நினைத்தேன். சொல்கிறேன். தமிழரும். தனிக் குணமும் பற்றி.

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

PS நரேந்திரன்


எனது நண்பர் ஒருவருக்கு ஒரு பழக்கம். நீங்கள் எது சொன்னாலும் அதற்கு எதிராக எதாவது சொல்லி விட்டுதான் ஓய்வார். எப்படி அவருக்கு இந்த பழக்கம் வந்தது என்று தெரியவில்லை. இவ்வளவிற்கும், நன்கு படித்தவர் அவர்.

உதாரணமாக, ‘முயலுக்கு நாலு கால் இருக்கிறது ‘ என்று நீங்கள் சொன்னால், ‘இல்லவே இல்லை. ஆப்ரிக்காவில் இருக்கும் ‘ஙங்ஙபிங்ங ‘ என்ற முயலுக்கு மூன்றே கால்கள்தான் உண்டு ‘ என்று அடித்துச் சொல்வார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை என்பதால், பெரும்பாலான சமயங்களில் நான் வாயை மூடிக் கொள்வேன்.

‘நீ ஏன்யா இப்படி இருக்கே ? ‘ என்று கேட்டால், ‘தமிழரின் தனிக் குணம் ‘ என்று மந்தஹாசப் புன்னகையுடன் பதில் வரும்.

தமிழரின் தனிப் பெரும் குணங்கள் என்னென்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசை. பல நாட்கள் யோசித்து, கடைசியில் மூன்று முக்கிய குணங்களைக் கண்டறிந்தேன்.

1. தாழ்வு மனப்பான்மை.

2. ஒற்றுமையின்மை.

3. எளிதில் உணர்ச்சி வசப்படுதல்.

தமிழர்களின் ‘தாழ்வு மனப்பான்மை ‘ உலகப் பிரசித்தி வாய்ந்தது. ‘நாயினும் கடையர்களாக ‘ தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டு அழிந்து கொண்டிருக்கும் இனம், உலகத்தில் தமிழ் இனம் மட்டுமே. நான் பல மாநிலங்களில், நாடுகளில் இருந்திருக்கிறேன். பல இன மக்களுடன் பழகி இருக்கிறேன். தமிழர்களைப் போல ‘தாழ்வுணர்ச்சி ‘ கொண்ட மக்களை இதுவரை பார்த்ததில்லை. இனிமேலும் பார்ப்பேனா என்பது சந்தேகமே. Self Confidence என்பது சுத்தமாகக் கிடையாது.

ஒற்றுமையின்மை குறித்து சொல்லவே வேண்டியதில்லை. இந்தியா, பாகிஸ்தானைக் கூட ஒன்று சேர்த்துவிடலாம். பத்து தமிழர்களை ஒன்று சேர்ப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். வெட்டிப் பேச்சு, விதண்டாவாதம் போன்றவையும் ஒற்றுமையின்மையில் அடங்குவதால் அது பற்றி தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை.

தமிழனின் உணர்ச்சியை மிக எளிதாகத் தூண்டமுடியும். தமிழ் சினிமாக்கள் அதற்கு நல்ல உதாரணம். ‘கடா ‘ மீசை வைத்துக் கொண்டு, ‘அம்மா, ஆத்தா ‘ என்று பேடித்தனமாக அழும் சினிமா தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியடையும். கோபம் வந்தால், ஒன்று அரிவாளைத் தூக்குவார்கள் அல்லது கிணற்றில் குதித்து செத்துப் போவார்கள். சாதி, மத, இன, மொழியின் பேரால் தமிழ்நாட்டில் இத்தனை கட்சிகள் இருப்பதும் ‘உணர்ச்சிவசப்படுதலின் ‘ உதாரணமே.

மேற்கூறிய மூன்று குணங்களையும் சிறப்பாக ‘exploit ‘ செய்பவர்கள், தமிழக அரசியல்வாதிகளும், தமிழ் சினிமா நடிகர்களும்தான். தமிழர்களை ஏறக்குறைய ‘கொத்தடிமைகள் ‘ மாதிரி வைத்திருக்கும் ‘வித்தைகள் ‘ அவர்களுக்கு மட்டுமே அத்துபடி.

இன்னும் பல தனிக்குணங்கள் தமிழருக்கு இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லலாம்.

***********

இன்றைக்கு ஏறக்குறைய எட்டுக் கோடி தமிழ் மக்கள் உலகமெங்கும் வாழ்கிறார்கள்.

இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், மலேசிய தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள்…. என்று ஆலமரமாய் விழுது விட்டுப் பரவி இருக்கிறார்கள். அறிஞர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வியாபாரிகள், கலைஞர்கள் என்று ஒவ்வொரு துறையிலும் தங்களின் முத்திரையைப் பதித்து, வெற்றிக்கும், கடும் உழைப்பிற்கும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்கள்.

போற்றத்தக்க அவர்களின் சாதனைகள் தனி மனித சாதனைகள் மட்டுமே.

‘எட்டுக் கோடி மக்கள் கொண்ட ‘ ஒரு இனத்தின் சாதனைகள் அல்ல அவை. என்னைப் பொறுத்தவரை, தமிழர்கள் ஒரு இனமாக தோல்வியடைந்து விட்டார்கள். ஏறக்குறைய, அமெரிக்க ஜனத்தொகையில் நான்கில் ஒரு பகுதி இருக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த சாதனைகள் என்று குறிப்பிடத்தக்கவை எதுவுமே இல்லை.

இந்திய சுதந்திரத்திற்குப் பின், தமிழர்களுக்கு நல்ல தலைமை அமையாததும் ஒரு காரணமாக இருக்கலாம். நேர்மையான, ஆண்மையுள்ள, திறமையான, பொதுநல நோக்கம் கொண்ட தலைவர்கள் நமக்குக் கிடைக்காதது ஒரு துரதிருஷ்டமே. காமராஜர், ராஜாஜி போன்ற நேர்மையாளர்கள், நிர்வாகம் தெரிந்தவர்களை தமிழர்கள் மதித்தது இல்லை. சினிமாக் கவர்ச்சியால் உந்தப்பட்டு, நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டோம்.

இப்போது இருக்கும், கூத்தணங்கு மற்றும் கருணைத் தம்பிரான் போன்றவர்களை தலைவர்கள் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருக்கிறது. கொள்ளைக் கூட்ட தலைவர்கள் என்று சொல்வது வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்.

****

தாழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தில், மிக வித்தியாசமாக, நம்பிக்கை தருபவர்களாக இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் மட்டுமே.

மிகவும் துன்பப் பட்ட மக்கள் என்பதால், இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு மாறாத அன்பும், இரக்கமும் உண்டு. நானறிந்தவரை, பரந்த நோக்குடையவர்கள், கல்வியாளர்கள், தமிழுணர்வு கொண்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நிறைய இருக்கிறார்கள். அவர்களூடன் அதிகம் பழகும் (கதைக்கும் ?) வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை எனினும், வேலை நிமித்தமாக இங்கு U.Sல் நான்கைந்து பேர்களைச் சந்தித்திருக்கிறேன். மிகுந்த திறமைசாலிகள்.

உண்மையான சுதந்திரந்தின், விடுதலையின் மதிப்பு அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இலங்கையில் அமைதி திரும்பினால் (திரும்பவேண்டும் என இறைவனை பிரார்த்திப்போமாக), இலங்கைத் தமிழர்களின் முன்னேற்றம், தாயகத் தமிழர்கள் ‘மூக்கின் மேல் விரலை வைக்கும்படியாக ‘ இருக்கும்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. வன்முறையால் வரும் வெற்றி, ‘மூடிவைக்கப் பட்ட நெருப்பு ‘ போன்றது என்பது என் கருத்து. மீண்டும் பற்றி எரிய அதிக நேரம் பிடிக்காது. அமைதித்தீர்வே அனைவருக்கும் நல்லது என்பதைச் சண்டையிடும் இரண்டு கட்சிகளும் உணருவார்கள் என நம்புகிறேன்.

புகழ் பெற்ற யாழ்ப்பாண நூலகத்தைக் காண வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய ஆசை. இன்று எறியூட்டப்பட்டு, அழிக்கப்பட்டிருந்தாலும் நூலகம் இருந்த இடத்தையாவது பார்த்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். கலைமகள் வாழ்ந்த இடமல்லவா அது ?

அடுத்த பத்தாண்டுகளில் நான் செல்ல வேண்டிய, பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் யாழ்ப்பாணமும் இருக்கிறது.

‘சொந்தச் சகோதரர்கள், துன்பத்தில் சாகக் கண்டு, சிந்தை இரங்குவது ‘ குற்றமாகக் கருதப்படுகிறது, இன்றைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களால். இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது ?

இதுபோன்ற செயல்களை நாம் ஒன்றுபட்டு எதிர்த்திருக்க வேண்டும். நமக்குதான் ஒற்றுமை என்பது கிடையாதே ? சொல்லி என்ன பயன் ?

****

‘உலகத்தை திருத்த நினைக்காதீர்கள் ‘ என யாரோ சொன்னார்கள்….(எழுத்தாளர் சுஜாதா என்று நினைக்கிறேன்).

அதுபோல, உலகத்தைத் திருத்துவது என் எண்ணமல்ல. அதற்கான தகுதியும் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. எனக்குச் சரி எனப் பட்டதை உங்களூடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் குப்பை என விட்டுத் தள்ளுங்கள். இதில் என்ன இருக்கிறது ?

சரியானவை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவை சரியானவையுமல்ல. தவறானவை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவை தவறானவையுமல்ல. எல்லாம் பார்வையில்தான் இருக்கிறது.

‘எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு ‘

****

psnarendran@hotmail.com

Series Navigation

நினைத்தேன். சொல்கிறேன். தமிழர்களும், சினிமா நடிகர்களும் பற்றி…

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

PS நரேந்திரன்


கிராமத்தில் இருக்கும் என் உறவினரைப் பார்க்க பஸ்சில் போய்க் கொண்டிருந்தேன்.

மதுரைப் பக்கம் ஒரு கிராமம் என்று வைத்துக் கொள்ளூங்களேன்.

பாதி வழியில் பஸ் பிரேக் டவுன் ஆகி நின்று விட்டது. உடனே எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, ஐம்பது வயது மதிக்கத்தக்க, கிராமத்துப் பெரியவர் சொன்னார்,

‘என்னா நிர்வாகம் பண்றானுங்க ? ஒரு பஸ்ச கூட ஒழுங்கா ஓட்ட முடியாம. நடிகர் ‘சோசோ ‘ ஆட்சிக்கு வந்தாதான் எல்லாம் சரியாகும் போல!! ‘ என்றார். (நடிகர் ‘சோசோ ‘ என்பதை, புகழ் பெற்ற இன்றைய ‘நம்பர் ஒன் ‘ நடிகர் என்று மாற்றிப் படித்துக் கொள்க).

எனக்கு வியப்பில் பேச்சே வரவில்லை. சினிமா நடிகர் ‘சோசோ ‘ ஆட்சிக்கு வருவதற்கும், ஒழுங்காக பஸ் ஓடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று.

சினிமா நடிகர் ‘சோசோ ‘ என்ன நிர்வாகப் புலியா ? அல்லது பொருளாதார மேதையா ? அவர் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாம் ஒழுங்காக நடந்து விடுவதற்கு.

விஞ்ஞானம் வளர்ந்த இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட தமிழ்நாட்டு ஜனங்கள் எவ்வளவு அறியாமையுடன், பாமரத்தனமாக இருக்கிறார்கள் ? அல்லது பாமரத்தனத்துடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்!!.

தமிழ்நாடு இன்று இருக்கும் சீரழிந்த நிலைமைக்கும், கலாச்சார சீர்கேட்டிற்கும் முக்கிய காரணம் சினிமாவும், ‘வெத்து வேட்டு ‘ சினிமா நடிகர், நடிகைகளும் மட்டுமே என்பதில் எனக்கு இரண்டாவது கருத்தே இல்லை.

சினிமாவில் நடித்து நான்கு படம் ஓடியவுடன், சில்லறைப் பயல் கூட தலைவனாகி விடுகிறான். உலகத்தில் வேறு எங்காவது இப்படி நடக்குமா ? நடக்கிறதா ?

அப்பாவி ரசிகர்களைத் தூண்டி விட்டு அல்லது தனக்குத்தானே, ‘வருங்கால முதலமைச்சரே வருக, வருக ‘ என்று ஊர் பூராவும் போஸ்டர் அடித்து போட்டுக் கொள்கிறான். தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி என்பது ‘ங்கொப்பன் வீட்டில் தொங்குகிற புடலங்காயா ? ‘ பறித்து மடியில் போட்டுக் கொள்வதற்கு ? ரிக்ஷாக்காரர்களூக்கு மழைக் கோட்டு கொடுப்பதும், பத்து ரசிகனுக்கு இலவச கல்யாணம் செய்வது மட்டுமே ஆள்வதற்குரிய தகுதியாகி விடாது பிரதர். கொஞ்சம் மண்டைக்குள்ளும் சரக்கு வேண்டும். அதையும் விட, தெருவில் இறங்கி ஜனங்களுக்காக உழைக்க வேண்டும். போராட வேண்டும். செய்ய முடியுமா உங்களால் ? செய்திருக்கிறீர்களா இதுவரை ?

அதிருக்கட்டும். நாம் ஏன் கண்டவனையும் தலைவராக்குகிறோம் ? அவன் தகுதி, தராதரம், ஒழுக்கம், கல்வி இது பற்றி எதாகிலும் யோசிக்கிறோமா ? சினிமாவில் நடிப்பது மட்டும்தானா நம்மை ஆள்வதற்குரிய தகுதி ? கேவலமாக இல்லையா இது ?

நாம் இப்படி இருப்பதால்தான், தலைமைக்குத் தகுதியற்ற தற்குறிகள் கூட நம்மை அடக்கி ஆள்கிறார்கள். மற்ற மாநிலத்தவர் நம்மைப் பார்த்து ஏளனத்துடன் இகழ்ச்சியாகச் சிரிக்கிறார்கள். நம் அடையாளத்தை இழந்து அவமானப் பட்டு நிற்கிறோம்.

‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி ‘ மாண்பிழந்து, மதிப்பழிந்து, மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது.

நிழலையும் நிஜத்தையும் வேறுபடுத்திப் பார்க்கும் அறிவுத்திறன் தமிழர்களுக்கு மழுங்கிவிட்டதென நினைக்கிறேன். சினிமாவில் நல்லவனாக ‘நடிக்கும் ‘ ஒருவன், நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பான் என்று அப்பாவித்தனமாக நம்புகிறார்கள். சினிமாவைத் தொடர்பு படுத்தாமல் அவர்களால் எதையும் பேச முடியவில்லை. சிந்திக்க முடியவில்லை. அந்த அளவிற்கு சினிமா மோகம் அவர்கள் மூளையில் அறையப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும், சீர் கெட்ட இந்த சினிமா நடிகர்களைத் தூக்கி விடுவதுவே தங்களின் தலையாய கடமை என்பது போல் எழுதி வருகின்றன. இப்படி எழுதினால் சீக்கிரமாய் சில்லறை பார்க்கலாம் என்பது ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். சில்லறை பார்ப்பதுதானா முக்கியம் ? சமுதாயப் பொறுப்பு என்னவாயிற்று ? பாரம்பரியமிக்க பத்திரிகைகள் கூட இப்படிச் செய்வது வருத்தத்திற்குரிய விஷயம்.

ஒரு பெரிய அறிவாளி மற்றும் ஒரு சினிமா நடிகன் தமிழ்நாட்டுத் தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். யாருக்குக் கூட்டம் சேரும் ? கண்டிப்பாக சினிமா நடிகனுக்குத்தான். அறிவாளியை தெரு நாய் கூட முகர்ந்து பார்க்காது. இதுதான் இன்றைய நிலை.

‘கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு ‘ கூத்தாடிகளின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது.

சினிமா நடிகர்கள் அல்லது சினிமா சார்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஏறக்குறைய 35 வருடங்களாக ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சாதனை என்ன ? தமிழ்நாட்டைக் குட்டிச் சுவராக்கியது மட்டுமே. மக்ளைச் சுரண்டிச் சுரண்டி, கொள்ளை அடித்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கி விட்டார்கள். தமிழ் மக்கள் வாழ வகையின்றி வெளி மாநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக போய்க் கொண்டிருக்கிறார்கள். நிர்வாகம் என்றால் ‘எத்தனை கிலோ ? ‘ என்போரெல்லாம் முதலமைச்சர்களாகவும், மந்திரிகளாகவும் ஆகியதால் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது. ஊழலும், லஞ்சமும், வன்முறையும் இன்று தமிழ்நாட்டில் தலை விரித்தாடுகிறது. நீதியும், நேர்மையும், நெறி முறைகளும் செத்துப் போய், சமாதி கட்டியாகி விட்டது.

இவ்வளவிற்குப் பிறகும் நமக்கு புத்தி வரவில்லை. இன்னொரு சினிமாக்காரனைத் தூக்கி அரியாசனத்தில் அமர்த்தத் துடிக்கிறோம். வெட்கக் கேடான விஷயம் இது. நல்லவர்களும், நிர்வாகத் திறமை வாய்ந்தவர்களும், படித்தவர்களூம், நேர்மையாளர்களூம் தமிழ்நாட்டில் இல்லவே இல்லையா என்ன ? (அப்படியே இருந்தாலும் நாம் அவர்களூக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்பது வேறு விஷயம்).

இதில் ஒரு வேடிக்கையைப் பாருங்கள். பொதுவாக இந்த மாதிரி நம் ஜனங்கள் உச்சாணிக் கொம்பில் தூக்கிவிட நினைக்கும் நடிகர்கள், வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். ‘ழ ‘ வுக்கும், ‘ள ‘ வுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இருப்பார்கள். எவராவது ‘கோணங்கி ‘த் தமிழ்க் கவிஞர், ‘இந்திரன் சந்திரன் ‘ என்று புகழ்ந்து பாட்டு எழுதுவார் ( ‘என்னா செய்யிறது ?. நாய் வித்த காசு, குரைக்கவா போகுது ? ‘). தமிழ் இசையமைப்பாளர் யாராவது மூளையைக் கசக்கி அதற்கு மெட்டுப் போடுவார். ஒரு பஞ்சப் பரதேசி ‘டைரடக்கர் ‘, உலகத்திலுள்ள அத்தனை சினிமாவும் பார்த்து, உல்டா பண்ணி ஒரு கதை எழுதுவார் ( ‘அண்ணே, நாலு பாட்டு. அஞ்சு ஃபைட்டு. ரசிகனுங்கள்ளாம் அவுட்டு ‘). நடிகர் எங்காவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் குடித்து கும்மாளமிட்டுவிட்டு வந்து, கையைக் காலை ஆட்டி ‘நடித்து ‘, பெயர் வாங்கிக் கொண்டு போய் விடுவார்.

இப்படியாக, பத்து தமிழர்கள் ஒன்று சேர்ந்து, எவனாவது ஒரு கேடு கெட்டவனை உயரத்தில் உட்கார வைத்து விடுவார்கள். அவன் நம் தலையில் நன்றாக மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பான். சினிமா நடிகர்கள்தான் இதற்குக் முழுக் காரணம் என்று சொல்ல மாட்டேன். ‘இளிச்சவாயன் ‘ என்று நாமே நம் நெற்றியில் எழுதி ஒட்டிக் கொண்டு திரிந்தால், ஏமாற்றாமல் என்ன செய்வார்கள் ? நம்மை நாம்தான் திருத்திக் கொள்ள வேண்டும்.

வேறு எந்த இந்திய மாநிலத்திலாவது, ஒரு தமிழநாட்டுக்காரர் இந்த மாதிரியான உயர்நிலைக்கு, இத்தனை எளிதாக வர முடியுமா ? அல்லது வர விட்டுவிடுவார்களா ? சாதாரண கூலி வேலைக்குப் போகும் தமிழ்நாட்டுக்காரரையே பொறுத்துக் கொள்ளாமல் துன்புறுத்துகிறார்கள் கர்நாடகத்திலும், கேரளத்திலும். இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது ? நமது தனித்தன்மையை ஒரு போதும் விட்டுத்தரக் கூடாது என்பது என் கருத்து.

சினிமா வெறும் பொழுது போக்குச் சாதனம் மட்டுமே. அது நிஜ வாழ்க்கையில்லை. சினிமா நடிகர்களால் நமக்கு சுபிட்சம் வராது. வராது. வரவே வராது. அவ்வாறு நினைப்பதைப் போல பைத்தியக்காரத்தனம் எதுவும் இல்லை.

கற்றவர்களாலும், நீதி, நேர்மை மற்றும் நிர்வாகம் தெரிந்தவர்களால் மட்டுமே தமிழ்நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். காசு கொழுத்த சினிமா நடிகர்களால் அல்ல. நமக்குப் பக்கத்து மாநிலங்களில் ஆளும் சந்திரபாபு நாயுடுவும், கிருஷ்ணாவும் சினிமா நடிகர்களல்ல. நிர்வாகம் தெரிந்தவர்கள். நன்றாக நிர்வாகம் செய்வதால் அவர்கள் மாநிலம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் ‘ரிவர்ஸ் கியரில் ‘ கற்காலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

இன்னொரு சினிமா நடிகன் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவோ அல்லது எந்த முக்கிய பதவியிலோ வந்தால், தமிழ்நாட்டின் அழிவை ‘அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது ‘. நம் எதிர்கால சந்ததியினர் ஒருபோதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

இன வெறியன் என்றோ அல்லது மொழி வெறியன் என்றோ தயவு செய்து என்னை நினைக்காதீர்கள். Diversityயின் பலன் எனக்கு நன்றாகவே தெரியும். பொதுவாக தமிழ்நாட்டவர்கள் ‘யாவரும் கேளிர் ‘ என்ற பரந்த மனப்பான்மை உடையவவர்கள். இப்படிப்பட்ட பெருந்தன்மையுள்ள மக்களை ஏமாற்றாதீர்கள். அதுதான் நான் சொல்ல வருவது.

நான் எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது கூட்டத்தையோ சார்ந்தவனில்லை. என் கருத்துக்கள் பொதுப்படையானவை. ஒரு தலை சிறந்த கலாச்சாரமும், பழமையான மொழியும், தமிழ் மக்களின் அறியாமையாலும், சினிமாக் கவர்ச்சியாலும், ஆடம்பர அரசியல்வாதிகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக கண் முன்னே அழிவது கண்டு மனம் வருந்தித்தான் இதை எழுதுகிறேன். எதாவது மந்திரவித்தை நடந்து இதுவெல்லாம் மாறிவிடாதா என்ற நப்பாசையுடன்.

புரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

புரியாதவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

***

psnarendran@hotmail.com

Series Navigation