அரிதார அரசியல்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

பி.ஏ.ஷேக் தாவூத்


“சில ரொட்டித் துண்டுகளும் ஒரு சர்க்கஸ் கோமாளியும் போதும் மக்களை ஏமாற்றுவதற்கு” – ஹிட்லர்.

நீதிக்கட்சியின் பரிணாமத் தோற்றமான திராவிட இயக்கம் தமிழகத்திற்கு எண்ணிலடங்கா பல நன்மைகளை விட்டுச் சென்றுள்ளதை தமிழகத்தின் ஐம்பதாண்டு கால அரசியல் தெரிந்த எவராலும் மறுக்கவியலாது. ஏன் இந்திய அரசியலுக்கே சமூக நீதி தத்துவத்தைப் பாடம் படித்துக் கொடுத்தது திராவிட இயக்கம்தான் என்று யாரேனும் விளக்கவுரை எழுதினாலும் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல என்ற ஒரு முடிவுக்கே அடிமட்ட மக்களுக்கான அரசியல் பேசுபவர்கள் வருவர். ஏனெனில் வி.பி.சிங் அவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வரையிலான இந்திய அரசியலின் தன்மை அத்தகைய முடிவுக்கே நம்மையும் இட்டுச்செல்லும். அதே சமயம் திராவிட இயக்கம் வழங்கிய இந்த சமூக நீதி தத்துவம் சில குறைபாடுகளுடன் இருந்தாலும் அவற்றை நாம் போற்றுவதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான். Something is better than nothing. கடுமையான வயிற்றுப் பசியுடன் இருப்பவர்களுக்கு அவர்களது பசியாற்றக் கிடைக்கும் நீரும் சோறும் அமிர்தம் போலவே தித்திக்கும் என்னும் அடிப்படையினூடாகவே இத்தகைய குறைபாடுகளுடன் கூடிய சமூக நீதியை நாம் ஆதரிக்கிறோம்.

மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு சித்தாந்தத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதுதான் அடிப்படை விதி. அந்த சித்தாந்தத்தினால் விளைந்த நன்மைகள் என்று பலவற்றை நாம் பட்டியலிட்டுச் சொன்னால் மறுபக்கம் அதே சித்தாந்தம் உருவாக்கிய தீமைகள் என்று பலவற்றையும் வரலாறு நமக்கு பட்டியலிட்டுச் சொல்கிறது. இத்தகைய அடிப்படை விதிகளுக்கு திராவிடச் சித்தாந்தமோ கம்யூனிசச் சித்தாந்தமோ இன்னும் மனிதர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எந்த ஒரு சித்தாந்தமோ விதிவிலக்கல்ல.

திராவிடச் சித்தாந்தத்தின் அரசியல் பரிணாமமாய் உருவெடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்திற்கு இழைத்த மிகப்பெரிய தீமைகளில் ஒன்றாக இலவச – கவர்ச்சி அரசியலை கூறலாம். மக்கள் நலத் திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு கவர்ச்சிகரமான பேச்சுக்களையும் , திரைப்படத்துறையில் தோன்றிய முகங்களின் கவர்ச்சியையும் வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற ஓர் அவல நிலைமை தோன்றியதே திராவிட முன்னேற்ற கழக அரசியலின் எழுச்சியில்தான். கவர்ச்சி அரசியலுக்கு மக்கள் எந்தளவிற்கு மயங்கினார்கள் என்பதை காமராஜரின் தோல்வியை வைத்தே எடைப் போட்டு விடலாம். இதுவரை தமிழ்நாட்டில் முதல்வர் பதவி வகித்தவர்களில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் யாரென்று கேட்டால் எல்லோரும் உடனே பதில் சொல்லி விடுவர் காமராஜர் தான் என்று. அப்படிப்பட்ட ஒரு சிறந்த முதல்வரை, பல மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியவரையே தோல்வியடைய செய்யக் கூடிய அளவிற்கு மக்கள் ஒருவித கவர்ச்சி மயக்கத்தில் இருந்தனர் என்பது இந்த மாய அரசியலின் தீமைக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

வழமையாக தமிழகக் கடற்கரையோரம் மையம் கொள்ளும் புயல் ஆந்திராவின் கடற்கரையோரத்தைப் பதம் பார்ப்பது போல தமிழகத்தில் தோன்றிய இந்த இலவச – கவர்ச்சி அரசியல் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் அரசியலையும் பதம் பார்த்தது. அங்கும் திரைப்படத்துறை கவர்ச்சி முகங்கள், அரசியலின் தீர்மானிக்கும் காரணிகளாக மாறிப்போன அவலம் அரங்கேறியது. இத்தகைய செயல்களால் தமிழகமும் ஆந்திரப் பிரதேசமும் அறிவுஜீவிகளால் ஏளனமாக பார்க்கப்பட்ட காலமும் உண்டு. இன்றும் கூட தமிழ்நாடும் ஆந்திரமும் இந்தக் கவர்ச்சி மாயையில் இருந்து விடுபடவேயில்லை. தேர்தல் காலங்களில் அரசியலை நாம் கூர்ந்து நோக்கினால் இந்த உண்மை எளிதில் புரிந்துவிடும். கட்சிகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஆனால் திரைப்படத்தில் நடித்த ஒரு சில முகங்கள் சில தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர். அந்த கவர்ச்சி முகங்களின் தரிசனங்களுக்காக மக்களும் மந்தைக் கூட்டங்களாய் மாறி கால்கடுக்க நிற்கின்ற இழிநிலையும் தொடரத்தான் செய்கின்றது.

இன்றைக்கு இந்தியா முழுவதும் பன்றிக்காய்ச்சல் எப்படி வேகமாக பரவுகிறதோ அதைவிட மிக வேகமாய் பரவி விட்டது இந்த இலவச – கவர்ச்சி அரசியல். பன்றிக்காய்ச்சல் எங்கே தன்னைத் தொற்றி விடுமோ என்றஞ்சி முகக்கவசம் அணிந்து தன்னை தற்காத்துக் கொண்ட மக்கள் அதைவிடக் கொடிய அரசியல் நோயான இந்த இலவச – கவர்ச்சி அரசியலை தடுக்காமல் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது நாடெங்கும் இதை இன்னும் வீரியமாக பரவச் செய்து விட்டது. திராவிட, தேசிய, பிராந்திய பேதங்கள் எல்லாம் இந்த மாய கவர்ச்சி அரசியலுக்கு கிடையாது. இந்துத்துவம் பேசும் பா.ஜ.க, போலி மதச்சார்பின்மை வேடம் தரிக்கும் காங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்கு வரும் ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி வைப்பதையே பிரதான கொள்கைகளாகக் கொண்டிருக்கும் பிராந்திய கட்சிகளான தி.மு.க , அ.தி.மு.க, தெலுங்கு தேசம் , சமாஜ்வாடி போன்ற எந்த கட்சியானாலும் இந்த அரிதார கவர்ச்சி அரசியலில் இருந்து தப்ப முடியவில்லை. இந்த கட்சிகளுக்கு முகம் கொடுக்கும் நட்சத்திரங்களின் தேவையை கட்சிகளின் தலைவர்கள் பார்த்துக் கொள்ள தலைவர்களின் தேவையான ஓட்டு அறுவடையை நட்சத்திரங்கள் பார்த்துக் கொள்ள அவர்களுக்கிடையே ஓர் புரிதலில் சென்று கொண்டிருக்கிறது இந்த மாய அரசியல்.

மற்ற துறைகளைச் சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரும்போது நாங்கள் மட்டும் வருவது தப்பா என்ற ஓர் கேள்வியை திரைப்படத்துறையினர் எழுப்புகின்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது இது நியாயமான கேள்வியாகவே நமக்குத் தெரியும். ஆனால் இதை அறிவுபூர்வமாக பார்த்தோமேயானால் இந்தக் கேள்வியின் தொனியே அடிப்படை ஆதாரமற்றது என விளங்கி விடும். உதாரணமாக மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும்போது கைது செய்யப்பட்ட ஒரு ஆன்மீகவாதி மக்களின் அறியாமையை பயன்படுத்தி நான் மட்டுமா ஏமாற்றுகிறேன்? அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் மக்களை ஏமாற்றுகிறார்களே? என்ற ஒரு கேள்வியை எழுப்புவதால் கைது செய்யப்பட்ட அந்த ஆன்மீகவாதி புனிதராகி விடமுடியாது. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு எவ்வாறு தீர்வாகி விட முடியும்? வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் இருக்கின்ற சர்வதிகாரி ஹிட்லரின் வாசகத்தை வரலாற்றாசியர்களை விட இந்திய அரசியல்வாதிகள் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றனர். இது நவீன காலமென்பதால் ரொட்டித் துண்டுகள் இருக்க வேண்டிய இடத்தில் வேறு சில இலவசங்களும், சர்க்கஸ் கோமாளி இருக்க வேண்டிய இடத்தில் மக்களின் மனதில் நன்றாக பதியக் கூடிய வேறு சில துறையைச் சார்ந்தவர்களும் இருக்கின்றனர்.

மக்களிடையே மலிந்து காணப்படும் அறியாமையை மூலதனமாக்கி தன்னுடைய திரைத்துறை போலி பிம்பத்தை மக்களிடையே நிலைப்படுத்த அதாவது நிழலை நிஜம் என்று நம்ப வைக்க மக்களை மந்தைகளாகப் பாவிக்கும் இவர்களை, அறிவுஜீவிகள் மக்களுக்கு அடையாளம் காட்ட தவறினால்
“பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.”
என்று வள்ளுவன் சொன்னது போல இந்த நாட்டில் சிறப்பில்லாத பிறப்புக்கள் அரசியலில் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

பி.ஏ.ஷேக் தாவூத்
pasdawood@gmail.com

Series Navigation

பி.ஏ.ஷேக் தாவூத்

பி.ஏ.ஷேக் தாவூத்