ஒற்றுப்பிழை

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

புதியமாதவி,


அகந்தை உடையலாம்-தமிழின்
அகரம் உடையலாமா ?
இமைகள் மூடலாம் – எழுத்தின்
இமயம் மூடலாமா ?

வானம் கருக்கலாம் -இடியில்
வார்த்தை கருக்கலாமா ?
தேவை மாறலாம்-உன்
தேடல்கள் மாறலாமா ? ?

ஒற்றுப் பிழை எல்லாம்
அச்சுப் பிழையல்ல
சொல்லின் பொருளெல்லாம் -நீ
சொல்ல வந்தப் பொருளுமல்ல.


தேடும் வானம்
புதியமாதவி,

கண்ணிமைகள் கிழிந்திடுமோ ?
காகிதங்கள் நனைந்திடுமோ ?
பெண்ணிமைகள் விழித்திடுமோ ?
பேதையெனை அழித்திடுமோ ?

வசந்தங்கள் வாடிடுமோ ?
வாசல்கள் மூடிடுமோ ?
உறவுகள் ஓடிடுமோ ?
ஊரெனை ஏசிடுமோ ?

காலங்கள் கடந்திடுமோ ?
கடல்நீரும் வற்றிடுமோ ?
கோலங்கள் மாறிடுமோ ?
கொள்கைகள் மறந்திடுமோ ?

தேடுகின்றேன் வானத்தை
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
வானமில்லாத பூமி
வாழ்ந்திடுமா சொல்லுங்கள் ?

புதியமாதவி,
மும்பை 400 042.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை