சத்யஜித் ராய்– இன்று

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

அம்ஷன் குமார்


சத்யஜித் ராயின் 80வது பிறந்த ஆண்டை முன்னிட்டு பிரிட்டிஷ் கவுன்சிலும் பிப்ரெஸி என்னும் அமைப்பும் இணைந்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று நடத்தின. பிரிட்டிஷ் கவுன்சில் இந்த நிகழ்ச்சிக்கு தனது சென்னை அலுவலகத்தில் இடம் அளித்து தனது பங்கை நிறைவேற்றிக் கொண்டது. பிப்ரெஸி என்கிற அமைப்ப் பற்றி சற்று கூறவேண்டும்.

FIPRESCI என்பது Federation Internationale de la presse cinemaetographique என்பதன் சுருக்கம்.இது சினிமா விமர்சகர்களின் சர்வதேச சங்கமாகும். இதன் அங்கத்தினர்கள் உலகின் முக்கியமான திரைப்படவிழாக்களில் ஜஊரிகளாக பணியாற்றுபவர்கள். இவர்களது தேர்வில் முதன்மை பெறும் படத்திற்கு பிப்ரெஸி பரிசொன்றும் வழங்கப்படுகிறது. இந்த சங்கத்திற்கு உலகெங்கிலும் ஐம்பது பிரதிநிதிகள் உண்டு. தென்னிந்தியாவில் இதன் பிரதிநிதி கெளரி ராம் நாராயண். இவர் ஹிந்து ஆங்கில நாளிழதலில் சிறப்பு நிருபராகப் பணியாற்றுகிறார். சென்ற வருடம் வெனிஸ் திரைப்படவிழாவில் ஜஊரியாக பணியாற்றியவர். எழுத்தாளர் கல்கியின் பேத்தியான இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் பலமுறை மேடைக் கச்சேரிகள் செய்திருக்கிறார். ஹிந்துவில் இசை, சினிமா, இலக்கியம் நாடகம் போன்றவை பற்றி நவீனத்துவம் வாய்ந்த அக்கறையுடன் எளிமையான நடையில் இவர் எழுதும் கட்டுரைகள் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

சத்யஜித்ராயின் பிரதித்வந்தி கனஷத்ரு ஆகிய படங்களில் நடித்துள்ள த்ரித்மன் சட்டர்ஜியுடன் கெளரி நடத்திய சம்பாஷணை ‘சத்யஜித்ராய் இன்று ‘ என்னும் நிகழ்ச்சியாக அமைந்தது. இது பிப்ரெஸியின் இரண்டாவது நிகழ்ச்சியாகும்.

கெளரியின் சுருக்கமான முன்னுரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அவர் ராயின் படைப்புகள் இன்றைய கால கட்டத்துடன் எவ்வாறு பொருந்தியுள்ளன என்ற கேள்வியை முன் வைத்தார்.

த்ரித்மன் சட்டர்ஜியின் பேச்சிலிருந்து சில பகுதிகள் :

‘சத்யஜித்ராயின் படங்களின் பொருத்தம் என்பதை எந்த கோணத்திலிருந்து பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அவரது படங்களின் அரசியல், அழகியல், டெக்னிகல் பார்வைகளுடன் இன்றைய காலகட்ட தேவைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும். அத்தகைய செயலை இன்றைய இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவே சரியானதாக இருக்கும். அவரது இறுதிக் காலத்தில் அவரை நோக்கி பரிசுகளும் மரியாதைகளும் குவிந்தன. ஆனால் அதே சமயம் அவரது படங்களின் பார்வை குறித்த விமர்சனங்களும் வங்காளத்தில் எழுந்தன. ராய் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்………

‘வங்காளப் படங்களின் சரித்திரத்தைப் பார்க்கும் பொழுது ஒன்று புலனாகிறது. மும்பை மற்றும் சென்னையில் தயாராகிய படங்கள் திரைப்படத்திற்கான ஒரு மொழியை ஏற்படுத்திக் கொண்டன. ஆனால் வங்காளப் படங்கள் இலக்கியப் படங்களாக, வார்த்தையாடல்களை முக்கியப்படுத்துபவனாக இருந்தன. ராய் இந்த மரபிலிருந்து வேறுபட்டார். அவருக்கு வங்காளத்தின் தாக்கம் ஆரம்பக்காலங்களில் இல்லை. சாந்தி நிகேதன் செல்லும் வரை அவர் தாகூரைப் பயின்றதில்லை. மேற்கத்திய இசையுடன் தான் அவர் தொடர்பு கொண்டிருந்தார். பதேர் பாஞ்சாலி படம் எடுக்கும் வரை அவருக்கு இந்திய கிராமம் பற்றி எதுவும் தெரியாது.

‘பதேர் பாஞ்சாலி படத்தை அவர் எடுத்தபொழுது அவருக்கு சினிமாவில் தொழில் அனுபவம் கிடையாது. அவருடன் பணியாற்றியவர்களும் சினிமாவிற்கு புதியவர்கள். எடிட்டர் துலால் தத்தாவிற்கு மட்டுமே ஏற்கனவே படங்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தது.

‘அவரது படங்கள் டெக்னாலஜிகலாக சிறப்பானவை அல்ல. சுப்ராதா மித்ரா அவருடன் இருந்த வரை அவர் படங்கள் தரமான ஒளிப்பதிவைக் கொண்டிருந்தன. நாயக் (1966) படத்திற்குப் பிறகு சுப்ராதா மித்ரா அவர் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யவில்லை.

‘ராயின் பள்ளியிலிருந்து சிறப்பான தொழில் நுணுக்கம் படைத்த கலைஞர்கள் வெளிவரவில்லை. ஆனால் இத்தகைய கருத்தினை ராய் குடும்பத்தினர் வரவேற்பதில்லை.

‘நான் டெல்லியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே ராயுடன் தொடர்பு கொண்டிருந்தேன் அவரது பிரதித்வந்தி (1970) படத்தில் எனக்கு நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது எனக்கு வயது 25. என்னை என் போக்கிலேயே அவர் நடிக்க விட்டார். நான் செய்தது சரியா தவறா என்பதைக் கூட என்னால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. ராய் குறைவாகப் பேசுபவர் அவரிடம் கேட்பதற்கும் எனக்கு பயமாக இருந்தது. பின்னர் கனஷத்ரு (1989) படத்தில் நான் நடித்தபொழுது ஓரளவு தைரியத்தை திரட்டிக் கொண்டு எனது நடிப்பு பற்றி அவரிடம் அபிப்பிராயம் கேட்பேன். ‘ சரியில்லையென்றால் நான் சொல்வேன் ‘ என்று மட்டும் கூறினார். (சினிமா நட்சத்திரம் என்பவர் நடித்தபிறகும் கூட பார்வையாளனின் ஆர்வத்தை தூண்டுபவர் என்று வரையறை செய்த ராய் அதற்கு உதாரணமாக த்ரித்மன்னை சுட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது) ஆனால் எல்லோரிடமும் ராய் இவ்வாறு நடந்துக்கொள்ளவில்லை. சாருலதா (1964)வில் நடித்த சைலன் பானர்ஜியின் ஒவ்வொரு அசைவையும் அவர் தீர்மானித்தார்.

‘ப்யூஷன் மியுசிக் என்பதற்கு ராயின் சினிமா இசை தகுந்த எடுத்துக்காட்டாக விளங்கியது ‘ கோபிகைனே பாகபைனே ‘ (1968) அவரது சிறந்த இசையைக் கொண்டிருந்தது. இன்று அதை சரியாக செய்பவர் ஏ.ஆர். ரஹ்மான்.

‘ராய் சிறந்த நிர்வாகத்திறமைக் கொண்டிருந்தார். படப்பிடிப்பைத் திட்டமிடுவதிலும் நடத்துவதிலும் அத்திறமை பளிச்சிட்டது. சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் அவர் ஹிந்துஸ்தான் லீவர் போன்ற கம்பெனியின் மானேஜிங் டைரக்டராக ஆகியிருப்பார். ‘

நிகழ்ச்சியின் போது திடார் திடிரென பதேர்பாஞ்சாலி (1955), சாருலதா, அபுசன்சார் (1959)ஆகிய படங்களிலிருந்து சில காட்சிகள் காட்டப்பட்டன. அது போலவே டேப்பில் பதிவாகியிருந்த சத்யஜித்ராயுடன் த்ரித்மன் நடத்திய சம்பாஷணை அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டது. இவையெல்லாம் நிகழ்ச்சியின் கட்டமைப்புடன் ஒத்துப்போகவில்லை. அவற்றை தவிர்த்திருக்கலாம்.

இந்நிகழ்ச்சி சத்யஜித்ராய்க்கு செலுத்தப்பட்ட வித்தியாசமான அஞ்சலி.

Series Navigation

அம்ஷன் குமார்

அம்ஷன் குமார்