ஒரு தலைப்பு இரு கவிதை

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

ராமலக்ஷ்மி


பார்வை கோளாறு-1

நோயின் உச்சத்தில்
நொந்து போய் அவன்-
இறுகிய முகமும்
குறுகிய உடம்பும்
குன்றிய உள்ளமுமாய்…

நலம் விசாரிக்க
வலம் வந்த மருத்துவர்
இவன் இருக்கும் இடம்
வந்து நின்றார்-
வெளிர் உடையும்
பளீர் சிரிப்புமாய்…

‘கலக்கம் விலக்கிடு
காலனும் விலகிடுவான்!
பரிந்துரைத்த பயிற்சிகளைப்
பழகச் சலிப்பதேன் ?
படுத்தே இருந்தால்
அடுத்து நீ
எழுந்து நடப்பது
எப்போதாம் ? ‘ எனக் கேட்டவர்
சிரித்தபடி இன்னும் சொன்னார்:
‘மலர்ச்சியுடன் மருந்துகளை
உட் கொள்வாய்,
உற்சாகமாய் இருந்திட்டால்
விரைவாய் தேறிடுவாய்! ‘

நம்பிக்கை ஊற்றினில் இருந்து
நன்னீர் வழங்கிய
திருப்திப் புன்னகையுடன்
திரும்பி நடந்தார்.

கடுப்பாகிப் போனான்-நம்
கவி நாயகன்.
‘மிடுக்காக வந்து
துடுக்காகச் சொல்லி விட்டாரே,
பட்டால் அன்றோ புரியும்
வலியின் ஆழமும்-அந்தக்
கிலியினால்
கதி கலங்கிப் போகும்
உள் மனதின் கோலமும்! ‘

தெளிக்கப் பட்டது
பன்னீர் என்ற
தெளிவில்லாமல்
வென்னீர் எனத்
துடித்தான்.

வாழ்வோடு வலியும்
காலத்தோடு கவலையும்
கலந்ததுதான்
மானிடம் என்பது
இறைவனின் கணக்கு.
இதில் எவருக்கும்
இல்லை விதி விலக்கு!

சொன்னவரும் மனிதர்தான்
அவருக்கும் உண்டு
ஆயிரம் உபாதை-என்பதை
உணர இயலாத
பேதையானான்.

ஆறுதலாய் சொல்லப் பட்ட
வார்த்தைகள் கூட சிலருக்கு
வெந்த புண்ணில் பாய்ச்சப் பட்ட
வேல்களாய்த் தோன்றுவது
வேதனையிலும் ஓர்
வேடிக்கை!

‘பாவம் பாவம் ‘ எனப்
பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்
உற்றார் பலர் உத்தமராகிறார்.
விரக்தியை விடச் சொல்பவர்
வேதனை புரியாதவராகிறார்!

‘சோதனை மேல் சோதனை ‘ என
சோர்ந்தவனின் சோகத்தை
மேல்மேலும் சூடேற்றும்
மற்றவரோ
மனிதருள் மாணிக்கமாகிறார்.
மலர்ச்சியாய் இருக்கும்படி
மனித நேயத்துடன்
மன்றாடுபவர்
அடுத்தவர் அல்லல் அறியாத
அற்பப் பதராகிறார்!

கடவுளே வந்து
‘கலங்காதிரு ‘ என்றாலும்
‘எவன் அவன் இங்கென்
துயர் விளங்காதவன்! ‘
என்றே விளிப்பார்,
ஆச்சரியம் என்ன இதில் ?
கடவுள் மனிதனாகப் பிறந்து
வேதனையில் வாட வேண்டும்-என
விரும்பிப் பாடிய உலகமல்லவா ?
*** **** *** **** ***

பார்வைக் கோளாறு-2

அக்கறையை, ஆதரவை
ஆக்கப் பூர்வமாய்
நோக்கத் தெரியாமல்
பலர்.
அன்பை, அனுபவத்தை
ஆக்கப் பூர்வமாய்
கொடுக்கத் தெரியாமலும்
சிலர்.

எழுத்திலோ எண்ணத்திலோ
எழும்பும் அதிர்வலைகள்
எளியவனை, இயலாதவனை
எழுந்து நிற்க வைத்தால்
நலம்.
ஏங்கி அழ வைத்தால்
கிடைக்குமா அவனுக்குப்
பலம் ?

‘இனியொரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்! ‘

பசித்தவன் கேட்டு விட்டு
‘ஆஹா அற்புதம் ‘ என்று
நெஞ்சடைக்க விம்ம
வேண்டுமெனப்
பாடவில்லை பாரதி.

இல்லாதவன் கேட்டு விட்டு
‘இங்கெமக்குக் குரல் கொடுக்க
இனியொரு நல்லவன்
இது போலப் பிறப்பானா ? ‘-என
நன்றியில் நனைந்து போக
வேண்டுமெனப்
பாடவில்லை பாரதி.

பாரதம் தன்னிறைவு கண்டு
பார் புகழத் தலை நிமிர்ந்து
எழுந்து நிற்கவே
பாடினான் மகாக் கவி!

முடவனா முடியாதவனா-
முடிந்தால் போடு சோறு!
‘என்ன கொடுமை பசிக் கொடுமை ‘
எனப் பாடுவதாலே மட்டும்
யார் துன்பம் தீருகிறது கூறு!

முடிந்தும் முயற்சியற்றவனா-
முடிந்தால் அவனுக்குக்
கூழோ கஞ்சியோ
வேளாவேளைக்குக் கிடைத்திட
வேலைக்கு வழி செய்யப் பாரு!
தானம் என்ற பெயரில்
கொடுத்துக் கொடுத்து-அவனை
உழைக்க மறுக்கும்
ஊதாரியாக்கத்
தயாரில்லை என்று கூறு!

இல்லாதவனிடம் கொள்ளும்
இரக்கமும்
கலங்கி நிற்பாரிடம் காட்டும்
கருணையும்-அவரை
முன்னேற்றப் பாதையில்
முண்டியடிக்கத் தூண்டும்
முயற்சியை, வேகத்தை,
ஆர்வத்தை, தாகத்தைக்
கொடுக்க வேண்டியது
அவசியம்.
முட்டுக் கட்டையாய்
முடக்கி-அன்னாருக்கு
அயற்சியை, சோகத்தை,
அலட்சியத்தை, சோம்பலைத்
தராமல் தவிர்தல்
அத்யாவசியம்!

தனியொருவனுக்கு உணவில்லாத
ஜகத்தினை அழித்திடும்
சாத்தியம் இல்லாது போனாலும்,
சாதிக்க வேண்டிய ஜகம்
தனியொருவனால்
சக்தி இழிந்திடாதிருக்க
சற்றே சிந்திகலாம்.
துவண்டு போவோரைத்
தூக்கி நிறுத்தும்
தூண்டு கோலாய் நாமிருக்க
தாராளமாய் யோசிக்கலாம்-இவை
சத்தியமாய் சாத்தியமே!

எழுத்து, எண்ணம்,
செயல், பார்வை-யாவும்
எந்தத் தருணத்திலும்
எதிர்மறை அதிர்வலைகளை
எழுப்பாதிருக்கட்டும்.
ஆக்கப் பூர்வ
அதிர்வலைகளை மட்டுமே
அடுத்தவருக்கு
அனுப்புவோம் என
அவை
அறுதியிட்டுக் கூறட்டும்!
*** **** *** **** ***
ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி