தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

பாவண்ணன்


நண்பரொருவர் வீடு வாங்க விரும்பினார். செய்தித்தாள்களில் இதற்காகவே வருகிற விளம்பரங்களைத் தொடர்ந்து பார்த்துவந்தார். அவரிடம் உள்ள தொகைக்குள் கிட்டுவதைப்போலத் தோன்றுகிற வீட்டை உடனே போய்ப் பார்ப்பார். அவருக்குப் பிடித்திருந்தால் மனைவி, குழந்தைகளையும் ஒருநாள் தன்னோடு அழைத்துச்சென்று காண்பிப்பார். அவருக்குப் பிடிக்கிற வீடு அவருடைய மனைவிக்குப் பிடிக்காமல் போகும். இருவருக்கும் பிடித்திருந்தால் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகும். வீடு என்பது எல்லாருக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கவேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் உறுதியாக இருந்தார் நண்பர்.

மற்றொரு நண்பர் ஏதோ அவசரத்துக்காகத் தம் இரு வீடுகளில் ஒன்றை விற்பதற்காக விரும்பும் செய்தியைக் கேள்விப்பட்டு அவரையே நேரில் காணச் சென்றோம் ஒருநாள். முதல் நண்பருக்கு இரண்டாம் நண்பரை மிகவும் பிடித்துவிட்டது. அவருடைய வீட்டையும் பிடித்துவிட்டது. விலையும் அவரது எல்லையான எட்டு இட்சத்துக்குள்தான் இருந்தது. பிள்ளைகளுக்கும் பிடித்திருந்தது. அவர்கள் இருவரும் அந்தக்கணமே அவ்வீட்டைத் தம் வீடு என்று மனசார நம்பத்தொடங்கிவிட்டார்கள். அன்று மாலையே முதல் நண்பர் தம் மனைவியையும் அழைத்துவந்து காட்டினார். அவரும் வந்து பார்த்துவிட்டுப் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். முன்பணமாகப் பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு ஒரு மாதத்துக்குள் முழுத்தொகையையும் கொடுத்துவிட்டுப் பதிவு செய்வதாச் சொன்னார் முதல் நண்பர். அன்று பகல் எல்லாருமே இரண்டாவது நண்பருடைய வீட்டில் சாப்பிட்டோம்.

முதல் நண்பருடைய மகன் அந்த வீட்டில் வரைபடத்தை அதற்குள் வெள்ளைத்தாளொன்றில் அழகாக வரைந்துவிட்டான். திரும்பும் வழியில் அப்படத்தை வைத்துக்கொண்டு யார்யாருக்கு எந்தெந்த அறை என்றும் எந்தெந்தப் பொருள்களுக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்றும் ஆர்வமாகப் பேசத்தொடங்கிவிட்டனர். அந்த வீடு அவர்களுக்கு அப்போதே சொந்தமானதைப்போல ஓர் ஆழமான எண்ணம் அவர்கள் மனங்களில் பதிந்துவிட்டதைக் கண்டேன்.

குறிப்பிட்ட நாளுக்குள் முதல் நண்பர் தொகையை ஏற்பாடு செய்து முடித்ததும் இரண்டாவது நண்பருடைய வீட்டுக்குத் தகவல் சொல்லிப் பதிவுக்கான தேதியைக் குறிக்கச்சென்றோம். முதல் நண்பரின் பெற்றோர்களும் அப்போது வீட்டைக்காணும் ஆவலில் கூட வந்திருந்தனர். எங்களைக் கண்டதும் இரண்டாவது நண்பருடைய முகம்போன போக்கு சரியில்லை. பேசிய முறையும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நாங்கள் முன்பணம் கொடுத்துவிட்டுச் சென்றபிறகு வேறொருவர் வந்து பார்த்ததாகவும் அவர்கள் அந்த வீட்டுக்குப் பத்து லட்சம் தருவதாகச் சொன்னதாகவும் கூடுதலான விலைக்குப் போகக்கூடிய ஒரு வீட்டைக் குறைவான விலைக்குத் தந்து நஷ்டமாவதிலிருந்து தனது அதிருஷ்டமே தன்னைக் காப்பாற்றியதாகவும் சொன்னார். பத்து லட்சம்காரர்கள் அடுத்தநாள் பதிவு செய்ய உள்ளதாகவும் சொன்னார். அவருடைய நிலைபாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்கிற எண்ணத்தைத் தவிர பேசவே வார்த்தைகள் எழவில்லை. விடைபெற்றுக்கொண்டு திரும்பிவிட்டோம். முன்பணத்தொகையைப் பதிவுக்குப் பிறகு திருப்பித் தந்துவிடுவதாக அவர் சொன்னபோதும் முதல் நண்பர் எதுவும் பேசவில்ால. சங்கடம்தரும் புன்னகையுடன் வெளியே வந்துவிட்டார்.

பதிவுக்கென்று ஏற்கனவே அலவலகத்தில் விடுப்பு எடுத்தாயிற்று. எடுத்த விடுப்பு எடுத்ததாகவே இருக்கட்டும் என்று ஊரிலிருந்து வந்திருந்த பெற்றோர்களுடன் பேசியபடி பொழுதைப்போக்கினார் முதல் நண்பர். நண்பகல் பன்னிரண்டு மணியிருக்கும். உணவுக்கான ஏற்பாடுகள் நடந்தபடி இருந்தன. திடாரென வாசலில் நிழலாடியது. வெளியே சென்று பார்த்தார் நண்பர். இரண்டாவது நண்பர் வந்திருந்தார். கொஞ்சமும் தயக்கமின்றி ‘வாங்க வாங்க ‘ என்று உபசரிப்புடன் உள்ளே அழைத்துக்கொண்டார். உடனே தேநீரும் வழங்கப்பட்டது. இரண்டாவது நண்பருக்குப் பேச்சை எப்படித் தொடங்குவது என்று தயக்கம் போலும். தரையைப் பார்த்தபடி சிறிது நேரத்தையும் அந்த வாடகை வீட்டைப்பற்றிய தகவல்களைக் கேட்பதில் சிறிது நேரத்தையும் கழித்தபிறகு, நேரிடையாக முதல் நண்பரைப்பார்த்து ‘யோசிச்சிப்பாத்தேன். நான் செய்ய இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரிஞ்சிது. வீடு உங்களுக்குத்தான். உடனே கிளம்பி வாங்க. ரெஜிஸ்டர் ஆபீஸ் போவணும். நீங்க சொன்னபடி இன்னிக்கே ரெிஜிஸ்டர் செஞ்சிடலாம் ‘ என்றார். மேலும் அவர் கேள்விகள் கேட்டபடி காலம் கடத்துவதைத் தடுத்தபடி கூடவே அழைத்துச்சென்றார். அவர் மனைவியும் பெற்றோர்களும் ஏற்கனவே திரட்டி வைத்திருந்த தொகையை எடுத்துக்கொண்டு பின்னாலேயே ஆட்டோவில் சென்றார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் பதிவு வேலை முடிந்தது. சாயங்காலம் வீட்டுக்கு வருமாறும் விரிவாகப் பேசிக்கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார் இரண்டாவது நண்பர். சாயங்காலம் செல்லும்போது நானும் கூடவே இருந்தேன். நண்பருடைய திடார் முடிவு என்னாலும் நம்பமுடியாமல் இருந்தது. ஏறத்தாழ ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் பேசியிருந்துவிட்டுத் திரும்பும் வழியில்தான் தயங்கித் தயங்கி என் கேள்வியை முன்வைத்தேன். முதல் நண்பரும் என்னோடுதான் நின்றிருந்தார்.

‘சொன்ன நேரத்துக்குச் சரியாதான் வந்துட்டாங்க அவுங்க. ஆனா அவுங்க பேசன விதம் எனக்குப் புடிக்கலை. இங்க வாழறதுக்காக அவுங்க வீடு வாங்கல, ஏதோ அவுங்க வியாபாரத்துக்கு குடோனா வச்சிக்கப் போறாங்கன்னு அவுங்க பேசனதிலேருந்து தெரிஞ்சட்டேன். அப்பதான் இவர் ஞாபகமும் இவர் பிள்ளைங்க ஞாபகமும் வந்திச்சி. இவுங்க பேச்சு, இவுங்க ஆசை, இவுங்க சுபாவம் எல்லாத்தயும் நெனச்சிப்பாத்தேன். மனசு மாறிடுச்சி. பணத்தைக் கொடுத்தா எத வேணுமானாலும் வாங்கிடலாம்ன்னு நெனைக்கற அவுங்க எண்ணத்தை உடைக்கணம்ன்னு தோணிச்சி. விக்கற விருப்பம் போயிடுச்சின்னு திருப்பி அனுச்சிட்டேன். எங்க வீட்டுலேயும் எனக்கு என்னமோ பைத்தியம் புடிச்சமாதிரி நெனைச்சி திட்டனாங்க. நிதானமா அவுங்களுக்குச் சொல்லிப் புரிய வச்சேன். அப்பதான் இந்த வீட்ட வித்தா உங்களுக்குத்தான் விக்கணும்ன்னு முடிவுக்கு வந்தேன் ‘

நண்பரின் ஆவேசமான பேச்சு என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. தன் மனம் விலைபோகக்கூடிய ஒன்றல்ல என்பதை அவர் அவருக்கே நேருபித்துக்கொள்ள வேண்டியிருப்பதையும் புரிந்துகொண்டேன். இந்த நேருபணம்தான் அவருடைய குற்ற உணர்ச்சியை அழிக்கும் என்பதையும் தெரிந்துகொண்டேன். குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதே பெரிய மன நிம்மதி. நிம்மதியைத் தேடிய வாழ்க்கை என்பது வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்வதிலோ அல்லது கூடுதலாகக் கிட்டுகிற சில லட்சங்களுக்காகப் பிடிக்காத வேலையைச் செய்வதிலோ அல்ல என்பதுவும் புரிந்தது. தாவி அலைகிற மனத்தைக் கட்டிப்போடும் சக்தி இந்த உணர்ச்சிக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மனத்தில் நிழலாடும்போதெல்லாம் இந்திரா பார்த்தசாரியின் ‘நாசகாரக் கும்பல் ‘ என்னும் சிறுகதையும் நிழலாடும்.

ஒரு விபத்திலிருந்து தொடங்குகிறது அச்சிறுகதை. பிரதான வழியில் செல்லாமல் சுற்றிவளைத்துக்கொண்டு வரும் பேருந்தொன்று திண்ணையில் காலைத் தொங்கப்போட்டபடி உட்கார்ந்திருக்கும் ஒரு சிறுவன் மீது மோதிவிடுகிறது. கால்கள் நசுங்கிவிடுகின்றன. ஏராளமான ரத்தப்பெருக்குக்கு இடையே சிறுவன் மயக்கமுறுகிறான். ரத்தச் சேற்றுக்கிடையே கிடக்கும் சிறுவனைப் பார்த்து உண்மையான துக்கத்தில் வருத்தமுறுகிறான் ஓட்டுநரான வேலு. பேருந்தைவிட்டுக் கீழே இறங்கி சமிக்ஞை கொடுத்திருக்கவேண்டிய நடத்துநரான ராஜா காவல்நிலையத்துக்கும் முதலாளிக்கும் முதலில் தகவலைச் சொல்லலாம் என்று ஆலோசனை கூறுகிறான். விபத்தைக் கண்ணால் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் கூட்டமாகக்கூடி ஆளாளுக்கு யோசனை சொல்கிறார்கள். அதிகமான அளவில் ரத்த இழப்பு நேர்வதைப்பார்த்து வேலு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அவசரப்படுகிறான். சிறுவனுடைய உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் கூடியிருப்பவர்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை ஒட்டி எவ்வளவு லாபமடைய முடியும் என்று கணக்குப்பார்த்துப் பேசுகிறார்கள். இரக்கமற்ற அப்பேச்சுகளால் எரிச்சலுற்றாலும் நிதானத்தைக் கைவிடாத வேலு சிறுவனுடைய தாயாரை அமைதிப்படுத்தி மயக்கமுற்ற சிறுவனோடு மருத்துவமனைக்குச் செல்கிறான். தனக்குப் பிறந்த ஒன்பது பிள்ளைகளையும் மீண்டும் மீண்டும் மனத்தில் நினைத்துக்கொள்கிறான்.

விபத்து என்பதால் காவல்நிலையத்தில் புகார்செய்துவிட்டு வரவேண்டும் என்று முதலுதவி செய்ய மறுக்கின்றாள் ஒரு செவிலி. கருணை உள்ளம் கொண்ட மருத்துவர் ஒருவர் எல்லாவற்றையும் மீறிச் சிகிச்சையைத் தொடங்கி விடுகிறார். உள்ளே மருத்துவம் நடந்துகொண்டிருக்கும்போதே வெளியே முதலாளியும் காவலர்களும் திரண்டுவிடுகிறார்கள். சிறுவனுடைய சொந்தக்காரர்களும் சாட்சிக்காரர்களும் கூட வந்து சேர்கிறார்கள். உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் முதலாளி தன் பேரத்தைத் தொடங்குகிறார். தகுந்த உரிமம் இல்லாமலேயே பல தடங்களில் வண்டிகளைக் கட்சிக்காரர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஓட்டிக்கொண்டிருப்பவர் அவர். காவல்நிலையத்துக்கு வழக்கைச் செல்லவியலாமல் தடுப்பதில் முனைப்பாக இருக்கிறார். நடத்துநர், சொந்தக்காரர், சாட்சிக்காரர் அனைவருடனும் பேரம் நடக்கிறது. வேலுவிடமும் பேரம் பேசப்படுகிறது. அதுவரை உள்ளூர நியாய உணர்வுடன் நடந்துகொண்டு வந்தவனுக்குத் திடாரென பேரத்தின் மீது சபலம் உருவாகிறது. படிந்துபோகிறான். காவலர்கள் உட்பட எல்லாமே முதலாளிக்குச் சாதகமாக நடந்துவரும் வேளையில் மருத்துவர் மட்டும் இசைய மறுக்கிறார். மனச்சாட்சிப்படி மட்டுமே தன்னால் நடக்க முடியும் என்கிறார். எந்த மிரட்டலுக்கும் பணியாத டாக்டரை மேல்மட்டத்தில் சொல்லிச் சரிப்படுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை கொள்கிறார் முதலாளி. அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட சிறுவனை அம்போ என்று விட்டுவிட்டு எல்லாரும் அவர் பின்னால் செல்லும்போது பையனை யார் பார்த்துக்கொள்வது என்று கேட்கிறார் டாக்டர். பையனுக்குக் கால்கள் திரும்ப வாய்ப்பற்றுப் போன நிலையையும் சொல்கிறார் அவர். சட்டென ஒரு மனமாற்றம் ஏற்படுகிறது வேலுவுக்கு. பேரத்துக்கு ஒத்துக்கொண்ட அவன் மீண்டும் மனம்மாறி முதலாளியைத் திட்டுகிறான். வண்டியை ஏற்றியவன் என்கிற வகையில் பின்விளைவுகளுக்குத் தயாராக இருப்பதாகச் சொல்லிவிட்டு சிறுவனுக்குப் பக்கத்தில் துணையாகத் தானே இருப்பதாகச் சொல்லிக்கொண்டு முனவருகிறான்.

சாலைவிபத்துகள் சகஜமான செய்தியாகிவிட்ட சூழலில் விபத்தைப்பற்றிய கதை முக்கியமில்லை. ஆனால் வேலுவின் மனஉணர்வுகளில் நொடிக்குநொடி நேரும் மாற்றங்களே இக்கதையை முக்கியமான ஒன்றாக்குகிறது. ஒன்பது பிள்ளை பெற்ற தந்தை என்கிற நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற சிறுவனைப்பார்த்ததும் காப்பாற்றத் துடிக்கிறது அவன் மனம். அது ஒரு கட்டம். எதார்த்த நிலைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பேசிய முதலாளியின் தந்திர வலையில் விழுந்து நடந்ததை மாற்றி எழுதிக்கொண்டுவரும் வாக்முலத்தில் கையெழுத்திடத் தயாராகிவிடுகிறது அதே மனம். இது மற்றொரு கட்டம். இறுதியில் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி உறுத்த மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறது மனம். இது மூன்றாவது கட்டம். இந்த மூன்று கட்டங்களுக்கிடையே ஊசலாடும் மன ஓட்டங்களையும் காரணகாரியங்களை அலசிஅலசி முடிவை நோக்கி முன்னகர்கிற விதத்தையும் துல்லியமாகப் பதிவு செய்கிறது கதை. அதனாலேயே இது முக்கியமான கதையாகிறது. நாசகாரக்கும்பல் என்னும் தலைப்பும் வசீகரமானது. அப்படி ஒரு பெயரில் ச்முகத்தில் தனியாக ஒரு கும்பல் இயங்குவதைப்போன்ற தோற்றத்தைத் தந்தாலும் உண்மை அதுவல்ல. அவர்கள் நம்மிடையேயே இருக்கிறார்கள். நம்முடனேயே வாழ்கிறார்கள். பல சமயங்களில் நாமும் கூட அக்கும்பலைச் சார்ந்தவர்களாக மாறிவவிடுகிறோம். குற்ற உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும்போது எல்லாருமே நல்ல கும்பலைச் சார்ந்தவர்களே. குற்ற உணர்ச்சி இல்லாதபோது எல்லாருமே நாசகாரக்கும்பலைச் சார்ந்தவர்களாகி விடுகிறார்கள்.

*

குருதிப்புனல், தந்திரபூமி, சுதந்தரபூமி ஆகிய நாவல்களின் ஆசிரியரும் ஒளரங்கசீப், நந்தன்கதை, ராமானுஜர், மழை ஆகிய நாடகங்களின் ஆசிரியருமான இந்திரா பார்த்தசாரதி சிறந்த சிறுகதைகளையும் எழுதியுள்ளார். சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர். ‘நாசகாரக்கும்பல் ‘ என்னும் இக்கதை முதலில் 1971 ஆம் ஆண்டில் தீபம் அக்டோபர் இதழில் வெளிவந்தது. பிற்காலத்தில் இதே தலைப்பில் இவருடைய சிறுகதைத் தொகுப்பு பிரசுரமானது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்