தியான மோனம்
காளிநேசன்
ஓயாமல் ஒலிக்கும்
ஒராயிரம் சிலம்பின் சிதறல்!
உரு தெரியா உலகளவு யாழின்கண்
ஊற்றெடுக்கும் ஒரு கோடி நரம்பதிர்வு!
அடி தெரியா ஆழ்கிணற்றின் அடரிருட்டு
மூலையில் தோன்றும் ஆதி இல்லா
‘அம்மா’ என்றொரு பேரலறல்!
கவிஞனின்றி எழும் கவி உச்சாடனம்!
இசைஞனின்றி அரும்பும் இன்ப நாதம்!
உருண்டு திரண்டு நிற்குமோர்
சூரியன் உள்ள மத்தியில்!
பற்றி படருமோர் பரவச
மின்னல் உச்சந்தலைமேல்!
இதயத்தில் படபடக்கும்
தேன்சிட்டின் சிறகோசை!
சலனமற்ற கண்ணிமையில் வந்தமர்ந்து
ஒளிரும் ஒரு மின்மினி பூச்சி!