காலம்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

அலர்மேல் மங்கை


நூறு துக்கம்
கோடி சந்தோஷம்
நூறும் மறந்தது
சந்தோஷம் அன்று உணரவில்லை
இன்று புரிகிறது

இன்றே நிஜம்
நேற்றும் நிஜம்
நாளையும் நிஜம்…

கணப் பொழுதில் இருத்தலே
வாழ்க்கை…
இன்று புரிகிறது
—-
mangaialarmel@yahoo.com

Series Navigation

காலம்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

நம்பி


வெக்க தாள முடியல. வய வாய்க்கல்லாம் பாளம் பாளமா வெடிச்சி கெடக்கு. இல தழ ஒன்னு அசயல. பய புள்ளங்க இந்த கத்திரி வெய்யில்லயும் கிட்டி வெளயாடுதுவ. சூடு தாங்காத பயலுவ கருவ மர நெழல்ல ஒதுங்கி நிக்கிறானுவ. கொஞ்ச நேரத்துல அப்படியே போயி குளத்துல கும்பியிம் சாணியும் கெளறி விட்டு கூத்தடிப்பானுவ.

பெரிய சேர்வை நாட்டு ஓடு போட்ட வீட்டுலருந்து எதுத்தாப்ல இருக்க கொட்டாவைக்கு போனாரு. கொட்டாவையில பனங்கீத்து வேய்ஞ்சி பண்ண புடிச்சிருக்கு. சூடு கொஞ்சம் மட்டா இருக்கும். ஒரு சுருட்ட பத்த வச்சிகிட்டு நாற்காலியில சாஞ்சாப்ல உக்காந்தாரு. இந்த கலர்கார கோவிந்தன இன்னமு காணல. மண் சாலையில செங்கப்பி போட்டு நெரவி கெடக்கு. பொட்ட கோழி ஒன்னு குஞ்சும் குளுவானுமா காட்டாமணக்கு பத்தையில அடஞ்சி கெடக்கு.

‘டிங் டிங் ‘னு வண்டி மாட்டு கழுத்துல கட்டியிருக்க மணி சத்தம் முக்கத்துல திரும்பயில கேக்குது. மோழ மாடுவதான். உள்ளார இருக்க கலர் பாட்டுல் அலுங்காம நிதானமா நடக்க, வாடிக்கயான எடத்துல தானா போய் நிக்க கோவிந்தன் பழக்கி வெச்சிருக்காரு. கோடயில சூடு தெரியாம, மழயில நனயாம இருக்க பிரம்ப வளச்சி கட்டி, தென்னங்கீத்து வேய்ஞ்சி வண்டி மேல கூரை போட்டுருக்கு.

‘ என்னய்யா போன வாரம் ஆள காணல ‘ பெரிய சேர்வ கேக்குறாரு.

‘ மவளுக்கு மாப்ள தெகஞ்சுது. வர்ற வைகாசிலேயே முடிச்சிபுடலாம்னு ‘. கோலா, ஆரஞ்சு, குண்டு சோடா ன்னு ஒரு வாரத்துக்கு தேவயானத கொட்டாவயில வச்சிட்டு முண்டாசை அவுத்து உதறிகிட்டாரு.

‘அப்படியா சமாசாரம். ஒரு சோடாவ உடையும் ‘

சோடாவ கொடுத்துட்டு, ‘ எருக்கஞ்சேரி முத்துக்கோனாரு மவனதான் பாத்து இருக்கு ‘ன்னாரு.

‘நல்ல எடந்தான். ராசியான ஆளு. கய்யால மாடு புடிச்சு கொடுத்தார்னா கட்டுத்தறில கட்டி மாளாது. ‘ ‘ஏவ்வ்….. ‘ ன்னு ஏப்பம் விட்டுட்டு ‘ அஞ்சி மூட்ட நெல்லு கட்டி வைக்க சொல்றன். தோதுபடுறப்ப வந்து எடுத்துகிட்டு போயிடும். சாம்பசிவ குருக்கள ஏற்பாடு பண்ணிடலாம். மூக்கால மந்தரம் ஓதுனாலும் குடும்பம் வெளங்கும். சாங்காலம் பெரியாண்டவன் கோயிலுக்கு நெய்வேத்தியம் பண்ண வருவாரு. பாத்து சொல்லிடுறன் ‘.

‘நீங்க சொன்னா சரிதான். நான் பொறவு வர்றேன் ‘ நெனச்சதுக்கு மேல கெடச்சதுல வாயெல்லாம் சிரிப்பு.

‘ற்றிக், ற்றிக் ‘ ன்னு மாட்ட வெரசா ஓட்டுனாரு. செட்டியார் கடயில சரக்கு போட்டுட்டு, ‘ஆச்சி, இருவது கெவுளி வெத்தல வேணும். நயினா மரக்காரு வந்தா என்ன பாக்க சொல்லுங்க ‘ ன்னு சத்தமா சொன்னாரு. கெளவிக்கு காது மந்தம். ‘ஆஆங் ‘ன்னிச்சு.

உச்சி வெய்யிலு ஏர்றதக்குள்ள நடேச தேவர பாத்து கருவப்பிலைக்கும், வாழ எலைக்கும் சேவு நாடாருகிட்ட தேங்காவுக்கும் சொல்லிப்போடனும். சமயங் கெடச்சா சூளக்கி போயி அந்தோணிகிட்ட நூறு கல்லுக்கும் சொல்லனும். ஆலோடி செவர எடுத்து கட்டணும்னு மருமவபுள்ள உசிர எடுக்குது. காத்தான வரச்சொல்லி பாட்டோட பாட்டா அதெயும் முடிச்சிபுடலாம்.

வாயிமேட்ட சுத்தியிருக்கிற ஊருக்கெல்லாம் கோவிந்ததனும் அவரு மவன் கதிரேசனும் கலரு, சோடா போடுவாங்க. வண்டிய பூட்டிகிட்டு ஒரு நாளக்கி ஒரு தெசயா போயி சரக்கு போட்டுட்டு வருவாங்க. வீட்ல மவளும் மருமவ புள்ளயும் காத்து சுத்தி வச்சிடுங்க.

வைகாசி ஆறாந்தேதி கல்யாணம். கூட்டம் திமுதிமுன்னு சேந்திருக்கு. உப்பளம் பாக்கணும்னு அடம்புடிச்ச பேரபய தங்கராசயும் கூட்டிகிட்டு பெரிய சேர்வ வந்திருந்தாரு. மொய் போட்டுட்டு கோடிக்கரைக்கு கெளம்பறப்ப மரக்காரும், நடேச தேவரும் சேந்துகிட்டாங்க. அளம், ராமர் பாதம், லைட்டோஸ் பாத்துட்டு எல்லாரும் கடசி ரயில புடிச்சு ஊரு வந்து சேந்தப்ப நெலா கெளம்பிடிச்சு. நெலாவ சுத்தி கோட்ட கட்டிருக்கு. ரெண்டு மூனு நாள்ள மழ பேயும்னு பேசிகிட்டாங்க.

***

மேகம் தவுட்டு தூவானம் போடுது. தட்டாம்பூச்சி ‘ஙொய்…… ‘னு அங்கெயும் இங்கெயும் குறுக்கும் நெடுக்குமா பறக்குதுவ.

நண்டுஞ் சிண்டுமா பயலுக கிரிக்கெட் வெளயாடுறானுவ. வெளாயாடாத பயலுவ ஓரமா ஒதுங்கி நின்னு கோக்கோ பெப்ஸியோ குடிக்கிறானுவ.

தங்கராசு வெளிநாட்டுலருந்து வந்து மூனு நாளாவுது. படிப்பு, வேலைன்னு அலஞ்சிட்டு இப்பதான் கல்யாணத்துக்கு சேந்தாப்ல லீவுல வந்துருக்கான். லயங்கரை வரைக்கும் காலார நடந்துட்டு வரலாம்னு கெளம்புனான். சின்ன வயசு சேக்காளி தொப்புளானும், மஞ்சக்கண்ணியும் சேந்துகிட்டானுவ.

தெருக்கோடியில இருக்க மாரியம்மன் கோயில்ல மராமத்து வேல பாதிலேயே நிக்குது. அடுப்பாங்கரயிலேயே பல்ல வெளக்கிட்டு அங்கினய குளிச்சிட்டு எதுக்க வெள்ளயுஞ் சள்ளயுமா வந்த மாரிமுத்துதான் பஞ்சாயத்து தலைவரு. ‘பாத்தியளா தம்பி, நம்ம கோயிலு இருக்க கதிய. நான் ஒருநா சவகாசம வந்து வெவரஞ் சொல்றேன் ‘னுட்டு போனான். அவன் அந்தண்ட போனப்புறம் மஞ்சக்கண்ணி, ‘நம்ம நசீரு கட்டிமேட்டுல தர்கா கட்ட சவரிமுத்துகிட்ட காலாவ போடச்சொல்லி பணம் கொடுத்துருந்தான். அவனுக்கு திடார்னு பயணம் வந்துடுச்சி. கல்ல பொறவு வாங்கிக்கிறேன்னுட்டு போய்ட்டான். அந்த கல்லதான் நம்ம கோயிலுக்கு வாங்குனோம். இந்த மாரிமுத்து பய சாமிகுத்தம் வந்துடும்னு பாதிலெயே நிப்பாட்டி போட்டுட்டான். ‘ ‘இப்படியெல்லாமா நம்மூருல நடக்குது ‘ன்னு தங்கராசுக்கு தலைசுத்துச்சு.

கோடிக்கரையிலிருந்து உப்பு வண்டி தண்டவாளத்தில பொகைய கக்கியபடி போச்சுது. தார் பேர்ந்த சாலையில செங்கப்பி இளிக்கிது. தங்கராசு முழங்கை முட்டியைத் தடவிகிட்டான். சின்ன வயசுல கப்பி போடும்போது விழுந்து அடிபட்ட தழும்பு அது. மரக்கார் ராமர் பாதத்தில ஏறி நின்னு தங்கரச தோள்ல தூக்கி வச்சி குத்து மதிப்பா, ‘அங்கன தெரியுது பார்ரா லங்கா தீவு ‘ன்னு சொன்னது நெனப்பு வந்துச்சு.

நெனப்ப அசபோட்டுகிட்டே நடக்கையில பாதையில வந்த பூங்கோதை ‘என்ன மாமோ, நல்லா இருக்கியளா. வூட்டுல வந்து பாக்கலாம்னா சோலி வுடல. மவ இப்பவோ அப்பவோன்னு இருக்கா. காலங்கெடக்குற நெலயில தனியா வுட்டுட்டு அந்தண்ட இந்தண்ட நவரமுடியல. இப்பகூட ஒரு எளவுக்கு போயிட்டு சடுதியா திரும்பிகிட்டுருக்கேன். பொறவு வாரேன் ‘னு குசலம் விசாரிச்சிகிட்டு படபடன்னு பேசிகிட்டே போறா. அவ எப்பவும் அப்படித்தான்.

தொப்புளான் ‘டி.வீ முன்னாடி அளுவறதுக்கு ஓடுற களுத. பொண்ணு கிண்ணு கதவுடறா ‘ன்னான்.

‘ஒனக்கு எப்பவும் பொல்லாப்புதான் ‘னு பூங்கோத குரல் மரையறதுக்குள்ள லயங்கரை வந்துட்டுது.

லயங்கரையை ஒட்டியிருந்த சம்போடைத் தெடல்ல கருவ மரம் கொல செஞ்சாக்கூட கேக்காதபடிக்கு காடா மண்டிக்கெடக்கு. தங்கராச பார்த்துட்டு காட்டுக்குள்ளருந்து வந்த கதிரேசன், ‘வாங்க தம்பி. நாளக்கி அய்யங் கோயில்ல கெடா வெட்டாம்ல. அம்மா சொன்னாவ. இப்பதான் ஊறல் போட்டுருக்கேன். நமச்சிவாயம் போடாம அஞ்சு லிட்டர் நாளக்கி சாங்காலமா கொண்டாறன் ‘னாரு.

‘என்னங்க நீங்க இப்படி …. ‘

‘என்ன தம்பி செய்யறது. நீங்களுந்தான் சிறுசா இருக்கையில தங்கச்சி கல்யாணத்துக்கு வந்தியள. நல்ல எடத்துலதான் வாக்கப்பட்டிச்சி. போறாத காலம். மச்சானும் நானும் மசிஞ்ச வரைக்கும் கலர்தான் வித்து பாத்தோம். யாவரம் படுத்துடுச்சி. முடியல. ரெண்டு பொட்ட புள்ளகள வுட்டுட்டு தங்கச்சியும், மச்சானும் வெசம் குடிச்சிட்டு போயிட்டாவ. எனக்கும் புள்ள குட்டி. பொழப்ப ஓடனும்ல….. ‘

‘ம்.. ஹும்……. ‘னு பெருமூச்சு விட்டுட்டு, ‘அதெப் பேசி என்னத்த ஆவப்போவுது. நீங்க வீட்டுக்கு கெளம்புங்க ‘ன்னுட்டு காட்டுக்கு உள்ள போயிட்டாரு.

கெழக்கால வில்லு கட்டியிருக்கு. இப்ப மழ வராது போல இருக்கு.

***

ca_nambi@hotmail.com

Series Navigation

காலம்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

பவளமணி பிரகாசம்


வளரும் வயதினிலே,
வட்ட நிலவு முகத்திலே
கூனல் பாட்டி பார்த்தேன்;
கண்மூடி படுத்தவுடன்
கனவின்றி உறங்கினேன்.

பிள்ளைப் பருவத்திலே,
புத்தக நடுவினிலே
பீலியின் இறகு வைத்து
பொறுமையாக பார்த்திருந்தேன்,
குட்டி போட காத்திருந்தேன்.

விடுமுறை நாட்களிலே,
பாட்டி வீட்டு மாடியிலே,
பாப்பா நொண்டி ஆடினேன்,
பல கதைகள் கேட்டறிந்தேன்,
கூட்டாஞ்சோறு உண்டிருந்தேன்.

வாலறுந்த பட்டமாய்
வெகு தூரம் பறந்த பின்னே,
கண் மூடி முழிப்பதற்குள்
காலம் ஓடி விட்டது,
கனவு போல நேற்றிருக்கு.

சிதறிய நெல்லிக்காயாய்
சேக்காளி கூட்டமும்
சேர்ந்த இடம் தெரியலை,
கபடில்லா கடந்த நாளை
எண்ணி மனமும் ஏங்குது.

நிலவில் கிழவி இருப்பதை
நம்பவில்லை பேரனும்,
மயிலிறகில் மயங்கிட
நேரமில்லை பேத்திக்கு-
என்னடா கிரகமிது!

அத்தனையும் புரியுதிப்போ,
அப்பட்டமாய் தெரிகிறது,
விளங்காத விபரமும்
வெட்டவெளிச்சமாகுது,
கற்பனைக்கு வேலையில்லை.

சின்ன மின்னணு திரையிலே
விரல் நுனியின் ஆணையில்
அனைத்துலகும் விரியுது,
ஆளை அசத்திப் போடுது-
விந்தையான காலமிது.

எட்டி விலகி போகாமல்,
ஏக்கத்தோடு பாராமல்,
விரும்பி இந்த வித்தையை
கற்றுத் தெளியும் காலம்,
வென்று களிக்கும் காலம்.

ஏறுகின்ற வயது,
மாறுகின்ற கலைகள்,
வேறுபட்ட சுவைகள்,
கூறுகின்ற பாடம்
உறுத்தாத காலம்.
***
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation