ஓபாம நமஹ!

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

புதியமாதவி, மும்பைஒபாமா போற்றி போற்றி
உலகளந்தாய் போற்றி போற்றி
உன்னையே போற்றி போற்றி
உன் டாலரைப் போற்றி போற்றி
ஐ டியைப் போற்றி போற்றி
உன் ஐடியாவைப் போற்றி போற்றி
வாழ்க ஒபாமா..
வாழ்க அமெரிக்கா
ஓம் சக்தி ஒபாமாவே சக்தி
போற்றி போற்றி
ஓபாமா போற்றி..

ஒரு வழியாக எங்கள் ஒபாமா நமஹ! மந்திரங்களை எல்லாம் முடிந்து மும்பை மட்டுமல்ல இந்தியாவே நார்மல் நிலைமைக்கு வந்திருக்கிறது.

ஒபாமாவின் வருகையை ஒட்டி என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒளிவு மறைவின்றி நம்ம ஊரு பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்டி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வதற்குள் எதிர்பார்த்த மராத்திய மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற ஆருடங்களும் பலப்பரீட்சைகளும் ஆரம்பித்துவிட்டன.

இருக்கட்டும்.. ஓபாமா வருகையை ஒட்டி நடந்த மிக முக்கியமான செய்தி.. வழியில் இருந்த தென்னைமரங்களில் காய்த்து தொங்கிக் கொண்டிருந்த தேங்காய்களை எல்லாம் பறித்துவிட்டார்களாம்.

மற்றபடி எதுவும் முக்கியமானதாக தெரியவில்லை. ஒரு கம்பேனியின் விற்பனை அதிகாரி தன் கம்பேனி பொருட்களை அதிகம் விற்கவும் அதற்கான சந்தை வாய்ப்புள்ள ஊரில் எப்படி எல்லாம் இனிமையாக நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார். இந்தியா ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்க ஒத்துழைக்கும் என்று ஓபாமா சொல்லி வாய்மூடுவதற்குள் பாகிஸ்தானின் குரல் ஒலித்தது..
அதுவும் எப்படி..?

“உங்களால் அவ்வளவு எளிதில் ஐ.நா.வில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க விட்டுவிடுவோமா..என்ன? ‘

என்று மிரட்டும் தொனியில். கூடவே எல்லா சாட்சியங்களையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் சீனாவைக் காட்டி.. சீனாவின் வீட்டோ அதிகார சீட்டை இறக்கி உங்களை ஆட்டமிழக்கச் செய்வோம் என்கிறார்கள்..!

அமெரிக்காவால் அவர்களை என்ன செய்து விட முடியும்?
ஒபாமா இந்தியா வருவதற்கு முன் தான் பாகிஸ்தானுக்கு 200 கோடி டாலரைத் தந்தி மணியார்டர் அனுப்பியிருக்கிறார்கள்.

அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்தும் பணம் கொடுத்தும் நம்ம பசங்க கெட்டு குட்டிச்சுவராக்கப்படுவது மாதிரிதான் இதுவும்.
அமெரிக்க அனுப்புகிற பணத்துக்கு என்றைக்காவது கணக்கு கொடுத்திருக்கிறார்களா நம்ம பக்கத்து வீட்டு பாகிஸ்தான் பசங்க. இந்தக் காசை வச்சிக்கிட்டு கஷ்டப்படுகிற வீட்டு ஜனங்களுக்கு ஏதாச்சும் செய்து இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோமா? இந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் அவர்கள் என்னைப் பாரு, என் துப்பாக்கியைப் பாரு, சுட்டுப்பிடுவேன் சுட்டுனு திருடன் போலீஸ் விளையாட்டுக் காட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

புதியக் கண்டுப்பிடிப்பு :

அவுட்சோர்ஸிங் மூலம் அமெரிக்கர்களுக்கும் வேலைவாய்ப்புண்டு என்ற புதிய பொருளாதரக் கண்டுபிடிப்புக்கு சிங் ஓபாமா பொருளாதர திட்டம் என்ற பெயரிடலாம்.

க்ளைமாக்ஸ்:

இந்தியா யாருடைய வேலை வாய்ப்புகளையும் திருடிக் கொள்வதில்லை என்று நேருக்கு நேராகவே ஒபாமா சாட்சியாக மன்மோகன்சிங் சொன்ன காட்சி

ஸ்டார் அந்தஸ்து:

ஒபாமாவுடனும் அவர் மனைவியுடனும் கலந்துரையாடிய மும்பை மாணவர்கள். அதிலும் குறிப்பாக கை குலுக்கிய மாணவர்களுக்கு மாணவர்கள் வட்டத்தில் ஸ்டார் அந்தஸ்த்து… மேலும் அதிக விவரங்களுக்கு பார்க்க டுவிட்டர், ஃபேஸ்புக் ஆர்க்கூட் …

எச்சரிக்கை

குடிய்ரசுத்தலைவர் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் தமிழகத்தின் அதிகாரமிக்க எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டிருக்கிறார். இன்றைய தினத்தந்தியில் போட்டோவுடன் வந்திருக்கும் செய்தி..
கனிமொழி எம்.பி.யுடன் ஓபாமா கலந்துரையாடினார்!

ஓபாமாவின் சின்ன ஆசை

ஓபாமா ,

நீங்கள் வி.டி. ரயில்வே நிலையத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதாகவும் எங்கள் ஊர் முதலமைச்சர் அசோக்சவான் (இரண்டு நாளுக்குள் அப்போதைய முதல்வர் என்று எழுத வேண்டியதாகிவிட்டது!) அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் அறிந்தேன். உங்கள் வருகையை ஒட்டி இரண்டு நாட்கள் மும்பை ஜனங்களுக்கு விடுமுறை அறிவித்து எல்லா ரயில்களையும் நிறுத்தி வைத்திருந்திருக்கலாம். பாசஞ்சர் டிரெயின்களை வீராரிலும் கல்யாணிலும் நிறுத்தி இருக்கலாம். எங்களைப் போன்றவர்களிடம் ஐடியா கேட்காமல் அசோக்சவான் உங்களுக்கு ந்நோ சொன்னது தப்பு தான்.

சரி விட்டுத் தள்ளுங்கள். அவருக்கு அவருடைய பிரச்சனை. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்… எங்கள் இளவரசர் ராகுல்காந்தியிடம் சொல்லியிருந்தீர்கள் என்றால் அவருடன் சேர்ந்து நீங்கள் எங்கள் மும்பை டிரெயினில் ஓசியில் பயணம் செய்திருக்கலாம்.!

உங்களால் கற்பனைச் செய்ய முடியாத ஒரு உச்சக்கட்ட விளம்பரம் கிடைத்திருக்கும். அம்ச்சி மும்பை மானுஷ் குஷியாகி உங்கள் கம்பேனி பொருட்களை வாங்கி உங்கள் பொருளாதரச் சரிவைக் கூட நிமிர்த்தி இருக்கலாம்.

இந்த மாதிரியான உங்கள் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இம்மாதிரியான நிறைய ஐடியாக்கள் எங்கள் மும்பை வாசிகளிடம் நிறைய உண்டு.

எப்படியோ ஓபாமா உங்கள் எளிமையும் உங்கள் மனைவியின் அழகும் எங்கள் மீடியா பிரபலங்களுக்கு மட்டுமல்ல எங்க பொதுசனங்களுக்கும் சில பிம்பங்களை உடைத்திருக்கிறது. அதற்காக உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உங்கள் வருகைக்கும் நன்றி ஓபாமா..

:

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை