர் கொண்ட நரோடா, படால்கங்காவில் இருக்கும் ஒரு துணி மில் மட்டுமே. கச்சா பெட்ரோல் எண்ணெயை இறக்குமதி செய்து, அதனை எண்ணெயாகவும் நாஃப்தாவாகவும் உடைத்து, இறுதியில் துணியாக மாற்றக்கூடிய ஒரு மாபெரும் பெட்ரோ கெமிகல் ராட்சசனை உருவாக்கும் ஒரு கனவை இங்கே ஒரு மனிதர் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது கனவின் பிரம்மாண்டத்தைப் பார்த்து அசந்துபோய் உட்கார்ந்திருந்தேன்.

இந்த முதல் சந்திப்பில்தான் நான் திருபாயின் கண்களைக் கவனித்தேன். அந்த கரிய, பிரகாசமான எரியும் கண்கள் உங்களை சிறைப்படுத்தி உள்ளே இருக்கும் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் அந்தக் கண்களை நான் மறக்க மாட்டேன். அவரது மனத்தையும் மறக்க இயலாது. திடாரென்று, தன்னுடையை பின்னோக்கு ஒருங்கிணைப்பு திட்டத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போது, நடுவில், திருபாய், ‘அச்சா, தங்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? ‘ என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்திய குடும்பங்களில் இருக்கும் தங்கக் குவியலை உபயோகப்படுத்தி தங்க பாண்டுகளாக மாற்றி, அதன் மூலம் அடிப்படைக் கட்டுமானப் பணிகளைச் செய்வதற்கு ஒரு திட்டத்தைச் சொன்னார். 1984இல், ஒரு பெட்ரோ கெமிகல் ராட்சசனை உருவாக்கும் கனவுக்கு நடுவே, விற்று வாங்கக்கூடிய தங்க பாண்டுகளுக்கான ஒரு சந்தையைப் பற்றியும் ஒரு திட்டம் வைத்திருந்தார்.

பிறகு வந்த வருடங்களில், நான் திருபாயை பல முறை சந்தித்தேன். 1986இல் அவருக்கு வந்த பக்கவாதத்தால், அவரது பேச்சு தடுமாறியது. ஆனால், அவரது மனத்தின் நம்பமுடியாத சக்தியையோ, அவரது கண்ணில் இருந்த பிரகாசத்தையோ அதனால் கொஞ்சமும் குறைக்க முடியவில்லை. நாங்கள் பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். அரசாங்க வரவு செலவுத்திட்டத்தில் இருக்கும் பற்றாக்குறை, அடிப்படைக் கட்டுமானத்துக்கு பணம் சேர்ப்பது, அரசாங்க வேலைகளில் தரம், பல மந்திரிகளைப் பற்றியும், பல தொழிலதிபர்களைப் பற்றியும் கிசுகிசு ஆக இப்படி. இவை அனைத்தும், புன்னகையாலும், சிரிப்பாலும், தொடுகையாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கெட்டவார்த்தைகளாலும் அலங்கரிக்கப்பட்டன. சில வருடங்களுக்கு முன்னர், ஒரு மாலையில், கடற்கரையோரம் உட்கார்ந்திருந்தபோது, திடாரென்று அவர் என்னிடம் கேட்டார். ‘ஓங்கார், இந்தியாவின் மிகப்பெரிய பற்றாக்குறை என்ன ? ‘. வழக்கம்போல, எனக்கு தூக்கிவாரிப்போட்டது. உடனே பதிலும் வந்தது, ‘தண்ணீர் ‘. அப்புறம் முன்னைப்போல, திருபாய், கடல்தண்ணீரை நல்லநீராக்கும் தன்னுடைய மாபெரும் திட்டத்தை கூறினார். அந்த கருத்து மிகவும் எளிமையானது அதே நேரம் ஆச்சரியமானது. வெப்ப மின் நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையில் இருக்கும் திறமையின்மையால், தன்னுடைய பெரும் அளவு வெப்பத்தை வீணாக்குகின்றன. திருபாயின் திட்டம், இந்த காற்றில் வெளியேறி வீணாகும் சக்தியை உபயோகப்படுத்தி கடல்தண்ணீரை நல்ல நீராக மாற்றும் தொழிற்சாலைகளை கடலோரம் எங்கும் அமைப்பது. இது தண்ணீர் உற்பத்தி செய்யும் மற்ற முறைகளை காட்டிலும் மிகவும் விலை மலிவானது. ‘ஆக என்ன பிரச்னை ? ‘ என்று கேட்டேன், ‘நீங்கள் ஏன் இதனைச் செய்யக்கூடாது ? ‘ திருபாயின் பதில், ‘சாலோங் கோ சம்ஜானா சாஹியே. ‘ ‘ உருப்படாதவர்களுக்கு (அரசாங்க அதிகாரிகளுக்கு) ப் புரியவைக்க வேண்டும் ‘ அரசாங்கத்தில் இருப்பவர்களின் அறிவுத்திறம் பற்றிய வெளிப்படையான கருத்து அது.

எப்போதும் பெரிய வாய்ப்புக்களை தேடிக்கொண்டிருக்கும் சுறுசுறுப்பான மூளையைக் கொண்ட இந்த மனிதர். மற்ற தொழிலதிபர்களின் சிந்தனைக்கும் எட்டாத பெரும் திட்டங்களை தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். அடிப்படை பணமுதலீடு, லாபம் போன்றவறரிக் கணக்கிட்டு, தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் – உடல், ஆன்மா, பணம், எல்லாவற்றையும், அந்த திட்டம் வெற்றியடைய அர்ப்பணிக்கும் தைரியம் இருந்தது. முகேஷ், அனில் என்ற இருவரின் தலைமையில் அவரது நம்பிக்குப் பாத்திரமாகவும், எல்லையற்ற திறமை கொண்டதாகவும், அவர் திட்டமிட்டபடியே சரியான நேரத்தில் வேலைகளை முடிப்பதாகவும் அவரிடம் இருந்த குழு அவருக்கு ஒரு வரப்பிரசாதம். அவரது கொள்கை வெகு எளியது. ‘கர்னா ஹை, கர்கே திகானா ஹை ‘(செய்ய வேண்டும், செய்து காண்பிக்க வேண்டும்). இதுதான் ரிலயன்ஸ் கம்பெனியை ஓட்டுகிறது. இது மட்டுமே, ரிலயன்ஸ் கம்பெனியை பெட்ரோலியம், பெட்ரோ கெமிகல், டெலிகாம் என்ற துறைகளில் பெரும் ஆக்கிரமிப்பு செய்ய வழிவகுத்திருக்கிறது.

அதே நேரத்தில், திருபாய், சாதாரண மனித உறவுகளை வெகுவாக மதிக்கக்கூடிய நல்ல மனிதர். 1984இல், நான் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸில் சாதாரண துணை பேராசிரியர். அவர் ஏற்கெனவே புகழ்பெற்ற மாபெரும் தொழிலதிபர் – அது பெருமையா , சிதுமையா என்பது உங்கள் சார்பைப் பொறுத்தது.. இருப்பினும் அவர் என்னிடம் அன்புடனும், அக்கறையுடனுமே பழகினார்.

அவர் எனக்கு சவால் விட்டார். எனது சவாலையும் ஏற்றுக்கொள்ளும் மனத்துடன் இருந்தார். அவர் மேலே நான் கீழே என்பது போல என்னை உணரவைத்ததே இல்லை. அடக்கமுடியாத ஆர்வத்துடன், எதையாவது புதிதாக கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடனும், யாரிடமிருந்து வருகிறது என்று பார்க்காமல் கற்றுக்கொண்டார்.

பல வருடங்களுக்குப் பின்னர், முகேசும் அனிலும், பிஸினஸ் இந்தியாவின் ‘பிஸினஸ்மேன் ஆஃப் த இயர் ‘ (அவ்வருடத்திய சிறந்த தொழில்வல்லுனர்கள்) என்று பாராட்டப்பட்டார்கள். அவரது தந்தை தன் மகன்களது பெருமையில் புல்லரித்துக்கொண்டிருந்தார். நான் முகேஷிடம் அமெரிக்காவில் சமீபத்தில் ரிலயன்ஸ் வெளியிட்டிருக்கும் 100 வருட பாண்டுகளுக்கு எப்படி பணம் கொடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். இப்படிப்பட்ட ஒரு கடனுக்கு எப்படி வியாபாரம் செய்து இதனை நியாயப்படுத்தப்போகிறீர்கள் என்று கேட்டேன். முகேஷின் பதிலை மறக்கவே மாட்டேன். ‘பாஸ், ஒவ்வொரு வருடமும், எந்த வகையிலாவது இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் ரிலயன்ஸிடம் தொடர்பு கொள்ளவேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டும். மற்றதெல்லாம் தானாகவே நடக்கும். ‘ தன்னுடைய சிவப்பு லெதர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, திருபாய் வெகுவேகமாக தலையை ஆட்டினார். என்ன இருந்தாலும், திருபாயின் அசலான, உண்மையான ஆளுமை அது.

இதுதான் மிகப்பெரியதாக கனவு காண்பது என்பது. ஜாம்ஷெட்ஜி டாடா, கன்ஷ்யாம்தாஸ் பிர்லா, வால்சந்த் ஹிராசந்த் போன்றவர்கள் கண்ட கனவு. திருபாய் அம்பானி என்ற பெட்ரோல் பங்க் உதவியாளர் கண்ட கனவு. அத்தோடு கூட, கற்பனை, தைரியம், செய்த வேலையை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம், அப்புறம் நம்மை எப்போதும் விடாத கண்கள். நான் எப்போதும் திருபாயை மறக்க மாட்டேன். இந்தியாவும் மறக்காது.

***

அவுட்லுக் பத்திரிக்கையிலிருந்து

Series Navigation

ஓம்கார் கோஸ்வாமி

ஓம்கார் கோஸ்வாமி