முள்பாதை 55

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

என் எதிரே மூடியிருந்த கதவுகளை டக் டக்கென்று விரல்களால் இரண்டு முறை தட்டினேன். மூன்றாவது முறை தட்டும் போது “வந்து விட்டேன்” என்ற குரல் §க்டது.
“யாரு?” என்று கேட்டபடி கதவுகளைத் திறந்த கிருஷ்ணன் வாசலில் நின்ற என்னைப் பார்த்ததும் நிலைகுலைந்து போனாற்போல் பார்த்தான். “மீனா! நீயா! இந்த இரவு நேரத்தில்? என்ன விஷயம்?”
“கீழே டாக்ஸி இருக்கு.. பணம் கொடுக்கணும். டிரைவர் ரிஸெப்ஷனில் காத்திருக்கிறான்.” தாழ்ந்த குரலில் சொன்னேன்.
“டாக்ஸியா?” ஒரு நிமிடம் குழப்பமாக என்னைப் பார்த்தவன் உள்ளே வரச்சொன்னான். ஹேங்கரில் இருந்த சட்டையை மாட்டிக் கொண்டு பர்ஸை எடுத்துக் கொண்டு “உட்கார். இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
நான் சோபாவில் அமர்ந்து கொண்டேன். அங்கே எப்படி வந்து சேர்ந்தேனோ எனக்கே தெரியவில்லை. ஆனால் இப்படி வந்தது நான் செய்த நல்ல காரியம் என்று தோன்றியது. அறையைப் பார்வையிட்டேன். படுத்துக் கொண்டே புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான் போலும். கட்டில் அருகில் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. புத்தகம் கட்டில் மீது குப்புற கிடந்தது.
மனதை திசை திருப்ப முயன்று தோற்றுப்போய் விட்டேன். அப்பா சொன்னது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தது. அந்த வார்த்தைகள் என் மனதை ஈட்டியாக துளைத்துக் கொண்டிருந்தன. மனம் விட்டு அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் நான் இங்கே அழுவதற்காக வரவில்லை. கிருஷ்ணனிடம் அறிவுரை கேட்பதற்காக வந்திருக்கிறேன். நடந்ததை எல்லாம் சொல்லி என்னுடைய தவறு என்னவென்று நியாயம் கேட்க வந்திருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரே ஒரு நபரின் வாயிலாவது நான் செய்தது தவறு இல்லை என்று கேட்கணும். இல்லை என்றால் எனக்கு மூளை கலங்கி விடுமோ என்று பயமாக இருந்தது. அம்மா சொன்னது போல் கேட்டுக் கொண்டு ஷோகேஸ் பொம்மையாக இருக்காமல் ஏன் இப்படி செய்தேன்? எல்லோருக்கும் கோபம் வந்ததைத் தவிர நான் சாதித்தது என்ன?
முழங்காலில் கைகளை ஊன்றி உள்ளங்கையில் முகத்தைத் தாங்கியபடி அமர்ந்திருந்தேன். எத்தனை முயற்சி செய்தாலும் விழிகளில் நிறைந்த நீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
கிருஷ்ணன் திரும்பி வந்து விட்டது போல் காலடிச் சத்தம், கதவுகளைச் சாத்திய சத்தம் கேட்டது. ‘நான் அழக்கூடாது. நான் கோழையில்லை. அவனிடம் பேசுவதற்காக வந்திருக்கிறேனே தவிர இரக்கத்தை எதிர்பார்த்து இல்லை.’
“மீனா! என்ன நடந்தது?” அருகில் வந்து கேட்டான். அவன் குரலில் பதற்றம் வெளிப்பட்டது.
என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
“சொல்லு மீனா! வீட்டில் ஏதாவது சண்டையா?”
ஆமாம் என்பது போல் தலையை அசைத்தேன்
“எதற்காக சண்டை வந்தது? என்ன காரணம்?”
நான் பதில் சொல்லவில்லை.
ஒரு நிமிடம் கழித்து தயங்கிக் கொண்டே கேட்டான். “நீ என்னை சந்திக்க வந்தது சாரதிக்குத் தெரிந்து விட்டதா? என் காரணமாக பிரச்னை ஏற்பட்டதா?”
இல்லை என்பது போல் தலையை அசைத்தேன்.
“ராஜி யாரென்று உங்க அம்மாவுக்குத் தெரிந்து போய்விட்டதா?”
அதுவும் இல்லை என்பது போல் பார்த்தேன்.
“பின்னே? என்னதான் நடந்தது? மாமா வீட்டில் இருக்கிறாரா?”
இருக்கிறார் என்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினேன். துக்கத்தை கட்டுப்படுத்த தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
திடீரென்று கிருஷ்ணனின் கை என் நெற்றியின் மீது படிந்தது. “மீனா! நிமிர்ந்து என்னைப் பார்” என்றான். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கிருஷ்ணன் என் அருகில் அமர்ந்து கொண்டான். “அடடா! என்ன இது? போகட்டும் விடு. சொல்ல முடியாத விஷயம் என்றால் கேட்கவே மாட்டேன். ஆனால் நீ அழக் கூடாது. சரிதானா! ஏய்! உன்னைத்தான். குறும்புப் பெண் மீனா, என்னுடைய மாமாவின் செல்ல மகள் மீனாவா இப்படி அழுகிறாள்?
அன்பு கலந்த, நெருக்கமாக இருந்த அந்த பேச்சைக் கேட்டதும் என் அழுகை கரையை உடைத்துக் கொண்டு வெளியேறியது.
“மீனா! என்ன இது சிறு குழந்தை போல்?”
மென்மையாக ஒலித்த அவன் குரல் எனக்கு பற்றுகோல் தருவது போல் தோன்றியது. என்னையும் அறியாமல் அவன் அருகில் நகர்தேன். அடுத்த நிமிடம் அவன்தான் என் அருகில் வந்தானோ, இல்லை நான்தான் மேலும் நகர்தேனோ தெரியவில்லை. என் முகம் அவன் மார்பில் புதைந்து விட்டது.
கிருஷ்ணன் என் தலையை வருடிவிட்டுக் கொண்டே சொன்னான். “மீனா! வாய் விட்டு அழணும் போல் இருந்தால் ஒரேயடியாக அழுதுவிடு. அப்பொழுதுதான் மனதில் இருக்கும் பாரம் குறையும்.”
அரைமணி நேரம் கழித்து கிருஷ்ணன் எழுந்துபோய் டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வலுக்கட்டாயமாக என்னை குடிக்க வைத்தான். பிறகு மென்மையான குரலில் “போய் முகத்தை அலம்பி கொண்டு வருகிறாயா? முகமும் கண்களும் எப்படி வீங்கியிருக்கோ கண்ணாடியில் பார்த்துக்கொள்” என்றான்.
நான் எழுந்து போய் குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பிக் கொண்டு வந்தேன். கிருஷ்ணன் சொன்னது உண்மைதான். அழுத பிறகு மனம் இலேசாகி விட்டிருந்தது.
“மீனா! மனதில் இருக்கும் பாரம் குறைந்து விட்டது இல்லையா. இப்படி வந்து உட்கார்ந்து கொள். என்ன நடந்தது என்று இப்போ சொல்லு.” கிருஷ்ணன் சொன்னான்.
நான் சுருக்கமாக, ராஜியின் மீது எந்தத் தவறும் இல்லாத விதமாக நடந்ததை எல்லாம் சொன்னேன். என் வாயிலிருந்து வெளி வந்த வார்த்தைகளைக் கேட்டு அவன் சிலையாகிவிட்டான். கடைசியில் அவன் முகம் வெளிறிப் போய்விட்டது.
முழுவதுமாக கேட்ட பிறகு அவன் சொன்னான். “இத்தனை பிரச்னைகள் உருவாக ராஜி காரணமாகி விட்டாளா?”
“அவளை ஒன்றும் சொல்லாதே. இதில் அவளுடைய தவறு எதுவும் இல்லை. செய்ததெல்லாம் நான்தான்.”
“இருந்தால் மட்டும்?” கிருஷ்ணன் சட்டென்று எழுந்து போன் அருகில் சென்றான்.
“யாருக்கு போன் செய்யப் போகிறாய்?”
“மாமாவுக்கு. ராஜியை உடனே இங்கே அழைத்து வரச் சொல்கிறேன்.”
மின்னல் வேகத்தில் எழுந்து அவனருகில் சென்றேன். ரிசீவரை பிடுங்கிக் கொண்டு “உனக்கு எப்படி தெரியும் என்று அப்பா கேட்டால் உன்னால் என்ன பதில் சொல்ல முடியும்?” என்றேன்.
“நீ இங்கே வந்தாய் என்றும், எல்லா விஷயங்களையும் சொன்னாய் என்றும் சொல்கிறேன்.”
“ரொம்ப உத்தமம். இதற்கு தானா நான் இங்கே வந்தேன்?”
“மீனா!” அவன் கண்களில் கோபம் பளபளத்தது.
நான் பயப்படவில்லை. ரிசீவரை பழையபடி வைத்துவிட்டு சொன்னேன். “நான் இங்கே இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது. முக்கியமாக அப்பாவுக்கு.”
என் போக்கு புரிப்படாதது போல் கிருஷ்ணன் பார்த்தான். மறுபடியும் போனை எடுக்கப் போனான். இந்த முறை கையை உன்றி அவனைத் தடுத்துவிட்டேன்.
“உனக்கு மூளை கலங்கிவிட்டதா? நீ இங்கே வந்திருக்கிறாய் என்று மாமாவிடம் சொல்ல வேண்டாமா? இல்லாவிட்டால் இந்த நள்ளிரவில் உன்னைக் காணுமே என்று அவர்கள் எவ்வளவு பதற்றமடைவார்களோ உனக்குத் தெரியுமா?”
“தெரியும். நான் விரும்புவதும் அதுதான். அப்படித்தான் நடக்கணும்.”
“உனக்கு நிஜமாகவே மூளையில்லை.” ரிசீவர் மீது இருந்த என் கையை நகர்த்த முயன்றான்.
“நான் இங்கே இருப்பதைப் பற்றி நீ யாருக்கும் சொல்லக் கூடாது.” கோபமாக சொன்னேன்.
“மாமாவுக்குத் தகவல் தெரிவிப்பது என் கடமை. சொல்லித்தான் தீருவேன்.” கிருஷ்ணன் என் கையை விலக்கிவிட்டு ரிசீவரை எடுத்தான்.
எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. “ஹலோ!” கிருஷ்ணன் ரிசெப்ஷனில் எங்கள் விட்டு நம்பரை சொல்லி கனெக்ட் செய்யச் சொன்னான். மறுமுனையில் யாரோ போன் எடுத்திருக்க வேண்டும்.
கிருஷ்ணன் பேசினான். “ஹலோ! லாயர் ஆனந்தன் இருக்கிறாரா? மாமாதானா? மாமா! நான் கிருஷ்ணன் பேசுகிறேன்.”
நான் மூச்சை அடக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தேன். கிருஷ்ணன் நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தான். பிறகு என்ன நினைத்துக் கொண்டானோ என்னவோ. “மீனா இங்கேதான் இருக்கிறாள். என்னிடம் வந்தாள். நீங்க கவலைப் படாதீங்க. சரி… ரூம் நம்பர் நூற்றி இருபத்தெட்டு. நீங்க தேட வேண்டிய சிரமம் இல்லாமல் நானே கீழே வருகிறேன்.” கிருஷ்ணன் போனை வைத்து விட்டான்.
உரையாடலை முழுவதுமாக கேட்டபிறகு நான் வேகமாக வாசலை நோக்கி நடந்தேன். கிருஷ்ணன் இரண்டே எட்டில் என்னை நெருங்கி என் தோளைப் பற்றி தடுத்துவிட்டான்.
“எங்கே போகிறாய்? மாமா இப்போ இங்கே வருவதாக சொல்லியிருக்கிறார்.”
“காதில் விழுந்தது. அதான் போகிறேன்.”
“எங்கே?”
“ஏதோ ஒரு இடம். உன்னிடம் ஏன் சொல்லணும்? நீ எனக்கு நண்பனா? உறவினனா இல்லை நெருக்கமானவனா?”
“எல்லாமே? நீ எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி.”
“விடு என்னை. உன்னிடம் வந்ததே தவறு. மாமியிடம் போயிருந்தால் நிச்சயமாக அடைக்கலம் கொடுத்திருப்பாள்.” கையை விடுவித்துக்கொள்ள முயன்றேன்.
“மீனா! என்ன ஆவேசம் இது? யார் மீது உன் கோபம்?”
“உன்மீது தான். நீ எனக்கு உண்மையான நண்பன் என்றும், என் பிரச்னையை காது கொடுத்து கேட்பாய் என்றும் எதிர்பார்ப்புடன் வந்தேன். அது வெறும் பிரமை என்று இப்போ புரிந்துவிட்டது. உனக்கு அப்பாமீது இருக்கும் மதிப்பு என்னிடம் இல்லை.”
அவன் கைகள் சிறைப்படுத்துவது போல் என் சுற்றிலும் பிணைந்தன. “மீனா! உன் விருப்பம் இல்லாமல் இங்கிருந்து மாமா என்ன, கடவுளே வந்தாலும் அழைத்துப் போக முடியாது. சரிதானா?”
“உன் பேச்சை எப்படி நம்புவது?”
“எனக்குப் பொய் சொல்ல வராது என்ற விஷயம் உனக்கு தெரியும்.”
நான் அவன் கைகளை விடுவித்துக் கொள்ளப் போனேன். ஆனால் சாத்தியப்பட வில்லை அவன் கைகளில் கைதியாகிவிட்ட நான் கோபமாகப் பார்த்தேன்.
“விடு என்னை.”
“விட மாட்டேன்.”
“இப்போ விடவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் என்னை தாங்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை! பிறகு உன் விருப்பம்.”
அவன் கண்களில் வியப்பு நிழலாடியது. பிடியைத் தளர்த்தப் போனவன் ஏனோ நின்றுவிட்டான் “பரவாயில்லை. உன் மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன்.” சிரித்துக் கொண்டே சொன்னான்.
அழகான அவன் பல்வரிசை பளிரென்று மின்னியது. கல்மிஷமற்ற அவன் சிரிப்பு நிலவின் குளிர்ச்சியை மழையாய் என்மீது பொழிந்தது. அவன் குரல் புல்லாங்குழல் இசையாய் என் காதில் ஒலித்தது. அவன் கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்த்துக் கொண்டு என்னை நானே மறந்து விட்டேன். எங்க இருவருக்குள் முதலில் தேறிக் கொண்டது அவன்தான்.
என் கையைப் பிடித்துக் கொண்டு மென்மையான குரலில் “சமர்த்துப் பெண்போல் உள்ளே வா. வந்து உட்கார்ந்துகொள்” என்றான்.
********

அப்பா வந்துவிட்டு திரும்பிப் போனார். ஏறத்தாழ ஒரு மணிநேரம் இருந்தார். வீட்டுக்கு வரச்சொல்லி கிருஷ்ணன் மூலமாக கேட்டுப் பார்த்தார். வரமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டேன். அப்பா உள்ளே வந்ததும் எழுந்து டிரெஸ்ஸிங் ரூமுக்கு போய்விட்டேன். கிருஷ்ணன் உள்ளே வந்தான். “இங்கே நிற்கிறாயே? மாமா வந்திருக்கிறார். வெளியில் வா” என்றான்.
மாட்டேன் என்பது போல் பார்த்தேன்.
என்னுடைய பிடிவாத குணத்தினால் தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களை எல்லாம் அப்பா கிருஷ்ணனிடம் சொன்னார். வயது ஏற ஏற எனக்கு புத்தி ஞானம் குறைந்து கொண்டே வருகிறதாம். கண்டிப்பவர்கள் இல்லாமல் கெட்டு குட்டிச் சுவராக போய்க் கொண்டிருக்கிறேனாம். அப்பா வந்து சமாதானமாகப் பேசுவார் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. நான் இதுபோல் சொல்லாமல் கொள்ளாமல் நேராக கிருஷ்ணனிடம் வந்தது அப்பாவுக்கு மேலும் கோபத்தை வரவழைத்தது.
“மாமா! நீங்க கிளம்பிப் போங்கள். நான் அப்புறமாக மீனாவை கொண்டு விடுகிறேன்.” சமாதானப் படுத்துவது போல் கிருஷ்ணன் சொன்னான்.
அப்பா போகும் முன் நான் இருந்த அறையின் வாசலில் வந்து சொன்னார். “மீனா! நீ சின்னக் குழந்தை ஒன்றுமில்லை. விவரம் தெரிந்தவள். அம்மா உன்மீது வைத்துக் கொண்டிருக்கும் ஆசைகளை மூழ்கடித்துவிடாதே. பத்து பேர் எள்ளி நகையாடும்படி நடந்து கொள்ளாதே. அது உனக்கும் எனக்கும் நல்லது இல்லை. நினைவில் வைத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். நான் என்றுமே பார்த்திராத கடுமை அந்த வார்த்தைகளில் எதிரொலித்தது. அப்பா ஏன் இப்படி மாறிவிட்டார்? அதுதான் எனக்கு புரியவில்லை.
கீழே சென்று அப்பாவை வழியனுப்பிவிட்டு கிருஷ்ணன் திரும்பி வந்தான். “மீனா! நீ ரொம்ப தவறு செய்கிறாய். நீ இப்படி சொல்லாமல் வந்து விட்டதற்கு எற்கனவே மாமா வேதனையில் இருக்கிறார். இப்போ வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து மேலும் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறாய்.”
“ஆமாம். சமீபகாலமாக அப்பாவுக்கு என்மீது அடிக்கடி எரிச்சல் வருகிறது. அதான் அவரிடமிருந்து விலகியிருக்க நினைக்கிறேன்.”
“எத்தனை நாட்கள் இருக்க முடியும்?”
“வாழ்நாள் முழுவதும். தொலைவில் இருந்தால்தான் தாய் தந்தை, குழந்தைகளுக்கு நடுவில் பரஸ்பரம் பிரியம், அபிமானம் நிலைத்திருக்கும். எனக்கு நினைவு தெரிந்தது முதல் அம்மா அப்பாவோடுதான் இருக்கிறேன். இனி விட்டோடு மாப்பிள்ளை வந்தால் வாழ்நாள் முழுவதம் அங்கேயே தான் இருக்கணும். அதனால்தான் சாரதியை எனக்குப் பிடிக்கவில்லை.”
“பெற்றோரை விட்டு எங்கே போக முடியும் உன்னால்?”
“மெலட்டூருக்குப் போகிறேன்.”
கிருஷ்ணன் சங்கடப்படுவது போல் பார்த்துவிட்டு உடனே சிரித்துவிட்டான். “நன்றாக இருக்கு. ஆனால் நான் சம்மதிக்கவில்லை என்றால்?”
“உன் விருப்பத்தை யார் கேட்டார்கள்? எங்க அத்தையின் வீட்டுக்கு நான் போகிறேன்.”
“அத்தையின் வீட்டுக்குத்தான் போகிறாய். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கல்யாணம் ஆகாத பெண்ணை அம்மா எந்த அதிகாரத்துடன் தன்னிடம் வைத்துக் கொள்வாள்?”
ஒரு நிமிடம் யோசித்தேன். சங்கோசத்தை உதறித் தள்ளினேன். “சரி… போகும் முன் அந்த அதிகரத்தை, உரிமையை பெற்றுக் கொண்ட பிறகே போகிறேன்.”
“அப்படி என்றால்?”
“அந்த வீட்டு மருமகளாக போகிறேன்.”
திகைப்புடன் பார்த்தான் கிருஷ்ணன். அறை முழுவதும் நிசப்தம் பரவியது.
தாழ்ந்த குரலில் மேலும் சொன்னேன். “இதைவிட வெளிப்படையாக எப்படி சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. மேற்கொண்டு எதுவும் கேட்காமல் நீ என் மனதை புரிந்து கொண்டால் நன்றி உடையவளாக இருப்பேன்.”
ரொம்ப நேரம் அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. என்னையும் கேள்வி கேட்கவில்லை.
“என்ன? பேச்சையே காணும்?” கடைசியில் நானே கேட்டேன்.
“என்ன பேசட்டும்? முன்பின் யோசிக்காமல் நீ ஏதேதோ பேசினால் நான் என்னவென்றால் பதில் சொல்வது?” கிருஷ்ணன் என் கையைப் பற்றி தனக்கு எதிரே இருந்த சோபாவில் உட்கார வைத்தான். “இப்போ சொல்லு. சீரியஸாக பேசு” என்றான்.
“நான் தொடக்கத்திலிருந்தே சீரியஸாக பேசிக் கொண்டு இருக்கிறேன். நீதான் காதில் வாங்கவில்லை. நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்டேன். பதில் சொல்ல வேண்டியது நீதான்.”
“மீனா என்னுடைய உத்தேசத்தில் இது சாத்தியம் இல்லை.”
“எதனால் சாத்தியம் இல்லை. காரணம் சொல்லு.”
“உனக்குத் தெரியாதா? நம் இருவரின் வாழ்க்கை முறை நேர் எதிர். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. சில எண்ணங்கள் கற்பனையில் அழகாக இருக்கும். ஆனால் அனுபவத்திற்கு வரும்போது அந்த அழகெல்லாம் காணாமல் போய்விடும். கடைசியில் அமைதி இல்லாமல் போவதோடு சண்டை சச்சரவுதான் மிஞ்சும். பூங்கொடியைப் போல் மென்மையாக சொத்து சுகங்களுக்கு நடுவில் வளர்ந்தவள் நீ.”
“இந்தப் பூங்கோடி வாடாமல் இருக்கணும் என்றால் உன்னைப் போன திடமான நபர்தான் கொடி கொம்பாக இருக்கணும். கற்பனை யதார்த்தம் என்று ஏதேதோ பேசுகிறாய். உன்னைப் பற்றி நான் எந்த விதமான கற்பனையும் வைத்துக் கொள்ளவில்லை. எல்லாமே யதார்த்தம்தான். நமக்கிடையே பொருளாதார வித்தியாசம் இருப்பதாக சொல்கிறாய். அது ஒரு பெரிய தடையாக நான் நினைக்கவில்லை. இன்று பணக்காரனாக இருப்பவன் நாளைக்கு ஏழையாகலாம். நம் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ நமக்குக் கிடைக்காமல் போகாது.”
“உனக்கு பதில் சொல்ல என்னால் முடியாது.” இயலாமையுடன் பார்த்தான்.
“வேண்டாம். அந்த முயற்சியை விட்டுவிடு. அத்தைக்கு உடனே நம் விஷயத்தைத் தெரிவிப்பதாக சொல்லூ”
“ஆனால் நான் ராஜியின் திருமணம் ஆன பிறகுதான் திருமணம் செய்து கொள்ளணும் என்று நினைத்திருந்தேன்.”
“இந்த நொண்டி சாக்கு எல்லாம் என்னிடம் சொல்லாதே. ராஜிக்கு நாமிருவரும் சேர்ந்து கல்யாணம் நடத்தி வைப்போம்.”
“மீனா!” அவன் கண்களில் பிரமிப்பு தெரிந்தது.
“நீ உன் தயக்கங்களை, சந்தேகங்களைச் சொன்னாய். நான் அவற்றுக்கு பதில் சொல்லி விட்டேன். இதற்குப் பிறகும் நீ மாட்டேன் என்று சொன்னால் நீ கோழை என்றும், எங்க அம்மாவுக்கு பயப்படுகிறாய் என்றும், பணக்காரியாக இருக்கும் என்னை பண்ணிக் கொள்ள உனக்கு துணிச்சல் இல்லை என்றும் நினைத்துக் கொள்வேன். இன்று மாலை நீ ‘என் தைரியத்தைப் பற்றி ஒருநாளும் சவால் விடாதே’ என்று சொன்னாய். இப்போ உண்மையிலேயே சவால் செய்கிறேன். உன்னிடம் சக்தி சாமர்த்தியம், துணிச்சல் இருக்கும் விஷயம் உண்மையோ பொய்யோ இப்போ தெரிந்துவிடும். பேச்சுக்கும் செயலுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதோ இப்போ புரிந்து விடும்.”
கிருஷ்ணன் முறுவலித்தான். “நன்றாக இருக்கு உன் மிரட்டல். என் கழுத்துக்கே முடிச்சு போடப் பார்க்கிறாயா?
“நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள். எனக்கு வேண்டியது வெளிப்படையான, உண்மையான பதில்.”
“சரி. பதில் சொல்லும் முன் சில விஷயங்களை உன்னிடம் சொல்கிறேன். கேட்டுக் கொள்கிறாயா?”
“நம் இருவருக்கும் சம்பந்தப்பட்டது என்றால் கேட்டுக் கொள்கிறேன்.”
“நம் இருவருக்கும் இல்லை. என் ஒருத்தனுக்கு மட்டும்தான் சம்பந்தப்பட்டது. இத்தனை வருடங்கள் கழித்து இப்படி கடந்த காலத்தை நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டிவரும் என்றும், அதிலும் உன் முன்னால் என் மனதில் புதைந்த கிடக்கும் ரகசியத்தை வெளிப்படுத்தும் நாள் வரும் என்றும் கனவிலும் நினைக்கவில்லை. நீ என்னுடைய துணிச்சலுக்கு சவால்விட்டு என் கழுத்திற்கு முடிச்சு போடப் பார்ப்பதால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.”
“சொல்லு.” ஆர்வத்துடன் பார்த்தேன்.
“உங்கள் வீட்டில் காலடி எடுத்து வைப்பதை நான் விரும்பாத காரணத்தை மாமா ஒருநாளும் உன்னிடம் சொன்னது இல்லை இல்லையா?”
இல்லை என்பது போல் தலையை அசைத்தேன்.
அவன் குரல் கம்பீரமாக ஒலித்தது. “மீனா! நான் அதிகம் படிக்காதவன், பட்டிக்காட்டான், முரடனும்கூட. ஆனால் வாழ்க்கையில் எப்பொழுதாவது அவமானத்தைச் சந்திதத்தால் அடியுண்ட நாகம் போல் என் மனம் அந்த நிகழ்ச்சியை ஒரு நாளும் மறக்கவே மறக்காது. நினைவுக்கு வரும் போதெல்லாம் சீறிக் கொண்டே இருக்கும். காலம் கனிந்து வந்து வாய்ப்பு கிடைத்தால் பழிதீர்த்துக் கொள்ளவும் தயங்காது. உங்க அம்மா என்னை ஒருநாள் ரொம்ப அவமானமாக பேசிவிட்டாள். அன்றைக்கே இந்த ஜென்மத்தில் உங்கள் வீட்டில் காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று மனதில் சபதம் எடுத்துக் கொண்டேன்.”
என் மனதில் எதோ பயம் புகுந்து கொண்டது. கடந்தகால நினைவுகள் கண்ணெதிரில் காட்சி தருவது போல் கிருஷ்ணின் முகம் கடினமாக இருந்தது.

Series Navigation