“ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் – தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

கே.பாலமுருகன்


மஹாத்மன் சிறுகதைகள், வல்லினம் பதிப்பகத்தின் வெளியீடாக அன்மையில் வெளியீடு கண்டது. மறுவாசிப்பிற்கும் ஆழ்ந்த விமர்சனங்களுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டிய கதைகள் மஹாத்மனுடையது. முழு தொகுப்பையும் வாசித்து முடித்தபோது, புத்தகத்திலுள்ள 10 கதைகளையும் ஒரே தளத்தில் ஒரே புரிதலில் வைத்து மதிப்பீடுவது அல்லது விமர்சிப்பது சிரமமானது. ஒவ்வொரு கதையும் தனக்கான களத்தைக் கண்டடையும் நுட்பம் அனுபவ ரீதியிலான வெளிப்பாடுகளின் தனித்தனி சரடுகளாகும்.

ஏற்கனவே மஹாத்மனின் “கடவுள் கொல்ல பார்த்தார்” , “அலறலும் பரதேசியின் நடையும், மூன்றாவது அற்புதம் போன்ற கதைகளை வாசித்தபோது, முதன் முதலில் புதுமைப்பித்தனின் “கயிற்றரவு” சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வுகளை இனம்காண முடிந்தது.

சராசரி மனோபாவங்களுக்குள் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்ப்பது போல இது வெற்றியடைந்தவனின் வரலாறோ, சுகமான வாழ்பனுபவத்தின் சாதனை கதைகளோ கிடையாது. தனக்கான அனுபவம், கண்டடைந்த விரக்தி, தன்னைக் கடந்து தன் இருப்பைத் தூக்கிக் கொண்டு அலையும் சந்தர்ப்பங்கள், போதாமைகளின் அடுக்குகளில் சிக்கிய எச்சங்களாக, ஒரு பரதேசியென கொள்கைகள் அற்று, பிடிப்புகள் அற்று, பல கூர்மையான கேள்விகளுடன் படைத்தவனைத் தேடி அலையும் ஒரு மனிதனின் விளிம்பு கதைகள் மஹாத்மனின் களம் என்பது போல தோன்றியது. முன்பு அவரிடம் இதைப் பற்றி உரையாடியபோது அவரின் வெளிப்பாடுகளும் தன் கதை தன்னை வெளிப்படுத்திக் கொண்ட உணர்வையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மஹாத்மனின் வாழ்பனுபவம் மலேசிய சூழலிலிருந்து சராசரி மனிதனின் வாழ்க்கை சுழற்சியிலிருந்து சற்று விலகி வாழ்வின் மகத்துவங்களின் கால்களில் சிக்கிக் கொண்டு தனது பிம்பத்தை மற்றொரு இருண்ட பரிணாமத்தில் தூக்கி வீசக்கூடிய எல்லாம் தனித்துவங்களையும் கொண்டது. அந்த வாழ்வைக் கொண்டாடுவதன் மூலமாகவோ அல்லது படைப்பாக்குவதன் மூலமாகவோ மஹாத்மனுக்குள் இருக்கும் படைப்பாளன் வெற்றிப் பெற்றுள்ளான். மீண்டு வருவது அல்லது இயலாமைகளைச் சரிக்கட்டுவது அசாதரணமானது.

தனது பரதேசி அடையாளத்தைப் பதிவு செய்வது, பதிவு செய்து வெற்றிப் பெறுவது, சமூக அங்கீகாரங்களுக்கு சமூக புறக்கணிப்புகளுக்கு அஞ்சாமல், மிகத் துணிவாக தன்னுடைய சுயத்தை தன்னுடைய அனுபவத்தை பொது நியாங்களின் நெருக்குதல்களைத் துண்டித்துவிட்டு, வெளிப்படுத்துகிறார் மஹாத்மன். அவருடன் பயணிக்க நீங்களும் பரதேசியைப் போல சாலையில் படுத்துறங்கியும் அலைந்தும், சிறைப்பட்டும், தண்டிக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், மதத் தீவிரத்தில் சிக்குண்டும், மீண்டும், எதிர்த்தும், ஒட்டு மொத்தமாக சாமான்ய வாழ்விலிருந்து தூக்கி வீசப்படவும் வேண்டும். இல்லையென்றால் ஒரு சராசரி பார்வையாளனாக, விளிம்பு நுகர்வற்ற, பின்புலமற்ற வாசகனாக மட்டுமே மஹாத்மனின் அனுபவங்களின் ஆழத்தின் மேற்பரப்பில் மிதக்கக்கூடும். மிதத்தல் சுவையான அனுபவம். மஹாத்மன் கண்டடைந்த ஆழத்தின் அபாயங்களும், இருளும் ஒரு செய்தியாக மட்டுமே நம்மை வந்தடைகிறது.
முதலில் “ஓ லாவே” என்ற கதையிலிருந்து என் விமர்சன பார்வைக்குள் நுழைகிறேன். இதுவரை விமர்சனங்களுக்கு ஒரு மரபார்ந்த வடிவம் இருந்திருக்கலாம். அவ்வளவு மரபாக விமர்சிக்க முடியாவிட்டாலும் கதையின் போக்குடன் அதன் மேற்பரப்பில் நான் மிதந்து வந்து அடைந்த ஒரு புரிதலை மட்டும் பகிர்கிறேன்.

ஒரு நட்சத்திரமில்லாத தங்கும் விடுதியில் இருக்கும் இரு நண்பர்களுக்கிடையேயான நட்பின் பின்னனியில் இயங்கக்கூடிய கதைக் களம், தனது சீன நண்பனை மையப் பாத்திரமாக வடிவமைத்துக் கொண்டு இன்னொரு கதைச் சொல்லியின் மூலம் கதை நகர்த்தப்படுகிறது. வழக்கமான உத்தி. எவ்வித புதுமையும் கிடையாது. சிறுகதைகளில் பெரும்பாலும் கையாளப்பட்டவைத்தான்.
கெசினோ ரோலட் என்கிற சூதாட்டத்தில் எல்லாம் பணத்தையும் கரைத்துவிட்ட பிறகு ஏற்படும் அடுத்த நகர்வை ஒரு சம்பவம் சார்ந்ததாக கட்டமைத்து, கொண்டு வரப்படுகிறது. தொலைத்த பணத்தை ஈடுகட்ட ஒரு சாமி சிலை கிடைக்கிறது, அதைக் கொண்டு போய் கடை கடையாக விற்பனை செய்கிறார்கள். எல்லாம் இடத்திலும் வேண்டாமென்கிறார்கள். விற்பனையாகாத சிலையை இரவில் எழுந்து தடவிப் பார்க்கிறான். மறுநாள் சிலையைக் காடொன்றின் ஆற்றோரத்தில் வைத்துவிட்டு வருகிறார்கள். பிறகு இரு நண்பர்களும் பிரிய நேரிடுகிறது. மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும்போது சிலை வைத்த இடத்திற்குச் சென்று பார்க்கும்போது அங்கு ஒரு கோவில் உருவாகியிருப்பதைக் கண்டு “ஓ லாவே” என்று வியக்கிறான் சீன நண்பன் என்பதாகக் கதை முடிகிறது. இந்த “ஓ லாவே”க்கும் அவனுக்குள் இருக்கும் இன்னொரு “ஓ லாவே”க்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு இருப்பதை உங்களால் கண்டறிய முடியுமானால், வாசிப்பு அடுத்த கட்டத்தில் மீண்டும் தொடங்கும்.
ஓ லாவே என்ற சொல்லுக்கு அர்த்தம் சீனர்களின் ஒரு பிரிவினர், ஹோக்கின் மொழியைப் பேசக்கூடியவர்கள், தனக்கு வியப்பை அளிக்கக்கூடிய ஒன்றைப் பார்த்து அதிசயித்து உச்சரிக்கக்கூடிய ஒரு சொல்லாகும். அதிசயங்களுக்கு முன் அவர்கள் மண்டியிட வைக்கும் ஓர் உணர்வுதான் “ஓ லாவே”. அன்றாடங்களின் சலிப்பிலிருந்தும் அதன் நேர்த்தியான ஒழுங்கு அளிக்கக்கூடிய இறுக்கங்களிருந்தும் தப்பித்துக் கொள்ள அடுத்த வடிவமாக இருந்தது சூதாட்டம், மது, மாது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அப்படியொரு தப்பித்தலில் மனோநிலையில் சூதாட்டம் கொடுக்கக்கூடிய சிற்றின்ப அதிசயங்களுக்கு முன் மனிதன் எப்படி மண்டியிட்டுக் கிடக்கிறான் என்பது போன்ற ஓசையுடன் துடிக்கிறது ஓ லாவே சிறுகதை.

கெந்திங் மலையில் இருக்கும் கெசினோ சூதாட்ட களத்தில் பெரும்பாதியான கதை நடக்கிறது. தன் சக சீன நண்பன் சூதாட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு மீண்டும் அதை நாடும் சூட்சம வஸ்த்துவின் எதார்த்தங்களை முன் வைக்கும்போது எளிமையான நடையால் எந்த இடத்திலும் குழப்பம் தட்டாமல் வெகு இயல்பாக கதையுடன் இணையக்கூடும். சூதாட்டம் அளிக்கக்கூடிய சிறிது நேரப் போதையில் முழுவதும் தொலைத்துக் கொள்ளும் ஒரு பிம்பத்தைக் காட்டும்போது அந்தப் பிம்பத்தின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு சமூகத்தையும் நாம் அடையக்கூடும்.

பத்துடுவா கம்பத்தில் இருக்கும்போது, அம்மா ஒரு சீனக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். முன்பகுதி செலவு பொருள்கள் விற்கும் கடை, பின்பகுதியில் சீன முதலாளியின் மிதமான ஆடம்பர வீடு. அம்மாவுடன் அந்தச் சீனனுடைய வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் ஒரு காயா ரொட்டி இலவசமாகக் கிடைக்கும், மேலும் சீன காமிக்ஸ் புத்தகங்களும் கிடைக்கும். அதிலுள்ள படங்களைக் கிழித்து பறக்கவிடுவது எனது பொழுதுபோக்கு. அந்தச் சீன் முதலாளியின் வீட்டில் எப்பொழுதும் சீட்டாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கும். எல்லாம் நேரங்களிலும் அங்குள்ளவர்கள் வட்டமாக அமர்ந்துகொண்டும் புகைப்பிடித்துக் கொண்டும் ஆயாசமாகவும் சிரித்துக் கொண்டும் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கைகள் இலாவகமாக சீட்டுத் தாள்களை விரித்துக் காட்டும். மேசையில் சில்லறை காசுகளும் பண நோட்டுகளும் அங்குமிங்குமாக சிதறிக் கிடப்பதைப் பார்க்கும்போது. .”ஓ லாவே” என்று சொல்லியிருக்கக்கூடும். (அப்பொழுதே இந்தச் சிறுகதையைப் படித்திருந்தால்)

அடுத்ததாக கோலாலம்பூரில் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், வீட்டு வசிப்பிடத்திலுள்ள குதிரை பந்தயம் வீடியோ கேமில் சீன சிறுவர்கள் குவிந்து கிடந்து நாள் முழுக்க அங்கேயே கதியாகக் கிடக்கும் அந்தக் கூட்டத்தின் ஆர்வத்தையும் சூதாட்டத்தில் அவர்களுக்கிருக்கும் அதிசய உணர்வுகளையும் பார்க்க நேர்ந்தது. என்னுடைய பள்ளிப் பருவம் முழுக்க சீன நண்பர்கள் சூதாட்டம் குறித்த அதீத ஈடுபாட்டு உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அவர்களின் பொழுதுகளைச் சீட்டுக் கட்டுகளும், தாயங்களும் நிரப்பியிருப்பதை நேரிலேயே காணக்கிடைத்தது.
மஹாத்மனின் “ஓ லாவே”வில் ஒரு இனம் சூதாட்டத்தின் நகர்வில் தன்னை நிறுவிக் கொண்டு அதன் உள் அமைப்புகளாக, எல்லாம்வித உளவியல் சிக்கல்களுக்கும், வாழ்வியல் தோல்விகளுக்கும், ஆளானதைக் காட்டப்படுகிறது. சூதாட்டம் ஒரு மனிதனை எங்கு கொண்டு நிறுத்தும் என்கிற விரிந்த மனோத்துவ அணுகுமுறையுடன் மஹாதமன் அவருடைய கதையில் தற்கொலைகளின் உச்சத்தில் அதன் வீழ்ச்சியில் நம்மையெல்லாம் அமர வைத்து, சூதாட்டமும் அதன் போதையும் உருவாக்கிய மரண பாதாளங்களையும் அதன் இடுக்குகளில் வீழ்ந்து மரணித்த முகங்களையும் காட்டுகிறார். பயங்கரமான தற்கொலைகளின் பின்னனியில் பெரும்பாலும் ஒரு சூதாட்டத்தின் வீழ்ச்சியும் குரோதமும் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

நாம் வாழும் சமூகத்திலேயே இது வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. பிறரை ஏமாற்றுவதன் மூலமே இன்னொருவன் முன்னேற முடியும் என்பதாகப் பொருளாதார சிந்தனைகள் ஒரு இயல்பாகிவிட்டதென்றும் சொல்லக்கூடும்., பொருளியல் தேடலின் அதீத மாயாவாத புத்தி தரக்கூடிய போராட்டமே இந்தச் சூதாட்டம்தான் என்று அடையாளம் காணக்கூடிய அளவிற்கு சூதாட்டம் வெளிப்படுத்தக்கூடிய மாயை, புராணக் காலங்களிலும் ஒரு வரலாறாக இழப்புகளின் குறியீடுகளாக இருந்ததை, பாண்டவர்களின் வீழ்ச்சிகளைக் கதையுடன் சேர்த்துக் காட்டுவதன் மூலம் நிறுபிக்கிறார் மஹாத்மன்.

மேலும் கதையின் ஆழத்தை உங்களுக்கு நான் சொல்வதைவிட நீங்களே வாசிக்கும்போது அதன் எளிமையான உள் அடுக்குகளைக் கண்டறிய முடியும். மஹாத்மனின் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளிலே மிக இயல்பாக எளிமையாக பலரும் அடையக்கூடிய களத்தைக் கொண்டுள்ள கதை இது மட்டுமே. எவ்வித இருண்மைகளும் இல்லாத நடை, எளிமையான கதையாடல். சிக்கலில்லாத மொழி.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation