நீ….!

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

தாஜ்மூர்க்கமாய் அது
துரத்திய போது
திசைக்கொருவரென
வானில் உந்திப் பறந்தோம்
கண் கொள்ளா ஜாலங்கள்
மனதில் தேங்க வட்டமிட்டு
அசை போட்டப் பொழுதில்
புவிஈர்ப்பிற்கு இசைந்து
தாழ இறங்கிப் பறந்தநேரம்
ஏதோவொரு புள்ளியில்
பேச்சுத் துணையென
கண்டு கொண்ட நாம்
காற்றில் ஆர்வமாய்
படபடத்தோம்
கடல் மலை வனாந்திரம்
சூறை இடி மின்னல் மழைச்சுட்டி
மண் அதிர்வுகளென பேசினாய்
நீயே பேசிய பேச்சில்
மிதந்து திரும்பிய வான்பரப்போ
கையகலத்திற்குமில்லை!
பூமியில் என் இருப்பும்
கடல் அலைக்குள் என்பதில்
நான் மௌனமான நேரம்
உன் சிறகுகளின் துகள்களை
வலி கொண்டு கொத்தி
காற்றின் திசையில் நெளியும்
கவிதைகள் படைக்கிறாய்… நீ!

**** *** ***

மழைக் காலத்திற்கு முன்
சிலிர்த்த அதே பொழுதுகளை
பின் தொடுவதெங்கே?
பொன்கதிர் பழுத்த கணத்தை
உச்சிப் பொழுதுகளில்
காண்பதெப்படி?
அந்த மலை முகட்டின்
மலர்ச் செறிவுகளை
வியந்த பொழுதுகளும்
தினத்தின் இருளுக்குள்தான்!
கோலப் பின்னலைக் கண்டு
இளைப்பாறுவதை விட்டு
வார்த்தைகளால் என்னை
துழாவுகிறாய்!
கோணம் அனைத்திலும்
தாவவிடும் பார்வை
தளரும் நேரமேனும்
பின்கிடக்கும்
நிழலைப் பார்த்தாயா… நீ!

**** *** ***

உன் தூரிகை உயிர்ப்பிக்கும்
கோட்டுச் சித்திரங்கள்
வார்த்தைகளின் அமைதி கொண்டவை
வானம் காட்டும் நீளக் கோட்டில்
சூரியன் சந்திரனும்
வஸ்தின்றி வேறில்லை உனக்கு
அடர்ந்து படர்ந்த கறுப்பு
கவிழ்ந்த இரவின் நிதர்சனம்
தூரத்து வெள்ளிப் புள்ளிகள்
நட்சத்திரங்களாக
உடையும் மனக்கசிவு
மூடிய வான்தூறலாய்
சந்தோஷத் தெறிப்புகள்
மின்னல் கீற்றுகளென
நிமிர்ந்து காண நிற்கிறாய்!
உற்ற ஜீவன்களை
கோட்டுக்குள் அடக்காமல்
பிசிறாய் நழுவவும் விடுகிறாய்
சிம்மாசனம் அரண்
அரண்மனை வழிமக்கள்
தாதிகளெனப் பாராது
தூக்கிப் பிடித்த தூரிகையால்
உன் இருப்பை
மண்ணில் புழுவாய்
நெளியவிடுகிறாய்… நீ!

**** ***** *****

உன் கரங்கள் உருவாக்கும்
பின்னல் ஆடையல்ல
காலம்!
பக்கங்கள் கொண்ட
ருத்திர கவிதை அது!
கழுத்தை சுற்றிய
பிடிகளைத் தளர்த்தி
இளைப்பாற முடியுமெனில்
காலாற நடப்போம்
கால விழிப்பில் வண்ணப்
பூக்கள் கொண்டாடும்
குதூகலத்தினூடே
அருவிப் பெருக்கும்
நதிகளின் சலனமும்
என் மௌனத்தைப் பேச
உலா வரும் தென்றல்
தழுவ உறுதி கூறலாம்!
குழந்தையாய் தேம்பும்
உன் அடத்தை
தூரத்து குயிலோசை
சாந்தப்படுத்தலாம்
ஒரு புள்ளியில்
உறைந்தவற்றை எல்லாம்
மலரும் பருவத்தில்
மீட்டுருவாக்கலாம்!
வசந்தத்தைப் போற்றுவோம்
சுழுக்கேறிய கழுத்துடன்
தலையசைக்க முடியுமா…. நீ?

*** **** ***
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

நீ

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

ரஜித்


காதல் சிறகை
காற்றினில் விரித்து. . . .
உயிரையை நனைக்கும்
சுசிலாவின் ஊசித்தூரல் நீ

காற்றாகத்தான் உனைச்
சுவாசித்தேன்
ஏழு சுரங்களாய்
எப்படித்தான் ஆனாயோ

எழுத்துக்களாய்
சிதறிக்கிடந்தேன்
எனைக் கவிதையாக்கினாய் நீ

ஆறேழு நாள்
அடைமழைக்குப் பின்
சூரிய முகம் நீ

கத்தரி வெயிலைக் கழுவும்
கான மழை நீ

நாம் காதல் வளர்த்த
அந்த வேப்பமரம்
வெள்ளப் பெருக்கிலே
வீழ்ந்து விட்டதாம்
அழுதேன்
அந்த இடத்தில்
இப்போது கோயிலாம்
தொழுகிறேன்

‘ த ‘ ஆக இருந்தேன்
சுழியாக நீ இணைந்தாய்
‘ தீ ‘ யாகி எரிகிறேன்

காதலாய் ஒரு கவிதை எழுத
சிலருக்கு கற்பனை தேவை
சிலருக்கு அனுபவம் தேவை
எனக்குத் தேவை
கட்டை விரலாக நீ

Series Navigation

நீ

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

மலர்வனம்


என் துக்கத்திலும்
கண்ணீராய் நீ…………

என் தூக்கத்திலும்
கனவாய் நீ………..

என் மகிழ்ச்சியிலும்
சிரிப்பாய் நீ…….

என் மடியிலும்
மழலையாய் நீ………..

என் கவிதையிலும்
கருவாய் நீ………

என் கருவிலும்
உருவாய் நீ………..

என் விழியிலும்
இமையாய் நீ………….

என் வழியிலும்
நிழலாய் நீ……….

என் இதயத்திலும்
துடிப்பாய் நீ……….

என் இரவிலும்
நிலவாய் நீ…………

என் கனவிலும்
கவிதையாய் நீ………..

என் கன்னத்திலும்
குழியாய் நீ………….

என் உயிரிலும்
உணர்வாய் நீ…………..

என் உள்ளத்திலும்
உறவாய் நீ………..

என்னுள்ளே வளர்த்துக் கொண்ட
எல்லா நினைவுகளிலும் நீ………….

வழக்கம் போல் எதைப்பற்றியும்,
என்னைப்பற்றியும் புரியாமல்,
எப்போதும் போல நீ………….

***

malar_vanam@sify.com

Series Navigation

நீ

This entry is part [part not set] of 15 in the series 20010325_Issue

சேவியர்


ஒரு துளி…
கொல்லைப்புறத்தில் ஓர் சருகின் மேல்…
புாியவில்லை…
மரம் தேக்கிவைத்த மழையின் மிச்சமா ?
இரவு நகர்ந்தபோது விழுந்த எச்சமா ?
எதுவும் புாியவில்லை…
அடுத்த நிமிடம் காற்று வீசலாம்
சருகோடு சேர்ந்து துளியும் சமாதியாகலாம்..
அழுக்கான எறும்பொன்று குளித்து முடிக்கலாம்….
அலகுக்குள் சிட்டொன்று குடித்தும் முடிக்கலாம்…
இந்த நிமிடம் அது தண்ணீர்…

எந்த மேகத்தின் பாகம் அதென்று புாியவில்லை…
ஏனென்றால்
எந்த மேகத்துக்கும் பாகமில்லை…
சில நேரங்களில் கடல் சொல்லாத சேதியை
கரைகளில் தங்கும் நுரைகள் சொல்லும்…
மனிதன் எழுத மறுக்கும் உண்மைகளை
மனுச் செய்யும் மரணம் சொல்லும்….
நாளை என்பது
இலையின் மேலிருக்கும் நீர்த்துளி என்று…

***

Series Navigation

நீ

This entry is part 2 of 3 in the series 19991114_Issue

ரேகா ராகவன்


உன்னை நினைக்கையில்
கறிவேப்பிலைக் கொசுறாய்க்
கூடவே வரும் சில ஞாபகங்கள்……..

நினைவோடு நினைவாய்……..

பனிவிலகும் வேளை
நேற்றைய நிலவின் எஞ்சிய ஒளியில்
இன்றைய இளஞ்சிவப்புச் சூரியனுக்காய்க்
காத்துக் கிடந்த காலைப் பொழுது

இளங் காலை வெயிலில்
சின்னச் சின்ன மத்தாப்புப் பூக்களாய்த்
தெறிக்கும் தோட்டத்து நீர்ப் பாய்ச்சிகள்

மெல்லிய சத்தம் கேட்டதும் சப்த நாடியும் ஒடுக்கித்
தலைதூக்கி நிமிர்ந்து
நம் கண்ணோடு கண் பார்த்துச்
சட்டென்று ஓடிவிடும் துருதுரு அணில்கள்

பாலத்தின் மேல் செல்கையில்
இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை
தெரியும் நீலக்கடலை உரசும் வெளிர்நீல வானம்

எல்லையில்லாமல் சிறகடித்துப் பறக்கும் வெண் பறவை
அக்காட்சிக்கு உயிர் கொடுப்பதாய்………

வசந்த காலத்தில் மெல்ல விரிந்த வண்ணப் பூவின்மேல்
காற்றாய் அமர்ந்து இன்றுவரை தான் சேகரித்த
செய்திகளை ரீங்காரமாய்ச் சொல்லும் கறு வண்டு

உள்புகுந்து ஊடுறுவி ஆக்ரமித்து
உடல்முழுதும் பஞ்சாகிப் பறந்து
பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியாய்
ஒன்ற வைக்கும் இன்னிசை

சாலையின் இருபுறமும் நீண்டு சாய்ந்த மரங்கள்
இலையுதிர்காலத்துப் பனியாய்
உதிரும் வண்ண இலைகள்

பாதை இதோ முடிகிறது என நினைத்து நெருங்குகையில்
நம்மை உள்வாங்கி சரேலென விரிந்து
இன்னொரு அழகிய இயற்கை ஓவியத்தினுள்
கூட்டிச் செல்லும் விசித்திரம்………..

நினைவுகளின் தாக்கத்தில்
மனம் நிறைந்து பொங்கியதில்
சிந்திய சில ஞாபகங்கள்
இன்று இக்காகிதத்தில் கவிதையாய்

திண்ணை நவம்பர் 14, 1999

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< அசோகமித்திரனின் ‘நம்பிக்கை ‘ என்ற கதைஒருத்தருக்கு ஒருத்தர் >>

Scroll to Top