இரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

(ஷேக் ரஜீப் என்கிற டாக்டர் ராபர்ட் பிரேசருடன் ஒரு நேர்முகம்: கிரேய்க் ஹாமில்டன்) தமிழில்: மண்ணாந்தை


டாக்டர் ராபர்ட் பிரேசர் உளவியல் பேராசிரியர். Personality and Personal Growth எனும் முக்கியமான உளவியல் நூலின் ஆசிரியர். அமெரிக்காவின் சிறந்த உளவியல் ஆராய்ச்சி மையங்களுள் ஒன்றான இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ட்ரேன்ஸ்பெர்சனல் சைக்காலஜி நிறுவன தலைவர். அவ்வமைப்பின் மாணவர்களுக்கு மிகவும் கட்டுக்கோப்பான உளவியல் ஆராய்ச்சியாளராக திகழும் அதே மனிதர் கலிபோர்னியாவின் ரெட்வுட் நகரில் உள்ள ஒரு எளிய அழகிய கட்டிடத்தில் சந்திக்கும் 20 பேர்களுக்கோ அவர்களுக்கு ‘மார்க்கத்தை ‘ காட்டி வழிநடத்தும் ‘ஷேக் ரஜீப் ‘ எனும் ஸூஃபி குரு. ஹால்வதி ஜெராகி எனும் ஸூஃபி மார்க்கத்தினை அனுசரிக்கும் இவர்கள் தங்கள் ‘பாபா ‘வான ஷேக் ரஜீப்பின் கைகளை முத்தமிடுகின்றனர், அவரது சொற்களின் மூலம் தங்கள் வாழ்வின் மிக ஆழமான தேடலை வடிவமைக்கின்றனர். ஸூஃபி ஷேக் என்னும் முறையில் ஷேக் ரஜீப்புடனும் உளவியல் ஆராய்ச்சியாளர் என்னும் முறையில் டாக்டர் ராபர்ட் பிரேசருடனும் நேர்காணலை செய்பவர் கிரேய்க் ஹாமில்டன். நேர்காணலிலிருந்து சில பகுதிகள்.

கிரேய்க் : அகங்காரம் என்றால் என்ன ?

ஷேக் ரஜீப்: ஈகோ என ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ப்ராயிடால் பயன்படுத்தப்பட்ட ஜெர்மானிய பதம் ‘தாஸ் இக் ‘ என்பதாகும். ‘The I ‘ என இதனை கூறலாம். ஈகோவே நான் என்கிற அடிப்படையில்தான் நம் உளவியல் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ‘நான் ‘ என்னைக் குறித்த உணர்வுதான். ஸூஃபித்துவம் இவ்விளக்கத்துடன் உடன்படும். இந்த நான், எனது தனித்துவ ஆன்மா, என்பது நம்மை தனிப்பொருளாக பார்ப்பதன் விளைவுதான் என்கிறது ஸூஃபித்துவம். இவ்வாறு நம்மை தனிப்பொருளாக பிரித்தறிவது நமக்கு பெரும் ஆற்றலை கொடுக்கிறது. திட்டமிட செயல்பட பெரும் ஆற்றலை கொடுக்கிறது. ஆனால் இது துவைதத்தை உருவாக்குகிறது. ஆனால் ஸூஃபி ஏகத்துவத்தை, ஒருமையை விளைகிறான். ஆற்றலுடைய இந்த துவைதம் பெரும் தடைகல்லாக உள்ளது. ‘என்னை ‘ விட்டுவிட யார் விரும்புவார்கள் ? நாம் நம்மை விட்டுவிட விரும்புவதில்லை; நாம் இந்த ‘நான் யார் ‘ உணர்ச்சியுடன் ஒன்றிப்போயுள்ளோம்.

எனவே அகங்காரத்தின் வேர்கள் அடிப்படையாக பிரித்தறியும் உணர்ச்சியில் அல்லது தனித்தன்மையில் உள்ளன. நம்முள் இருக்கும் இறைத்தன்மையுடனல்லாது, நம்முள் இருக்கும் ஆத்மாவுடனல்லாது நாம் நம்மை பிரித்தறியும் அகங்காரத்துடன் இணைத்து அறிகிறோம். எந்த அளவுக்கு இந்த தவறான அடையாளப்படுத்துதல் உள்ளதோ அந்த அளவுக்கு அது நாம் உண்மையான ஆன்மிக சாதனையின் பாதையில் நடக்க தடை உள்ளது. எனது பழைய நண்பர் என்னிடம் ஒருமுறை கூறினார் ‘எல்லோருக்கும் கடவுளை அறிய ஆசைதான் ஆனால் அந்த இணைதலை அவர்களே பேய் போல எதிர்க்கின்றனர்,. ‘

கிரேய்க் : ‘Heart, Self and Soul ‘ எனும், உங்கள் நூலில் ‘ஆன்ம சாதனைக்கான பாதையிலிருந்து நம்மை விலகச்செய்ய நமக்குள் இருந்து வேலைச்செய்யும் அனைத்து சக்திகளின் ஒட்டுமொத்த சேர்க்கையே அகங்காரம் ‘ என வரையறை செய்கிறீர்கள். ஸூஃபித்துவம் ‘கொடுங்கோன்மையான நஃபுக்ஸ் ‘ என கூறுவதைத்தான் இவ்வாறு சொல்கிறீர்களா ?

ஷேக்: ஆம். ஸூஃபி மார்க்கத்தில் மிகக்கீழான நஃபுக்ஸ் என்பது நஃபுஸ் அம்மாரா அல்லது கொடுங்கோன்மையான நஃபுக்ஸ் ‘. நம்முள்ளிருந்து நம்மை வழிதவறிப்போகச் செய்யும் அனைத்துமே அவ்வாறுதான் அழைக்கப்படுகின்றன. அந்த தளத்தில் போதைநோயாளி ‘எனக்கு போதை பிரச்சினையே இல்லை ‘என்று கூறுவது போல அவை ந்ம்முள் உறைவதை மறுக்கிறோம். நாம் விரும்புவதை காட்டிலும் நம்மில் பலர் அந்நிலையிலேயே உள்ளோம். உதாரணமாக உங்களை ஒருவர் சாலையில் முந்திவிட்டாலோ, அல்லது உங்களை ஆத்திரமூட்டினாலோ, உங்கள் பெருமைக்கு பங்கம் விளைவித்தாலோ நாம் அந்த தளத்திற்கு இறங்குகிறோம். நம்மை அறியாமலே அந்த தளத்திற்கு இறங்குகிறோம். ஆக அது பெரும் ஆற்றலுடன் விளங்குகிறது. ஸூஃபி மார்க்கம் நஃபுக்ஸ் பல தளங்களில் இயங்குவதாக கூறுகிறது. அடுத்த தளத்தில் சுய சாபமிடும் பச்சாதாபக்கார நஃபுக்ஸ். இப்போது அதனை நீங்கள் நன்றாக உணர்வீர்கள் ஆயினும் அதன் பிடியில்தான் உள்ளீர்கள். ‘நான் செய்றது தப்புன்னு தெரியுது.சே ஏன்தான் இப்படியெல்லாம் செய்றனோன்னும் நினைக்கிறேன் ஆனாலும் என்ன செய்றது என்னை நானே தடுக்க முடியலியே ‘ இதனைத் தொடர்ந்து நீங்கள் செய்ய கூடாது, செய்வது தவறு என்று தெரிந்த அந்த விஷயத்தையே செய்வீர்கள். ஆக நாம் நம் பிரக்ஞையின் அதி பெரும் நிலையில் நம்மை இணைத்துக்கொண்டு செயல் படவில்லை, நம்மை நடத்திச் செல்வது ஏதென அறியாமலே செயல்படுகிறோம். நாம் இறைவனின் திருப்பெயர்களை ஓதியும் பிரார்த்தித்தும் தியானித்தும் நற்செயல்கள் மூலமும் இத்தீய சக்திகளின் பிடியிலிருந்து வெளிப்பட்டு முன்னோக்கி நடக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் இன்னமும் கூட அவை நம்மீது பாய்ந்து நம்மை அவற்றின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர காத்திருக்கின்றன. இறைவனில் தன்னை முழுமையாக சமர்ப்பித்த பெரும் அடியார்களே அத்தருணங்களிலும் அவற்றின் பிடியில் ஆட்படாமல் தப்பிக்க முடியும். நபிகள் நாயகம் (சல்) அவர்களை குறித்ததோர் ஒரு வரலாற்று நிகழ்ச்சி இதனை நமக்கு விளக்குகிறது. நபி அவர்கள் இரவுகளில் பாலைவனத்துக்கு தனிமையில் பிரார்த்திக்க போவது வழக்கம். இதனைக் கண்டு அவரது இளைய மனைவியான ஆயிஷா வேறெதோ பெண்ணை சந்திக்க செல்வதாக ஐயம் கொண்டு ஒரு நாளிரவு அவரை பின்பற்றி பாலைவனத்துக்கு செல்கிறார்.

அங்கு நபியை எதிர்கொள்கிறார். நபியோ ‘ஆயிஷா உன்னுடனிருக்கும் குட்டிச் சாத்தானை விட்டு வந்தாயா ? ‘ என்கிறார். ‘குட்டிச்சாத்தானா ? ‘என வினவும் ஆயிஷாவிடம், ‘ஒவ்வொரு மானுடப்பிறவியுடனும் இருக்கும் ஒரு பேய்த்தன்மை அவர்களின் நஃப்ஸ் ‘ என விளக்குகிறார் நபிகள் நாயகம். ‘ஓ இறைவனின் தூதரே உம்மிடமும் அது உண்டா ? ‘ என பதில் கேள்வி கேட்கும் ஆயிஷாவிடம் நபிகள் கூறுகிறார், ‘ஆம் என்னிடமும் உண்டு ஆனால் நான் அதனை முஸ்லீம் ஆக்கிவிட்டேன் ‘. மற்றொரு மொழி பெயர்ப்பில் இதுவே ‘நான் என்னுடையதை கீழ்ப்படிதலுக்கு உள்ளாக்கி விட்டேன் ‘ என காணப்படுகிறது ஏனெனில் ‘முஸ்லீம் ‘ என்பதற்கான பொருள் கீழ்ப்படிதலுடையவன் என்பதே. எனவே பெரும் இறை அடியார்கள் மிகவும் அரிதான தருணங்களிலும் பெரும் பொறுமையையும் சுயகட்டுப்பாட்டையும் காட்டுவார்கள். ஆனால் நம் அனைவருமே பல தருணங்களில் நஃப்க்ஸ்ஸின் ஆளுகைக்கு உட்பட்டுவிடுகிறோம். இறைவனின் மெய்யடியார்கள் மட்டுமே இதற்கு விதி விலக்கு. ஆக நாம் அனைவருமே தருணங்களில் நஃப்க்ஸ்ஸின் ஆளுகைக்கு உட்பட்டுவிடும் தன்மையில் வாழ்பவர்கள்தான்.

கிரேய்க் : ஒருவர் ஆன்மிக சாதனை பாதையில் முன்னேறுகையில் இந்த பாவ தூண்டுதல்கள் வெவ்வேறு ரூபங்கள் எடுக்கின்றனவா ?

ஷேக்: ஆம். நஃப்க்ஸ்களின் தளங்களில் சுய பச்சாதாப நஃப்க்ஸ்களுக்கு பின் உள்ளெழுச்சி நஃப்க்ஸ் உள்ளது. அகம் உள்ளெழுச்சி அடையும் போது ஹிருதயம் ஞானத்தால் நிரம்புகிறது. இப்போது அகங்காரத்துக்கு எதிரான உட்சக்திகளின் இருப்பு குறித்து நாம் உணர ஆரம்பிக்கிறோம். உள்ளுணர்வு, ஆழ்ந்த உண்மையுடனான உறவு குறித்த தெளிதல் ஆகியவையே அந்த உட்சக்திகள். பிரச்சனை என்னவென்றால் கீழ் சக்திகள் இன்னமும் தம் ஆதிக்கத்தை இழக்க தயாராக இல்லை. அகங்காரத்தின் கொடுங்கொன்மை இன்னமும் முற்று பெறவில்லை. மிகப்பெரிய அபாயம் என்னவென்றால் அகங்காரம் ஞானத்தின் உள்ளொளியையே இப்போது பயன்படுத்த முனையலாம். அகங்காரத்தை வலிமையற்றதாக்க வேண்டிய ஞானமே அகங்காரத்தை ஊதி பெரிதாக்க பயன்படுத்தப்படும். சாதனையாளரின் நிலையாக இருக்கவேண்டிய ‘இவ்வொளி என்னுடையதன்று; இந்த ஞானம் என்னுடையதன்று; ஓர் மாபெரும் கருணையிலிருந்து உதித்து என்னூடே ஒழுகுபவையே இவை ‘ என்பதற்கு பதிலாக ‘இது என்னுடைய ஞானம். எனக்குத் தெரியும். ‘ என அகங்காரம் சொல்ல விரும்புகிறது. அண்மையில் நான் வாசித்த ஒரு சுவாரசியமான நூல் ‘மலைக்கு பாதி வழியில் ‘ . உண்மையில் ‘பாதி வழி ‘ என்று கூட சொல்லமுடியாது அது ஒரு முடிவற்ற மலைப்பாதை. ஆனால் அந்நூல் ஆன்மிக வழிநடத்தும் ஆசிரியர்கள் ‘பாதி தூரத்தில் ‘ நின்றுவிடுபவர்களாக இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்களை நன்றாகவே விவரிக்கிறது, எனவே இங்கே நின்றுவிடுவது ஆபத்தானது. ஏனெனில் ஒளி சத்தியத்தினுடையது. ஞானம் சத்தியத்தினுடையது. அகங்காரம் இவ்விரண்டையுமே தன் குணங்களாக காட்டமுயற்சிக்கிறது. அம்முயற்சியில் வெற்றி அடைந்தால் அகங்காரம் இன்னமும் நன்றாக வேரூன்றி இறுகிவிடும். உண்மையில் ஞானத்தாலும் ஒளியாலும் ஒளி ஊடுருவிச்செல்லும் வெற்று ஊடகத் தன்மையை அகங்காரம் அடையவேண்டும்.

கிரேய்க் :ஸூஃபித்துவத்திற்கு ஆயிரம் ஆண்டு இறை ஞானத்தின் நடமாடும் வடிவாக திகழ்ந்த, தம் வாழ்வையே அகங்காரத்தின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை பெற்ற அழகிய வாழ்வின் சாத்தியமாக வாழ்ந்த துறவியரின் பாரம்பரியம் உண்டு. ஒருவர் அகங்காரத்துக்கு அப்பால் செல்கையில் அவர் ஆளுமை எவ்விதத்தில் வெளிப்படும் விதம் எவ்வாறு மாறுகிறது ?

ஷேக்: அவர்கள் ஆளுமையை இழப்பதில்லை. ஆனால் இதனை ஒருவிதத்தில் அவர்களை ஆளுமை ஆளுவதில்லை எனலாம். அவர்கள் தம் ஆளுமையை ஆள்கின்றனர். இன்னொருவிதத்தில் ஆளுமை அழகடைகிறது எனலாம். அது அன்பாலும் அருளின் ஒளியாலும் நிரம்புகிறது. ஆளுமை இன்னமும் ஆளுமைதான். இனிமையான ஆளுமையென ஒரு தனிவிதத் தன்மையையும் அது அடைவதில்லை. வனிலா ஷேக் ஷேக்குகளாக ஒற்றைத் தன்மையுடைய இனிமையை அவர்கள் அடைவதில்லை.ஒவ்வொரு ஷேக்கின் ஆளுமையும் ஒவ்வொரு வித அழகினை உடையதாக உள்ளது. ஏனெனில் ஆளுமை இறைமையினால் நிரம்பும் காலிகோப்பையாக மாறிவிட்டது. களிமண் பாண்டம் தன்னுள் போடப்பட்டவையெல்லாவற்றையும் உள்ளிருக்கும் திரவத்தால் நனைப்பது போல அதற்குள் விழும் எதுவும் நனைய தப்புவதில்லை. இன்னமும் சொன்னால் ஓட்டைகள் மூலம் ஒழுகிப்போவதும் இல்லை. எனது ஆசிரியர்களில் ஒருவர் கூறினார்: ‘உனது அடிப்படை வாழ்க்கையை நீ ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல், அமைதியான, நேர்மையான அடிப்படை மானுட மதிப்பீடுகளால் நடத்தப்படுவதான, சேவை புரிவதானதோர் வாழ்க்கையை வாழாமல் தியானம் புரிவதும் மற்ற ஆன்மிக சாதனை முயற்சிகளையும் மேற்கொள்வது எப்படி பட்டது தெரியுமா ? உன்னிடம் ஒரு நல்ல பசு இருக்கிறதென்று வைத்துக் கொள். அது இரசாயன் உரங்களற்ற புல்லைத்தின்று நல்ல பாலை கொடுப்பதாக வைத்துக்கொள். அந்த பாலை நீ கறந்து ஓட்டையுள்ள பாத்திரத்தில் ஊற்றினால் அதனால யாருக்கு என்ன பிரயோஜனம் ? ‘ எத்தகைய கொடுமையான வீணடிப்பு. என்றென்றும் அந்த பாலை பயன்படுத்தவே முடியாது. ஆளுமையும் பால் கறந்தூற்றும் பாத்திரம் தான். அதில் இருக்கும் நேர்மையின்மை அமைதியின்மை ஆகிய சிறு ஓட்டைகள் மூலம் நம் ஆளுமையில் இறை அன்பு எனும் பால் தங்கி நிற்காமல் ஒழுகி வீணாகி விடுகிறது. நம்மில். பேரருளாளர்களில் அவ்வாறல்ல.

கிரேய்க் : ஸூஃபி இலக்கியங்கள் அனைத்திலுமே அகங்காரம் ஆன்மீக சாதனையை எதிர்ப்பதையே தன் இயல்பாக கொண்டுள்ளதாக வருகிறதே. எனில் அகங்காரத்தின் நோக்கம் என்ன ? அகங்காரம் உருவாக்கப்படுவதற்கான அதன் இருப்பிற்கான அவசியம் என்ன ?

ஷேக்: நல்லது.. இதற்கு இருவித பதில்களை கூறலாம். ஒன்று ஜீவித ஆசை. அகங்காரம் மாற்றத்தை, ஆன்மீக மாற்றத்தால் ஏற்படும் அனுபவத்தை மரணமென அஞ்சுகிறது. ஏனெனில் அதன் பார்வையில் எந்த மாற்றமும் மரணமே. மாற்றத்திற்கப்பால் தான் ஜீவித்திருக்க முடியும் என்பதில் அதற்கு நம்பிக்கை இல்லை. எனவே இது(ஆன்மிக சாதனையை எதிர்ப்பது) அதற்கு ஜீவித நிர்ப்பந்தமாகும். நம்மில் மாற்றத்தை மறுக்கும் தன்மையே இது.

மற்றொரு விதத்தில் ஸூஃபிகள் அகங்காரத்தை சாத்தானோடு ஒப்பிடுவர். உங் ‘நிழல் ‘ எனும் உளவியல் தன்மை குறித்து கூறுவதற்கு ஒப்பானது. நம்மால் ஒத்துக்கொள்ள இயலாத நம்மிடம் இருக்கு விஷயங்களாக நிழல்கள் உள்ளன. அதே சமயம் அவை பிரபஞ்ச அளவில் இயக்கமுடையவையாயும் உள்ளன. இவற்றை சாத்தானிய சக்திகள் என நாம் கூறுகிறோம். இதை பற்றி யாரும் அதிகமாக பேசுவதில்லை. ஏனெனில் அது நல்ல முறையில் உங்களை பிரபலமடைய வைக்காது. நான் பயிற்றுவிக்கும் ஒரு புதிய சமயக்குழு ஒன்றிடம் பேசுகையில் அவர்கள் ஆக்கச்சக்திகள் குறித்து மட்டுமே பேசுகின்றனர். உள்ளுறை தீமைகள் குறித்து பேச ஆரம்பித்தால் அது அந்த மதக் குழுவினரின் புனித பச்வை தொட்டதாக ஆகிவிடுகிறது. ‘இறைவன் நல்லவர், இப்பிரபஞ்சம் நல்லது. இதில் தீமை எவ்விதம் வர முடியு ‘மென்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு நிமிடம் பொறுங்கள். ஒளி இருக்குமிடத்தில் நிழலும் இருக்குமே. ஆக நஃப்க்ஸ் ஒரு மனிதனை போன்றே ஒரு நோக்கத்துடன் செயல்படுவதாகவே உணரமுடிகிறது. அது ஒரு தனித் தன்மைப் படுத்தப் பட்ட உருவகம் என்பதனையும் மீறி அதற்கான ஒரு இருப்பை உணரலாம். ஷேக் டோசுன் பைய்ரக் நஃப்க்ஸ் ஒரு திருடன் என்பார். அது உங்களிடமிருக்கும் அழகிய மதிப்புடைய ஏதோ ஒன்றை திருடிச்செல்ல முயலும் நம் நம்பிக்கையை சோதிக்க முயலும் சைத்தானின் ஏவலாள். ஷேக் டோசுன் பைய்ரக் எங்களிடம் கூறுவதுண்டு , ‘ஹஜ் புனித யாத்திரை சென்று வந்த பின் அல்லது ஒரு நல்ல ஆன்மிக செயலை புரிந்த பின் திருடர்கள் குறித்து கவனமாயிருங்கள் ஏனெனில் திருடர்கள் காலி வீட்டிற்குள் செல்வதில்லை. அங்கு மதிப்புள்ள பொருள் ஏதாவது இருக்க வேண்டும்… ‘ நீங்கள் விரிவடைகையில் அல்லது மாற்றம் கொள்கையில் அதற்கு எதிரான சக்தி உடனே ஆயுத்தமாகிவிடுகிறது.

கிரேய்க் : நம்முள் உறையும் இந்த எதிரிக்கு குறித்து நாம் விழிப்புடன் இருப்பதெவ்வாறு ?

ஷேக்: ஷேக் டோசுன் பைய்ரக் இது குறித்து ஒருமுறை கூறினார், ‘ஒரு திருடன் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால் என்ன செய்வீர்கள் ? நீங்கள் மேலே உங்கள் படுக்கையறையில் உள்ளீர்கள் கீழே உங்கள் வீட்டின் ஒளி விளக்குகள் ஒவ்வொன்றாக திருடனின் பைக்குள் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் ? நீங்கள் வாளை எடுத்துக்கொண்டு கீழே வந்தால் அவனிடமும் வாள் இருக்கிறது. உங்களிடம் நவீன இலகு ரக தானியங்கு துப்பாக்கி இருக்கிறதா ? அவனிடமும் அது இருக்கிறது. நீங்கள் அவனிடம் போரிட எடுக்கும் எந்த ஆயுதமும் அவனிடமும் இருக்கும். நீங்கள் என்ன செய்வீர்கள் ? ‘ பின்னர் அவரே பதிலும் கூறினார், ‘விளக்கினை ஏற்றுங்கள் ஏனெனில் திருடன் இருளில் வரும் கோழை. தன்னுணர்வு என்னும் விளக்கினை உங்களுள் ஏற்றுங்கள். அவன் ஓடிவிடுவான். அந்த வெளிச்சத்தில் அவன் ஓடிவிடுவான். சைத்தானுடன் சண்டையிடாதீர்கள். சைத்தானுடன் போரிடுவதைப் போல மடத்தனமான காரியம் உலகத்திலேயே இல்லை. ஸூஃபி மரபிலும் சரி மற்ற ஞான மரபுகளிலும் சரி சைத்தானுடன் போரிடுவதின் மூடத்தனம் குறித்து பல அழகிய கதைகள் உள்ளன. சைத்தானுடன் போரிடுகையில் யார் வெல்வார்கள் என்பதனை ஊகிக்க முடிகிறதல்லவா ? அது ஒரு மோசமான யோசனை.

கிரேய்க் : குர்ரானில் ஒரு புகழ் பெற்ற பகுதியில் முகமது போரிலிருந்து திரும்பியதும் தன் நம்பிக்கையாளரிடம், ‘நாம் இப்போது சிறிய புனிதப்போரை விடுத்து பெரியதோர் புனிதப்போரில் , நஃப்க்ஸ்க்கு எதிரான போரில் ஈடுபட வேண்டும் என கூறுகிறார். தாங்கள் இப்போது வரை கூறியவற்றிலிருந்து மிகவும் பிரசித்தி பெற்ற நபிகளின் புனிதப்போர் எனும் வார்த்தைகளுக்கு ஆன்மிக போராட்டத்திற்கு என்ன பொருள் என நினைக்கிறீர்கள் ?

ஷேக்: இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான கேள்விதான். ஆனால் நீங்கள் வரலாற்றுப்பின்புலத்தை அறிந்து கொள்ளவேண்டும். முஸ்லீம்களைக் காட்டிலும் அவர்களை எதிர்த்த மெக்காவினருக்கு அதிக பணபலம் இருந்தது; படைபலம் இருந்தது; எண்ணிக்கை அதிகமாயிருந்தது. ஆயினும் அவர்கள் இறை அருளால் மெக்காவினரை வென்று விட்டனர். அவ்வாறு வருகையில் அவர்கள் உடல் சோர்வுற்றிருந்தாலும் அவர்கள் மனம் என்ன நிலையிலிருந்தது ? ‘ஆகா நாம் பெரும் போர் வீரர்கள். எத்தகைய பெரும் படையை நாம் வென்றுவிட்டோம்! அவர்களை , அந்த நம்பிக்கையற்றவர்களை ஓட ஓட விரட்டி விட்டோம். நாமல்லவா வீரர்கள்.. எத்தகைய சாதனை இது! ‘ இச்சமயத்தில்தான் நபிகள் நாயகம் கூறினார்கள் ‘நாம் பெரும் போர்களத்திற்கு செல்கிறோம் ‘. சிறிதாக உருவாகிக்கொண்டிருந்த அகங்காரத்துக்கு அவர் கொடுத்த உரை அது. பிரச்சனை என்னவென்றால் புனிதப்போர் என்றவுடனேயே நாம் அதனை கறுப்பு வெள்ளையாக பார்க்கிறோம். போரில் நம் எதிரிகளை நாம் அறிவோம்; நம் நண்பர்களை அறிவோம். ஆனால் ஆன்மிக பயணம் மிகவும் நுண்ணிய ஒன்று.

நன்றி: www.wie.org

Series Navigation

மண்ணாந்தை

மண்ணாந்தை