எஸ். ஷங்கரநாராயணன்
அங்க பகல்லியே பாலில் ஆடை கட்டினாப்போல வெயில். நம்மூரில் நிலாப்போல இங்கத்திய சூரியன். ஏந்திக் குடிக்க முடிஞ்சா எத்தனை ருசியாய் இருக்கும் என்று கிடந்தது. ராத்திரி பனிப்பொழிவு கடுமையாய் இருந்தது. சும்மாயில்லை… கடல்மட்டத்தில் இருந்து பதினைந்து பதினாறாயிரம் அடி உயரப்பகுதி என்கிறார்கள். அந்த மலைக்குப் பேர் கிடையாது. மனித நடமாட்டமே இல்லாத எல்லை வளாகம். பூகோளக் குறியீடா அதுக்கு எங்களிடம் 5140 என்று பெயர். மலையில் உயரம் அது. 5140 மீட்டர்.
பகலில் எதிரி முகாமை நோக்கி மேலேறிப் போக முடியாது. அவனுங்க மே…ல இருந்தாங்க. நம்மாளுங்க மேலேறி வரவர சுட்டுத் தள்ள சவுரியமாப் போச்சு. மலையானா நேர் செங்குத்து. குத்திக் குத்தி ஊனிக்கிட்டு ஏறணும். கை விட்டுப் போவும்லா. எங்க ஆபிசர் சொல்றமட்டும் நிக்காமக் கொள்ளாமல் ஏறிட்டே போகணும். இடைல ஒய்வெடுக்க இயலாது. எல்லாரும் ஒரேபோக்கில் முன்னே போறதுதானே நல்லது ? அவசரப்பட்டு முன்றேர்றவன் முதல்ல மாட்டிக்குவாப்ல. அது சாவை நோக்கி முன்னேறினா மாதிரி ஆயிப்போகும். அதோட இல்ல விவகாரம்… அடுத்தடுத்து வர்றாளுகளையும் அவன் மாட்டி விட்ருவான். எதிரி உஷாராயிருவானில்ல ?
மெல்ல இருள் திரள மேலேறணும். கொட்டும் பனி. மைனஸ் நாற்பது டிகிரின்னா பாத்துக்கலாம் நீங்க. அதுல ஏறணும். ஒரு சத்தம் இருக்காது. எப்பவாவது குண்டு வந்து விழும். அல்லது ஆபிசர் சொன்னாக்க நாங்க சுடுவம். அங்கேர்ந்து அடிச்சான்னா குண்டு வர்ற ஃபோர்ஸ் கீழ விழ விழ அதிகமாகும்ல… நாங்க மேலபாத்து அடிக்கிறோம். வெளிச்சமே கிடையாது.
அவனுங்க அப்பப்ப வானத்ல தீபாவளி மாதிரி பட்டாசு போடுவாங்க. அந்த இடமே கண்ணை அடைக்கிறா மாதிரி ஒரு வெளிச்ச அப்பல். என்ன வெளிச்சம். என்ன வெளிச்சம்… அந்த வெளிச்சத்தில் எங்களைக் கண்டு குண்டடிப்பான் எதிரி. பூமியே அதிரும். நம்ம கூட வந்திட்டிருக்கிற பார்ட்டில ஒராளோ நிறையப்பேரோ குண்டுல மாட்டிக்கிட்டு சாகலாம். எதைப்பத்தியும் கவலைப்பட முடியாது. வசம் கிடைச்சா பதுங்கு… மேஜர் சார் சொன்னா மேல மேலன்னு ஏறிட்டே போகவேண்டிதான்.
என்ன முக்கியமான விசயம்னா பக்கத்ல இருக்கிறவன் செத்தான்னா கவலைப்பட நேரம் கிடையாது. ஐய இத்தனைநேரம் கூடப் பேசிட்டே வந்தானே… நேத்து ஒண்ணா ரம் அடிச்சமேன்னு யோசிக்க முடியாது. அந்தப் பனிக்கு உடம்பு விழுந்தமேனிக்கு அப்டியே கிடக்கும். பிற்பாடு வந்து அந்த உடலை எடுத்துக்குவாங்க. பனி மேலும் கொட்டாம இருக்கணும். பனி விழுந்தா ஆளை அப்டியே போட்டு மூடிரும். உடலைக் கண்டுபிடிக்கவே முடியாமப் போயிருமே…
நாம சிகரத்தைக் கைப்பற்றிக்கணும். நம்மாளுங்களை எண்ணி, இல்லாத ஆளுங்களைத் தேட ஏற்பாடுகள் செய்யணும். கீழ விழற ஆளை விட்டாலும் அவன் ஆயுதத்தை விடமுடியாது. எங்களுக்கே தேவைப்படும். தவிர எதிராளி கையில் ஆயுதம் கிடைச்சிறப்டாது… ஏற்கனவே ஆளாளுக்கு இருவது முப்பது கிலோ சுமை. சாப்பாடு, கம்பளிஉடை, தண்ணி. எங்க ஆயுதம். அத்தோடு இந்த ஆயுதமும் சிலசமயம் சுமந்துகிட்டு மேலேறணும்.
முந்தா நேத்து நம்மாளு அடிச்ச அடில ஒராளு நேரா என்னைப் பாத்து விழுந்தான். ஏ கொடும்பாவி, மோதிருவான் போலுக்கேன்னு சுவரோட பம்மிக்கிட்டேன். கிட்ட வர்றப்ப ‘ ‘நாயே ‘ ‘ன்னு என்னையறியாம அலறிட்டேன். அவனும் என்னென்னவோ அலறிட்டேதான் வுளுந்தான். பயக்குரல்லா ? இருந்த ஆவேசத்தில் எங்க குரலே, எங்க பாஷையே எங்களுக்குப் புரியல, அவன் பேசறதா புரியும் ?
எதிரி மே…ல இருக்கான். நாங்க கீழேர்ந்து ஏறிப்போயி அவனை விரட்றதுன்னா சும்மாவா ? அவனுங்கள்ல ஒராளைச் சுட்டுத்தள்ள நம்மாளுகளில் நாலைந்து பேரைக் காவுகொடுக்க வேண்டிவரும் சிலசமயம். பனியானா கொட்டிக்கிட்டே யிருக்கு. எங்க உடையெல்லாம் நனைஞ்சி போச்சு. பாறை வழுக்குது. வேடிக்கையா என்னமாச்சும் சிறு சத்தமாப் பேசி மனசை ஆத்திக்கர்றதுதான்… வாகாப் பாறை அமைஞ்சா தங்கிகிடத் தோது. மேல்ப்பக்ம் மறைச்சாப்ல அமையணுமே ?
ரேடியம் வாச்சில் மணி பார்ப்பார் மேஜர். வந்த வேகம் பரவால்ல – அல்லது பத்தாது… இந்த வேகத்தில் போனால் எப்ப மேல போயிச் சேரலாம்… அது இதுன்னு கணக்கு சொல்வார் எங்க ஐயா சண்முகம். அவரைத் தவிர நாங்க எல்லாருமே இளரத்தம். அதுல அவருக்கு ரொம்ப சந்தோசம். ‘ ‘நம்ம பசங்க அதெல்லாம் வெட்டிட்டு வான்னா கட்டிட்டி வர்ற பார்டிங்க ‘ ‘ என்பார் உற்சாகமாய். நல்ல ஊக்கமான மனுசன்.
எங்கூட மலையேர்றதுல இடதுபக்கம் வீரபாண்டி. சரியான தெக்கத்திக் கள்ளன். தனியா அவனை விட்டா கிடுகிடுன்னு ஏறிருவான். சொந்துாரு மயிலம்பாறைன்றான். ஏழாம் படாலியன்லேர்ந்து எங்ககூட வந்து சேந்துக்கிட்டான். சரியான கொரங்குப் பிறவின்னேன்… சிரிக்கிறான்.
வலது பக்கம் தாமு. அவனும் தமிழ் ஆளுதான். கேரளாப் பூர்விகம். தமிழ்… பேசுவான், எழுதப் படிக்கத் தெரியாது. ‘ ‘அம்மைட்ட குடிச்ச பாலெல்லாம் கக்கிருவம் போலுக்கே ‘ ‘ என்கிறான் தாமு. ‘ ‘ஏன் உனக்கு இன்னும் கலியாணம் ஆகல்லியா ? ‘ ‘ என்று நான் அவனைக் கேட்க, இந்தப் பக்கம் பாண்டி சிரிக்கிறான். தாமுவுக்குப் புரியவில்லை.
அபப்ப குண்டு திடும் திடும்னு விழுது. நாலைஞ்சி மலைலயும் ஒண்ணா தேடுதல் நடக்குது. நம்ம நாட்டுப்புறத்துல சந்தரமகாலிங்கம் கோவிலுக்கு காட்டுக்குள்ள வரிசை வரிசையாப் போவம். அதும் மாதிரி. அங்கியும் யானையை விரட்ட, சிங்கம் புலி விரட்டன்னு வேட்டு போடுவாங்க. இந்த வேட்டு மனுசங்களையே விரட்ட.
அந்தமட்டுக்கு எப்டியோ தமிழாளுங்க நாங்க மூணுபேர் ஒண்ணா மேல வர்றோம். எங்க மேஜர் சாரும் தமிழ். நல்லதாப் போச்சு. இருநுாறடி ஏறவும் கொஞ்சம் சமதரை வந்தது. மேல லேசா மறைப்பு- பரவால்ல.
‘சார் ? ‘னு மெதுவாக் கூப்ட்டேன். அவர் புரிஞ்சிக்கிட்டாரு. ‘ ‘சரி, அஞ்சே அஞ்சு நிமிசம் ‘ ‘ன்னாரு. தங்கமான மனுசன் அவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். கிளம்பு முன்னால் அவர் பாடம் நடத்தினாரு பாரு- எங்க எல்லாத்துக்கும் சிரிப்பு. ரஞ்சன்சிங் எங்களுகள்ல இறுக்கமான ஆளு. அவனே லேசாப் புன்முறுவல் பூத்தான். அடிச்ச ஜோக்குக்குச் சிரிச்சானோ சம்முகம் சார் பேசற இந்திக்குச் சிரிச்சானோ ?
ஆளாளுக்கு முதுகில் சிறு மண்ணெண்ணெய் விளக்கு. இந்த நாற்பது டிகிரி பனியில், என்னதான் உடம்பை மூடி கம்பளி போட்டுக்கிட்டாலுமே கைகாலெல்லாம் ரத்தம் உறைஞ்சிரும் போலுக்கு. எதாவது வீட்டுஞாபகம் வேறஞாபகம் வெச்சிக்கிட்டு இருந்தாப் பரவால்ல. கவனத்தைச் சிதறவிட்டா எதிரி வாய்ல நேராப் போயி விழவேண்டிதான். விளையாட்டு போல ஏறினாத்தான் ‘அதுவரை ‘ தெம்பு இருக்கும். தாக்கு பிடிக்க முடியும். நம்மால முடியாட்டி ஆறால முடியும்னா மாதிரி ஒரு வைராக்கியம் வேணும். நமக்கு ஒண்ணும் ஆகாதுன்னு ஒரு தைரியம்.
முன்னால எங்க மதுரைவீர சாமி நிக்கிறா மாதிரி நினைச்சுக்குவேன். அது நம்மளைக் காப்பாத்தும். ‘ ‘ஏத்தி விடப்பா துாக்கி விடப்பா ‘ ‘-ன்னு சபரிமலையில் போல என்னவோ முணுமுணுத்தான் தாமு. நெத்தில சந்தனம் வெச்சிக்கிட்டு சாமி கும்பிட்டுட்டு அப்றந்தான் அவன் மலையேற ஆரம்பிச்சான்.
உயரத்லேர்ந்து பார்த்தா வெளிச்சம் மறைச்சாப்டிக்கு மேலாப்ல துணிமறைப்பு வெச்சிக்கிட்டு என்னைத் திரும்பச் சொல்லி என் விளக்கை ஏத்துகிறான் தாமு. அவனும் பாண்டியும் விரலை விறுவிறுன்னு தேச்சி சூடுபடுத்திக் கிட்டாங்க. எனக்கும் கண்டிப்பா வேணும். பாண்டி அவன் கைய என்கையோட தேய்ச்சான். எல்லாம் பானட் பிடிக்கிற கைங்க- ஒரே சொரசொரப்பு.
பாண்டி வெளிப்படையாச் சிரிக்கிறானே தவிர உள்ளூற அவனுக்கு எதோ படபடப்பு. அவனுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. வீட்டில் இருந்துதான்னு நினைக்கிறேன். பிரிச்சி வாசிக்க நேரமில்லை- ஏற ஆரம்பிச்சாச்சி. அதைப் படிக்கிற ஆர்வம் அவனுக்கு. அடக்க மாட்டாமல் மூட்டையைப் பிரிச்சான். ‘ ‘என்ன ? ‘ ‘ன்றாரு மேஜர் சார். ‘ ‘ஒரே நிமிஷம் ஐயா ‘ ‘ன்னுக்கிட்டே கடிதத்தை வாசிக்க ஆரம்பிச்சான். பொதுவா ஒரு குடும்பத்துக் கடிதத்தை இன்னொருத்தன் வாசிக்கிறதில்லை. சிலசமயம் ரொம்ப நெருக்கமான சிநேகிதனா இருந்தால் அவனே தகவல் சொல்வாப்டி. நாங்க கேட்டுக்குவம்… கடிதத்தை வாசிக்க வாசிக்க பாண்டி அழுகறாப்ல இருந்தது. எங்களுக்குப் பதறிட்டது… ‘ ‘என்ன பாண்டி ? ‘ ‘
‘ ‘ஒண்ணில்ல… என் பொண்டாட்டி… கடைசியா ஊர்போயி, அவளைப் பார்க்காமல் நேரா இங்க வந்திட்டேனில்லியா ? அதைக் குறைப்பட்டு எழுதீர்க்கா… ‘ ‘
‘ ‘நம்ம அவசரம் அப்டியப்பா… இப்ப யுத்தம் முடிஞ்சிரும். யுத்தம் முடிஞ்சா ?… ‘ ‘
‘ ‘முத்தம்! ‘ ‘ என்கிறான் தாமு.
‘ ‘ஏல உனக்கு இன்னமும் கல்யாணமே ஆகல்ல… யாருக்கு முத்தம் குடுப்பே ? ‘ ‘ என்றேன் நான்.
‘ ‘அம்மைக்கு… ‘ ‘ என்று பாண்டி சிரித்தான்.
‘ ‘எதிர் வீட்ல யாரும் ஆள் கீள் பாத்து வெச்சிருக்கியா ? ‘ ‘
‘ ‘ஐய அதெல்லாமில்ல ‘ ‘ என்றவன் தயங்கி ‘ ‘முறைப்பொண்ணு இருக்கு… ‘ ‘ என்றான் வெட்கத்துடன். அந்தக் கெரசின் விளக்கொளியில் மழுமழுவென ஷேவெடுத்த அவன் முகம் எத்தனை ஜ்வலிப்பாத் தெரியுது… அவன்னில்லை, எல்லாருமே அவனவன் ஊர்ஞாபகத்ல இருக்காங்க. பாழாப்போன யுத்தம் வந்துவிட்டது இடையே…
பாண்டி அவசர அவசரமாய்ப் பையில் இருந்த இன்லெண்ட் லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்தான்.
பிரிய மனைவி வேணி அறிவது. 5140-லிருந்து இக்கடிதம் எழுதுகிறேன். இங்கே எனக்கு எல்லாம் நன்றாய் இருக்கிறது. நீ கவலைப்படாதே. போர் முடிந்து நேரே வீடு வருவேன். தம்பி-மச்சினி கல்யாணத்துக்குதான் நிற்க முடியவில்லை. நம்வகைக்கு ஐந்நுாறு ரூபாய் அளவில் நீயே பார்த்துச் சீர் செய்துவிடு. மகன் மயிலாண்டி படிக்கிறானா ? சரியாப் படிக்காட்டி உடனே டியூஷன் வைத்துவிடு- பணத்தைப் பத்திப் பார்க்காதே. இந்த இரவுக்குள் 5140-ஐப் பிடித்து விடுவோம்.
ஒவ்வொரு வரியாய்ச் சொல்லிக் கொண்டே எழுதினான் பாண்டி. எனக்கும் கடிதம் எழுத ஆசை வந்தது. நேரங் கிடையாது. இதுவரை மேஜர் சார் பொறுமை காத்ததே எனக்கு ஆச்சரியம். ‘ ‘ம்… ம்… ‘ ‘ என்று காத்திருக்கிறார் ஐயா. பரீட்சை ஹாலில் ‘ ‘நுால் கட்டிட்டு எழுதுங்க, கட்டிட்டு எழுதுங்க ‘ ‘ என்பார்களே… அது ஞாபகம் வந்தது.
அந்த அஞ்சி நிமசத்தில் ரஞ்சன்சிங் சின்னத் துாக்கம் போட்டுட்டான். ஆள் என்ன திடகாத்திரமா இருக்கான்… ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. ரம் போட மாட்டான். மட்டன் தொடமாட்டான். சப்பாத்தி. பிய்த்து மடக்கி அதை வாய்க்குள் திணித்துக் கொள்வது யானை தீனி தின்பதுபோல் இருக்கும்.
‘ ‘ம்… ரெடி. கிளம்பலாம் ‘ ‘ என்றார் சார்.
திரும்ப எங்கள் பயணம். விளக்கை அணைத்தாகி விட்டது. இது வேறு உலகம். கை வலிக்கிறது. எத்தனை அடி இன்னும் ஏறணுமோ… நிச்சயம் எதிரி உஷாராய் இருப்பான். நாங்க மொத்தம் சுமார் நாப்பது பேர் எங்க படையில். இன்னும் தள்ளித் தள்ளி பத்திருபது கம்பெனி இருக்கும். எங்க நாப்பது பேர்ல எல்லாருமே பத்திரமாப் போய்ச்சேர எந்த உத்தரவாதமும் கிடையாது.
எல்லாம் எங்க எல்லார்த்துக்கும் தெரியும். அதை நினைக்கக் கூடாது இப்ப- ஒருவேளை நான் செத்துப் போகலாம். இவன்… அவன்… அதைப்பத்தி என்ன ? எதைப்பத்தி நினைக்கப்டாதுன்னு மனசுக்குக் கட்டுப்பாடு இடறோமோ அப்பதான் மனசு அதையே நினைக்கும். இந்த மருந்தைக் குடிக்கையில் குரங்கை நினைக்காதேன்னு டாக்டர் மருந்து கொடுத்த கதையாட்டம்!
தண்ணி தாகம் எடுத்தது. ஓய்வெடுத்த சமயத்தில் குடிச்சிருக்கலாம். பாண்டி நெகிழ்ந்தது ரொம்ப சங்கடமாப் போச்சு. தண்ணி குடிக்க விட்டுப் போச்சு. என்ன தண்ணி இது ருசியே இல்லாம. தண்ணின்னா நம்ம தாமிரவர்ணித் தண்ணிதான். கோயம்புத்துார்க்காரன்னா சிறுவாணிம்பான். தஞ்சாவூராள் காவேரி…. வால்பாறைக்காரன் அர்ச்சுனாவூத்தும்பான்.
யாரும் பேசிக்கல. ஓய்வெடுத்தப்ப கொஞ்சம் தமாசாப் போசிக்கிட்டோம்தான். அதனாலியே இப்ப அவனவன் சீரியஸாயிட்டாப்ல இருந்தது. நாங்களும் அலுப்பா யிருந்தோம். சரியான ராத்திரி. ரெண்டு நாளாத் துாக்கம் கிடையாது. நேத்து நம்மாளுங்க இன்னொரு மலையைப் பிடிச்சாங்க. எப்படியும் எல்லாம் நம்ம பூமி. நாம எல்லாத்தையும் பிடிச்சிருவம். எத்தனை காவு வாங்குது. அதான் பிரச்னை. வெற்றி நிச்சயம்… அதைத்தான் தாமு கடிதத்தில் எழுதினாப்ல.
பாண்டிக்கு மனசுபூராவும் வீட்டுஞாபகமா இருக்கும்னு நினைக்கிறேன். இந்தப் பக்கம் தாமுவுக்கு பதிலா ரஞ்சன்சிங். தாமு கொஞ்சந் தள்ளி ஏறுவான் போல. என் கண்ணில் படவில்லை அவன். ரஞ்சன்சிங்கோட என்ன பேசன்னிருந்தது. அவனைப் பார்க்கவே விளையாட்டு மறைஞ்சி ஒரு விறைப்பு வந்திருது. கூடிய சீக்கிரம் அவனுக்குப் பிரமோஷன் வந்திரும். அடேயப்பா, குறிபார்த்துச் சுடறதில் ஆள் எம்டன். அவன்கூட நின்னு நாம சரியாச் சுட்டா அதில் அவனுக்கு ரொம்ப சந்தோசம். எதுக்குமே சிரிக்காதவன் சரியா வேலைசெஞ்சாச் சிரிக்கிறான். அவன் சந்தோசம் வேலை செய்வதில் இருந்தது.
நல்ல செங்குத்து மலைதான். அந்தப் பக்கம் எப்பிடியிருக்கும் தெரியாது. அசந்து மறந்து கீழ பாத்திறப்டாது. தலையே சுத்தீரும். பகீர்னிருக்கும்… எல்லாம் ஓரளவு பழகியிருந்தது எங்களுக்கு. அதனால பரவால்ல. இந்தத் தீவிரவாதிங்க எப்பிடி இதுக்கெல்லாம் பழகிக் கிட்டாங்க ஆச்சரியமா இருக்கு. வெறி. ஆக்கிரமிப்பு வெறி.
அடப்பாவி மக்கா. இந்தவெறிய ‘வாமடையாத் ‘ (வாய்மடை… கால்வாய் என்பதன் சொலவடைப் பிரயோகம்) திருப்பி விட்டு என்னென்னமோ ஆக்கபூர்வமாச் சாதிக்கலாம்டா. இப்பிடி செத்து அழிய ஆசைப்படறானுகளே. நம்ம நல்லாத்மாக்களையும் பலி வாங்கறானுங்களே… ‘பெரிய ‘ கைங்க இவங்களை – வேலை கேட்கிற இளவட்டங்களைப் பிடிச்சி வளைச்சி மாட்டிர்றாங்க, பாவம்.
திடுதிப்னு மேல பட்டாசு வெளிச்சம். சுரீர்னு எறும்பு கடிச்சாப்ல எல்லாரும் சுறுசுறுப்பாயிட்டோம். கண்ணே தெரியல. குருடாக்கும் வெளிச்சம். மேலேர்ந்து படபடன்னு சுடறானுங்க. யாருக்கும் பக்கத்ல இருக்கிறவனைப் பார்க்க நேரமில்லை. இதான் சமயம். நாடி நரம்பெல்லாம் யுத்தத்தின் சூடு. ஆவேசம். நாங்களும் விடல்ல. ரஞ்சன்சிங், பார் என் அடியை… படபடன்னு ஒரே சத்தத்காடு. பதுங்கிப் பதுங்கி மேலேறிக்கிட்டே சுடறோம். இடையிடையே ஹா ஹான்னு சத்தம். யாருக்கு என்ன ஆச்சி புரியாத நேரம். பரபரப்பு. கிட்டத்தட்ட மேட்டை எட்டிட்டாப்லதான்னிருக்கு. நம்ம விமானங்கள்வேற மேல ஒத்தாசைக்குன்னு வந்திட்டது. மேலயிருந்து அவர்களின் தாக்குதல். அவர்கள் வந்ததே எங்களுக்குத் தனி உற்சாகம். அட்றா மாப்ளை. விடாதே எதிரியை… தரையாலயும் வானத்திலும் சுத்தி வளைப்பு. போட்டுத் தாக்கு!
‘ ‘ஐயோ ‘ ‘ன்னு இந்தப் பக்கத்லேர்ந்து சத்தம். அது பாண்டிதான். தாவி அவனைப் பிடிக்க முடியுமா பார்த்தேன். அவன் பைதான் கையோட வந்தது. பாண்டி கீழ விழுந்தான். அதெல்லாம் பொழைச்சிக்குவான்னு நினைச்சிக்கிட்டேன். யோசிக்க நேரமில்லை. தாமதிக்கிற யோசிக்கிற ஒவ்வொரு கணமும் என் உசிருக்கு ஆபத்து.
அவன் சுமையையும் ஏத்திக்கிட்டேன். உள்ளே அவன் சம்சாரம் எழுதிய கடிதம். அவனது பதில்க் கடிதம். என் நினைவுகளைப் புறந்தள்ளினேன்… பாண்டிக்கு என்னவோ நெருடல் இருந்தது. ஒருவேளை நாம் சுடப்படுவோம் என அவன் யூகித்தானோ என்னமோ ?
எனக்கு ஆவேசம் வந்தது. சரமாரியாச் சுட்டுக்கொண்டே மேலேறினேன். எனக்கு முன்னால் வேகமாகப் பலஅடிகள் முன்னேறியிருந்தான் ரஞ்சன்சிங்.
—-
இரத்த ஆறு – அச்சில் இருக்கிற சிறுகதைத் தொகுதியின் ஒரு கதை
storysankar@rediffmail.com
—-
- சென்னைத்தமிழில் கணினி
- பேராசை
- அறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்
- பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)
- சாக்கியார் முதல் சக்கரியா வரை
- ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை
- பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு
- கவிதை பற்றி
- எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)
- காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு
- தூண்டில்காரர்கள்
- தின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்
- தினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்
- ப சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசுகிறார்
- பசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2
- இயந்திரப் பயணங்கள்
- அன்னை
- இனியொரு வசந்தம்!!
- காலம்
- உயிரின் சொற்கள்
- அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)
- எங்கே அவள்
- கடிதங்கள்
- குழியும் பறித்ததாம்!
- எதிர்காலத்தில் ஒரு நாள்………….
- ஓ போடு……………
- அம்மாச்சி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து
- 5140
- இந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)
- இரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்
- ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்
- முதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி
- பசுமையாகும் மார்க்சியமும்,புதிய பார்வைகளும்
- வரங்கள் வீணாவதில்லை…
- தாயின் தனிச்சிறப்பு
- கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்
- ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?
- கவித்துளிகள்(ஹைக்கூ)
- இரண்டு கவிதைகள்
- மறுபிறவி எடுத்தால்
- சாப்பாடு
- அன்னையர் தின வாழ்த்து
- பிரியும் பாதையும் பிரியா மனமும்
- மாப்பிள்ளைத் தோழன்