4: 03

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

குரு அரவிந்தன்


இயற்கைக்கு என்ன கோபமோ தொியவில்லை, திடாரென எனது பக்கம் உள்ள யன்னலில் கல்லெறிந்ததுபோல,

பொட்டுப் பொட்டாய்ப் பொிய மழைத்துளிகள் சத்தத்தோடு வந்து விழுந்தன. அடுத்த நிமிடம் வானம்

இருட்டிக்கொள்ள, மழையோ கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. போதாக் குறைக்கு இடியும்,

மின்னலும் மழையோடு சேர்ந்து கொண்டு பயங்காட்டின. இந்த சீரற்ற காலநிலை இப்படியே தொடர்ந்தால்

விரைவாகவே இருட்டிவிடும் போல இருந்தது. இயற்கை இப்படி ஓவென்று அழுததை நான் இங்கே ஒருபோதும்

பார்த்ததில்லை.

சோவென்ற மழையின் இரைச்சலில் விமானத்தின் இரைச்சல் அடங்கிப் போயிருந்தது. இருக்கைப்பட்டியைக்

கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, யன்னல் கண்ணாடியில் முகம்புதைத்து வெளியே பார்த்தேன். பனிப்புகாாில்

அகப்பட்டது போல, ஆங்காங்கே மின்னும் சிகப்பு, மஞ்சள் வெளிச்சங்களைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத்

துல்லிய மாய்த் தொியவில்லை.

காலநிலை மோசமாக இருந்ததால் விமானம் கீழே இறங்க முடியாமல், மிகவும் பதிவாக மீண்டும் ஒருமுறை

வட்டமிட்டது. திடாரென ஓடும் கருமேகங்கள் நகர்ந்து விட்டதுபோல, மழை கொட்டுவது குறைந்து, வானம்

கொஞ்சம் வெளித்தது போலிருந்ததால், விமானத்தளத்தை, யன்னல் கண்ணடி வழியாக ஓரளவு என்னால்

பார்க்கக்கூடியதாக இருந்தது.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன்.

ரொறன்ரோ நேரம் – 4 : 01.

எத்தனை தடவை என்று தொிய வில்லை, விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிடும் விமானத்தின்

இரைச்சலைச் சகித்துக் கொண்டு, மீண்டும் பார்வையை வெளியே செலுத்தினேன்.

பொம்மைகள் போல வண்டி களால் நிரம்பி வழிந்து, நீண்டு விாிந்து கிடந்தது நெடுஞ்சாலை 401.

காலநிலை சீராக இருந்திருந்தால், நான் இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிலே ஹாயாய் இருந்திருக்க

வேண்டும்.

வெளிக்கிடும் போதே மழை பெய்யலாம் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி மோசமாக இருக்கும் என்று

நான் நினைக்கவில்லை. அதற்காக வெளிக்கிடாமலே இருக்க முடியுமா ? அல்லது இயற்கையை நோகமுடியுமா ?

கைக்கடிகாரம் காட்டியது – 4 : 02.

தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து செய்தி வந்ததோ, அல்லது விமானி பாதுகாப்பாக கீழே இறங்கலாம்

என்று தானாகவே முடிவு எடுத்தாரோ தொியவில்லை, இடதுபக்க ஓடுபாதை 24-எல் ஐ நோக்கி விமானம்

திடாரெனப் பதிந்தது. சாதாரணமாக விமானம் கீழே இறங்கும் போது உள்ள வேகத்தைவிட அதிகமான

வேகத்தில் இறங்குவது போல என் உள்ளுணர்வு சொன்னது. மழைநீாில் ஓடுபாதை நனைந்து இருப்பதால், வேகமாகத்

தரையைத் தொடும்போது சறுக்கியும் விடலாம் என்று மனசு கொஞ்சம் பதட்டப்பட்டாலும், விமானிக்கு இல்லாத

கவலை எனக்கேன் என்று சகித்துக் கொண்டு மெளனமாய், வெளியே விமான ஓடுபாதையை நோக்கிப் பார்வையைச்

செலுத்தினேன். பனிக்காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இறங்கி ஏறிய இந்த விமானங்களுக்கு இந்த

மழை அப்படி என்ன பொிய சவாலா என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்!

அந்த நேரம் பார்த்து, கண்ணைப் பறிப்பதுபோலத் திடாரென மின்னல் ஒன்று வானத்தைக் கிழித்துச்; செல்ல,

விமானத்தின் கீழ்ப்பக்கத்தில் இருந்து ஆரேஞ் நிறத்தில் தீச்சுவாலை போல ஏதோ தொிந்தது.

விமானத்தில் நெருப்பு பிடித்துக் கொண்டதா ? பிரமையோ என்ற நினைப்பில் உற்றுப் பார்த்தேன். ‘திக் ‘

கென்றது!

நெருப்புத்தான் என்பதை உறுதி செய்வதுபோல, விமானத்தின் கீழ்ப் பகுதியில் இருந்து கறுப்பு நிறத்தில்

புகைமண்டலம் கிளம்பி வழி மண்டலத்தில் கலந்தது. நெருப்பில்லாமல் புகைக்குமா.. ?

401 நெடுஞ்சாலைக்கு அருகே ஓடிவந்து வலது பக்கம் திரும்பிச் சென்றிருக்க வேண்டிய விமானம், வந்த

வேகத்தில் ஓடுபாதையின் முடிவில் உள்ள சிறிய வாய்க்காலருகே ஒரு பக்கம் சாய்ந்து, இனி என்னால் முடியாது

என்பதுபோல் முச்சு வாங்கிக் கொண்டு நிலையாய் நின்றது.

அவசரமாக நேரத்தை பார்த்தேன்.

ரொறன்ரோ நேரம் – 4 : 03.

அடுத்த சில நிமிடங்கள் என்ன நடந்தது என்றே தொியவில்லை. எங்கும் ஒரே பதட்டம். கரும்புகை மண்டலம்

விமானத்தைச் சூழ்ந்து கொண்டது. தீச்சுவாலை வேகமாகப் பரவியது. எந்த நிமிடமும் விமானம் வெடித்துச்

சிதறலாம் என்ற பயம் என்னைப் பிடித்துக் கொண்டது. வெடித்துச் சிதறினால் எங்கே ஓடுவது ? எப்படித்

தப்பிப்து ? இருக்கைப் பட்டியை மெல்லத் தளர்த்தினேன்.

திடாரென விமானத்தின் அவசரகாலக் கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டு, எல்லோரும் சறுக்கிக் கொண்டு வெளியே

வந்து விழுந்தார்கள். இரண்டே இரண்டு நிமிட நேரத்த்ில் அத்தனை பிரயாணிகளும், விமானச் சிப்பந்திகளும்

எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெளியே தப்பி வந்தது எல்லோருக்கும் ஒரு வியக்கக்கூடிய செயலாயிருந்தது.

இது அற்புதமா, இல்லை தேவாதீனமா அல்லது விமானச் சிப்பந்திகளின் கடமையின் கெட்டித்தனமா ? நான்

எனக்குள் வியந்து போனேன்.

விமான நிலைய தீயணைப்புப் படையினர், தீயை அணைக்க எவ்வளவோ முயற்ச்சி செய்தாலும், கண்ணுக்கு முன்னால்

வேகமாக விமானம் சாம்பலாகிக் கொண்டிருப்பது தொிந்தது. அதைப் பார்த்ததும், என்னை அறியாமலே

நீண்டதொரு பெருமூச்சு வெளிப்பட்டது.

பயணிகள் எல்லோரும் உயிர் தப்பிய இந்த அற்புதத்தை யாாிடமாவது சொல்லி மனமாறவேண்டும் என்று மனசு

துடித்தது. தூங்கிக் கொண்டிருந்த செல்பேசிக்கு அவசரமாக உயிர் கொடுத்தேன். மறுகணம் செல்பேசி

கிணுகிணுக்க, மனைவியின் குரலில் பதட்டம் தொிந்தது.

‘எங்கே இருக்கிறீங்க.. ? ‘

‘பியர்சன் எயர் போ.. ட்…! ‘ பதட்டத்தில் வார்த்தைகள் முழுமையாக வெளிவராமல் தடக்கின.

‘உங்களுக்கு ஒன்றுமில்லையே.. ? ‘

‘இல்லை.. ஐ ‘ம் ஓகே! ‘

‘கடவுளே..! நான் பயந்து போயிட்டேன்! ‘

‘அரும்பொட்டில் தப்பிவிட்டோம், விமானம் வேகமாக ஓடிவந்து, ஓடுபாதை முடிவில் அப்படியே சாிஞ்சு போய்

நின்று விட்டதாலே நாங்க தப்பிவிட்டோம் ‘.

‘நினைச்சேன், டிவியில எல்லாம் காட்டிக் கொண்டிருக்கிறாங்க. விமானவிபத்து நாலுமணிபோல நடந்தது என்று

சொன்னதும், நீங்கள் வரும் நேரமாச்சே என்று நான் பயந்தே போயிட்டேன். அந்த விமானம் இப்பவும்

எாியுதா.. ? ‘

‘எாியுது! அணைப்பதற்கு எல்லா முயற்ச்சியும் பண்ணுறாங்க. ‘

‘அதை நினைச்சா எனக்கு இப்பவும் நெஞ்சு படபடக்குது! சாி, நீங்க அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு

நின்றது போதும், சீக்கிரம் வீட்டிற்கு வந்து சேருங்க. ‘

‘401 சாியானதும் வந்திர்றேன், இங்கே நடந்ததைத் தேவாதீன சம்பவம் என்றுதான் சொல்லவேண்டும்.

இல்லாவிட்டால் விமானம் ஓடுபாதையில் ஓடிவந்த வேகத்தில், நேரே வந்து 401 நெடும் சாலையில்தான்

மோதியிருக்கும், மோதிச் சிதறியிருந்தால் என்னைப் போல எதிரே வண்டியில் வந்துகொண்டிருந்த

எத்தனைபோின் உயிர்களை இந்த விபத்து பலி எடுத்திருக்கும். ‘

‘கடவுள் காத்தது..! ‘ கடவுளை மீண்டும் அழைத்தாள் மனைவி.

ஆமைபோல ஊர்ந்து கொண்டிருந்த 401 இப்போது நிலையாய் நின்றுவிட்டது. சிலர் வண்டியை விட்டு வெளியே

இறங்கி வந்து வேடிக்கை பார்த்தார்கள். வேறுசிலர் எாியும் விமானத்தில் இருந்து தப்பி 401ஐ நோக்கி

ஓடிவந்தவர்களுக்கு உதவி செய்தார்கள். வண்டி இப்போதைக்கு அசையாது என்பதால், செல்பேசியில் என் மனைவி

தொலைக்காட்சியைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்த ‘ரன்ணிங் கொமன்றியை ‘ கேட்கவேண்டிய சங்கடமான

நிலையில் நான் இருந்தேன். தேவையில்லாமல் பதட்டப் பட்டுவிட்டேனோ என்று நினைத்தேன்.

‘எடுத்ததுக் கெல்லாம் சும்மா பதட்டப்படாதீங்க’ என்று என் மனைவி அடிக்கடி சொல்வதின் அர்த்தம் இப்போ

எனக்குப் பூிந்தது. ஆனால் பதட்டப்படுவது, நானா அல்லது மனைவியா என்பதுதான் இப்படியான நேரங்களில்

பூியமாட்டேன் என்கிறது! வேண்டுமென்றா நெடுஞ்சாலையில் நிற்கிறேன் ? காலநிலை சீராக இருந்திருந்தால்

இப்போது வீட்டிலல்லவா இருந்திருப்பேன்!

Series Navigation

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன்