புழுத் துளைகள்(குறுநாவல்) – 3

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

ரெ.கார்த்திகேசு


வான்கலம் பூமியை விட்டு எழும்பவேண்டும். பின் அது அண்டவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கப்சியூலை இருத்தும். அதிலிருந்து இயற்கை ஈர்ப்புகளால் கப்சியூல் கருங் குழிக்குள் செல்லும். இந்த நிலையில் காலமும் வெளியும் இப்போது நாம் அறிந்துள்ள இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப் படாது. பின்னர் அதில் பிரயாணித்துக் கருங் குழியின் அடுத்த எல்லைக்கு வந்தவுடன் புறப்பட்ட இடத்துக்கு அது மீண்டும் வர வேண்டும். அப்போது பூவுலகத்தின் காலம் முன்னோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

எவ்வளவு முன்னோக்கி ? ஒரு மணி நேரம் முன்னே போவதே பெரிய சாதனைதான். ஆனால் அதற்காகவா இந்தப் பெரு முயற்சி ? ஓராண்டு முன்னால் ? அதுவும் பெரிதாகக் தெரியவில்லை.

நூறாண்டுகள் முன்னுக்குச் செல்ல கணித சூத்திரத்தைப் பிரயோகித்து அதிவேகக் கணினியிடம் கட்டளைகள் போட்டான். அது ஒரு வாரம் வரை எண்களை நொறுக்கித் தின்று துப்பிக் கொண்டிருந்தது. ஒரு வாரம் கழித்து முடிவுகளைக் கணினி ஒரு வரைபடமாக ஆக்கிக் கொடுத்தபோது 100 ஆண்டுகள் பிரயாணம் சரியாக இருந்தது. ஆனால் அடையும் இடம் அன்ட்ரோமெடாவில் இருந்தது.

தெரியாத இடத்துக்குப் போவதிலும் ஓர் உற்சாகம் இருந்ததுதான். ஆனால் அங்கிருக்கும் நிலைமைகளை இப்போது தெரிந்த இவ்வுலகத்தோடு ஒப்பிட மனித அறிவுக்கோ, அதன் விளைபொருளான கணினி அறிவுக்கோ முடியாது. அக்கிக்கோவின் திட்டத்தில் இருந்த உண்மை அரவிந்தனுக்குப் புரிந்தது. தெரிந்த இடத்திற்குப் பிரயாணம் செய்து திரும்பினால் இன்றைய நிலைமைகளோடு ஒப்பிட ஏராளமான அடிப்படைகள் இருக்கும்; ஏராளமான தகவல்கள் கிடைக்கும். அறிவும் அறிவியலும் அதனால் முன்னேறும்.

இரவும் பகலுமாக அரவிந்தனும் அவனது இரண்டு உதவி விஞ்ஞானிகளும் கணிதங்களைச் சரிபார்த்தார்கள். சிறு சிறு திருத்தங்களாகச் செய்து கணினிக்கு ஊட்டினார்கள். ஒவ்வொரு திருத்தத்திலும் கணினி அவர்களை வெவ்வேறு மண்டலங்களுக்குத்தான் கொண்டு சென்றது.

காலம் என்பதற்கு முன்னே செல்ல மட்டும்தான் தெரியும். வெளி என்பதற்கு வெளியே செல்ல மட்டும்தான் தெரியும். இவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்தன. காலம் இல்லாமல் வெளி இல்லை.

அடுத்த சந்திப்பின்போது அக்கிக்கோ சொன்னார். ‘தூய காலம் என்பதை யோசியுங்கள். வெளி சம்பந்தப் படாத காலம். நமது கோளத்தின் சுழற்சியினால் பாதிக்கப் படாத காலம். நமது அண்டங்கள் உருவாகிய பெரு வெடிப்பிற்கு முந்திய காலம். அதற்கு முன் பின் என்பதோ, நேற்று இன்று நாளை என்பதோ இருந்திருக்காது. அதைப் பிடித்துக் கொண்டால் காலத்தை நாம் கைப்பற்றலாம். ‘

‘எப்படி ? நம் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதே! ‘

‘ஆமாம். ஆனால் இயற்கை விதிகள் நம் உடல் சம்பந்தப் பட்டவை. மனம் இயற்கை விதிகளுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் வெளியே சிந்திக்க முடியும். அதற்குக் கற்பனா சக்தி வேண்டும். கணக்கை மறந்து கற்பனையைத் தீவிரப் படுத்துங்கள்! ‘

இந்த ஆலோசனையில் அரவிந்தனின் மூளை கொதித்தது. மேலும் பல வாரங்கள் கணினியிலும் காகிதத்திலும் கழித்தான். முன்னேற்றமில்லை.

ஓய்ந்து போன ஒரு நாள் மையத்தின் வளாகத்தில் சென்று காலார உலவினான். ஜப்பானிய அமைதியும் அழகும் பொருந்திய மெளனச் சோலை அது. மரங்களும் நீர்ச் சுனைகளும் இருந்தன. ஒரு சிறு மரப்பாலம் கடந்து நடந்தபோது ஒரு குளம் இருந்தது. அசையாத குளம். தெளிந்த நீர். அதிலே ஒரே ஒரு ஜப்பானிய கார்ப் மீன் இருந்தது. அசைவேயில்லை. செத்துப் போனது போல. ஆனால் செத்துப்போகவில்லை. செத்தால் மிதந்திருக்கும்.

சாகாத நீர்; சாகாத மீன். ஆனால் அசைவு இல்லை. அசைவும் போக்கும் விரைவும் உயிர்களுக்கு முக்கியம் இல்லை. அவை அசையாமல் இருக்கலாம். காலத்தோடு ஓட வேண்டியதில்லை. ஆனால் காலம் தன்னைச் சுற்றி ஓடும்.

ஏதோ புரிந்து கொண்டவன் போல் அரவிந்தன் தன் கணினிக்குத் திரும்பினான். கடைசியாக வகுத்த சூத்திரத்தை மீண்டும் பார்த்தான். ஏன் இத்தனை கணிப்புகள் ? ஏன் இத்தனை அசைவுகள் ? ஏன் இத்தனை அதிர்வுகள் ?

இடையிடையே பல கணக்குகளை அழித்தான். சூத்திரம் சுருங்கிக் கொண்டே வந்தது. ‘மனத்தின் அசைவு ‘ என்ற ஒன்றைச் சூத்திரத்தில் சேர்த்தான். ‘அதற்கு அளவைகள் என்ன ‘ என்று கணினி கேட்டது. ‘எல்லையில்லை ‘ என பதில் எழுதினான்.

கணினி புதிய சூத்திரம் ஒன்றை எழுதியது. பல இடங்களில் எண்கள் இருக்க வேண்டிய இடங்களில் ‘எல்லையில்லை ‘ என்றே எழுதியது.

அதை மாதிரி வடிவமைப்புக்கு மாற்றியபோது, கப்சியூல் தொடங்கிய இடத்திலேயே இருந்தது.

அக்கிக்கோவின் அறைக்கு ஓடினான். அவருடைய கணினியில் மாதிரி வடிவமைப்பை இறக்கி அவருக்குக் காட்டினான்.

இதன் பொருள் என்ன என்று இருவரும் விவாதித்தார்கள். அரவிந்தன் ஒரு விளக்கம் சொன்னான்:

‘எனக்கு இப்படித் தோன்றுகிறது அக்கிக்கோ. கணினி வான்கலத்தைப் பிரயாணத்தில் ஈடுபடுத்தும். ஆனால் அது பிரயாணம் செய்யும் திசையின் பல பகுதிகள் நம்மால் நிர்ணயம் செய்ய முடியாதவை. கணினியே சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்போக்கில் நெகிழ்வான நியதிகளைக் கொண்டு நிர்ணயம் செய்துகொள்ளும். ஆனால் பிரயாணத்தின் இறுதியில் நூறு ஆண்டுகளுக்குப் முன்னால் இருக்கப் போகும் இதே இடத்தில் இறக்கும். ‘

அக்கிக்கொ யோசித்தார். ‘இருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும்! ‘

அரவிந்தன் சொன்னான்: ‘அப்புறம் ஏன் யோசனை ? நமக்கு இலக்குதானே முக்கியம் ? பிரயாணத்தில் ஈடுபடலாமே ? ‘

‘ஆமாம். ஆனால் நமது கெட்டியான அறிவியல் அடிப்படையில் இல்லாமல் நமக்குத் தெரியாத பல அனுமானங்களின் அடிப்படையில் இதை நடத்த வேண்டியுள்ளது. நீங்கள் சொன்னது போல நெகிழ்வான நியதிகள். ஆம்! செய்து பார்ப்போம். கவாபாத்தாவிடம் சொல்ல வேண்டும். தேதி குறித்து விடலாம். ஆனால்… ‘ அக்கிக்கோவின் முகத்தில் ஒரு இறுக்கம் உண்டாயிற்று.

‘என்ன அக்கிக்கோ ? ‘

‘கவாபாத்தா 100 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு இறங்கும்போது…. ‘

‘இறங்கும்போது ? ‘

‘இந்த இடம் இருக்க வேண்டுமே! அணுகுண்டுப் போரினாலோ இயற்கைப் பேரிடரினாலோ அழியாமல் இருக்க வேண்டும். இருந்தாலும் கதிரியக்க வீச்சினால் நச்சுப்பகுதியாக ஆகாமல் இருக்க வேண்டும்! ‘

‘ஏன் எதிர் மறையாகச் சிந்திக்கிறீர்கள் ? ‘

‘ஏனென்றால் நாங்கள் ஒரு முறை அனுபவித்திருக்கிறோம். ஏனென்றால் அறிவியல் முன்னேறியிருக்கும் அளவுக்கு மனித மனம் முன்னேறவில்லை. ‘

இருவரும் ஒரு நிமிடம் நின்று கவலைப்பட்டவாறு இருந்தார்கள். அப்புறம் அக்கிக்கோ சொன்னார். ‘சரி. கவாபாத்தாவை அழைத்து இந்தச் செய்தியைச் சொல்லவேண்டும். நாளைக்குக் காலையில் நமது தினசரிச் சந்திப்பின் போது மற்ற விஞ்ஞானிகளுக்கும் தெரிவித்துவிடுவோம். ‘ நடந்தார்.

நாளை ஒரு பரபரப்பான நாளாக இருக்கப் போகிறது என அரவிந்தனுக்குப் பட்டது.

*** *** ***

அன்று நல்ல தூக்கம் வந்தது. ஒரு காரியத்தை முடித்துவிட்ட நிம்மதியும் சாதனை மகிழ்ச்சியும் இருந்தன. கொஞ்சமாக சாக்கே அருந்திவிட்டுப் படுத்தான். வழக்கமாக வரும் நட்சத்திர மண்டலங்களும் அவற்றுள் நெளியும் புழுக்களும் கனவில் இல்லாமல் நிம்மதியாகத் தூங்கினான்.

அவன் தொலைபேசி கிணுகிணுத்தது. கண்களை உரித்துப் பார்த்தான். டிஜிட்டல் எண்காட்டி இரவு மணி 2.40 என்றும் ‘யஷிமோத்தோ ‘ என்றும் காட்டியது. ஏன் இப்படி அகாலத்தில் கூப்பிடுகிறார் ?

‘காலை வணக்கம் அகிக்கோ ‘ என்றான்.

‘அரவிந்தன். மன்னிக்க வேண்டும். கெட்ட செய்தி. ‘

‘என்ன ? ‘

‘கவாபாத்தா நேற்று இரவு நகருக்கு ஒரு விருந்துக்குச் சென்று வீடு திரும்பும்போது கார் விபத்தில் மாட்டிக் கொண்டார்! ‘

‘அப்படியா ? கடுமையான விபத்தா ? ‘

‘தீயணைப்புப் படையினர் காரை வெட்டி உடலை மீட்டிருக்கிறார்கள். காலையில் அவர் வீடு சென்று உடலுக்கு மரியாதை செய்துவிட்டு வரலாமென்றிருக்கிறேன். கூட்டத்தைக் காலை 11 மணிக்குத் தள்ளி வைத்திருக்கிறேன்! ‘ போனை வைத்துவிட்டார்.

தூக்கம் முற்றாகக் கலைந்து துக்கமும் இயலாமையும் சூழ்ந்தது. இங்கே காலத்தை வெல்லக் கணித சூத்திரங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால் காலமோ தன்னிஷ்டத்துக்கு மனிதனைக் கொத்திக் கொண்டு போகிறது.

புழுத் துளைப் பயணத் திட்டம் என்ன ஆகும் ?

*** *** ***

சோகம் சூழ்ந்த முகங்கள் கொண்ட விஞ்ஞானிகள் மேசையைச் சுற்றி அமைதியாக அமர்ந்திருந்தார்கள். கவாபாத்தாவுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியபின் அக்கிக்கோ பேசினார்: ‘எல்லாம் கைகூடி வரும்போது இந்தப் பேரிடர் நம்மைத் தாக்கியிருக்கிறது. நமது கெட்டியான அறிவியல், நெகிழ்வு நியதிகள் ஒன்றும் இந்த நிகழ்வுகளை விளக்கப் பயன்படுவதில்லை. ‘ பெருமூச்சு விட்டார்.

தொடர்ந்தார்: ‘கவாபாத்தாவை இரண்டு ஆண்டுகளாக இதற்குத் தயார் படுத்தி வந்தோம். இனி ஒரு வான்வெளிப் பயணியைத் தயார் படுத்த மேலும் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனவே நம்முடைய ஆய்வுகளைத் தொடருவோம். பயணி தயாரானவுடன் ஏவுகணைப் பாய்ச்சுவது பற்றி காலம் குறிப்போம்! ‘

அரவிந்தனை நிமிர்ந்து பார்த்தார். ‘நமது இளைய விஞ்ஞானி அரவிந்தனுக்கு நமது நன்றி. அவருக்கு மீதியுள்ள மூன்று மாதங்களை அவர் இங்கேயே தனக்கு விருப்பமான வழிகளில் கழிக்கலாம். தனது தாய்நாட்டிற்குத் திரும்பிப் போக விரும்பினாலும் எனக்குத் தடை ஒன்றுமில்லை! ‘

நேற்று மீதியிருந்த இரவு முழுவதும் அரவிந்தன் இதைத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். இன்று காலை இப்படி ஓர் இடிவிழும் என்பது எதிர்பார்த்ததுதான். அதற்கும் அவன் ஒரு பதில் தயாரித்து வைத்திருந்தான்:

‘அக்கிக்கோ! நான் ஓர் ஆலோசனை சொல்ல விரும்புகிறேன்! ‘

‘சொல்லுங்கள்! ‘

‘கவாபாத்தாவுக்கு பதில் நானே இந்தப் பயணத்தில் போகிறேன்! ‘

மேசையைச் சுற்றி அதிர்வலைகள் உண்டாயின. அக்கிக்கோ அவனைக் கூர்மையாகப் பார்த்தார்.

‘என்ன சொல்கிறீர்கள் ? நீங்கள் எப்படிப் போக முடியும் ? வான் வெளிப் பயணம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? என்ன அனுபவம் இருக்கிறது ? ‘

‘ஒன்றும் இல்லை. ஆனால் இது வழக்கமான வான்வெளிப் பயணம் இல்லை என்பது நம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். நான் இளைஞன். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். வான்கலம் நம் வான்வெளியில் எழும்போது ஏற்படும் அதிர்வுகளை என்னால் சமாளிக்க முடியும். ஒரு இரண்டு மூன்று வாரப் பயிற்சியில் இயக்கங்களைக் கற்றுக் கொள்வேன். கருங் குழியை அடைகின்ற கட்டத்திலிருந்து நடைபெறுவனற்றைப் பற்றி நம் யாருக்கும் தெரியாது. அவை இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டவை. அங்கு கவாபாத்தாவின் அனுபவமோ எனது அனுபவமின்மையோ ஒரு பொருட்டல்ல. ஆகவே போவதற்கு விருப்பமும் நடப்பனவற்றை எதிர்கொள்ளப் புத்திசாலித்தனமும் மட்டும்தான் தேவை. நான் தயார்! ‘ என்றான்.

ஒரு முழு நிமிடம் மேஜையில் மரண அமைதி நிலவியது. பின்னர் ஒரு விஞ்ஞானி பேசினார். ‘அகிக்கோ சான். அரவிந்தன் சான் கூறுவதில் உண்மை இருக்கிறது! ‘

‘வாயை மூடுங்கள்! ‘ என்று வெடித்தார் அக்கிகோ! ‘இதில் எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா ? முதலாவதாக இந்தப் பயணத்திலிருந்து உயிரோடோ உயிரில்லாமலோ திரும்புவதற்கு உறுதியேதுமில்லை. கவாபாத்தா நமது ராணுவத்தின் உறுப்பினர். இதற்கெல்லாம் தயார் என்று இருந்தவர். இவரோ இளைஞர். அயல் நாட்டுக்காரர். நம்முடைய அறிவியல் பேராசைகளுக்கு இவரைப் பலி கொடுக்க வேண்டுமா ? ‘

அரவிந்தன் பேசினான். ‘அகிக்கோ. அறிவியலைப் பொறுத்தவரை நான் உலகக் குடிமகன். நாம் பார்க்கும் நீலவானத்துக்கு அப்பாற்பட்ட வான் வெளியை யாரும் நாடு வாரியாக வகுத்து வைத்திருக்கவில்லை. கவாபாத்தாவின் அர்ப்பணிப்பு உணர்வு எனக்கும் உண்டு. வாழ்க்கை ஒரு எண்பது தொண்ணூறு ஆண்டுகள். வான் மண்டல அறிவு என்றென்றும் வாழ்வது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் பெற்றோருக்கு என்னை விட்டால் இன்னும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். பெரிய நஷ்டமில்லை. என்னுடைய இந்த முடிவுக்கு நானே பொறுப்பு என்னும் விளக்கமான பத்திரத்தை எந்த வழக்கறிஞர் மூலமாகவும் எழுதிக் கொடுக்கத் தயார். இது ஒன்றும் வேண்டாம் என்று நீங்கள் முடிவெடுத்தால் சரி! அடுத்த நாள் கவாபாத்தாவை போல என் சடலத்தை உங்கள் மைய வளாகத்தின் குளத்திலிருந்து நீங்கள் மீட்டுக் கொள்ளலாம்! ‘

எழுந்து நடந்தான்.

*** *** ***

வான்வெளிக் கணிதத்திற்கான அனைத்துலக தோக்கியோ மையத்தின் பின்னால் இருந்த விசாலமான திடலில் வான்கலம் கம்பீரமாக நின்றிருந்தது. எட்டு மணி நேரத்திற்கு முன்னாலேயே அதன் இயந்திரங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு இறக்க எண்ணிக்கை தொடங்கப் பட்டிருந்தது. ‘பாய்ச்சும் நேரம் இன்னும் 2 மணி 58 நிமிடம் 30 விநாடி… 29 விநாடி.. 28 விநாடி.. ‘ என்று தன்பாட்டுக்கு எண்ணிக் கொண்டிருந்தது.

அக்கிக்கோ அரவிந்தனின் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். ‘அரவிந்தன். இந்தப் பிரயாணத்திலிருந்து உங்களைத் தடுக்கும் முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். அதனால் இப்போது மகிழ்ச்சி அடைகிறேனா, வருத்தப் படுகிறேனா தெரியவில்லை. போய் வாருங்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள். ‘

அழுத்தப் பிடித்திருந்த அவர் கைகளைப் பிரித்துக் கொண்டு அவன் நடந்தான். வான்கலத்தின் படிகளில் ஏறி மேல் தளத்தை அடைந்தான். கேப்சியூலில் அமர்ந்து பிணைக்கும் வார்ப்பட்டைகளை முறைப்படி பிணைத்துக் கொண்டான். யூரேனியம் அணு உலையின் சத்தம் ‘ஹம் ‘ என்று கேட்டுக்கொண்டிருந்தது.

பரிசோதனைப் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு டிஜிடல் விவரத் திரைகளில் இயந்திர இயக்கங்கள் பற்றிப் பார்த்தான். எலாம் சரியாக இருந்தன.

வான்கலம் பாய்ச்சும் இறக்க எண்ணிக்கை 10ஐ அடைந்தது. பூஜியத்தை அடைந்ததும் தன் அழுத்தமேற்றப்பட்ட உடைக்குள் தடித்த கையுறைகளுக்குள் விரலை வான்கலத்தை மண்ணிலிருந்து உயர்த்தும் சிவப்புப் பொத்தானில் வைத்து அழுத்தினான்.

ஒன்றும் நடக்கவில்லை. திடாரென்று அணு உலையின் சுருதி குறைந்தது. முற்றாக நின்றது. முன்னாலிருந்த டிஜிட்டல் திரைகளில் எல்லா சமிக்ஞைகளும் மறைந்து கருப்பாக ‘ஓ ‘ வென்று கிடந்தன. காதுக் குழாய்களில் வான்கலம் பாய்ச்சும் குழுவின் உத்தரவுகள், பேச்சுகள் அனைத்தும் ஓய்ந்து மரண அமைதி நிலவியது. ‘ஹெலோ பேசுங்கள், பேசுங்கள் ‘ என்ற அவனுடைய கூச்சலுக்குப் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை.

அவசர காலத் திறப்புப் பொத்தானை அழுத்தினான். கேப்சியூலின் கூடு திறந்தது. இணைப்புகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வான்கலத்தின் ஏணியை அடைந்து கீழே இறங்கினான்.

கீழே பலர் நின்றிருந்தார்கள். எல்லாரும் புதியவர்கள். பழுதுபார்க்கும் குழுவா ? அக்கிக்கோவைத் தேடினான். அவரைக் காணவில்லை. தூரத்தில் தெரிந்த வான்வெளி மையத்தின் வாயிலில் பார்த்தான். அங்கும் அவர் இல்லை.

‘என்ன நடந்தது ? ஏன் வான்கலம் கிளம்பவில்லை ? ‘ என்று அருகிலிருந்த வெள்ளைக் கோட்டு அணிந்திருந்தவரைக் கேட்டான்.

அவர் முன்னால் வந்து அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கினார். பேசினார். ‘திரு அரவிந்தன். வணக்கம். நல்வரவு. ‘

‘யார் நீங்கள் ? அக்கிக்கோ எங்கே ? ‘

‘என் பெயர் ஸ்டாவன் யஷிமோத்தோ. நான் இந்த மையத்தின் இயக்குநர் ‘ என்றார்.

சுற்றிப் பார்த்தான். எல்லாம் முன் போலத்தான் இருந்தன. எங்கிருந்து முளைத்தார் இந்த விசித்திர மனிதர் ?

‘நீங்கள் எப்படி இந்த மையத்தின் இயக்குநராக முடியும் ? பேராசிரியர் அக்கிகோ யஷிமோத்தொ அல்லவா இதன் இயக்குநர் ? எங்கே அவர் ? ‘

‘பேராசிரியர் அக்கிக்கோ யஷிமொத்தோ இறந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. நான் அவரது கொள்ளுப் பேரன்! ‘

‘என்ன, என்ன… ? ‘

‘2103-ஆம் ஆண்டுக்கு உங்களை வரவேற்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன் ‘ என்றார் ஸ்டாவன் யஷிமொத்தோ.

*** *** ***

continued…

*** *** ***

kgesu@pd.jaring.my

Series Navigation